Read in : English
அன்புள்ள விவசாயிகளே! கடந்த வாரம் ஈரோடு காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதில் பலர் காங்கேயம் பசுவின் கோமியம் மற்றும் சாணம் மட்டும் தான் சோப் தயாரிப்பில் பயன்படுத்த ஏதேனும் விஷேச காரணங்கள் உள்ளனவா அல்லது மற்ற இன பசுக்களின் பொருட்களையும் பயன்படுத்தலாமா என்று கேட்டிருந்தார்கள்.
கொங்குப் பகுதியில் பாரம்பரியமாக இருப்பது காங்கேயம் மாடுகள். அங்கு நடைபெறும் திருமணங்களில் காங்கேயம் பசு மற்றும் கன்றுக்குட்டியை திருமணப் பரிசாகக் கொடுப்பார்கள். காங்கேயம் பசுக்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஈரோடு குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதியின் காங்கேயம் பசு டிரஸ்ட்டை பார்த்து வரவேண்டும்.
கொங்கு மண்டலத்திலுள்ள காங்கேயம் என்ற ஊரின் பெயரில் தான் அந்தப் பகுதி மாட்டுக்கு காங்கேயம் என்ற பெயர் வந்தது. ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த இன மாடுகள் மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
இந்த வகை இனங்கள் பெரும்பாலும் நடுத்தர அளவுடையவை. பெரிய மாடுகளைப் பார்ப்பது அபூர்வம். தென் இந்தியாவில் வறண்ட நிலத்துக்கேற்ற இனம். சொற்ப தீவனத்துடன் வாழும் இயல்பைப் பெற்றவை என்கிறார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திக்.
கடந்த 20 ஆண்டுகளில் நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன. அதற்கு அரசின் கொள்கை முடிவுகளும் காரணம். கலப்பின மாடுகளை இங்கு அறிமுகப்படுத்தி அவை அதிகம் பால் கொடுக்கும் என்ற விளம்பரத்தால் நாட்டு மாடுகள் மதிப்பிழந்தன. ‘’கலப்பின மாடுகள் அதிக பால் தருகின்றன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த மாடுகள் பலவகைத் தொற்றுக்கு ஆளாகி, நோய்களால் பாதிக்கப்படுகின்றன. நாட்டு மாடுகள் அவ்வாறு பாதிப்புக்குள்ளாவது இல்லை.”
மற்றொரு காரணம், அரசு கால்நடைத்துறைக்காக பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. ஆனால் இன்று அரசுத்துறை அதிகாரிகளில் நாட்டு மாடுகளை ஆதரிக்கும் ஒருவரைக் கூட காண இயலாது. இதற்கான பதில் எளிமையானது. ஆரோக்கியமான நாட்டு மாடுகளைப் பராமரிக்க இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே, மாடுகளுக்கு மருந்தும் ஊசியும் வாங்கியதாக ஆவணங்களை உருவாக்கி அரசிடமிருந்து நிதி பெற முடியும்? கலப்பின மாடுகள் இருந்தால், இதைச செய்ய முடியும்.
நல்ல ஆரோக்கியமான உடலமைப்பை பெற்ற காங்கேயம் காளைகள் வண்டி மாடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பசுக்களின் பாலில் கெட்ட கொழுப்பு இல்லை. அம்மாடுகளின் கோமியத்துடன் அழுகிய பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்து சிறந்த உயிர் உரமான அமிர்தக்கரைசல் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகளின் கோமியமும் சாணமும் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான மாடுகள் சாம்பல் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே கருப்பு அடையாளத்துடன் இருக்கும். காங்கேயம் பசுக்கள் குறைந்த அளவே பால் கொடுக்கும். ஒவ்வொரு காங்கேயம் பசுவின் விலை 25,000 ரூபாயிலிருந்து 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. காங்கேயம் காளை 60 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
காங்கேயம் இனத்தின் பெருமைகள் குறித்து அதிக விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான் அவற்றின் புகழ் மங்கிவிட்டது என்கிறார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திக். தனது பண்ணையில் காங்கேயம் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் இவர்.
இன்று அனைத்து விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, அதற்காக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களும் அரசும் போதிய கவனம் செலுத்தவில்லை.
இப்பண்ணையில், இந்த இன மாடுகளின் தனித்தன்மையை பாதுகாக்க கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 1990இல் 11 லட்சமாக இருந்த காங்கேயம் மாடுகளின் எண்ணிக்கை 2000ஆவது ஆண்டில் 5 லட்சமாகக் குறைந்துள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மறுத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ஆலம்பாடி வகை நாட்டு மாடுகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. அத்துடன், துரதிர்ஷ்டவசமாக காங்கேயம் நாட்டு மாடுகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. 90களில் தமிழ்நாட்டில் 12 லட்சமாக இருந்த இந்த நாட்டு இன மாடுகள் தற்போது இரண்டு லட்சமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் குறைந்தபட்சம் அவர்களின் பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டு மாட்டையாவது வளர்த்து அதன் மூலம் தேவையான எருவைப் பெற வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், நிலத்துக்குத் தேவையான உரம் கிடைத்துவிடும். அதேவேளையில் குடும்பத்துக்கும் சத்துள்ள பால் கிடைக்கும்.
இயற்கை வேளாண்மையில் நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் மிகச் சிறந்த இயற்கை இடுபொருள் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இம்மாடுகளைக் காப்பதும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நமது கடமை. இம்மாடுகளுக்குப் பதிலாக கலப்பின மாடுகளை வாங்குவது காலப்போக்கில் லாபகரமானதாக இருக்க இயலாது என்பதையும் உணர வேண்டும்.
தொடர்புக்கு: கார்த்திகேய சிவசேனாபதி, சேனாபதி காங்கேயம் மாடு ஆராய்ச்சி நிறுவனம், காட்டுப்பாளையம், பாளையங்கோட்டை கிராமம், காங்கேயம் தாலுகா, திருப்பூர் மாவட்டம் – 638108
இமெயில்: karthikeyaksm@gmail.com
இணைய தளம்: www.kangayambull.com
மொபைல் : 9994433456
போன்: 422 223 2818
Read in : English