Read in : English

Share the Article

தமிழகத்தில் கரும்பு உற்பத்தி பாதியளவு குறைந்துவிட்டதால் சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து நமது இன்மதி.காம்-ல் ‘மீளாத் துயிலைநோக்கி சர்க்கரை ஆலைகள்’ என்ற தலைப்பில் பரணி என்ற விவசாயி ஒரு நெடிய கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழ் நாட்டில் கரும்பு உர்ப்பத்தி 50% குரைந்து இருப்பதாகவும், மேலும் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசுவதற்காக தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணண் மற்றும் சில வல்லுனர்கள் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தனர். சந்திப்புகுறித்தும் அச்சந்திப்பில் சர்க்கரை ஆலையினருக்கும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த வானதி,’’தமிழ்நாட்டில் பல சர்க்கரை ஆலைகள் பல்வேறு பிரச்சனைகளுடன் இயங்கிக்கொண்டிருப்பது குறித்து அறிந்தேன். மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிலவியவறட்சியால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் இந்த பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்பினேன். அதனையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனிடம் இதுகுறித்து பேசினேன். கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலையினரின் பிரச்சனைகளை அறிந்துகொண்ட நிர்மலா சீதாராமன், பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்’’ என பிரதமரை சந்திப்பு சாத்தியமான நிகழ்வினைக் கூறினார்.

அச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது, பிரதமர் மோடி கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலையினரின் பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்தார என்ற நம் கேள்விக்கு பதில் அளித்த வானதி,’’கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியால் கரும்பு ஆலைகளுக்கு வர வேண்டிய போதிய அளவு கரும்பு வரவில்லை. அதனால் கரும்பு ஆலைகள் நஷ்டம்  அடைந்தன. நஷ்டத்தால், வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஆலையின் சில சொத்துகள் ஏலத்துக்கு வர இருந்தது. இதுகுறித்து பிரதமரிடம் கூறியுள்ளேன். வங்கியில் வாங்கின கடனைஅடைக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதேபோல், சர்க்கரை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசினேன். உற்பத்தியில் 20% சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால், அந்தளவு சர்க்கரை கடந்த காலத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

அடுத்ததாக, போதிய அளவு சர்க்கரை உற்பத்தி செய்யமுடியாத காலகட்டத்தில் எத்தனால் தயாரிக்க சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு கரும்பு அதிகம் விளையும் உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து ’மொலாஸஸ்’ தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு வர உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன்.

அதுமட்டுமில்லாது, கரும்பு விவசாயிகளின் ’ஜன்தன்’ கணக்கு  விவரங்களை  நேரடியாக மத்திய விவசாயத்துறை அமைச்சகத்திடமும் சம்பந்தப்பட்ட துறைகளிடமும் கொடுத்துவிட்டால், கரும்புவிவசாயிகளுக்கான மானியத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிடுவதற்கு வாய்ப்பாக அமையும் என கோரிக்கை விடுத்தேன்.

என் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இந்த பிரச்சனைகளை தீர்க்க இயன்ற அளவு முயற்சி செய்வதாகக் கூறினார் என்றார். கரும்பு விவசாயிகள் மேல் உங்களுக்கு அக்கறை வருவதற்கு, உத்தரபிரதேசத்தில் ஜாட் மக்களின் ஓட்டுக்கள் ஒரு முக்கிய காரணமா என்ற கேள்விக்கு, “நான் தமிழக விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே பேசினேன். இதில் வேறெந்த அரசியலும் இல்லை’’ என பதிலளித்தார்.

மேலும், இச்சந்திப்பின் விளைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரச்சனை குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து அதிகாரிகள் அளவில் பிரச்சனையை களைவதற்கான கூட்டம்நடக்கவுள்ளதாகவும் வானதி கூறினார்.

சர்க்கரை ஆலைகளுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு வரி விதிக்காமல் இருந்தால், சர்க்கரை ஆலைகள் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவதற்கு அரசு செவிமடுக்க வேண்டும்.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day