Read in : English
சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு, அண்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டனர். விதியை மீறி அமைக்கப்பட்ட பேனர்களுக்காக, எம்.எல்.ஏ ஜே.அன்பழகன் மன்னிப்பும் கோரியிருந்தார். பாதசாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் டிஜிட்டல் போர்டுகளோ, பேனர்களோ அமைக்கப்படக்கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
ஆனால், சமூகச் செயற்பாட்டாளரும், பிரச்சாரகருமான ட்ராஃபிக் ராமசாமி திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திமுகவின் நோக்கங்களை சந்தேகிக்கிறீர்களா?
ஆம். இது ஒரு நாடகம். மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். இத்தனை வருடங்களும், துணியினாலான பேனர்களையும், பில்போர்டுகளையும் அமைத்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
ஸ்டாலின், இத்தகைய நடைமுறைக்கு எதிராக முன்வந்திருக்கிறாரே?
வெறும் வாக்கியம் போதுமா? பேனர்கள் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு அவர் போகக்கூடாது. இல்லையெனில், அறிக்கை விடுப்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு விஷயங்கள்தான்.
உயிருடன் இருப்பவர்களின் படங்களை பேனராக வைப்பதற்கு தடைசெய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த நிலையில் உள்ளது?
எந்த அரசியல் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை மதிப்பதில்லை. ஜெயலலிதா தொடங்கி, கருணாநிதி, சீமான், திருமாவளவன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யாரும் விதிவிலக்கல்ல. அவர்கள் சொல்வது ஒன்று, நடைமுறையில் ஒன்றாக இருக்கிறார்கள். திமுகவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த மனுவின் மீதான விசாரணை வியாழனன்று நடைபெறவிருக்கிறது.
சட்டங்கள் பின்பற்றப்படாமல் போவது குறித்து உங்களின் கருத்து என்ன?
நமக்கு எல்லா விதமான சட்டங்கள் இருப்பினும், சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பாதுகாக்கவும் ஒருவர் தேவைப்படுகிறார். நமது காவல்துறை ஊழல்மயமாக இருக்கிறது. அவர்களால் எப்படி சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற முடியும்?
மக்கள் உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறார்களா?
ஆம். நிச்சயமாக. சட்டத்தை மதிக்காதவர்கள் சமூக விரோதிகள். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அநீதிக்கு எதிராக போராடும்போது ஒன்றுபட்டு நிற்கிறார்கள். கண்டிப்பும், தண்டனையும்தான் இந்த குற்றங்களை நீக்குவதற்கான ஒரே தீர்வு. அதுவரை நான் போராடிக்கொண்டே இருப்பேன்.
Read in : English