Read in : English
அன்புள்ள விவசாயிகளே! விவசாயத்தில் எல்லாம் நன்றாக நடந்தால் நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். ஆனால் அது நமக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கிறதா? அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா? இதுவரைக்கும் ஒரு உறுதியான பதிலை யாராலும் நம்மிடம் சொல்ல முடியவில்லை.
டெல்டா பகுதி போன்ற இடங்களில் நல்ல சாகுபடியை எப்படி பெறுவது என்பது நமது விவசாயிகளுக்குத் தெரியும். முன்பு இப்பகுதியில் சில விஷயங்கள் நன்றாக இருந்தன. ஆனால், சில சதாப்தங்களுக்கு முன்பு நெல்லை கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்த பிறகு அனைத்தும் கவலைக்குரியதாக மாறியது. நம்மிடம் விளைபொருளை வாங்கிக்கொள்வது என்பது ஏதோ பொம்மைகளை நம்மிடம் வீசுவது போல் நினைத்து வீசுகிறது அரசு. அதுவும், ’நமது நல்லதுக்காக’ என்று சொல்லிக்கொண்டு கொள்முதல் செய்வது நமக்கு உதவி செய்வதை விட நம்மை அவமானப்படுத்தும் செயலாக மாறிவிட்டது. குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்த அரசு, இதுவரை எங்கும் யாருக்கும் ஒருபோதும் முழுப் பணத்தை தந்தது இல்லை.
ஏன் இந்த நிலை? காரணம் மிகவும் எளிது. இந்த நடைமுறையில் எங்கும் ஊழல் ஊடுருவி மொத்த அமைப்பையும் இறுக்கிகமாகப் பிடித்துள்ளது. அறுவடை செய்த விளைபொருட்களை விவசாயிகள் உடனே விற்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரியும். அதற்கு ஏற்ற வகையில் இந்தியாவில் விளைபொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் இல்லை. அனைத்து வசதிகளும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. அமைச்சர்கள் தங்கள் வருகையின் போதோ அல்லது தேர்தலின் போதோ மட்டுமே இதுகுறித்துப் பேசுகிறார்கள்.
இதனைத் தெரிந்துவைத்துக்கொண்ட கொள்முதல் செய்யும் சந்தை வர்த்தகர்கள் நம்மை முழுவதுமாகச் சுரண்டுகிறார்கள். விற்பனை செய்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்களுக்குத் தெரியும். விளைபொருள் போதுமான அளவு காயவில்லை. அதனால் வாங்க முடியாது என்று கூறி ஒவ்வொருமுறையும் பொருளுக்கான விலையைக் குறைக்க அவர்கள் தந்திரம் செய்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு வலைப்பின்னல் இருக்கிறது. கொள்முதல் செய்யும் வர்த்தகர்கள் அனைவரும் கிளிப்பிள்ளை போல ஒருவர் சொன்னதையே மற்றவர்களும் சொல்கிறார்கள். அரசு நிர்ணயித்த தரக்கட்டுப்பாட்டை பூர்த்தி செய்வதாக இல்லை என்று கூறி அவர்கள் ஏமாற்ற முயல்கிறார்கள்.
இவ்விஷயத்தில் அரசு கொள்முதல் நிலையங்களுக்கும் தனியார் வர்த்தகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. டிராக்டரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்களது தானியங்களை சோதனை செய்வதற்கும் எடை சரிபார்ப்பதற்கும் பல்வேறு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்துச் செல்வது சாத்தியமில்லாதது. கடும் உழைப்பைச் செலுத்தி உற்பத்தி செய்த தானியங்களை விற்பனை செய்வதற்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கண்ணீர் சிந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் சொல்லும் விலைக்கு ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
அதேபோல், அரசு கொள்முதல் நிலையங்களில் நமது பொருட்களை இலவசமாகச் சேமித்து வைக்க முடியாது. அதற்கு தினசரி கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, உற்பத்தி செய்த தானியங்களை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படும் போது, வேறுவழியின்றி கிடைத்த விலைக்கு விவசாயிகள் விற்று விட்டுப் போகிறார்கள். விவசாயிகளின் பொருட்களை வாங்குவதற்கு தாமதப்படுத்தும்போது, வேறுவழியின்றி விவசாயிகள் கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்துவிட்டு போகிறார்கள். இந்த நிலையில்தான் தனியார் நிறுவனங்கள், குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்தச் சூழ்நிலையை அனைவருமே கடந்து வந்திருப்போம் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்தாலும் அவர்களால் அதற்கான லாபத்தைப் பெற முடிவதில்லை. இடுபொருட்களுக்கு செலவழித்த பணத்தைக் கூட அவர்களால் திரும்பப் பெற முடியவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த விவசாயிகள் வேறு வழியின்றி விவசாயத்தைக் கைவிட்டு விடும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
தங்களுக்கு வேறு தொழில் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிட்டு விட தயாராக இருப்பதாக நாட்டிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூறியுள்ளது 2007இல் நேஷனல் சேம்பிள் சர்வே அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால், அரசு இதைப் பற்றி அக்கறைகொள்வதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. இது குறித்து தில்லி அதிகார மையங்கள் தினமும் விவாதிக்கலாம். விவசாயிகள் உணவை உற்பத்தி செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? வேறு யார் இந்த தொழிலை செய்வார்கள்? தினமும் அனைத்து உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியுமா?
விவசாயிகளின் பிரச்சினையை புரிந்துகொள்வது ஒன்றும் ராக்கெட் அறிவியலை புரிந்துகொள்ளும் அளவுக்குக் கடினமானது இல்லை. விவசாயம் சிரமமின்றி நடைபெற வேண்டுமானால் அவர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு நாட்டில் நம் அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆனால், நாம் எப்போது இதைச் செய்ய போகிறோம்?
Read in : English