Read in : English

Share the Article

பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் சாலையில் தங்கச்சி மடத்துக்கு அடுத்து இடது புறம் கடற்கரையை நோக்கி திரும்பினால் தண்ணீர் ஊற்று (வில்லூண்டி தீர்த்தம் )என்ற சிற்றூர் உள்ளது.சில நூறு குடும்பங்கள் வாழும் இந்த ஊரின் கடற்கரை அழகு, அமைதி மற்றும் மர்மம் நிறைந்து கிடக்கிறது.

சிறிய நாட்டு படகு மூலம் கரையோர மீன் பிடி தொழில் செய்யும் ஜேம்ஸ் இந்த ஊர் குறித்து கூறுகையில்,” எங்கள் ஊர் கடற்கரை போராளிகள் வாழ்ந்த இடம். வில்லூண்டி தீர்த்தத்துக்கு அருகில் டெலோ (Tamil Eelam Liberation Organsation) இயக்கமும்,புங்கு திடல் முனியசாமி கோவில் அருகில் விடுதலைபுலிகள் இயக்கமும் (Liberation Tigers of Tamil Eelam)  முகாமிட்டு சுதந்தரமாக செயல்பட்ட காலங்களை எம்மால் மறக்க இயலாது” என்கிறார்.

அண்மையில் தங்கச்சி மடத்தில் ஆயுத புதையல் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல், ‘இலங்கை தமிழ் இளைஞர் கைது’, ‘இலங்கை படகு பறிமுதல்’ போன்ற செய்திகள் இப்பகுதி மக்களை பதட்டமடைய செய்யவில்லை. தங்கச்சி மடத்தை சேர்ந்த ராபர்ட் என்பவர்,”முப்பது வருஷத்துக்கு மேல நிறைய பாத்துட்டோம்,1983  தமிழின படுகொலைக்கு பின்னாடி இலங்கையிலிருந்து  தமிழ் அகதிகளும் வந்தாங்க, போராளிகளும் வந்தாங்க. தனுஷ்கோடியிலிருந்து பாம்பன் வரைக்கும் கையில் துப்பாக்கிகள் உடன் போராளிகளை சாதாரணமாக பாக்கலாம்.அவங்க அணிந்த ஸ்டோன்வாஷ், டெனிம் உடைகளை அணிவது,கேஷியோ வாட்ச் கட்டுவது, தாடி வளர்ப்பது போன்றவை அன்றைக்கு எங்கள் மத்தியில் ஒரு பேஷன் ஆகிவிட்டது.”என கடந்த கால நினைவுகளில் மூழ்குகிறார்.தன்னை ஒரு ஈரோஸ் (Eelam Revolutionary Organisation of Students) ஆதரவாளர் என்னும் இவர் தங்களது முன்முயற்சியில் “,ஈழ நண்பர்கள் கழகம்”அமைக்கப்பட்டதையும்,”பாலம்”என்ற பத்திரிகை வெளிவந்ததையும் நினைவுகூர்கிறார்.ராபர்ட்டை போன்றே ஒவ்வொரு இயக்கத்துக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் தீவுக்குள் இருந்ததாக அவர்  கூறுகிறார்.

ஈரோஸ் இயக்கத்தினர் தங்கச்சி மடத்தில் ராஜா நகர் என்ற இடத்தில் இருந்ததாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப்.(Eelam People Revolutionary Liberation Front)முகாம் நாலுபனைக்கு அருகில் இருந்ததாகவும், பிளாட் (People Liberation  Organisation of Tamil Eelam) தீவுக்கு வெளியில் மண்டபத்தில் உடைந்த கட்டிடத்தில் தங்கிகொண்டு அருகில் உள்ள சிறு தீவுகளை பயன்படுத்தி வந்ததையும் நினைவு படுத்தும் அன்பு,”1987இல் இந்தியஅரசு பல்வேறு இயக்கங்களை உடைத்து உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எப் (Eelam National Democratic Liberation Front) என்ற அமைப்பு கூட பாம்பன் கடற்கரையில் பல ஆண்டுகள் தங்கி இருந்தனர்”எனக்கோபத்துடன் கூறுகிறார்.அதேபோன்று  ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில்  இருந்து பிரிந்து அரசு ஆதரவு கட்சியாக செயல்பட்டு புலிகளின் கோபத்துக்கு ஆளான ஈ.பி.டி.பி (Eelam People Democratic Party) நெடுந்தீவை தளமாக கொண்டு செயல்பட்டதால் இராமேஸ்வரம்  தீவோடு மிக நெருங்கிய வலைப்பின்னலை உருவாக்கி இருந்தது என்றும்,அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மகேஸ்வரி வேலாயுதம் போன்ற வழக்கறிஞரை பயன்படுத்தி சிறைப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தனக்கு உதவிகள் செய்ததாக பேர்சொல்ல விரும்பாத ராமேஸ்வரம் மீனவர் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

தண்ணீர் ஊற்று அருள் தனது பள்ளி காலத்தில் தங்கள் ஊர் கடற்கரையில் தங்கி இருந்த எல்.டி.டி.ஈ, டெலோ போராளிகளை பார்த்து தானும் போராளியாக ஆசைப்பட்டதாகவும்,அவர்களது தாக்கங்கள் தன் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத தலைகீழ் மாற்றங்ககளை ஏற்படுத்தியதாகவும்,டெலோகாரர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டபோது தானும் கூட சேர்ந்து நீந்தியதாகவும், ஓலைகளால் வேயப்பட்ட டெலோ முகாமில் “தோல்வி நிலை என  நினைத்தால்..”பாடல் டேப்ரிக்காடரில் ஒலித்துக்கொண்டிருக்கும் என்றும்,போராளிகளோடு சென்று ராமேஸ்வரம் சிறிராம் திரையரங்கில் பாடும் வானம் பாடி திரைப்படம் பார்த்ததாகவும் அதில் வரும் “வாழும் வரை போராடு…” பாடலை தான் மிகவும் ரசித்ததாகவும் பழைய கால நினைவுகளில் சோகத்துடன் மூழ்குகிறார்.

“ஒரு காலத்தில் டெலோ மிக பெரிய இயக்கம்.எங்களோடு தாயாபுள்ளையா பழகுவாங்க. தண்ணீர் ஊற்று,அரியாங்குண்டு இரண்டு ஊருக்கும் பெரிய தளபதிகள் வந்துருக்காங்க.இன்னைக்கு இலங்கையில் இருக்கிற எம்.பி . செல்வம் அடைக்கலநாதன் எங்க ஊருக்கு வருவார்.1986இல் டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டதோடு எல்லாம் தலைகீழா மாறிபோச்சு.எங்கள் ஊரில் முகாமிட்டு இருந்த விடுதலை புலிகளுக்கும்,டெலோ காரர்களுக்கும்  பெரிய மோதல் வர பாத்துச்சி. நாங்கள் தான் சமாதானப்படுத்தினோம்” என்கிறார்  தண்ணீர் ஊற்று பெரியவர் ஜேசு. டெலோவில் சிறிசபாரத்தினத்துக்கு மெய் பாதுகாவலராக இருந்த தளபதி தில்லை என்ற தோட்டு தில்லை தங்கள் ஊர் பெண்ணை திருமணம் செய்து இங்கேயே வாழ்ந்து மடிந்து போனதாகவும்,அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும்,அவரை போன்றே டெலோ இயக்க தலைமையின் வீழ்ச்சிக்கு பின்னர் நிறைய போராளிகள் ராமேஸ்வரம் தீவுக்குள்ளேயே திருமணம் முடித்து அமைதியாக வாழ்ந்து வருவதாகவும், ஒரு சிலர் இறந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

டெலோ தளபதி தில்லையின் மகன் அமுதன் தற்போது கல்லூரி மாணவர்.தனது அம்மா மற்றும் தம்பியுடன் தண்ணீர் ஊற்றில் வசிக்கும் அவர் சொல்கிறார் “2009இல் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றபோது பள்ளி மாணவர்களை திரட்டி தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன்.”

“நிறைய இயக்கத்து காரங்க வந்தாங்க,போனாங்க.இன்னைக்கு மாதிரி இல்ல.சர்வ சாதரணமா துப்பாக்கிகளோடு சுதந்திரமா  திரிஞ்சாங்க.அன்னைக்கு பாம்பன் பஸ் பாலம் கிடையாது.இலங்கையில் இருந்து எங்க தீவுக்குள்ள வந்து இறங்கித்தான் இந்திய அரசாங்கம் அனுமதிச்ச உத்தரபிரதேசம், கொளத்தூர் போன்ற பல இடங்களுக்கு போராளிகள் ரயிலில் கிளம்புவாங்க.அவங்க நாட்டுக்கு போறதுக்கு இரவு நேரத்துல பைபர் போட்டுல பறந்துருவாங்க.”எனச்சொல்லும் குமார். “அத்தனை இயக்கத்திலும் கட்டுப்பாடான இயக்கம் எல்.டி.டி.இ. மட்டுமே.இயக்கத்திலிருந்து ஒரேயொரு நபர் மட்டுமே ஊர் மக்களோடு தொடர்பு கொள்வார்.யாரும் தாடிவளர்க்க மாட்டர்கள். பீடி குடிக்கமாட்டார்கள்.முழுக்கை சட்டையாய் இருந்தாலும் முழங்கைவரை மடித்து விட்டு இருப்பார்கள்.முடிவெட்டி முகச்சவரம் செய்து இருப்பார்கள்.அந்த காலத்துலயே எப்படியோ ஒரு ஜீப்பை தீவுக்குள் கொண்டு வந்து கடற்கரை மணலில் ஓட்டி கொண்டு திரிந்தார்கள்.ரொம்ப ஒழுக்கமானவர்கள்”  என்கிறார்.

பல்வேறு அரசியல் கரணங்கள்,குழு மோதல்கள்,1986இல் டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலை,1989இல் பிளாட் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் படுகொலை, 1990இல் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா படுகொலை, புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பல்வகை முரண்பாடுகள் போன்றவற்றால் ராமேஸ்வரம் தீவுக்குள் போராளிகளின் நடமாட்டம் குறைந்தது என்கிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த அரசியல் ஆர்வலர் சரவணன்.

“விடுதலை புலிகளுக்கு கடத்தல் பொருட்கள் கொண்டு போறதுன்னா சாதாரண விஷயம் இல்ல, உயிரை பணயம் வச்சி போகணும்.அப்படி போற திறமையான மீனவனை “ஓட்டி” என்பார்கள்.மன்னாருக்கும், நாச்சிகுடாவுக்கும், இரணைதீவுக்கும்  நான் பல தடவை போயிட்டு வந்துருக்கேன். நான் விடுதலை புலிகளிடம் திறமையான ஓட்டி எனப்பெயர் எடுத்து செல்ல பிள்ளையாய் இருந்தவன். முதல்ல காச எதிர் பாத்தேன்.அவங்க கிட்ட பழகிய பின்பு நான் பணத்துக்குக்காக வேலை செய்யல.மிக சிறந்த, உயிருக்கு அஞ்சாத, திறமையான ஓட்டிகள் உள்ள ஊர் எங்க ஊர்தான்” என்கிறார்  அக்காள் மடத்தை சேர்ந்த மீனவர் ராஜேஷ்.

“இன்னைக்கு ஈழஆதரவு பேசுற எந்த தலைவராலும்  நாங்க செஞ்ச சாகசங்களையோ,தியாகங்களையோ நெனைச்சி கூட பாக்கமுடியாது.எங்கள் ஊர்களும் உறவுகளும் நெறைய இழந்துருக்கோம்.நான் இன்னைக்கும்  கேசுக்கு அலைஞ்சிகிட்டு இருக்கேன்.என் உறவுகாரன் ஒருத்தன் இறுதி போரில் முள்ளிவாய்க்காலுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க போய் விடுதலைப்புலிகளோடு  சேர்ந்து மாண்டு போனான். அவன் குடும்பமே அழிஞ்சு போச்சு. எல்லோரும் நெறைய பேசுறாங்க. எங்களை பத்தி யாருக்கு தெரியும்.?” எனக் கேட்கும் ஓட்டி ராஜேசின் குரல் ஓயாத அலைகளாய் எதிரொலிக்கிறது.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

கட்டுரையாளர்:ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வழக்கறிஞராக பணிபுரிகிறார்

Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles