Read in : English
உலகில் எதிர்நிலை சார்ந்த இருவேறு காட்சிகளை காணும் தலைமுறையில் வசிக்கிறோம். சூழலுடன் இயைந்து வாழ்ந்த முக்கிய விலங்குகளையும், பறவைகளையும் அழித்து அகங்காரம் கொண்டது, இந்த நுாற்றாண்டு துவக்கத்தில் நடந்த முதன்மை காட்சி. அதனால், உலகில் உயிரின உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கண்ணிகள் அழிந்துள்ளதை காண்பது அடுத்த காட்சி. கண்ணிகள் அறுந்ததால், பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அதே நிலையில், உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பதையும் நிகழ்த்தி வருகிறோம். இரு எதிர்நிலை காட்சிகளும் ஒரே நுாற்றாண்டில், மிக குறைந்த கால இடைவெளியில் நிறைவேறியுள்ளன.
உணவு சங்கிலி பாதிப்பு, அறைகுறை அறிவால் பெற்ற அறிவியல் வளர்ச்சியால் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது பாரு கழுகு என்ற பிணம் தின்னிக் கழுகு இனம். கிட்டத்தட்ட உலகில் இருந்து மறையும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது.
வானில் மிக உயரமாக பறக்கும் உயிரினங்களில் ஒன்று பாரு கழுகு. கண்ணுக்கு புலப்படாத உயரத்தில் பறக்கும். இறந்த விலங்கின் உடல்களைக் கண்டால், நொடியில் அங்கு இறங்கிவிடும். சில மணி நேரத்துக்குள் எலும்பைத் தவிர, எல்லாவற்றையும் தின்று பறந்து விடும்.
இந்த நிலை, 40 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது. இன்று, அந்த பறவையினத்தை கண்பதே அரிதாக உள்ளது. சூழல் சமநிலையைக் காப்பதில் பெரும்பங்காற்றிய கழுகுகள் கிட்டத்தட்ட அழிந்தே விட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
விலங்குகளை தாக்கும் நோய்களான தொண்டை அடைப்பான், கழிச்சல், காணை, கோமாரி உள்ளிட்ட எந்த நோயாலும் இறந்த விலங்கு உடலையும் பாரு கழுகுகள் தின்று சூழலை மேம்படுத்தின.
விலங்குகளை தாக்கும் நோய்களான தொண்டை அடைப்பான், கழிச்சல், காணை, கோமாரி உள்ளிட்ட எந்த நோயாலும் இறந்த விலங்கு உடலையும் பாரு கழுகுகள் தின்று சூழலை மேம்படுத்தின. அவற்றை செரிக்கும் திறனை இயற்கையாக பெற்றுள்ளன. இதனால், விலங்குகளை தாக்கும் கொள்ளை நோய்கள் பரவுவது தடுக்கப்பட்டது. இந்தப் பறவையிடம் இருந்து எந்த நோயும், பிற உயிரினங்களுக்குப் பரவுவதில்லை.
ஆங்கிலத்தில் இந்தப் பறவையினத்துக்கு, ‘வல்சர்’ என்று பெயர். இதற்கு கொள்ளைக்காரன், சூறையாடுபவன் என்று பொருள். இயல்பில் மிகவும் சாதுவான பறவைகள் இவை. என் இளமைப் பருவத்தில் இவற்றை மிகவும் அருகே சென்று பார்த்துள்ளேன். கிராமத்தில், இறந்து விழும் மாடுகளைத் தின்ன கூட்டம் கூட்டமாக இவை வரும். அவற்றின் இறக்கை விரிப்பும், சமுதாய செயல்பாடும் மிகவும் ஆச்சரியம் தரும்.
எங்கள் பகுதியில் விவசாய பணிக்காக மாடுகள் அதிகம் வளர்ப்பர். அவை மரணம் அடைந்தால், உடலை காட்டில் தூக்கிப் போடுவர். அடுத்த நொடி அங்கு பாரு கழுகுகள் கூட்டமாக இறங்கும். அந்த விலங்கு உடலை முழுமையாக உண்ணும். எலும்பில் ஒட்டியிருக்கும் துளி இறைச்சியைக் கூட மிச்சம் வைக்காது. நுட்பமாக கிழித்து உண்ணும் அழகு அலாதியானது.
வானில் மிக உயரமாக பறந்து உணவை அவை கண்பது வியப்பை தரும். கூட்டமாக வந்து, இறந்த விலங்கு உடலை தின்று மீண்டும் பறப்பது வினோதமாக இருக்கும். சிறுவர்கள் அவற்றை தடவியும் அணைத்தும் கொண்டாடுவர். அமைதியாக உணவை உண்டு சத்தம் இன்றி பறந்து செல்லும். இப்படிப்பட்ட அபூர்வ பறவையைக் காணும் வாய்ப்பற்ற நிலை இப்போது உள்ளது.
பாரு கழுகுகளைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறது, கோவையில் உள்ள அருளகம் அமைப்பு.
பாரு கழுகுகளைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறது, கோவையில் உள்ள அருளகம் அமைப்பு. இந்த இனத்தைக் காக்க தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அருளகம் அமைப்பைச் சேர்ந்த சு.பாரதிதாசன், இந்தக் காக்கும் பயணத்தில் முன்னணியில் நிற்கிறார். பல ஆண்டுகளாக அவரது பயணம் தொய்வின்றி தொடர்கிறது. பயணத்தில் தேடிய தகவல்களைத் தொகுத்து, அற்புதமாக நுால் வடிவமாக்கியுள்ளார். அபூர்வ உயிரினமான பாரு கழுகினம் பற்றிய அபூர்வப் புத்தகம் அது. ஆய்வுப் பார்வையில் எழுதப்பட்டுள்ளது.
பாரு கழுகின பாதுகாப்பு பயணம் பற்றி பாரதிதாசன் கூறியது: இளமையிலே, பறவைகள் மீது ஆர்வம் இருந்தது. முதலில் சத்தியமங்கலம் காட்டில், 2011இல் பாரு கழுகுகளை பார்த்தேன். அந்த கூட்டத்தில், 105 கழுகுகள் இருந்தன. அந்த காலக்கட்டத்தில், அநேகமாக தமிழகத்தில் இந்தக் கழுகினம் அருகிவிட்டது என்றே சொல்லலாம். அந்த நேரத்தில் தான், பாதுகாக்கும் பணிகளைத் துவங்கினோம்.
நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் திருவிழா நடைபெறும் இடங்களில், பாரு கழுகுகள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தினோம்.
கால்நடைகளின் வலிநீக்கியாகப் பயன்படுத்தப்பட்ட, ‘டைக்குளோபினாக்’ மருந்து இப்பறவைகளின் அழிவுக்கு முதன்மைக் காரணம். அந்த மருந்துக்குத் தடை விதிக்க கேட்டுக்கொண்டோம்.
டைக்குளோபினாக் மருந்துக்குப் பதிலாக, கீட்டோபுரோபன் மருந்து, அரசு கால்நடை மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மருந்தும் பாரு கழுகுகளை அழிக்கும் என்பதை உணர்ந்து முறையீடுகளை தொடர்ந்தோம். இதன் பலனாக, கிட்டோபுரோபன் மருந்தையும் அரசு கால்நடை மருந்தகங்களில் திரும்பப் பெற்றது அரசு.
தற்போதைய நிலையில், இந்தக் கழுகுகள், 300 எண்ணிக்கை வரை இருக்கலாம் என நம்புகிறோம். தற்போது, மறைந்த வரும் உரியினம் (Critically endangered animals) என்ற வகைப்பாட்டில் உள்ளது.
இந்தப் பறவையை பாதுகாக்கும் முயற்சியாக பல அனுபவங்களை பெற்றேன். அந்த அனுபவங்களை தொகுத்து, புத்தகமாக்கியுள்ளேன். அந்த புத்தகம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. புத்தகம், ‘பாரு கழுகுகளைத் தேடி’ என்ற தலைப்பில் கிடைக்கிறது என்கிறார் பாரதிதாசன்.
பாரு கழுகு இனம் பற்றி ஆராய்ந்து வரும் பாரதிதாசனுக்கு, பல்லுயிர் காவலர் விருதை புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கிரிட்டிக்கல் எக்கோசிஸ்டம் பார்ட்னர்ஷிப் பண்டு அமைப்பு, பல்லுயிர் செழிப்பிட நாயகன் என்ற விருதையும் வழங்கியுள்ளது.
இவரது பயணத் திட்டத்தை, இங்கிலாந்து ஓரியன்டல் பேர்டு கிளப் அமைப்பு சிறப்பித்துள்ளது. பாரு கழுகு பாதுகாப்பு பணிகளை ஒழுங்கு படுத்தும் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
உருவில் மிகப் பெரிய இவ்வினத்தில், உலகில் 23 வகைகள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா தவிர மற்ற கண்டங்களில் காணப்படுகின்றன. இந்தியாவில் ஒன்பது வகைக் கழுகுகளும், தமிழகத்தில் நான்கு வகைக் கழுகுகளும் தற்போது உள்ளன.
பாரு கழுகு இனம் பெருக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தில் கீழ்க்கண்ட தகவல்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.
* இயற்கையாக இறக்கும் கால்நடைகளைப் புதைப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றை ஊருக்கு ஒதுக்குப்புறமாய் போட்டு விடலாம். கழுகினத்துக்கு அது உணவாகும்.
* வன விலங்குகள் இறந்தால் புதைப்பதைப் கைவிட்டு காட்டுக்குள் போட வேண்டும். இதனால், பாரு கழுகுகள் மட்டுமின்றி, கழுதைப் புலி உட்பட பல உயிரினங்கள் பயன்பெறும்.
நம்முடன் வாழும் உரியினங்களை பாதுகாக்க உறுதி ஏற்போம்.
Read in : English