Read in : English
தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழ்நாட்டு ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்துள்ள நடவடிக்கை மாநில அரசியல் அரங்கில் எதிர்மறைக் கருத்துகளை எழுப்பியுள்ளதற்கு பல நியாயமான காரணங்களை அடுக்கலாம்.
ஜம்மு-காஷ்மீரைப் போலவும் வடகிழக்கு மாநிலங்களைப் போலவும் பிரிவினைவாத இயக்கங்களும் ஆயுதக் குழுக்களும் உலவும் மண்ணில் தேசியப் பாதுகாப்புத் துறையில் பணிசெய்த அனுபவம் மிக்கவர் தேவை. அமைதிப்பூங்கா என்று பெயர்பெற்ற தமிழ்நாட்டில் ஜனநாயக செயல்பாடுகளில் அனுபவமுள்ள அரசியல்வாதிகளே ஆளுநராக இருந்துள்ளனர்.
போலீஸ்துறையில் பணியாற்றிய பி.எஸ். ராமமோகன் ராவ் மட்டுமே விதிவிலக்காக இருந்துள்ளார். அவருக்கும் தேசியப் பாதுகாப்புத் துறையில் வேலைபார்த்த பின்னணி இல்லை. ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் கொள்கைகளில் இருந்த அடிப்படையிலும் வெளிப்படையாகவும் மாறுபடும் திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது.
எதிர்க்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களையெல்லாம் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களாக ஒன்றிய அரசு பார்க்கிறதா அல்லது தமிழ்நாடு பிரிவினைவாதப் போக்கு நிலவும் மாநிலம் என்ற பிம்பத்தை கட்டியமைக்க முதல் செங்கல்லை பாஜக அரசு எடுத்துவைக்கிறதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது.
ஆளுநர் பதவியென்று ஒன்று இருப்பதையே திராவிட இயுக்கத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
‘ஆட்டுக்கு தாடி; நாட்டுக்கு கவர்னர்’ என்பது முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் கருத்தாகும். ஆளுநர் பதவி என்பது ஆங்கிலேயர் ஆட்சியின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாநில அரசுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மக்கள் ஆட்சிக்கு மேலான அதிகார மையமாகவும் விளங்கியது. விடுதலை பெற்ற நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு மேலாகவோ இணையாகவோ ஒரு பதவி தேவையில்லை என்பது திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்து. மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று உளவுபார்த்து ஒன்றிய அரசிடம் சொல்வதுதான் ஆளுநரின் முக்கிய வேலை என்று பார்க்கப்படுவதால் ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் உளவாளி என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் உளவுத்துறையில் இருந்த ஒருவரையே ஆளுநராக்குவது அந்தப் பதவிபற்றிய எதிர்மறைக் கருத்துகளுக்கு வலுசேர்க்காமல் இருக்குமா?
தமிழ்நாட்டில் அரசியல் கடமைகளுக்கு முதலிடம் தருவாரா அல்லது அவருக்கு ஏற்கனவே அனுபவமுள்ள வேலையைச் செய்வாரா என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பான ஒன்றுதானே. நாகாலாந்து போல் கிளர்ச்சிகளும் ஆயுதப்போராட்டமும் இருக்கும் இடத்தில் ரவீந்திர நாராயண ரவிக்கு வேலை இருந்திருக்கலாம். நாகாலாந்தும் தமிழ்நாடும் ஒன்றா? பாஜக அரசு அப்படி நினைக்கிறதா அல்லது அப்படியொரு சித்திரம் தீட்ட நினைக்கிறதா?
போலீஸ் துறையில் இருபது ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பதைக் கேட்கும்போது புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரான நாராயணசாமிக்கும் இடையில் நடைபெற்ற வெளிப்படையான அதிகார மோதலும் அதனால் புதுவை அரசுக்கு ஏற்பட்ட சிக்கல்களும் நினைவுக்கு வராமல் போகுமா?
காவல்துறை பின்னணியே அப்படியென்றால் உளவுத்துறை பின்னணி எப்படியோ என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்குமா? புதுவை ஒரு யூனியன் பிரதேசந்தானே. தமிழ்நாடு முழுஅதிகாரம் பெற்ற மாநிலமல்லவா என்ற குரல்கள் எழும்போது உடனடியாக மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் வேறு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் நியமிக்கப்பட்ட ஆளுநருக்குக்கும் இடையே நடைபெறும் மோதல்கள் கண்ணில் தெரியும் க
தைகளாக இல்லையா?
மேலும், ஆளுநரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியைவிடவும் என்ன செய்வதற்காக அவர் நியமிக்கப்படுகிறார் என்பதே முதன்மை கேள்வியாக உள்ளது. ஆளுநர் இன்னும் பதவி ஏற்காத சூழலில் அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் அவர் செயல்பாடுகள் எப்படியென்று தெரிவதற்குமுன் கேள்விக்குள்ளாவது ரவியின் பின்னணி மட்டுமல்ல; பாஜக அரசின் உள்நோக்கமும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளுந்தான்.
பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பிரதிநிதியாகவும் பாஜகவை வளர்க்கும் நோக்குடனும் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் அன்றாட நிகழ்வாகத்தானே இருக்கின்றன.
இதற்குமுன் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களை காவிமயமாக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுகள் இன்றளவும் எதிரொலிக்கின்றன. மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றிய ஏழு தமிழர் விடுதலைக்கு அவர் முட்டுக்கட்டையாகவே இருந்தார். பதவியேற்ற புதிதில் அவர் நேரடியாக சுற்றுப்பயணங்களை நடத்தினார். அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தினார்.
பாஜக நியமனம் செய்த ஆளுநரின் செயல்பாட்டுக்கு இதைவிட உதாரணம் தேவையா?
அதற்கு முன் ஆளுநராக இருந்த சி.எச். வித்யாசாகர் ராவ் அதிமுக இணைப்பில் முக்கிய பங்காற்றினார் என்று அவர்மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஆளுநர்கள் ஒழுங்காக இருந்தார்களா என்ற எதிர்க்கேள்வி வைக்கப்படுகிறது. அப்படியென்றால் காங்கிரஸ்தான் பாஜகவுக்கு முன் உதாரணமா? பாஜக மாறுபட்ட கட்சி என்பது வெறுங்கதைதானா? பாஜகவுக்கு ஓட்டுப் போடுவதற்கு பதிலாக இனிமேல் காங்கிரசுக்கே வாக்களித்துவிடலாமா?
அடுத்ததாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வருவதால் தென் மாநிலங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்துவருகிறதாம். இங்கே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது எனலாம். தமிழ்நாட்டில் இருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையையும் மதமோதல்களையும் உருவாக்கும் முயற்சி என்று மறைமுகமாக ஆளுநர் நியமனத்தை ஆதரிப்பவர்களே சொல்கின்றனர். ஒருவேளை தீவிரவாத நடவடிக்கை தென்பட்டால் அதை ஒடுக்கும் அதிகாரமும் கடமையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கிறதா?
ஆளுநருக்கு இருக்கிறதா? இல்லையென்றால் இனிமேல் மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவார் என்பதை இப்போதே மறைமுகமாக சொல்கிறார்களா? வெளியில் இருந்து வரும் குற்றச்சாட்டுகளைவிட இதுபோன்ற உள்குத்துகளே பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
ஊழலை எதிர்த்து நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார்கள். இதுவரை அப்படி நடந்ததில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் இதுவரை ஊழலே நடக்காமல் இருந்திருக்கலாம். அல்லது திமுக அரசு ஊழல் செய்யப்போகிறது என்று முன்னரே ஆருடம் தெரிந்திருக்கலாம். இல்லையென்றால் அப்படியொரு குற்றச்சாட்டை கூறி திமுக அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடும் திட்டத்தை விஷயம் தெரிந்தவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
முன் கூட்டியே ஊகிப்பவர்கள் கடந்தகால பாஜக ஆளுநர்களின் செயல்பாடுகளையும் தற்போது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நடப்பதையும் வைத்தே பேசுகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ரவியின் நியமனம் நல்லது என்று எதைவைத்து ஊகிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு பொருளாதார நிபுணரையோ வேறு மாநிலத்தில் பொறுப்பில் இருந்தபோது அந்த மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படுத்தியவரையோ நியமனம் செய்திருந்தால் அப்படிக் கூறலாம். ஒருவேளை தேசியப் பாதுகாப்புப் பொறுப்பில் நாட்டின் வளர்ச்சிக்குத் திட்டமிடும் மேதைகள் நியமிக்கப்படுகிறார்களா? அல்லது நாகாலாந்து இந்தியாவிலேயே வளர்ச்சிபெற்ற மாநிலமாக மாறிவிட்டதா?
இப்படியெல்லாம் நிறைய கேள்விகள் தோன்றுகின்றன. இந்தக் கேள்விகளின் பின்னே இந்த ஆளுநரின் நியமனத்தை எதிர்ப்பவர்களின் நியாயங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
Read in : English