Read in : English
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால்தான் இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்ற விவாதம் ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் கட்டுமான பாதுகாப்பையும் பற்றியது அல்ல; முல்லைப் பெரியாறு அணை இயக்கப்படுதில் உள்ள பாதுகாப்பு குறித்தது அது.
துரதிஷ்டவசமாக, முல்லை பெரியாறு அணை இயக்கப்படுவது குறித்த முக்கியத் தகவல்கள் இல்லாமல் பொது வெளியில் விவாதிக்கப்படுகிறது. அணையில் தினசரி நீர் இருப்பு, நீர் தேக்குவது குறித்த விவரம், நீர் வரத்து, பல்வேறு முனைகளில் நீர் வெளியேற்றம், அடுத்த சில தினங்களுக்கான முன்னறிப்பு ஆகியவை குறித்து பேசப்படுவது இல்லை. பொதுமக்களிடம் தினசரி இந்தத் தகவல்களை கொண்டுபோய் சேர்ப்பது குறித்து ஏன் விவாதிக்கப்படவல்லை?
கேரளாவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தபோது முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதா? ஆம். அந்தத் தண்ணீர் வெளியேற்றத்தைத் தமிழகம் குறைத்திருக்க முடியுமா? முடியும். எப்படி என்று பார்ப்போம். கேரள வெள்ளத்தின்போது, முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகள் குறித்து கீழ்க்கண்ட பிரச்சினைகளைப் பார்க்க முடியும்:
- ஜூலை 26ஆம் தேதி நிலவரப்படி அணை 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக்கொள்ள தமிழகத்துக்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தரவிட்டதை இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. அணையின் நீர் மட்டம் குறித்து சாதக பாதகங்களைக் கருத்தில் கொண்டு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல், பருவமழை முடியும் முன்பே அணையின் முழு கொள்ளளவை எட்ட தமிழகம் ஏன் அனுமதித்தது?
- ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட்டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.
- இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது. வண்டி பெரியாறு பகுதியில் உள்ள பெரியாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியின் அளவு 712 சதுர கிலோ மீட்டர். இது முல்லைப் பெரியார் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியைவிட (648 சதுர கிலோ மீட்டர்) அதிகம். எனவே, பெருமளவு தண்ணீர் முல்லை பெரியாறு அணையிலிருந்து வந்தது.
முல்லை பெரியாறு அணையின் கீழ்ப் பகுதியான வண்டிபெரியாறில் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்தது. இந்த வெள்ளவோட்டத்தின் அளவைக் கண்காணித்து வரும் மத்திய நீர் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களிலிருந்து இது தெளிவாகும்.
- கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.
- வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.
முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா கூறும் அனைத்தும் துல்லியமானவை அல்ல. அவர்களது கோரிக்கைகளில் பல உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம். (கேரளாவும் தவறான தண்ணீர் மேலாண்மையால் பலமுறை இதே தவறைச் செய்துள்ளது) கேரளா அனைத்து அணைகளையும் ஜூலை மாத இறுதியிலேயே நிரம்ப செய்து விட்டது; ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குப் பிறகு 40 அணைகளிலிருந்தும் தண்ணீரைத் திறந்துவிட்டதும் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது. முல்லைப் பெரியாறு அணையை அறிவியல் ரீதியாக தமிழகம் கையாளத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினால், முல்லைப் பெரியாறு அணையைவிட பெரிய பல பெரிய அணைகள் உள்பட 40 அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டதாக கேரளா மீதும் குற்றம் சாட்ட முடியும்.
எனினும், இதற்கு முழுவதும் அப்பாற்பட்டதாக தமிழகத்தைக் கருத முடியாது. இந்த விஷயத்தில் தொடர்புடைய அனைவரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதுடன் இந்த நிகழ்வுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் முதல்படியாக, தற்போது கேரளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் கேரள, தமிழக அணைகளின் பங்கு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஹிமன்ஸு தாக்கரின் கட்டுரைக்கு கிடைத்த எதிர்வினைக்கு அவரின் பதில்:
இந்தக் கட்டுரையின் வாதம், ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 20 தேதிவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பது அல்ல. இந்தக் கட்டுரை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதைக் குறித்தே பேசுகிறது. ஆனால், அதிகபட்ச நீர் திறப்பு 2,200 கன அடி நீர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு தரமான சாட்சியங்களை நம்பத்தகுந்த ஆவணங்களில் காண விரும்புகிறேன்.
ஆகஸ்டு 14ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிட்டது தொடர்பாக வண்டிபெரியாறு இணையதளத்தில் உள்ள வரைபடத்தைப் பாருங்கள். (முதன்மை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது) அதில் ஆகஸ்டு 14ஆம் தேதியன்று வண்டிபெரியாறில் உச்சபட்ச வெள்ள அளவு எவ்வாறு உயர்ந்தும் குறைந்தும் உள்ளது என்பதையும் பாருங்கள். இந்த அளவு மதிப்பீடுகள் அனைத்தும் மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து பெறப்பட்டது. அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல, நீர் ஆதாரங்கள் தகவல் சேவை(WRIS) அறிக்கையின்படி, வண்டிபெரியாறின் 90% நீர்ப்பிடிப்பு முல்லைப்பெரியாறில் இருந்து தான் பெறப்படுகிறது. அச்தாவது வண்டிபெரியாறு வெள்ளம் பெருமளவில் முல்லைப்பெரியாறில் இருந்து வந்ததுதான்.
அணையின் நீர்மட்டம் குறித்து வெளிப்படையான தகவல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மை ஆணையத்தின் வெளியீட்டின்படி, முல்லைபெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 867.41மீ(கடல் மட்டத்துக்கு மேல்) என கொடுக்கப்பட்டுள்ளது. இது 142 அடி என நான் யூகித்துக்கொண்டேன், அதுதான் அணையின் மொத்தக் கொள்ளளவு நீர்மட்டம். இந்த கொள்ளளவு நீர்மட்டத்தின் மேலதிக தகவல்களை நான் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பார்க்கவில்லை. மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அணையின் நீர்மட்டம் குறித்து சரியான தகவல்களைக் கொடுத்திருக்கும் என யூகித்தேன். காரணம், மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அவர்கள் வெளியீட்டில் கொடுக்கப்பட்டதகவல்கள் அனைத்தும் சம்பதப்பட்ட மாநில அரசால் கொடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தது. ஒருவேளை மத்திய நீர் மேலாண்மை ஆணையம் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால், அது அந்தந்த மாநிலங்கள் கொடுத்த தகவல்களைப் பொறுத்து அது வெளியிட்டுள்ளது என்பது என் புரிதல்.
இந்த கட்டுரையில் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம், நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்டத்தைவிட 5 அடி கூடுதலாக இருந்தது என மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டது. நீர்மட்டம், அணையின் நிர்ணயிக்கபட்ட நீர்மட்டத்தை விட 5 அடி அதிகமாக தேக்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்தியாவில் பல அணைகளில் நீர்மட்டம், உச்சபட்ச நீர்மட்டத்தை விட பல அடிகள் அதிகமாக உள்ளது. அது அணையின் வெள்ள அளவையும் மதகுகளின் நிலையையும் பொறுத்து அமையும்.
Read in : English