கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளாததன் விளைவு இந்தி பேசும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது பாஜக.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நெல்லுக்கு அதிகக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்து வெற்றி பெற்ற சூழ்நிலையில், தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நேரடி வருமான உதவித் திட்டமான ‘ரிது பந்து’ வை அறிவித்த சந்திரசேகர ராவ், சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினார்.
நாட்டிலேயே முதன்முறையாக அறிவிக்கப்படும் இத்திட்டத்தால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு காரிப் மற்றும் ராபி பருவகால பயிர்களுக்கு தலா 4,000 ரூபாய் என ஆண்டுக்கு மொத்தம் 8,000 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 58 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவர். இதற்காக, 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 12 ஆயிரம் கோடி ரூபாயை தெலங்கானா அரசு ஒதுக்கீடு செயதுள்ளது. நேரடி உதவித்தொகை ரூ.10 ஆயிரம்ஆக உயர்த்தப்பட, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இத் திட்டம் பின்பற்றப்பட்டு, அதன் மூலம் ஓர் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசுகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது, விவசாயிகளுக்கு உதவி சேய்ய வேண்டிய அரசியல் அவசரம் ஏற்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முழுமையான கடன் தள்ளுபடிக்காக ரூ.18 ஆயிரம் கோடியும் சத்தீஸ்கரில் கடன் தள்ளுபடிக்காக ரூ.6,100 கோடி ரூபாயும் செலவாகும். இந்தக் கடன் தள்ளுபடியால் மொத்தம் 83 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் அடைவார்கள்.
விவசாயக் கடன் தள்ளுபடி நிதிநிலையைப் பாதிக்கும், மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்களும் வங்கித்துறையினரும் கொள்கை வகுப்பாளர்களும் எச்சரிக்கை செய்தாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’’இந்த நாடு விவசாயிகளுக்கானது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுப்போம். கோரிக்கை நிறைவேறும்வரை அவரைத் தூங்க விடமாட்டோம். மோடி செய்யத் தவறினால், காங்கிரஸ் நூறு சதவீதம் அதைச் செய்யும்’’ என்றார்.
அவருடைய வாதத்துக்கு ஆழமான காரணம் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2014லிலிருந்து 2018 வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் 3.16 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போது எந்த பொருளாதார நிபுணர்களும் வங்கித் துறையினரும் கதறவில்லை. தேர்தலுக்கு முன்பு, பல்வேறு கிராமங்களுக்கு பயணம் செய்த போது விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்வதன் மூலம் நாடு பொருளாதார வளர்ச்சி அடைகிறது என்று கூறிய முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மீதுதான் விவசாயிகளின் கோபம் திரும்பியது. இன்னொரு புறம், உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தபோது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், இது நாட்டின் பொருளாதார இருப்பை பாதிக்கும்; தார்மீகரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றார்.
இருந்தபோதும், இந்தி பேசும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் விவசாயத்தை இந்திய அரசியலில் மைய இடத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அரசியலில் விவசாயம் முதன்மையாகியுள்ளது. இச்செய்தி உரக்கவும் தெளிவாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் விவசாயிகளிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது, இதுவே முதல் முறையாக இருக்கலாம். பிரித்தாளும் அரசியல் தந்திரங்களால் விவசாயிகள் சாதி, மதம், இன, கொள்கை அடிப்படையில் பிரிந்துகிடந்தார்கள் இப்போது தேர்தலில் தங்களது பலத்தை உணர்ந்துள்ளார்கள். அரசைக் கவிழ்க்கும் சக்தி எது என்பதை சமீபத்தியத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. 2019இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் இது முக்கியக் காரணியாக இருக்கும்.
நமது நாட்டில் உத்தசேமாக 50 சதவீத மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதியாக, விவசாயிகள் உறுதியாகச் செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் ஒரே நிலையில் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்தியாவில் விவசாயிகளின் வருமானம் கவலைப்படும் வகையில் உள்ளது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. விவசாய உற்பத்தி அதிகரித்தள்ள போதிலும், கடந்த 2011-12 மற்றும் 2015-16ஆண்டுகளில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் அரை சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 0.44சதவீதமே உள்ளது என்று நிதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களை விளைவித்தற்காக நிஜத்தில் விவசாயிகள் தண்டிக்கப்படுகிறார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர, அவர்கள் உற்பத்தி செய்யும் செலவை விட குறைவாகவே அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு பணம் கிடைக்கிறது. உணவு வீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பொருளாதார சுமைகளும் விவசாயிகளின்மேல் சுமத்தப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் கடனிலேயே பிறந்து கடனிலேயே வாழ்ந்து மரிக்கின்றனர். கடன் தான் அவர்கள் வாழ்வதற்கான் ஒரே வழியாக உள்ளது. அதனால் கடன் மலையென உயர்கிறது.
இந்த வறுமையான பொருளாதாரச் சூழலில், `17 மாநிலங்களில் அதாவது நாட்டில் பாதிக்கு மேல் உள்ள பகுதிகளில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 20 ஆயிரம் ரூபாய்” என்று 2016ஆம் ஆண்டு எக்னாமிக் சர்வே கூறியுள்ளது. அது நாட்டில் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. கொள்கைகளும் பொருளாதாரமும் விவசாயிகளை வாழ்விக்காத போது, அரசியலில் விவசாயிகள் முக்கியத்துவம் பெறுவது மட்டுமே முன்னேறுவதற்கான வழி. இந்த அரசியல் மாற்றம் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.