Read in : English
இந்தியாவின் 72வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திராவிட அரசியல் குறித்தும் தமிழ் தேசியம் குறித்தும் தமிழ் தேசியவாதியும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இன்மதி.காம் இணைய இதழுக்கு அளித்த பேட்டி.
தமிழ் தேசியம் பேசும் நீங்கள் இந்திய சுதந்திர தினத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்த் தேசியவாதிகள் என்றால் வேற்றுக் கிரகவாசிகளா? ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதற்காக நாம் கொண்டாடுவதுசான் சுதந்திர தினம். “பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன்.இது தான் என் கனவு இந்தியா” என்று பகத் சிங் முழக்கமிட்டார். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் அந்தக் கனவு நிறைவேறியுள்ளதா? 2022இல் அனைவருக்கும் வீடு, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்று அரசு பெருமை கொண்டாடுவது சரியா? இந்த சுதந்திரம் யாருக்காகப் பெற்றது?
உங்களின் கருத்துப்படி, இந்தியா இன்னும் சுதந்திரம் அடைந்தததாகக் கருத முடியாதா?
கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, உற்பத்தி, குடிநீர் விநியோகம், சாலை போடுதல், பராமரித்தல் போன்ற எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு, யாருக்குகாக இந்த சுதந்திரம்? அடிமை இந்தியாவில் போராடுவதற்கு ஓர் இடம் கிடைத்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் பேசுவதற்கே இடம் கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துகளைத் தெரிவிக்க கூட அனுமதிக்காதவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கின்றனர். ஊழல், லஞ்சம், பசி, கொலை, கொள்ளை, சாதி, மதம், பெண்ணியம், தீண்டாமை, உரிமை..என்று இந்த சுதந்திரத்துள்ளேயே நாம் தூய சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுகிறது என்று கருதுகிறீர்களா?
ஆம். ஒரு நாட்டுக்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்பொழுது பல நாடுகளுக்கு அடிமையாக இருக்கின்றோம். `மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம், அனைத்து நாடுகளும் நமது நாட்டு வளங்களை அள்ளிச் செல்கின்றனர். நாங்கள் கேட்பது “மேட் இன் இந்தியா”. வங்கிக் கடன் வாங்கி டிராக்டர் வாங்கின ஒரத்தநாடு பாலுவை கடன் கட்டவில்லை என்று அடிக்கின்ற காவல்துறை, மோசடி மன்னர்களாகிய நீராவ் மோடி, மேஹுல் சோல்ஸ்கி , விஜய் மல்லையா போன்றவர்கள் எப்படி வெளிநாடுகளுக்கு பத்திரமாக தப்பிச் சென்றார்கள்? அரசியல் தலைவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களே ஏன்? இங்கு அரசு நடத்தும் பள்ளிக்கூடம், போக்குவரத்து, மருத்துவம் அனைத்தும் தரமில்லாமல் இருப்பதால்தானே?
பூர்வீகத் தமிழர்கள் யார்?
பாரத நாடு பைந்தமிழர் நாடு. இந்திய நிலப்பரப்பு முழுவதும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தான் பரவி வாழ்ந்தனர் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். பாரதியை தாண்டி இங்கு தமிழன் உண்டோ? அனைத்து தரப்பினரிலும் தமிழ் வழிச் சான்றோர் இருப்பார்கள்.
தமிழர் என்று சொல்லும் பொழுது, தலித் மக்களையும் உள்ளடக்கியதாகக் கருதுகிறீர்களா? இடைநிலை சாதிகளின் இயக்கமாகத் தமிழ் தேசிய அமைப்புகள் இருக்கின்றனவா?
“ஆதித்தமிழர் விடுதலை இல்லாமல், மீதித்தமிழர் விடுதலை வெல்லாது” என்று நாங்கள் முழக்கமிட்டு வருகிறோம். அனைவரும் தமிழரே. பா.ரஞ்சித் போன்றவர்கள் தான் தலித் என்பதைத் தனி அடையாளமாகக் கருதுகின்றனர்.
ஈழத்தமிழர் பிரச்சினைகளைப் பற்றிய பேச்சுகளின் சூடு குறைந்துவிட்டதா?
ஈழத்தமிழர்களை பற்றி பேசினால் குற்றமாகக் கருதுகிறார்கள். காசு வாங்கிவிட்டு பேசுகிறான் என்று கொச்சை படுத்துகிறார்கள். தேசதுரோகி என்று சொன்னாலும் கவலைப்படாமல் தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். தெற்காசியாவிலே இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் பாகிஸ்தான் வங்கதேசம் பிரிவினைக்கு உதவியிருக்கிறது. ஆனால் இலங்கையில் தனி ஈழத்திற்கு இந்திய ஒருபோதும் சம்மதிக்காது. தமிழர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும். ஈழத்திற்கும் சிங்களத்திற்கும் ஒருபோதும் ஒத்துபோகாது. ஈழத்தை போன்று தமிழர்களையும் இந்தியாவிலிருந்து ஓரவஞ்சனை காட்டி தனி நாடு கோரிக்கையை முன்வைக்க வைத்துவிடாதீர்கள்
ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு, திராவிட அரசியல் நிலைத்து நிற்குமா ?
திராவிடம் என்பதே ஒரு கற்பிதம் தான். பார்ப்பன எதிர்ப்பு என்று ஒன்றை காட்டி, மொழி மூலம் வேறுபாடின்றி ஒன்றாக இணைந்து அரசியல் செய்தனர். ஆனால் இன்றோ தமிழ்நாட்டைத் தவிர வேறு யாராவது திராவிடம் பேசுகிறார்களா? கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று அவரவர் விருப்பத்திற்கு அரசியல் பேசும் போது, தமிழ் தேசியத்தில் என்ன தவறு ? இந்தியா உருவாக்கப்பட்டதுக்கு முன்பாகவே தமிழ் மொழி இருந்தது. இதில் திராவிடம் எங்கு வந்தது? திமுக முன்வைத்த ‘மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி ‘ என்று முழக்கமிட்டுவிட்டு, மாநிலத்தின் உரிமைகளை கைப்பற்றிய கட்சிகளுடன் சேர்ந்ததால் என்ன பலன் கிடைத்தது? முழக்கமிட்டு இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள்? தமிழ் தேசியமும் அதுபோன்ற முழக்கம் தான் ஆனால், இதற்காக ஒரு மாநிலத்தில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மத்தியில் கூட்டாக செயல்பட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடப்போவதாக முடிவெடுத்திருக்கிறீர்கள் ?
காங்கிரஸ், பாஜக போன்ற ஒற்றை கட்சிகளுடனோ திராவிட கட்சிகளுடனோ சேராமல் ஆம் ஆத்மி போன்ற மற்ற மாநில கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம். தமிழ் தேசியம் ஒரு குறுகிய வட்டம் என்று பாமக கூறியதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது.
Read in : English