Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாள் போட்டிகள் ஜூலை 31 அன்றான நேற்று நடைபெற்றன.
நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் பெண்டாலா ஹரிகிருஷ்ணன், கிரீஸ் அணியைச் சேர்ந்த டிமிட்ரியுடன் மிகச் சாதுர்யமாக ஆடி 23ஆவது நகர்விலேயே அவரைத் தோற்கடித்தார்.
டிமிட்ரி தனது ராஜாவுக்குக் கட்டிய கோட்டையை, அடுத்தடுத்த நகர்வுகளில் பெண்டாலா தனது மந்திரியைப் பணயம் வைத்துத் தகர்த்துவிட்டார். தடுத்து நிறுத்தக் குதிரையும் இல்லை, மந்திரியும் இல்லை எனும் இக்கட்டான சூழ்நிலையில், ராணி அவருக்கு உதவிக்கரம் நீட்டியது. அதற்கு இடமளிக்காமல், பெண்டாலா தனது ராணியையும் குதிரையையும் கொண்டு வியூகம் வகுத்து கறுப்பு ராஜாவின் கோட்டையைக் கைப்பற்றினார்.
பெண்டாலாவின் அதிரடியான ஆட்டத்தைச் சமாளிக்க இயலாத டிமிட்ரி 25ஆவது நகர்விலேயே தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து வந்த மூன்று நகர்வுகளில் ராஜாவின் கோட்டையைத் தகர்த்தது பெண்டாலாவின் கெட்டிக்காரத்தனம் எனலாம்.
மகளிர் பிரிவில், A அணியில், ஹரிகா த்ரோணவள்ளி, இந்த செஸ் ஒலிம்பியாட்டில் தனது முதல் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்தியாவின் இரண்டாவது சிறந்த ஆட்டக்காரரான இவர், மகப்பேறு காலத்தில் இருப்பதால் இதுவரை ஆடாமல் இருந்தார். இவரது முதல் ஆட்டம் இங்கிலாந்தின் ஹொவ்ஸ்கா ஜோவான்காவுடன் ட்ராவில் முடிந்தது.
அதே அணியில், பக்தி குல்கர்னி தோல்வியின் விளிம்பிலிருந்து ஆட்டத்தை மீட்டு இங்கிலாந்தின் அட்சயா கலையழகனைத் தோற்கடித்தார். இவருடன் வைஷாலியின் வெற்றியும் சேர்ந்து, இந்தியா இங்கிலாந்தை 3 -1 என்ற புள்ளிக் கணக்கில் வெல்ல வழிவகுத்தது.
இந்தோனேசியாவிற்கு எதிரான B அணியின் சௌம்யா சாமிநாதன் மற்றும் வந்திகா அக்ராவால் இருவரும் வெற்றிபெற்றனர். மேலும், பத்மினி ராவுட் மற்றும் மேரி ஆன் கோம்ஸ் இருவரும் ட்ரா செய்து, இந்தோனேசியாவை 3 – 1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர்.
C அணியின் சகிதி வர்ஷினி ஆஸ்திரியாவின் நிக்கோலா மேரிஹபரிடம் தோற்றுப்போனார். இதுவே இந்த ஒலிம்பியாடில் முதல் தோல்வி. இருந்தும் , அணியின் மற்ற ஆட்டக்காரர்களான ப்ரத்யுஷா போடா, ஈஷா கரவாடேவின் அபாரமான ஆட்டத்தால், இந்தியா, ஆஸ்திரியாவை 2 ½க்கு 1 ½ என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதில் நந்திதாவின் எதிராளி ஆட்டத்திற்கு வராதது அணியின் வெற்றிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.
ஓபன் பிரிவிலான ஆட்டத்தில், இந்தியாவின் இளையவர்களான குகேஷ், ப்ரஞ்ஞானந்தா, நிகில் ஷாரின், ராணக் சத்வானி மற்றும் அதிபன் ஆகியோர், தொடர்ந்து மூன்றாவது நாளாக சுவிட்ஸர்லாந்தை வென்று ஹாட்ரிக் சாதனை செய்துள்ளனர். குறிப்பாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப், வாங்கிய, மேக்னஸ் கார்ல்செனின் விமர்சனத்திற்குப் பிறகு, இவர்களது சாதனை, இவர்களின் ஆட்டத்தை உலக அளவில் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இந்திய அணியின் பெண்டாலா ஹரிகிருஷ்ணன் ரேட்டிங் 2720 ஆகவும், குகேஷ் ரேட்டிங் 2684 ஆகவும் உள்ளது. மேக்னஸ் கார்ல்செனின் ரேட்டிங் 2864 என்பது கவனிக்கத்தக்கது. இந்திய அணியிலிருந்து வலுவான இரண்டு ஆட்டக்காரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பைச் சந்திக்கக்கூடும் என்பது தெரிகிறது. C அணியின், கங்குலி மற்றும் புராணிக் அவர்களது ஆட்டத்தில் ட்ரா செய்தும், சேதுராமன், அபிஜித் குப்தா ஆகியோர் வென்றும் இந்தியா ஐஸ்லாண்டுடனான ஆட்டத்தில் 3 -1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றுள்ளது.
மூன்றாவது சுற்றின் மிகப்பெரும் திருப்புமுனை எனும் அளவிற்கு, இத்தாலி அணி, நார்வே அணியை வென்றுள்ளது. உலக சாம்பியன் கார்ல்சனின் தலைமையில் இருக்கும் உலகின் மூன்றாவது தலை சிறந்த நார்வே அணி இத்தாலியிடம் தோற்ற செய்தி அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தருகிறது.
கார்ல்சென் மற்றும் ஆர்யன் அவர்கள் ஆட்டத்தை ட்ரா செய்தும், மற்றவர்கள் இத்தாலி அணி ஆட்டக்காரர்களிடம் தோற்றும், நார்வே அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
Read in : English