Read in : English
ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி உள்ளது மேட்டூர் அணை நீர் நிலவரம். முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்கிறார். ஜூலைமத்தியில் அணை திறப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் எந்த சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை.
திருச்சியைச் சேர்ந்த சி.லோகநாதன் என்கிற விவசாயி இதுகுறித்து கூறுகையில்,’’டெல்டா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா என்னும் இரு பட்டங்களில் நெல் பயிரிடுகிறோம். இப்போதுதண்ணீர் திறந்துவிட்டால் அது எங்களை வந்தடைவதற்கு 15 நாட்கள் ஆகும். குறுவை பட்டத்தில் நெல் பயிரிடுகிறோம் என முடிவு செய்திருந்தால், அதற்காக நாங்கள் ஜூன் அல்லது ஜூலை முதல்வாரத்தில் நடவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆகஸ்டு மாதத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ அறுவடை செய்ய முடியும். அதன் பிறகு சம்பா பட்டத்துக்கு செல்ல முடியும். ஆனால் இப்போது தண்ணீர் திறந்துவிடுவதால் ஒரு நன்மையும் இல்லை. ஏனெனில் குறுவை பயிர் இனிமேல் செய்ய முடியாது’’ என்கிறார்.
‘’இந்த நீரை கால்வாயில் திறந்துவிடுவதற்கு பதிலாக குளம், குட்டை, ஏரிகளில் நிரப்பினால் நல்லது. ஏனெனில் இந்த தண்ணீர் குறுவை பயிருக்கு உதவப் போவதில்லை. இந்த தண்ணீரை குளம், குட்டைகளில் தேக்கினால் மண்ணுக்குள் நீர்பரவி, நிலத்தடி நீர்மட்டம் உம்யரும். அது சம்பா பயிருக்கு உதவும்’’ என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆர்.பாஸ்கரன் என்னும் விவசாயி. மேலும்கூறிய பாஸ்கரன்,’’சம்பா பயிருக்கு பிறகு விவசாயிகள் பயிர் வகைகளை ஜனவரி இறுதியில் பயிர் செய்யலாம். அதனை மார்ச் மாதம் அறுவடை செய்து அதே பயிரை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில்பயிரிடலாம்’’ என கூறினார்.
‘’மேட்டூர் தண்ணீர் என்பது மதில் மேல் பூனை போல. எப்போது என்ன நடக்கும் என்று கூற இயலாது. நான் எனது வீட்டில் போர்வெல் போட்டுள்ளேன். ஆனால் என் நிலத்தில் போர்வெல்போடவில்லை. என் வயலில் இருக்கும் கிணறு கோடை காலத்தில் வற்றி விடும். எங்களுக்கு வடகிழக்கு பருவமழை மட்டுமே உதவி செய்யும். ஆனால் மே மாதத்தில் கிணறு வற்றிவிடும். ஒன்றுமழை அதிகமாக பெய்து பயிர் நாசமாகும் அல்லது வறட்சியால் பயிர்கள் கருகும். இதுதான் கடந்த 55 வருடங்களாக இங்கு நிலவும் சூழ்நிலை’’ என்கிறார் லால்குடியைச் சேர்ந்த விவசாயிகே.வேல்முருகன்.
டெல்டா விவசாயிகளில் நான்கில் மூன்று பங்கு விவசாயிகள் மேட்டூர் அணையைத்தான் விவசாயத்துக்கு நம்பியுள்ளனர்.விவசாயிகள் நிலத்தில் பல போர்வெல்கள் இருந்தாலும் அதனை இயக்கிநீர் கொண்டு வர நிறைய டீசல் தேவைப்படுகிறது. இன்றைக்கு ஒரு லிட்டர் டீசலின் விலை 70 ரூபாய். ஒரு மோட்டார் தினமும் பல மணிநேரம் சுற்றினால் தான் நிலத்துக்கு பாய ஓரளவாவது நீர்கிடைக்கும். மேலும் டெல்டா பகுதிகளில் களிமண், மணல் கலந்த களிமண், வண்டல் மண் என மூன்று வகையான மண் காணப்படுகிறது.
Read in : English