Read in : English
முகிலன்*, தன் லுங்கியை இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டியிருந்தார். உடைகளைக் களைந்து சோதனையிடும் போது, தன் துப்பாக்கிக் குண்டுக் காயங்களின் மீது லுங்கியை கொத்தாக தூக்கிக் கட்டியிருந்தார். இடுப்புப்பகுதியின் வலதுபுறத்தில் கொஞ்சம் மேலே, குண்டு துளைத்து மறுபுறமாக வெளியில் வந்திருந்தது. பனியனைக் கழற்றி தரையில் எறிந்தார்.
கொளுத்தியெடுத்த மே மாத வெயிலில், ஆயிரமாயிரம் நபர்களை சோதனையிட வேண்டியிருந்ததால், சோதனையில் ஈடுபட்டவர்கள் ஒரே பார்வையில் சோதனையை வேகமாக முடித்துக்கொண்டிருந்தார்கள். முகிலனுக்கு, வெளியில் தெரியும்படியான வேறு காயங்கள் இல்லாததால், அவரை விட்டுவிட்டார்கள். அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவரல்ல என இலங்கை ராணுவ வீரர்கள் முடிவு செய்தனர். சார்லஸ் அன்டணி சிறப்புப் படையணியில் முகிலனும் ஒருவர் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
முகாமில், அதற்குப் பின்பும் பலமுறை அடையாளப்படுத்தப்படும் ஆபத்திற்கு அருகில் வந்து வந்து தப்பியிருக்கிறார். முகிலனின் பிரிவில் இருந்த ஒரு போராளியை, சந்தேகப்படும் நபர்களை அடையாளம் காட்டுவதற்காக முகாம் முழுக்க தேடுவதற்கு அழைத்துவந்தார்கள். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் தரையில் படுத்துக் கிடத்தவர்களோடு ஒருவராக முகிலனும் படுத்துக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால், ஒன்று மரணம் அல்லது பல வருட சிறை வாழ்க்கை. அவ்வளவுதான். ”எனக்கு இன்னும் நேரம் வரவில்லை. வெடிகுண்டு விபத்தில் என் கால்கள் சிதைந்தன. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம், துப்பாக்கிக் குண்டு ஒன்று என் இடுப்பை துளைத்தெடுத்தது. ஆனாலும் பிழைத்துவிட்டேன்” என்றார் அவர்.
முப்பத்து இரண்டு வயதான முகிலனின் நோக்கம் கனடாவுக்கு இடம்பெயர்வதுதான். போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்தும் கூட, மேப்பில் மரங்களின் நிலத்திற்கு அருகிலும் அவரால் செல்லமுடியவில்லை. எனினும், சகோதரனுடனும், அவரது குடும்பத்துடனும் இணையும் அவரது கனவை அவர் விடவுமில்லை.
முல்லைத்தீவிலுள்ள வெட்டுவான் பாலத்தைச் சுற்றி இருந்தபோது, 2009ம் ஆண்டு மே 18-ம் நாளில், தான் ஒரு புலியைப் போலவே தோற்றமளிக்கவில்லை என்கிறார் அறிவன்*. ஒரு மேஸ்திரியைப் போலவோ, மர வேலைகளைச் செய்பவரைப் போலவோ இருந்ததாகச் சொல்கிறார். தலையில் வழுக்கை விழுந்து வயதானவராக தோற்றம் அளித்தார். தாடியின் பெரும்பான்மைப் பகுதி நரைத்திருந்தது. விடுதலைப்புலிகளின் பெயர்களைக் குறித்துக்கொண்டிருந்த ராணுவத்தினரிடம், போரின் இறுதிக் காலங்களில் ஆதரவாளராக தன்னை வரையறுத்ததாக குறிப்பிட்டார். உடைகளை களைந்து நடத்தப்படும் சோதனையையும் கடந்துவிட்டார் அறிவன்.
உண்மையில், விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் அறிவனுக்குத் தொடர்பு இருந்தது. பார்ப்பதற்கு சாதுவாகத் தோற்றமளித்த அவருக்கு, மனைவியும் மூன்று குழந்தைகளும் உடன் இருந்தனர். முள்ளிவாய்க்காலில் பிரிந்து, இறுதிப்போருக்கு முன்னதான சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இணைந்திருந்தனர். தோற்றத்திற்கு அவர் புலியைப் போல இல்லாததால், ராணுவத்தினர், அந்த குடியான மக்கள் கூட்டத்திலிருந்து அறிவனை பிரித்துப் பார்க்கவில்லை.
போருக்கு பிந்தைய ஆண்டுகளில், தனது முள்ளிவாய்க்கால் அனுபவங்களை தொகுப்பதற்கு அறிவன் முயன்றார். ஆனால், அதை இப்போது நினைவுகூர்வதில் அவருக்கு சிக்கல் இருந்தது. இன்று, தன்னுடைய மனைவி மக்களுடன் ஒரு இயல்பான வாழ்க்கையை அவர் வாழ்கிறார்.
முகிலனையும், அறிவனையும் புலிகள் என்று அடையாளங்காண முடியவில்லை. அதுபோல் இல்லாமல், சரணடையும்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண்கள் அடையாளங்காணப்படாமல் போவதற்கு வாய்ப்புகளே இல்லை. ஒட்ட வெட்டப்பட்ட அவர்களது தலைமுடியே அனைத்தையும் காட்டிக்கொடுத்தது. முள்ளிவாய்க்காலையும் முல்லைத்தீவையும் இணைக்கும் பாலத்திலிருந்து பயணித்து வெளிவரும்போது ராணுவத்தினரால், ”கொட்டியா? (சிங்களத்தில் புலி)” என்ற வார்த்தையால் கேலிக்குள்ளாவார்கள், என்கிறார் முகிலன்.
முள்ளிவாய்க்காலையும் முல்லைத்தீவையும் இணைக்கும் பாலத்திலிருந்து பயணித்து வெளிவரும்போது ராணுவத்தினரால், ”கொட்டியா? (சிங்களத்தில் புலி)” என்ற வார்த்தையால் கேலிக்குள்ளாவார்கள்
வட்டத்திற்கு வெளியே வாழ்க்கை:
அனந்தபுரம் பாக்ஸ் – முகிலனின் இலங்கைத் தமிழில், அந்த வார்த்தை புக்ஸ் என்பதைப்போல கேட்டது. அதுதான் திருப்புமுனை என்கிறார் முகிலன். எல்லா பக்கங்களிலிருந்து வழிகள் அடைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைதான் பாக்ஸ். 2009ம் ஆண்டு, மார்ச்-ஏப்ரலில், புதுக்குடியிருப்புக்கு அருகில் அனந்தபுரத்தில் புலிகளின் தலைமைகளை ராணுவம் சுற்றி வளைத்தது. குரலைத் தாழ்த்தி, “தலைவரும் (பிரபாகரன்) அதில் இருந்தார்” என்று மரியாதையாகத் தெரிவித்தார் அறிவன். அப்போது, பிரபாகரன் தப்பிவிட்டாலும், விடுதலை புலிகளின் பல தலைவர்கள் அதில் கொல்லப்பட்டனர்.
கடந்த காலத்தில், போராளிகள் அவர்களை பின்தொடர்வது தெரிந்ததும், ராணுவத்தினர் பைத்தியம் பிடித்ததைப் போல இயங்கத் தொடங்கினர் என்றார் முகிலன், சிறிய கெக்கலிப்புடன். ”காட்டுக்கு நடுவில் உயர்ந்த குரலில் கத்துவோம். எதிரொலிக்கும் விதத்தில், எங்கள் மக்கள் பலர் இங்கு இருப்பதுபோலத் தோன்றும். ராணுவத்தினர் அவர்களது உடைமைகளை விட்டுவிட்டு பறந்தோடுவர். அது ஒரு நல்ல வேட்டையாக அமையும். ஆனால் அனந்தபுரம் பாக்ஸுக்குப் பிறகு நிலை மாறியது” என்றார் முகிலன். ”கருணா, எங்களது நுட்பங்களைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருக்கிறார். இது அவர்களது முறை. இப்போது அவர்கள் துரத்த, எங்கள் மக்களுடன் நாங்கள் ஓடுகிறோம்” என்றார்.
”எதுவுமே சாத்தியமற்றதில்லை” என்பதுதான், சார்லஸ் அண்டனி சிறப்புப் படையணியின் குறிக்கோள். சாத்தியமற்றதாக நினைத்தது நடந்தது. புலிகள் முறியடிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பாக்ஸ் முடிவுக்கு வந்தபோதுதான், புதுக்குடியிருப்பில் முகிலன் துப்பாகிக் குண்டால் துளைக்கப்பட்டார். ”அடிபட்ட 10 நிமிடங்களுக்கு, வலியே தெரியாது. அதற்குப்பிறகுதான் வலி தொடங்கும்” என்றார் அவர்.
அவரைச் சுட்ட இலங்கை ராணுவத்தினர் அவர் விழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். முகிலனுடன் இருந்தவர்கள் தப்பிவிட்டனர். தன்னை மருத்துவமனையில் சேர்க்கக்கூடிய சாத்தியமுள்ள படையணிக்கு செல்வதற்கு, பின்னோக்கி ஒரு 50 மீட்டர் வரை செல்லவேண்டும் என அவருக்கு தெரிந்தே இருந்தது. தன்னுடைய துப்பாக்கியையும், அதை வைத்திருந்த தோலுறையையும் அங்கு விட்டுவிட்டு சென்றார் அவர். நான்கு வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பயிற்சியின்போது, எளிதாக துப்பாக்கியை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்பது அவரது மனதில் ஆழமாக பதியவைக்கப்பட்டிருந்தது. எனினும், முகிலனால் துப்பாக்கியைத் தூக்கிச் செல்ல முடியவில்லை.
அவரைச் சுட்ட ராணுவ வீரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 50 பேருடன் முகிலனை பார்த்துக்கொண்டிருந்தனர். குண்டு மழைகளைப் பொழிந்து அவரை அவர்களால் கொன்றிருக்கமுடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ”அது நான் போவதற்கான (மரணம்) நேரமில்லை” என்றார் முகிலன்.
அன்று இரவுதான், அம்பலவன் பொக்கனையிலுள்ள விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அதுவரை, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர், வலியால் அனத்திக்கொண்டிருந்தார். வலியைப் போக்குவதற்கான மருந்துகள் இல்லாததால், அவை வழங்கப்படவில்லை. குடல் வெளியில் சரிந்து, மலம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கசிவதை அவர் பார்த்தார்.
அந்த மருத்துவமனையில் ஒருசில மருத்துவ உதவிகள் மட்டுமே கிடைக்கும். அவ்வளவுதான். அங்கிருந்த அறுவை சிகிச்சைப் பிரிவு ஒரு சிறிய அறைதான். அவசரத்திற்கு ஏற்ப அங்கு அறுவை சிகிச்சைகள் நடந்துகொண்டிருந்தன. அதில் முகிலனின் காயங்கள் என்பது மிகத் தீவிரமான ஒன்றல்ல. காலை இரண்டு மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு கொஞ்சம் முன்னதாகத்தான், முகிலனுக்கு மயக்கமருந்து அளிக்கப்பட்டது. அற்புதமான, கனவுகளற்ற தூக்கம் அது. அடுத்த நாள் காலை 11 மணிக்கு அவர் எழுந்தபோது, அது மிகப்பெரிய அறுவை சிகிச்சை என அவருக்கு சொல்லப்பட்டது.
மருத்துவமனை என்பதாக சொல்லப்பட்ட அந்த இடத்தில், முகிலன் 20 நாட்களுக்கு தங்கியிருந்தார். அங்கு தொடர்ந்து காயமடைந்த மக்கள் கொண்டு வரப்பட்டுக்கொண்டே இருந்தனர். ட்ரிப் போடப்பட்டு, உணவோ, தண்ணீரோ அவருக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. அவர் சாப்பிடும் நிலையில் இருந்தாலும், அங்கு சமைப்பதற்கு யாரும் இல்லாததால், அவருக்கு உண்ணக் கொடுப்பதற்கு எதுவுமில்லை. “சில நேரங்களில் இடியாப்பம் கொடுப்பார்கள். அது வேகாமல் வெறும் மாவாகவே இருக்கும். நாங்கள் கோபத்தில் கத்துவோம்” என்றார் அவர்.
தொடர்ந்து அளிக்கப்படும் கட்டளைகள் உடைந்து, கமாண்டர்கள் வேலை செய்யாமல் போனார்கள் என்றார் முகிலன். முள்ளிவாய்க்காலில், மக்களுடன் புலிகளும் பின்வாங்கினார்கள்.
நகரவே முடியாத நிலையில் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து பயணித்தார் முகிலன். வழியில் கிடைத்தவற்றையெல்லாம் உண்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள் மக்கள். இடையில் மரங்களிலிருந்து பெறப்பட்ட தேங்காயும், இளநீருமே அவர்களுக்கு உணவு. மக்களை போக விட்டிருந்தால், எங்கள் இயக்கம் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கும் என்று கூறியவர், ”குடிமக்கள் பாதிக்கப்பட்டு, சர்வதேச கவனத்தைத் திருப்புவதற்காக மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக்கொண்டார்களா விடுதலைப் புலிகள் ? “என்று கேட்டால், வெடித்தெழுகிறார்.
”எங்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், அதிக நகை அணிந்த பெண்கள் கூட பாதுகாப்பாக இருக்கமுடியும். மக்களை நாங்கள் பாதுகாக்கவில்லை என்னும் குற்றச்சாட்டை எங்கள் மீது எப்படி வைக்கலாம்” என்றார் அவர்.
சோலார் தொலைக்காட்சியில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததைப் பார்த்ததாக நினைவுகூர்கிறார். துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும்போதே, அவை நிறுத்தப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் சொல்லப்பட்டதை நினைவு கூர்கிறார் அவர்.
தன்னுடைய அத்தையையும், அவரது மகளையும் மே 16ம் தேதியன்று, முள்ளிவாய்க்கால் பிள்ளையார் கோவிலில் பார்த்திருக்கிறார் முகிலன். ”அவர்களுக்கு என்ன ஆனதென்று எங்களுக்கு இப்பொழுதும் தெரியாது” என்கிறார் அவர்.
சடலங்களின் மேல் நடப்பதைத் தவிர்த்தல்:
அறிவனுக்கும் அவரது குடும்பத்திற்கும், அறிவனின் மூன்றாவது குழந்தை யுவன் பிறந்த ஒரு நாளுக்கு பிறகு கெட்டகாலம் தொடங்கியது என்றே கூற வேண்டும். 2008 செப்டம்பரில் கிளிநொச்சியில் பிறந்தான் யுவன். அறிவன் போர் முன்னணியில் பணிபுரிந்ததால், மனைவி மக்களை அருகிலேயே வைத்துக்கொள்ள முடிந்தது. கிளிநொச்சிதான் நடைமுறை ரீதியில், புலிகளின் தலைமையகமாக இருந்தது. அதன் வீழ்ச்சியின் அறிகுறிகளும் தெரிந்தன. ஆனால், புலிகள் கடந்த காலத்திலும், ஏற்ற இறக்கங்களை பலமுறை சந்தித்திருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலை நோக்கிய ஏழு மாதப் பயணம் மீளமுடியாத பல பின்னடைவுகளோடு தொடர்ந்தது. அம்பலவன் பொக்கனையை அவர்கள் அடைந்தபோது, அதிகாரப்பூர்வமான கணக்குகள் வேறு எண்ணிக்கையைச் சொன்னாலும், அங்கு 5 லட்சம் மக்கள் பயணத்தில் இருந்தனர். தேவிபுரத்தில் போராளிகள் பகுதியிலிருந்து ஒரு லட்சம் மக்கள் பிரிக்கப்பட்டு வவுனியா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார் அறிவன். ”பணம் படைத்தவர்கள் தான் ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் இருந்தனர். வன்னியின் ஏழை மக்கள், இயக்கத்துடனே இருந்தார்கள்” என்றார் அவர்.
துப்பாக்கிக் குண்டு தாக்குதலால் சுற்றியிருந்த மக்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். ஏப்ரலில், அவர்கள் வெள்ளாமுள்ளிவாய்க்காலில் நுழைந்தனர். தாக்குதல் நடத்தப்படும்போது, குழிகள் வெட்டி அதற்குள் புகுந்துகொள்வோம் என்றார் அறிவனின் மனைவி அன்புச்செல்வி*. லுங்கியிலும், சேலையிலும் மணல் நிரப்பப்பட்ட மூட்டைதான் அவர்களின் காக்கும் கருவி. பெரிய பாதுகாப்பை அது கொடுக்காவிட்டாலும், அவைதான் பதுங்குக்குழிகள். ”ஒருமுறை பதுங்குக்குழிக்குள் எனது குழந்தையை ஒருவரிடம் கொடுத்தேன். குழந்தையை விட்டு, அவர் குனிந்து நகர்ந்ததைப் பார்த்தேன். அவரது உறுப்புகள் வெளிவந்து அவர் இறந்து கிடந்ததைப் பார்த்தேன்” என்கிறார் அவர்.
குழந்தைகளுக்கான சில பொருட்களுடனும், சில மருந்துகளுடனும் ரெட் கிராஸ் படகு கரைக்கு வந்ததை நினைவு கூர்கிறார் அன்புச்செல்வி. பல பெண்கள், படகுக்கு அருகில் சென்று, தங்கள் குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்குவதற்காக நின்றார்கள். அங்குக் காத்திருந்த 60 பெண்கள் தாக்குதலில் பலியானார்கள், என்றார் அவர்.
சுனாமி நிவாரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வீடுகளில் தங்களைத் திணித்துக்கொண்டார்கள் மக்கள். ஒரு குடும்பத்திற்கு பத்துக்கு பத்து அடிதான் அங்கு இருந்தது. ”100 கிராம் சர்க்கரை கிடைப்பது கூட அதிர்ஷ்டம்தான். அதற்கு 2000 பேர் வரை காத்திருப்பார்கள்” என்றார் அன்புச்செல்வி. ஆனால், மக்கள் கூடினால், கொல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ”குருணை, தவிடு என எது கிடைத்தாலும் உண்டு கொண்டிருந்தோம்” என்றார் அவர்.
மே மாதம் 9ம் தேதி, சுனாமி வீடுகளை விட்டு வெளியேறி வெட்டுவான் பாலத்தை நோக்கி போகவேண்டியிருந்தது. ”பயணிக்கும் வழியில், சடலங்களின் மீது நடப்பதைத் தவிர்த்தோம்” என்கிறார் அன்புச்செல்வி.
எப்போது குடும்பத்துடன் இணைந்தோம் என்பதை அறிவனால் நினைவுகூற முடியவில்லை. போராளிகளுக்கான உணவு மற்றும் விநியோகங்கள் மக்களுக்கும் வழங்கப்பட்ட போதே, எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதை உணர்ந்ததாகக் கூறுகிறார் அவர்.
”வயதானவர்கள், தண்ணீரில்லாமல் தாகத்தால் கதறி தவித்து இறந்து கொண்டிருந்தார்கள்.” – அன்புச்செல்வி
(* பெயர்கள் மாற்றப்பட்டன)
Read in : English