Read in : English
நீலகிரி மாவட்டத்திலும், அருகிலுள்ள கேரளத்தின் வயநாட்டிலும் அருவிபோல் கனமழை கொட்டுகிறது. கடந்த ஆண்டு பெய்ததை விட இரண்டுமடங்கு அதிகமாகவே இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தச் சூழலில் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், உயிர்காக்கும் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
தென்மேற்குப் பருவமழை இப்போது ஓய்ந்துவிட்டது. வடகிழக்குப் பருவமழை சற்றுத் தொலைவில் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தப் பகுதியின் வானிலை மாற்றங்களை அவதானிப்பதும், ஆய்வு செய்வதும் மிக முக்கியம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை வானிலை ஆராய்ச்சி மையத்தின் தரவுகள்படி, இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் அண்மைய வரலாற்றில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் இரண்டுமடங்கு மழை பெய்திருக்கிறது (99 சதவீத உயர்வு); இதில் நீலகிரி மாவட்டத்தில்தான் மிக அதிகமான மழை பெய்திருக்கிறது (1,752 மிமீ).
நீலகிரி உயிரிமண்டலத்தில் ஓரங்கமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 1,587 மிமீ மழை பெய்திருக்கிறது. 2021ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் அங்கே 1,389 மிமீ மழை பெய்தது.
2022 ஜூன் 1 முதல் செப்டம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் இரண்டு மடங்கு மழை பெய்திருக்கிறது (99 சதவீத உயர்வு); இதில் நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகமாக 1,752 மிமீ மழை பெய்திருக்கிறது
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துகொண்டிருக்கும் கனமழை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்தது போல, மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் அதிக அழுத்தமுள்ள நிலச்சரிவு, குழாய் போல வீழும் நிலச்சரிவு, ஊழிவெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும் வாய்ப்புண்டு என்று வானிலை நிபுணர்களும், மண்ணியல் அறிஞர்களும் கணித்திருக்கிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நீலகிரி மலைகளின் எலம்பிலேரி குன்றுகளில் உற்பத்தியாகிப் பாய்ந்துகொண்டிருக்கும் சாலியார் நதியில் 2020இல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அதன் கரையோரம் இருக்கும் நிலம்பூர் நகரில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் பெய்த கனமழை காரணமாக, கூடலூரில் தேவலா அருகே ஏற்பட்ட நிலச்சரிவுதான் நிலம்பூர் வெள்ளப் பேரழிவிற்குக் காரணம் என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பண்டைய வரலாற்றின் துணையோடு ஆற்று தண்ணீரை கரை சேர்த்த கோவையின் தண்ணீர் மனிதர்கள்
அன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது என்றாலும், நள்ளிரவு கடந்தும் வெள்ளம் பாய்ந்தோடியது. வீடுகள், கடைகள், தெருக்கள் என்று எல்லாமும் நீரில் மூழ்கின. அப்போது உறங்கிக்கொண்டிருந்த மக்கள் திடுதிப்பென்று எழுந்து உயிர்பிழைக்க அங்குமிங்கும் ஓடினார்கள்.
அசாத்தியமான புவியீர்ப்பு விசையுடன் கனமழை பொழியும்போது, அந்தப் பகுதியிலுள்ள மண் கட்டமைப்பு பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. வானிலை மாற்றங்களாலும் மனிதரின் அடாத நடவடிக்கைகளாலும் இயற்கைச் சீற்றங்கள் உண்டாகின்றன. அதனால் இயற்கையின் உக்கிரத்தைக் குறைக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர அரசிற்கும் மக்களுக்கும் வேறுவழி இல்லை. நீலகிரி உயிரிமண்டலத்திலிருந்து சமவெளிவரை பாயும் நொய்யல், பவானி, அமராவதி உட்பட பல்வேறு நதிகளில் நீரோட்டம் கடுமையாகவே இருக்கிறது. இந்த நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்னும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
காவிரியின் கிளைநதியான நொய்யல் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களிலிருந்து கிளம்பி கோயம்புத்தூர், திருப்பூரில் இருக்கும் பல்வேறு கிராமங்களின் ஊடாகப் பயணித்து இறுதியில் காவிரியோடு கலக்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படும் இயற்கைச் சீற்றத்தினால் இந்தக் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஜூலையில் பிள்ளூர் அணைக்கட்டின் நீர்மட்டம் 97.5 அடியைத் தொட்டது; அது முழுக் கொள்ளளவை எட்ட வெறும் 2.5 அடியே பாக்கியிருந்தது. அப்போது கோயம்புத்தூரில் வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. கடந்த காலத்தைப் போலவே இந்த ஆண்டும் வடகிழக்குப் பருவமழை மிகவும் உக்கிரமாகப் பெய்தால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கும் மனிதர்களின் வசிப்பிடங்களில் நிலச்சரிவுகளும் உண்டாகும். குறைந்த காலத்திற்குள் பெருத்த மழை பெய்வதும், அதன் விளைவாகப் பெருஞ்சேதம் உண்டாவதும் மேற்குத் தொடர்ச்சிப் பகுதிக்கு ஒன்றும் புதிதன்று. அதனால் இந்த ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை கிராமந்தோறும் ஏற்படுத்துவதும், அதிகாரிகளுக்குப் போதுமான பயிற்சி அளிப்பதும் மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.
2019 ஆகஸ்டு மாதத்தில் ஊட்டிக்கருகே ஓடும் அவலாஞ்ச் நதிப் பள்ளத்தாக்கில் தென்மேற்குப் பருவமழை 24 மணிநேரத்தில் 911 மிமீ அளவு பதிவானதையும், அதனால் பள்ளத்தாக்கில் பெருத்த சேதம் ஏற்பட்டதையும் இங்கே நினைவுகூர வேண்டும். அதே வருடம் நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஆபத்தான பகுதிகள் என்று 50 இடங்களை இனங்கண்டிருந்தது. ஏற்கெனவே இந்திய நிலவியல் ஆய்வு மையம் 233 அபாயமான பகுதிகளை அடையாளப்படுத்தியிருந்தது.
இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பதிவாகியிருந்தாலும், பெரிய இயற்கை இடர்கள் ஏதும் எந்த இடத்திலும் நிகழவில்லை. அதற்குக் காரணம் மழை ஒரே இடத்திலோ ஒரே நாளிலோ கொட்டித் தீர்க்கவில்லை என்பதுதான். ஒரே சீராக எல்லா இடங்களில் மழை பதிவானது.
1990இல் ஊட்டியில் மாஞ்சூர் அருகே கெத்தையில் கடுமையாக மழைபெய்ததால் பாறைகள் உருண்டோடி ஒரு நிவாரண முகாமில் விழுந்தன. அந்தப் பெரிய நிலச்சரிவில் 36 பேர் பலியாயினர்.
2019 ஆகஸ்டு மாதத்தில் ஊட்டிக்கருகே ஓடும் அவலாஞ்ச் நதிப் பள்ளத்தாக்கில் பெய்த தென்மேற்குப் பருவமழை 24 மணிநேரத்தில் 911 மிமீ அளவு பதிவானது. அதனால் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது
என்னதான் பசுமை இலட்சியவாதங்கள் எச்சரிக்கைக் குரலெழுப்பிக் கொண்டிருந்தாலும், சுற்றுப்புறச்சூழல் ரீதியாகப் பதற்றமான நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களின் மோசமான செயற்பாடுகளும், வானிலை மாற்றங்களும், பேரளவு ஆக்ரமிப்புகளும், சட்டவிரோதமான கட்டடங்களும், கட்டுப்பாடற்ற ரியல் எஸ்டேட் திட்டங்களும் சுற்றுப்புறச் சூழலைப் பெரிதும் நாசப்படுத்திவிட்டன.
ஒவ்வொரு கிராமத்திலும், சுற்றுப்புறச்சூழல் ரீதியாக பதற்றமான, ஆபத்துச் சாத்தியம் கொண்ட இடங்களிலும் மழைமானிகளை நிறுவி மிகச்சிறந்த மழைத்தரவு அவதானிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் ஏகோபித்த குரலில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வானிலைக் கண்காணிப்புக் கட்டமைப்பில் தரமில்லை; பதற்றமான குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிகழும் மழைப்போக்குகளை ஆய்வதற்குத் தேவைப்படும் தரவுகளும் போதுமானவையாக இல்லை.
Read in : English