மார்டன் தியேட்டர் நிறுவனத்துக்காக வசனம் எழுதுவதற்காக 1950களில் சேலத்துக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதிக்கு வாடகை வீடு பார்த்துத் தந்தவர் தபால் துறையில் குமாஸ்தாவாக இருந்த ரா. வேங்கடசாமி. அவருக்கு தற்போது வயது 89.
1947ஆம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து முடித்து விட்டு வேங்கடசாமி, சேலத்தில் ஆதித்தனார் நடத்திய தினத்தாளில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பத்திரிகை சென்னைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த வேலையை விட்டு விட்டு தபால் துறையில் குமாஸ்தா பணியில் சேர்ந்தார். வேங்கடசாமி. பத்திரிகைப் பணியில் இருந்த போது மார்டன் தியேட்டர்ஸில் இருந்த உதவி இயக்குநர் சோமு அவருக்குப் பழக்கம். அவர் மூலம் சேலத்துக்கு வசனம் எழுத வந்த கருணாநிதி பழக்கமானார்.

ரா. வேங்கடசாமி
“மார்டன் தியேட்டர்ஸ் ஒத்திகை அறைக்கு (ரிகர்சல் ஹால்) சென்ற போது, அங்கு ஒல்லியான ஜிப்பா அணிந்திருந்த ஒருவரை உதவி இயக்குநர் சோமு எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் கலைஞர். நமது அடுத்த படத்துக்கு வசனம் எழுத வந்திருக்கிறார் என்று சொன்னார். உங்களது பகுதியில் ஒரு நல்ல வீட்டை பார்த்துக் கொடுங்கள் என்று சோமு என்னிடம் சொன்னார். நான் குடியிருந்த தெருவில் ஒரு கம்பவுண்டரின் வீடு காலி இருந்தது. வாடகை 50 ரூபாய் என்றார்கள். மறுநாள் மாலை, கலைஞரை அழைத்து வந்து வீட்டைக் காட்டினேன். அவருக்கு வீடு பிடித்து போனது. நான் எதிர் வீட்டில் இருந்ததால் அந்த வீட்டை வாடகைக்கு விட சம்மதித்தார்கள். அவர் ஊருக்குச் சென்று தனது தாய், இரண்டு வயதே ஆன முத்து, அவருடன் அவரது இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் ஆகியோருடன் வந்து விட்டார். .காலையில் எழுந்தவுடன் பத்திரிகையைப்படித்துவிட்டு அவர் எழுத அமர்ந்து விடுவார். பொதுவாக எங்கள் சந்திப்பு மாலையில்தான் இருக்கும். உதவி டைரக்டர் சோமுவுடன் நாங்கள் மூவரும் ஆங்கிலப்படம் பார்க்கச் செல்வோம். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் கூட்டங்களுக்குச் செல்லும் போது அவருடன் நான் செல்வேன்” என்பதை வேங்கடசாமி நினைவுகூர்கிறார்.
`மந்திரிகுமாரிக்கு கதாநாயகன் எம்.ஜி.ஆர். அந்தப் படத்தின் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் , எம்.ஜி.ஆரின் தாடையில் சிறிது குழி இருக்கிறது. இவர் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இவர் நடிக்கவில்லை என்றால் நான் வசனம் எழுதவில்லை என்று கலைஞர் கூறிவிட்டார் . மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிறு தாடியை ஒட்டி, அவரை நடிக்க வைக்கலாம் என்று தீர்மானிக்க, டைரக்டர் டங்கனும் ஒப்புக் கொண்டார்” இப்படி நம்மிடம் கருணாநிதியைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஏராளமான சம்பவங்கள் அவரிடம் உண்டு.
“மந்திரிகுமாரி படம் வெற்றிகரமாக ஓடியது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், தனது அடுத்த படத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து கலைஞரை சென்னைக்கு அழைத்தார். சேலத்தையும் அதோடு இந்த அஞ்சல் துறை குமாஸ்தாவையும் மறந்து விடுவீர்கள் இல்லையா?’’என்று கண்கலங்கக் கேட்டேன். ஆனால் அவர் என்னை மறக்கவில்லை. கலைஞர் சென்னைக்குச் சென்றவுடன், வசனம் எழுத முரசொலி மாறன் , சேலம் வந்தார். அவரையும் நான் கவனித்துக் கொண்டேன். அவரும் என் மீது பிரியமாக இருப்பார்” என்று அவர் நெஞ்சம் நெகிழ்கிறார்.
கருணாநிதிக்குத் தெரிந்தவர் என்பதால் அவசர நிலை காலத்தில் தன்னை கைது செய்ய போலீசார் தயாராக இருந்த சூழ்நிலையில், போலீசார் அளித்த ரகசிய அறிக்கையினால் அதிலிருந்து தப்பியது எப்படி என்பதை சுவாரசியமாக விளக்குகிறார்.
“எனது தந்தை மரணத்தின் போது கலைஞர் சுடுகாட்டுக்கு வந்திருந்தார். 1951இல் எனது திருணத்துக்கு வந்து வாழ்த்தினார். எனது இரு பெண்கள், மகன் ஆகியோரது திருமணத்துக்கும் வந்தார். கலைஞர் மூலம் எனக்கு நண்பரான இராம. அரங்கண்ணல் தயாரித்த `அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்துக்கு என்னை விநியோகஸ்தர் ஆக்கினார். என்னுடன் மேலும் மூன்று பாகஸ்தர்கள். அந்தப் படம் மிகவும் பிரமாதமாக ஓடி எனக்கு லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது. இதில் என்னைவிட அதிகமாக மகிழ்ந்தவர் கலைஞர். நெஞ்சுக்கு நீதியில் என்னைப் பற்றி அவர் மறக்காமல் குறிப்பிட்டு இருப்பது நான் செய்த பாக்கியம்” என்று குறிப்பிடும் அவர், கருணாநிதி மறைந்த போது உடல் நலக் குறைவு காரணமாக சென்னைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை நினைத்துக் கண்கலங்குகிறார்.
“.கலைஞர் சேலம் வரும்போது எல்லாம் வேங்கடசாமிக்குத் தகவல் தகவல் வரும். அவரை நேரில் சென்று பார்ப்பார். கூட்டத்தில் இவர் இருப்பதைப் பார்த்தும், பேச முடியாத தூரத்தில் இருந்தாலும் கலைஞர் இவருடன் கண்ணால் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம். கலைஞருடன் மட்டுமல்ல, எம்ஜிஆருடனும் வேங்கடசாமிக்கு நல்ல அறிமுகம் இருந்தது. தபால் துறை பணியில் இருந்தாலும்கூட, எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து கதைகளை மொழிபெயர்த்து இருக்கிறார். கருணாநிதியைப் பற்றியும் எம்ஜிஆரைப் பற்றியும் புத்தகங்களை எழுதியிருக்கிறார்” என்கிறார் வேங்கடசாமியை பல ஆண்டுகளாக நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் தி. கூடலரசன்.