Read in : English
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விரும்புகின்ற வெற்றி கிடைப்பது சந்தேகமாக உள்ளதால், 2019 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க பா ஜ க வியூகம் வகுக்கிறது. தற்போதைய நிலவரப்படி எப்படியும் தமிழ்நாட்டில் முப்பது மக்களவை இடங்களை பெற்றால்தான் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் என்று உணர்ந்த பா ஜ க, தமிழ்நாட்டில் கொள்கைகளை பற்றி கவலை படவேண்டாம், ஜெயிக்கும் குதிரை எது, அதை தேர்வு செய்வோம் என்ற நிலைக்கு வந்துள்ளது. பிரிந்து நிற்கும் அதிமுக வின் செல்வாக்கு குறைந்து உள்ளது என்பதனால், திமுக வுடன் கூட்டணி வைக்க பா ஜ க முனைகிறது.
இந்த தேசிய கட்சியானது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி திமுக வை நெருங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக மூத்த தலைவர் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மற்றும் குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், மற்றும் பாஜக முதலமைச்சர்கள் தமிழகம் வந்தனர். கருணாநிதி மறைந்த பிறகு, மோடி முதல் மாநில தலைவர் வரை, திமுக வுடன் நெருங்கிய சகாக்களைப்போல் சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. மேலும், தில்லியில் வாஜ்பாய்கு இறுதி மரியாதை நிகழ்ச்சிகளிலும், சென்னையில் அஸ்தி நிகழ்ச்சிகள் மூலமாகவும், திமுகவுடன் பாலத்தை அமைக்க பாஜக தலைவர்கள் செயல்பட்டுவருகின்றனர்.
இந்த தேசிய கட்சியானது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி திமுக வை நெருங்குகிறது.
இதில் ஒரு காட்சி தான், சென்னை கமலாலயத்தில் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செய்யப்படும் நிகழ்ச்சி என்று ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு விடுத்த அழைப்பு. ஸ்டாலினும் கனிமொழியும் சென்னை பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். தங்களுக்கு வேண்டிய தொலைக்காட்சிகளின் மூலம், பாஜக விற்கும் திமுக விற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டாகிவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. இதன் மூலம் திமுக தலைவர்களை மூளைச்சலவை செய்ய முயற்சிக்கப்பட்டது.
ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் டெல்லியில் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்த ஸ்டாலினும் கனிமொழியும் வந்ததையும் சுட்டிக்காட்டி இரண்டு கட்சிகளுக்கும் இடையே உறவுகள் பலமாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர்கள் செய்தியை பரப்பி வருகின்றனர்.
இதைப்பற்றி திமுக தலைவர்கள் சிலருடன் விசாரித்ததில் திமுக-பாஜக கூட்டணியை திமுக விரும்பவில்லை. ஏனெனில் திமுக ஏற்கனவே காங்கிரஸ் விசிகே ஐயுஎம்எல் எம்எம்கே ஆகியவையும் அடங்கிய ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது. இக்கூட்டணியை விரிவாக்க மதிமுக மற்றும் இடதுசாரி காட்சிகளையும் சேர்க்கவுள்ளது. அது மிக பலம்வாய்ந்த கூட்டணியாக அமையும் என்று தெரிவிக்கிறார்கள்.
பாஜக-கூட்டணி வெற்றிபெறவேண்டும் என்றால் ரஜினியின் கட்சி, தேதிமுக மற்றும் பாமக மீண்டும் அதன் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று கட்சிகளும் தற்போது இருக்கும் நிலைமையில் பாஜக வுடன் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை.
கருணாநிதி குடும்பத்தில் கனிமொழி மீது 2ஜி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது பிஎஸ்என்எல், ஏர்செல் மாக்ஸிஸ் வழக்குகள் இருக்கின்றன என பாஜக தலைவர்கள் அறிவார்கள். இதை வைத்துக்கொண்டு காய்களை நகர்த்தலாம் என்று நினைக்கிறார்கள் . அதே போல், கருணாநிதி குடும்பத்திலும் சிலர் பாஜக வுடன் கூட்டணி வைத்தால், அவர்கள் சொத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைக்காமல் இல்லை.
அதிமுக அரசை காப்பாற்றாமல், அது கவிழ்ந்து, திமுக அரசை ஏற்படுத்த பாஜக முயற்சித்தால், திமுகவுடன் நல்லுறவை ஏற்படுத்த முடியும்.
அதிமுக அரசை கவிழ்த்து அரசியல் குட்டையை குழப்பி, அரசியல் சூதாட்டத்தில் பாஜக இறங்கியுள்ளது என்ற அவப்பெயர் பாஜக விற்கு நேரிடும். அரசனை நம்பி புருஷனை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று பாஜக வின் சில தலைவர்களும் நினைக்கிறார்கள்.
இந்த முரண்பாடுகளினால் பாஜக தலைமை குழம்பி உள்ளது. எனவே தற்போது இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்றும் தேர்தல் சமயத்தில் எந்த பக்கம் காற்று வீசுகிறதோ அந்த பக்கம் சாயலாம் என்றும் பாஜக மேலிட தலைவர்கள் முடிவு செயதுள்ளனர் .
Read in : English