Read in : English
அன்புள்ள விவசாயிகளே! கடந்தவாரம் எனது பத்தியை வாசித்த வாசகர்களிடமிருந்து, சொந்தமாக இடுபொருள் தயாரிப்பது குறித்து நிறைய இமெயில்களும் வாட்ஸ் அப் செய்திகளும் வந்திருந்தன. இதில் மகிழ்வூட்டக்கூடிய விஷயம் என்னவெனில், இந்த மெயில்களை அனுப்பியவர்கள் அனைவரும் படித்தவர்கள். நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். குறிப்பாக, 37லிருந்து 40 வயதுடையவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறவர்கள்.
அவர்கள் அனைவருமே விவசாயம் குறித்து அடிப்படையாக சில விஷயங்களையும் நடைமுறைகளையும் உணர்ந்துகொண்ட பிறகே விவசாயத்தில் இறங்கியுள்ளனர் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நண்பர்களே! இன்றைய சூழ்நிலையில் விவசாயம் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை; வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நமது நாட்டில் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட விவசாயத்தில் இபபடி ஏற்படுவது ஏன்? இப்படி நிகழும் என எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
இதற்கான காரணம் சாதாரணமானது. உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, வேதி இடுபொருட்கள் உற்பத்திக்கு பசுமை புரட்சி முக்கியத்துவம் கொடுத்தது. அதேவேளையில், நமது பாரம்பரிய அறிவு களஞ்சியத்தையும் புறம்தள்ளினார்கள். அதன் விளைவாக நம் பாரம்பரிய விதைகளைத் தொலைத்தோம். நிலங்கள் தரிசாகின. உள்ளூர் பறவைகள், பூச்சி இனங்கள் அழிந்தன. நிலத்தடி நீர்மட்டம் குறையத் தொடங்கியது. கலப்பின மாடுகளின் வருகை, நம் நாட்டு மாடுகளை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து, கிராமப்புற மக்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு நகரங்களுக்குக் குடிபெயரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
விவசாயிகள் இடுபொருட்களுக்காக தங்களது நிலத்தையோ அல்லது கிராமத்தையோ சார்ந்திருந்தால் போதுமானது.
அன்பார்ந்த விவசாயிகளே! நாம் வெளி இடுபொருட்களை பயன்படுத்திக்கொண்டிருக்கும் வரை விவசாயம் லாபகரமானதாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை. அதேவேளையில் நாம் நமது முன்னோர்கள் காட்டிய வழியில் வளங்குன்றா வேளாண்மைக்கு மாறினால், நிச்சயம் அது செலவை பெருமளவில் குறைக்கும் என்பது நிதர்சனம். இந்த உண்மையை ஆயிரக்கணக்கான விவசாயிகள் உணர்ந்த காரணத்தால் அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விவசாயத்துக்கு திரும்பி, நல்ல பலனை அறுவடை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் இடுபொருட்களுக்காக தங்களது நிலத்தையோ அல்லது கிராமத்தையோ சார்ந்திருந்தால் போதுமானது. தேவைப்படும் அனைத்து இடுபொருள்களின் உட்பொருள்களும் நிலத்திலேயே கிடைக்கும். இவற்றுக்காக, அவர்கள் அருகிலுள்ள நகரத்துக்கு சென்று வாங்க வேண்டிய தேவை இல்லை.
ஆனால், இப்படி உள்ளூரில் தயாரிக்கப்படும் இடுபொருட்கள் எத்தனை காலத்துக்குப் பயனளிக்கும்? இதனை மெத்த படித்த விவசாய அறிஞர்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்க நினைப்பவர்களுக்கு, விவசாயத்தை மீட்க பாரம்பரிய முறைகளை கையாண்ட இயற்கை வேளாண்மை விஞ்ஞானி மறைந்த ஜி. நம்மாழ்வாரை குறிப்பிட விரும்புகிறேன். நம்மாழ்வார் மட்டும் இருந்திருக்காவிட்டால், இன்று ஒட்டுமொத்த பாரம்பரிய அறிவும் முறைகளும் மறந்து போயிருக்கும்; அழிந்தும் போயிருக்கும்.
“இப்பாரம்பரிய முறைகள் நம் மண்ணில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருந்தது. ஆனால் அவை கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகத்தான் மறைந்துவிட்டன. ஆனால் இன்று நம் விவசாயிகள் அவற்ற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து பழைய நடைமுறைக்குத் திரும்பி வருகின்றனர். அவை சிக்கனமானது. பயனுள்ளது. விவசாயிகளுக்க்கு சாதகமாக உள்ள அரசின் கொள்கைகள் இருந்தாலும், துரதிஷ்டவசமாக அவை வெறும் காதிதத்தில் மட்டும் தான் உள்ளன. நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு விவசாயியும் தங்கள் அறுவடைக்கு தாங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணர வேண்டும். பாரம்பரிய விவசாயம் தீங்கற்றது. அவற்றின் பலன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பயனளிக்ககூடியது என்பதை பலர் கண்டறிந்துள்ளனர்’’ என்று நம்மாழ்வார் வலியுறுத்தியுள்ளார்.
ஆகையால் நண்பர்களே! முடிவு உங்கள் கையில். கடனிலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா? அல்லது அதிலேயே மூழ்கிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நம்மை நாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்தவாரம் சந்திக்கும் வரை நன்றி.
Read in : English