Read in : English

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கருத்துச் சுதந்தரம் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளன. இடதுசாரிகளும், தாராளவாதிகளும் பேச்சுரிமைக்கும், விமர்சன உரிமைக்கும் ஆதரவாக நிற்பவர்கள். சமத்துவத்தை, எல்லோரும் கண்ணியமாக நடத்தப்படுவதை ஆதரிப்பவர்கள். வலதுசாரிகள் வரலாற்றுப் பெருமிதங்களின் மீது கட்டப்பட்ட வலுவான தேசங்களை ஆதரிப்பவர்கள்; பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படமாட்டார்கள்.

நடப்பில் உள்ள சமூக ஒழுங்கை அப்படியே வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் வலதுசாரிகள் குறை சொல்வதையோ, குறை சொல்கிறவர்களையோ விரும்புவதில்லை. உலகம் முழுவதுமே வலதுசாரிகள், ஊடகங்களை ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையைப் பேசும் கருவியாகப் பார்ப்பதில்லை; கருத்துகளைத் திரிக்கும் கருவிகள் அவை என்றே கருதுகிறார்கள். இந்தியாவிலும் அப்படித்தான்.

ஆனால், பல நேரங்களில் இடதுசாரிகளும், தாராளவாதிகளும், வலதுசாரிகள் விஷயத்தில் பேச்சுரிமை மதிப்பீடுகளை செயலில் காட்டுவதில்லை. பேச்சுரிமை, தனிமனித சுதந்திரம், கண்ணியம் ஆகியவை சமூக வளர்ச்சிக்கு உதவி செய்கிறவை என்றே இடதுசாரிகள், முற்போக்காளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவிலும்கூட இடதுசாரிகளோ, தாராளவாதிகளோ பதவியில் இருக்கும்போது பேச்சுரிமையை வலதுசாரிகளுக்கும் உரியதாகப் பார்ப்பதில்லை. பாஜகவினர், முற்போக்கானவர்கள் அல்ல; எனவே, அவர்களுக்கு பேசுவதற்கான இடம் தருவது சமூக நலனுக்கு உகந்தது அல்ல என்று பார்க்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கருத்தாளர்கள்

அமெரிக்காவில், சிறந்த வழக்குரைஞர்களைக் கொண்ட அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் என்ற அமைப்பு, கு கிளக்ஸ் கிளான் என்ற இனவாத அமைப்பின் பேச்சுரிமைக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆனால் சிறிது காலத்திலேயே, அந்த அமைப்பு, அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை, அடிப்படை மதிப்பீடாகப் பார்க்காமல், சமூக பொருளாதார இலக்குகளை அடைவதற்கான கருவியாகப் பார்க்கத் தொடங்கியது.

இந்தியாவிலும்கூட இடதுசாரிகளோ, தாராளவாதிகளோ பதவியில் இருக்கும்போது பேச்சுரிமையை வலதுசாரிகளுக்கும் உரியதாகப் பார்ப்பதில்லை. பாஜகவினர், முற்போக்கானவர்கள் அல்ல; எனவே, அவர்களுக்கு பேசுவதற்கான இடம் தருவது சமூக நலனுக்கு உகந்தது அல்ல என்று பார்க்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கருத்தாளர்கள்.

மேலும் படிக்க:பாரதியைச் செழுமைப்படுத்திய பாண்டிச்சேரி

சமூக, பொருளாதார ரீதியில் முற்போக்கான திமுக அரசாங்கம், போலீசையும், சட்டம் தரும் அதிகாரத்தையும் வலதுசாரி விமர்சகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. இப்படி திமுக அரசாங்கத்தின் சினத்துக்கு ஆளாகியிருக்கிற சமீபத்திய நபர் பத்ரி சேஷாத்ரி. அவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை வெளியாகவில்லை. ஆனால், கைது குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை அவரை கைது செய்வதற்குப் போதுமான காரணங்களே அல்ல. ஒரு யூடியூப் சேனலுக்கு பத்ரி தந்துள்ள ஒரு நேர்காணலைக் காரணம் காட்டி, பெரம்பலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் தந்த புகாரின் அடிப்படையில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நேர்க்காணல் வன்முறையைத் தூண்டக்கூடியதா என்பதை அளவுகோலாக கொண்டு பார்க்கவேண்டும். அப்படிப் பார்த்தால், தமிழில் அவர் தந்த யூடியூப் நேர்காணல் மணிப்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தாது; குக்கி இன மக்களுக்கு ஆத்திரம் ஊட்டாது; மெய்த்தி இன மக்களை உசுப்பேற்றாது.

இந்தக் கட்டுரையாளரோடு சில நாள்களுக்கு முன்பு தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்த பத்ரி சேஷாத்ரி, தமிழ்நாட்டில் திராவிடக் கருத்தாளர்களும், இடதுசாரிகளும் காட்டுவதைப் போல மணிப்பூர் சிக்கல் எளிமையான இந்து – கிறிஸ்துவத முரண்பாடு அல்ல; அது மிகவும் சிக்கலானது என்பதையே இந்த நேர்காணலில் சேஷாத்ரி தாம் சுட்டிக்காட்ட விரும்பியதாகக் கூறினார். சுண்டி இழுக்கும் தலைப்புகளால் உந்தப்பட்டு இயங்குவது சமூக ஊடக இயல்பு. இதற்கு ஏற்ப இந்த நேர்காணலின் தலைப்பு அமைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

இந்த நேர்ககாணலின் பெரும்பகுதியில் பத்ரி சேஷாத்ரி நிதானமாகப் பேசினார். பல நூற்றாண்டுகளாக இருக்கும் மெய்த்தி – குக்கி இனப்பிரச்சினையே இந்த சிக்கலின் சாரம்; இது மிகவும் சிக்கலானது. குக்கி இனத்தவர் சமீப காலத்தில் குடியேறியவர்கள், மெய்த்திகளும், நாகாக்களும் அப்படி அல்ல. நாகா மக்களுக்கு என்று தனியாகக் கோரிக்கைகள் உண்டு. எல்லா மெய்த்திகளும் வைணவர்கள் அல்லர்.

மெய்த்தி பகுதியில் அனைவரும் நிலம் வாங்க முடியும்; குக்கி பகுதியில் குக்கிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ள மாநிலத்தில், மெய்த்தி இனத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற நீதிமன்றத்தின் நிலைப்பாடுதான் மணிப்பூரில் தற்போதைய சிக்கலின் விதை. குக்கி பகுதிகளில் சட்டவிரோதமாக விளையும் பாப்பி பயிர்களில் இருந்து போதை மருந்து கும்பலுக்கு சப்ளை நடப்பதற்கு எதிராக பிரேன் சிங் அரசு நடவடிக்கை எடுத்தது என்ற ஒரு கோணமும் இதில் உண்டு என்பதை பல ஊடகங்கள் கூறியுள்ளன.

இவற்றையெல்லாம் பத்ரி கூறியதுவரை சிக்கலில்லை. அதெல்லாம் அறிவுத் தளத்தில் பேசப்பட்டது. பாஜக-வை அதிகமாக விமர்சிப்பதில் பெயர் பெற்ற தி வயர் தளம் கூட இதனை குஜராத் பாணியில் நடந்த இந்து – கிறிஸ்துவச் சிக்கலாக தமது செய்திகளில் குறிப்பிடவில்லை.

ஆனால், இந்த நேர்காணலின் வேறு சில இடங்களில் சமூக ஊடக செயற்பாட்டாளரைப் போலப் பேசியிருப்பார் பத்ரி. மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு உறுதியாக செயல்படாவிட்டால், நீதிமன்றம் செயலில் இறங்கும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதை கேள்விக்கு உட்படுத்தினார் பத்ரி.

ஆட்சி நிர்வாகத்தின் பரப்புக்குள் நீதிமன்றம் கால்பதிக்கப் போவதாக தலைமை நீதிபதி கூறியதை விமர்சிக்க வந்த பத்ரி, எதார்த்தமாக, (இந்தியத் தலைமை நீதிபதி) சந்திரசூட் துப்பாக்கி எடுத்துச் சென்று வன்முறையைத் தூண்டுவோரை சுடுவாரா என்று கேட்டுவிட்டார். அச்சு ஊடகத்துக்கு நேர்காணல் தருவதாக இருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார் பத்ரி. அச்சு ஊடகச் செய்தியாளர்கள் அவர் பேசுவதை அப்படியே மேற்கோள்காட்டியும் போட்டிருக்கமாட்டார்கள்.

குஜராத்தில் நடந்த அளவுக்கு, மணிப்பூரில் அரசாங்கம் ஒருதலைச் சார்பாக நடந்துகொள்கிறதா என்பதை பொருத்திருந்து பார்த்துதான் சொல்லவேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாக வைத்துதான் மணிப்பூர் என்பது வடகிழக்கு மாநிலங்களின் குஜராத்தா என்பதை நாம் கூற முடியும்

சமூக ஊடகத்துக்கு உரிய தொனியில், குக்கி மக்கள் அப்பாவிகள் அல்ல என்றும் கூறினார் அவர். ஒரு மெய்த்தி இனத்தவரான இரோம் ஷர்மிளாவை ராணுவத்துக்கு எதிராகப் போராடும் ஒரு மணிப்புரி பெண்ணாக தமிழ்நாடு கொண்டாடியது என்று கூறிய அவர், இப்போது மணிப்பூரில் ராணுவ நடவடிக்கை கோரும் தமிழ் ஆர்வலர்கள், திராவிடக் கருத்தாளர்கள் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் இருந்து வெட்டி ஒட்டி மணிப்பூர் இனச் சிக்கலைப் பற்றி கவிதை எழுதுகிறவர்களையும் அவர் விமர்சித்தார்.

பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் விட்டதைக்காட்டிய வைரல் வீடியோவை வைத்துக்கொண்டு சனாதனவாதிகள் பெண்களை இழிவுபடுத்துகிறவர்கள் என திராவிடக் கருத்தாளர்கள் வாதிடுவதையும் அவர் விமர்சித்தார். குக்கி மக்களுக்கும், மெய்த்தி மக்களுக்கும் உண்மையில் சனாதன தர்மம் என்றால் என்ன என்றுகூட புரியுமா என்று அவர் கேட்டார். இதில் இருக்கும் கிறிஸ்துவ மதக் கோணம் காரணமாகவே, ஐரோப்பிய நாடாளுமன்றம் இதை விவாதிப்பதாகவும் அவர் பேசினார். வலதுசாரிகள் சஞ்சரிக்கும் சிந்தனை உலகம் அப்படித்தான்.

வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பழங்குடிகளால் நிரம்பியது, பிளவுபட்டது என்பதை சுட்டிக்காட்டிய அவர், மாநிலம், யூனியன் பிரதேசங்கள், குடிமைச் சமூகம் போன்ற கருத்தாக்கங்கள் அங்கே வேர்பிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார். பழங்குடிகளுக்கு இடையே அடிக்கடி நடக்கும் மோதல்கள் வன்முறையாக மாறக்கூடியவை. அண்மையில் இரு மாநிலப் போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மேலும் படிக்க: காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன?

குற்றம் இழைத்தோர் தெருக்களில் ஊர்வலம் விடப்படுவதும், உடனடி நீதி வழங்கலும் அங்கு சகஜம். இவற்றைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பேசிய பத்ரி, ‘பண்பட்ட நகர மக்களாகிய நாம்’ நமக்கு ஒரு பிரச்சினை என்றால் வன்முறையில் இறங்கமாட்டோம். சட்டப்படியான தீர்வை நாடுவோம். வன்முறையில் இறங்கும் உரிமையை நாம் போலீசுக்கும், ராணுவத்துக்கும் தந்துவிட்டோம்.

ஆனால், பழங்குடிச் சமூகத்தில் இன்னும் அந்த நிலை இல்லை. ஒரு பழங்குடி இனத்துக்கு மற்றொரு இனத்தோடு பிரச்சினை என்றால், அவர்கள் வன்முறையின் மூலமாக பதிலடி தரும் வாய்ப்பே அதிகம் என்று கூறினார்.

இந்தப் பார்வைக்கு எதிராக விமர்சனம் இருக்கலாம். இத்தகைய பழங்குடி மதிப்பீடுகள் இந்தியா முழுவதும் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. இதற்கு நேரடி எடுத்துக்காட்டு, ஆணவப் படுகொலைகள்தான். தமிழ்நாட்டில் பரவலாக நடக்கும் உறவுக்குள் திருமணம் என்பது இப்படிப்பட்ட பழங்குடிப் பார்வையின் மிச்ச சொச்சமே. இதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காததை பத்ரி குறை சொல்கிறார்.

மெய்த்தி வன்செயல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியது, அல்லது அந்த வன்முறைக்கு ஆதரவாக இருந்தது குறித்து இப்போது நிறைய செய்திகள் வருகின்றன.

குஜராத்தில் நடந்த அளவுக்கு, மணிப்பூரில் அரசாங்கம் ஒருதலைச் சார்பாக நடந்துகொள்கிறதா என்பதை பொருத்திருந்து பார்த்துதான் சொல்லவேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாக வைத்துதான் மணிப்பூர் என்பது வடகிழக்கு மாநிலங்களின் குஜராத்தா என்பதை நாம் கூற முடியும்.

ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், காங்கிரஸைப் போலவே மெய்த்தி, குக்கி இனமக்களையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கத்தை அமைத்த பாஜக, தற்போது மெய்த்தி மக்களிடையே இந்து ஓட்டு வங்கியை உருவாக்க முயல்கிறதா என்பதும், பாஜக சகவாசத்தால் மெய்த்தி மக்கள் தங்களை கிறிஸ்தவர்களான குக்கி, நாகா மக்களுக்கு எதிர் நிலையில், இந்துக்களாக அடையாளம் காண்கிறார்களா என்பதும்தான்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival