Read in : English
”பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்” என்றான் பாரதி. அதை மெய்யாக்கும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி நினைவு நூற்றாண்டில் 14 புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், பாரதி பிறந்தநாள் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும், பாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் 37 லட்சம் மாணவர்களுக்கு 10 கோடி செலவில் வழங்கப்படும், மறைந்த மற்றும் சமகால பாரதி ஆய்வாளர்க ளுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து தலா 3 லட்சம் வழங்கப்படும், பாரதி கைசாத்துப்படிகள் செம்பதிப்பாக பதிப்பிக்கப்படும், நூலகங்களில் ’பாரதியியல்’ எனத் தனியாக ஒருதுறை அமைக்கப்படும் எனப் பல ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் அடங்கியிருந்தன.
இந்த அறிவிப்புகள் பாரதியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச்சேர்க்க வேண்டும் எனப் பணிசெய்து வருபவர்கள் உள்ளத்தில் உவகையை உண்டாக் கியுள்ளது. எதற்குள்ளும் அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு கொஞ்சம் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திமுகவுக்கு பாரதி மீது இதுவரை இல்லாத பாசம் இப்போது எப்படி திடீரென்று வந்தது எனச் சிலர் புகையை மூட்டுகின்றனர். திமுக தங்களின் கொள்கை முகமாக பாரதியை என்றைக்கும் முன்வைத்ததில்லை என்பது உண்மைதான். ஆனால் அக்கட்சி என்றும் பாரதி மீது வெறுப்பைக் கொட்டியதில்லை என்பதும் உண்மை. இந்த இரண்டு உண்மைகளில் ஓர் உண்மையைக் கொண்டு வாதிடுவது தவறு.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அண்ணா, பாரதியை தொடர்ந்துப் போற்றினார். 1947இல் எழுத்தாளர் கல்கி, பொதுமக்களிடமி ருந்து நிதியைப் பெற்று பாரதி பிறந்த ஊரான எட்டயபுரத்தில் அவருக்கு மணிமண்டபம் எழுப்பிய போது அப்பணியை வரவேற்று எழுதினார்.
”பாரதியாரின் காலம் வேறு; இக்காலம் வேறு. எனவே, இன்றுள்ள எண்ணங் களை எல்லாம் அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய- திராவிடப் பிரச்சினை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ நாம் எதிர்பார்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர்’ஆரியர்’ என்ற சொல்லை, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக் காலம், நாமெல்லாம் பள்ளிகளில் ‘ஆரிய மத உபாக்கியானம்’ எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நம் தலைவர்கள், தமிழ்நாட்டுக் காங்கிரசிலே பெருந்த தலைவராக இருந்த காலம்.
ஆரியர்- திராவிடர் பிரச்சினை, ஓர் ஆராய்ச்சி – வரலாறு. இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை. ஆரியம் என்பது, ஓர் வகைக் கலாச்சாரம்- வாழ்க்கை முறை. திராவிடம், அதுபோன்றே, தனியானதோர் வாழ்க்கை முறை. இது, இன்று விளக்கமாக்கப்படுவதுபோல, பாரதியாரின் நாட்களில் கிடையாது” என்று மிகத் தெளிவாக ‘பாரதி பாதை’ கட்டுரையின் அண்ணா விளக்கியுள்ளார்.
”பாரதியாரின் காலம் வேறு; இக்காலம் வேறு. எனவே, இன்றுள்ள எண்ணங் களை எல்லாம் அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய- திராவிடப் பிரச்சினை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ நாம் எதிர்பார்பதற்கில்லை — அண்ணாதுரை
அதேபோல், தமிழுலகில் பாரதி, மகாகவியா? இல்லை நல்ல கவியா? என்ற சர்ச்சை எழுந்த போது அண்ணா தன் பங்கீடாக பாரதியை ‘பீபுள்’ஸ் பொயட் பாரதியார்’ என்று 1948இல் சிறு கையேட்டை வெளியிட்டார். அதாவது அவர் தேசிய கவியாகவோ, மகாகவியாகவே இருக்கத் தேவையில்லை. அவர் மக்கள் கவி என்று பொதுச் சொத்தாக்கினார்.
ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய பொழிவு அப்படியே முன்வைக்கிறது.
அந்நாளில் பாரதியைவிட, திமுகவும் அண்ணாவும் பாரதிதாசனைத்தான் தங்கள் கொள்கையின் முகமாகக் கருதினர். சொல்லப்போனால் பாரதிதாச னுக்கு அண்ணா தனியாக நிதி திரட்டி பொற்கிழிக் கூட வழங்கினார். அக்காலத்திலேயே பாரதிதாசன் தனது குருவாக ஏற்றிருந்தது பாரதியைத் தான். பாரதியைப் போற்றும்போது பாரதிதாசனைக் கொண்டாடுவதில் எந்த நெருடலும் திமுகவுக்கு இருந்ததில்லை. அண்ணாவுக்கும் இருந்ததில்லை.
ஆனால் அதே பாரதிதாசனை தங்கள் இயக்கத்தின் கொள்கைக் கவியாக முன்வைத்த பெரியாருக்குப் பாரதியை ஏற்பதில் தடைகள் இருந்தன. 1947இல் கல்கி எட்டயபுரத்தில் பாரதிக்காக எழுப்பிய மணிமண்டபப் பணியை ஏளனம் செய்தது பெரியாரின் ‘குடிஅரசு’. 1947 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இதழில் ‘ஈட்டி’ எழுதிய ‘பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?’ என்ற கட்டுரையின் தலைப்பே அதற்குச் சான்றாகும்.
மேலும் அக்கட்டுரை, “தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற மற்றொருவகை முயற்சிதான், பாரதி விழாவும் பாரதியை ஒட்டிய பிற நினைவுக்குறி நிகழ்ச்சிகளும் ஆகும்” என எழுதிய ஈட்டி,
“ஆரியர்கள் கையாண்டு வரும் பரம்பரை வித்தைக்கிணங்கவே சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்ததுமாகும். பாரதியாரை நல்லதொரு வெள்ளைக் கவிஞர் என்று கூருவதிலோ, கவிஞர் என்று கூறுவதிலோ, உணர்ச்சி ததும்ப பாடுபவர் என்று கூறுவதிலோ நமக்கு எத்தகைய ஆட்சேபணையும் இல்லை.
ஆனால் பாரதியாரைத் தமிழ்நாட்டுத் தனிப்பெருங் கவிஞர் என்றும், தமிழுணர்ச்சியை வளர்த்தவர் என்றும் தமிழன் தலைநிமிர்ந்து நடக்க வழி செய்தவர் என்றும் கூறுவதுதான் திராவிட இனத்திற்கே அழிவைத் தருவதாய், திராவிட உணர்ச்சியை ஒழிக்கவல்லதாய் இருக்கின்றது என்பதையும், ஆரியர்கள் பாரதியைக் காட்டி திராவிட உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கின் றார்கள் என்பதையும் எடுத்துக்கூற வேண்டிய நிலையை உண்டாக்கியிருக் கிறது” என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.
ஆக, திராவிடக் கழகத்திற்குப் பாரதியை ஏற்பதில் கருத்து முரண் இருந்தது வெளிப்படை. அடிப்படையில் பிராமண எதிர்ப்பை மூலமாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட இவ்வியக்கத்தின் நிலைப்பாடு புரிந்துக் கொள்ளத்தக்கதே.
ஆனால் அதே கொள்கை அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடையாது. அது பாரதியை மிகத் தாராளமாக வேண்டிய அளவு அரவணைத்துக் கொண்டது என்பதன் சாட்சியம்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் பதிவான அண்ணாவின் நிலைப்பாடுகள்.
பாரதிதாசனை திராவிடர் இயக்கத்தினர் பலமுறை சந்தித்து பார்ப்பானுக்கு தாசனாக இருக்கும் தங்களின் பெயரை மாற்றிக் கொள்ளும்படி கோரிய போதும் அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்தார். ஒருமுறை பட்டுக்கோட்டை அழகிரி, புதுச்சேரியில் பாவேந்தரைச் சந்தித்து இதே கருத்தை முன்மொ ழிந்தும் பாரதிதாசன் அசைந்துக் கொடுக்கவில்லை. மேலும் சாகும்வரை பாரதிக்குத் தாசனாக இருந்தே மரிப்பேன் என்றும் அவர் முழங்கியும் இருக்கிறார் என அறிகிறோம்.
பாரதிதாசனால் சீடன் என ஏற்றுக் கொள்ளப்பட்ட திமுகவின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதிக்கும் பாரதியை ஏற்பதில் எத்தடைகளும் இருந்ததாக உணரமுடியவில்லை. அவரது படைப்புகளில் ஆங்காங்கே பாரதியின் மேற்கோள்களை தாராளமாக விரவிவிட்டுக் கொண்டேதான் இருந்தார்.
அவரது சுயசரிதையாக கருதப்படும் நூலின் ‘நெஞ்சுக்குநீதி’எனும் தலைப்பே பாரதியை நினைவுகொள்ளச் செய்கிறது. ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்’ என்ற பாடல்வரிகளிலிருந்து இதனை எடுத்தாண்டிருக்கிறார். தங்களின் கட்சிக்காக நிதி திரட்டுவதற்காக வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்புகளில் கூட பாரதியின், ‘நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்; அதுவும் அற்றவர் வாய்ச்சொ லருளீர்” என்ற பாடல் வரிகளை முழுக்கமாக முன்வைத்தார் கருணாநிதி.
இவரது முதல் திரைப்படத் தலைப்பான ‘பராசக்தி’கூட மறைபொருளாகப் பாரதியைப் பேசியது. ‘காணி நிலம் வேண்டு பராசக்தி’ என்றும் ‘பகைவனுக்கு கருள்வாய்’ பாடலில் ‘அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் வளைக் கும்பிடுவாய் – நன்நெஞ்சே’ என்றும் நினைக்கும் நேரம் யாவும் பராசக்தியை உதவிக்கு அழைத்தான் பாரதி.
1982இல் பாரதி பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்ட வேளையில் பாரதி குறித்து மு.கருணாநிதி ‘தமிழரசு’ இதழில் எழுதிய கட்டுரையில், “ஆண்டுக் கொருமுறை என்றல்ல; ஆடுகின்ற மயிலைக் காணும்போதும்- கூவுகின்றக் குயிலை ரசிக்கும்போதும்- ஓடுகின்ற மழலையைப் பார்க்கும்போதும்- பாரதி நினைவு வந்தே தீரும். குயில்பாட்டு, குழந்தைப் பாட்டும் மறக்ககூடிய வையா?” என்றார்.
“எதிரிகளைப் பண்படுத்தும் எழுத்து, புண்படுத்தும் எழுத்தல்ல பாரதியின் எழுத்து; தளையும் தொடையும் தெரிந்துவிட்டால் தலைகீழ் நிற்கும் கவியுலகம் பாரதி காலத்தில் இல்லை” என்று உச்சிமுகர்ந்து எழுதியுள்ளார்.
கருத்தியல்ரீதியாக பாரதியை எடுத்தாள்வதில் அண்ணாவுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அதற்கு ஒருபடி முன்னேறி பாரதியின் கனவுக்கு வடிவம் தருவதில்கூட தனக்கு தடைகள் ஏதும் இல்லை எனச் செய்துக் காட்டியவர் மு.கருணாநிதி. ‘சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம்; சேதுவை மேடுறுத்து வீதி சமைப்போம்’ என்ற பாரதியின் வரிகளை உண்மையாக்கவே வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த திமுக, சேதுக்கால்வாய் திட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோல் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம்’ என்றான் பாரதி. அந்தப் பாடலை அப்படியே கலைநயமிக்க காட்சிப் பொருளாக மாற்ற புகார் நகரில் நினைவு மண்டபங்களை கட்டி எழுப்பினார் கருணாநிதி. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றான் பாரதி. ’நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று நித்தம் தவஞ்செய் குமரி யெல்லை’ எனப் பாடிய பாரதி பாடலை மனதில் நிறுத்தியே ‘குமரி எல்லை’யில் வள்ளுவனுக்கு வானுயர சிலை வைத்தார் கருணாநிதி.
இதன் ஒருபகுதியாகத்தான் 1973இல் முதலமைச்சராக இருந்தபோது 12.5.1973 இல் எட்டயபுரத்திலுள்ள பாரதி வீட்டை நினைவில்லமாக மாற்றிக் காட்டினார்.
திராவிட முன்னேற்றக் கழகம் பாரதியை அங்கீகரிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சரியாகவே நடந்து கொண்டது. இது அண்ணா காலத்தில் தொடங்கி, இன்றைக்கு ஸ்டாலின் காலம்வரை சீராக வளர்ந்தேறி வருகிறது. ஆனால் அதை இவர்களின் தாய்க்கழகமான திராவிடர் கழகம் என்றைக்கும் ஏற்ற தில்லை. அதற்குச் சான்று சமீபத்தில் திராவிடர் கழக ஏடு பாரதி மீது கொட்டி யுள்ள வெறுப்புணர்ச்சி.
Read in : English