Read in : English
1931இல் புதுச்சேரியிலிருந்து இலங்கை வழியாக ஐரோப்பா பயணம் மேற்கொள்ள பெரியார் திட்டமிட்டிருந்தார். மேலைநாடுகளில் அரசியல், சமூக அமைப்புகள் எவ்வாறு அந்நாட்டு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிய இப்பயணம் மேற்கொள்கிறார். கப்பல் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் காய்ச்சல் வந்துவிடுகிறது. புறப்படும் நாள் அன்று உடல்நிலை ஓரளவிற்கு தேறியிருந்தார். அவரது தோழர்கள், குறிப்பாக, புரட்சி கவிஞர் பாரதிதாசன், பெரியார், கப்பலில் நான்காம் வகுப்பில் பயணம் செய்வது சௌகரியமாக இருக்காது என்று கருதி, பணம் வசூல் செய்து மேல்வகுப்பு பயணச்சீட்டை எடுக்க விழைகிறார். ஆனால், பெரியார், அதை தடுத்துவிட்டு, நான்காம் வகுப்பில், கப்பலின் அடித்தளத்தில், நிலக்கரிகள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியில் மூட்டைகள் மீது அமர்ந்து பயணம் செய்கிறார். பொதுவாக, சிப்பாய்களும், கூலித்தொழிலாளர்களும் அவ்வகுப்பில் பயணம் செய்வார்கள். அவரைப் பொறுத்தவரை, உயர்வகுப்பு என்பது வீணான செலவு என்பதில் உறுதியாக இருந்தார்.
அதைப் போன்று ஒருமுறை, கோவையிலிருந்து சென்னைக்கு தொடர்வண்டியில் பயணிக்கும் போது, பெரியார் மூன்றாம் வகுப்பில் அமர்ந்திருப்பதை கண்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு கட்டாயப்படுத்தி முதல் வகுப்பு பயணசீட்டை எடுத்து விடுகிறார். ஆனால், பெரியார் அவர் அந்தப் பக்கம் போனவுடன் இந்தப் பக்கம் தனது தோழர் ஒருவரை அனுப்பி அந்த சீட்டை இரத்து செய்து பணத்தைத் திரும்ப வாங்க சொல்கிறார். மேம்போக்காக பார்க்கும்போது இது ஏதோ கஞ்சத்தனம் போலத் தோன்றினாலும், அவரது வாழ்க்கையை ஊன்றிப் படித்தோமானால், அவர்தம் உயர்பண்புகளை அறியமுடியும். எளிமை என்பதை மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்று தன் மீது வலுக்கட்டாயமாக திணித்துக் கொள்ளாமல் இயல்பாக அமைத்துக் கொண்டவர்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆண்டுக்கு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கட்டிய செல்வகுடியில் வாழ்ந்தவர். தனது நாற்பது வயது வரை மைனர் போன்று சீமானாக வலம் வந்தவர். ஆனால், காங்கிரஸில் இணைத்துக் கொண்டு மாநில அரசியலில் முழுவீச்சில் ஈடுபட தீர்மானித்த போது ஈரோட்டில் தான் வகித்த வந்த நகரமன்ற தலைவர் பதவி உட்பட இருபத்தியொன்பது பதவிகளையும் ஒரேநாளில் ராஜினாமா செய்தார். பகட்டான உடைகளை உதறுகிறார்.
மேம்போக்காக பார்க்கும்போது இது ஏதோ கஞ்சத்தனம் போலத் தோன்றினாலும், பெரியாரின் வாழ்க்கையை ஊன்றிப் படித்தோமானால், அவர்தம் உயர்பண்புகளை அறியமுடியும்.
1925 இல் வகுப்பு வாரி பிரதிநித்துவ தீர்மானம் நிறைவேற்றமுடியவில்லை என்கிற ஆதங்கத்தில் காங்கிரசினை விட்டு வெளியேறியபோதும் அதுகாறும் வாழ்ந்த எளிமை வாழ்க்கையை துறக்கவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் சாதாரணமாக எவ்வித பகட்டுமின்றி கைலியும், மேற்சட்டையும் அணிந்துவந்தார். வெளியூர்களுக்கு செல்லும்போது ஆடம்பரமாக விடுதிகளைத் தேடாமல், கட்சித் தொண்டர்களின் வீடுகளில், தங்கிவிடுவார். வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்லும் போது, பயணியர் விடுதி, நகராட்சி விடுதி போன்றவற்றில் தங்கிவிடுவார். அவைகளில் இடம் கிடக்கவில்லையென்றால் தர்மசாலா (சத்திரங்கள்) போன்றவைகளில் தங்கிவிடுவார்.
ஒருமுறை(1959இல்) இந்தூரில் அப்படி தங்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பிச்சைக்கார்கள் நிரம்பியதாகவும், குப்பைகூளங்கள் குவிந்தும், வயிற்றை குமட்டும் நாற்றமும், இரைச்சலும் கொண்டதாக இருந்தது. பெரியாருடன் பயணித்தவர்கள், இப்படிப்பட்ட இடத்தில் அய்யா எப்படி தங்குவார் என்று தயங்கும் போது, அவர் சிறிதும் கவலைக் கொள்ளாது ஜமுக்காளத்தை விரித்து, படுத்து, குறட்டை ஒலியுடன் அயர்ந்து தூங்கிவிட்டார். எத்தகைய செல்வந்தர், எத்தனை வீடுகளுக்கு அதிபதி, செல்வப்பெருந்தகை, இருந்த போதிலும், எளிமையின் சிகரமாய் திகழ்ந்தார்.
இரயிலில் ஒருமுறை அவர் பயணம் செய்யும் போது, அதே இரயிலில் பயணித்தவர் வ.வே.சு. அய்யர் அவர்கள் பெரியாரின் எளிமையான தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார். அவருக்கு பெரியாரின் குடும்பத்தோடு பலகாலம் பழக்கம் உண்டு. ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த குடும்பம் இப்போது நொடிந்து போய் விட்டதுபோலும் என்று எண்ணி அவரது கைகளைப் பற்றி பல்வேறு தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி மனம் ஒடிந்து விடாதீர்கள் என்று வெகுநேரத்திற்கு ஆறுதல் கூறினார். பெரியார், மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும், அதனை வெளிக்காட்டாமல் பொறுமையாக கேட்டுக்கொண்டார். தான் வசதி வாய்ப்புகளில் எந்த குறைபாடும் அற்றவன் அல்ல, எளிமையை தானே விருப்பத்துடன் தேடிக்கொண்டது என்று கூறி, வா.வே.சு.அய்யருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடாது என்று முடிவு செய்து, எந்த விளக்கமும் அளிக்காமல், அமைதியாக இருந்துவிட்டார்.
அதே நேரத்தில், ஒருமுறை, அலுவலகத்தில், பேரறிஞர் அண்ணாவை வெகுநேரமாக காணவில்லை என்றவுடன், எங்கே என்று வினவிய போது ஹிக்கின்பாதமஸ் புத்தகக்கடைக்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர். அண்ணா, புத்தகம் வாங்க செல்லவில்லை. காரணம் புத்தகம் வாங்க அவரிடம் காசு கிடையாது. அதேநேரத்தில், புதிதாக வந்துள்ள புத்தகங்களையும் படிக்கவேண்டும். அதற்காக, கடையில் வைத்தே முழுப் புத்தகத்தையும் படித்துவிடுவார். இதனை கேள்விப்பட்ட பெரியார், காசு எடுத்து கொடுத்து இரண்டு புத்தகங்கள் வாங்கச் சொன்னார். ஒன்று அண்ணாவிற்கும், இன்னொன்று அலுவலக நூலகத்திற்கும் என்று கூறி வாங்க சொன்னார்.
சிக்கனம் பார்க்கப்பட வேண்டிய இடங்களில் உறுதியாக இருந்த பெரியார், கல்வி, அறிவு சம்பந்தமான விஷயங்களில் மிகவும் தாராளமாகவே இருந்துள்ளார். திருச்சி மையப்பகுதியில் கல்லூரி கட்டவேண்டும், நிதியுதவி அளித்தால் நன்றாக இருக்கும் என்று அரசாங்கம் கேட்டவுடன் 1965இல், சிறிதும் தயக்கமின்றி ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கொடையாக அளித்தார்.
கருமித்தனம் என்பது பணம் தனக்கும் பயனின்றி, பிறருக்கும் பயனற்று நாய் பெற்ற தெங்கம்பழம் போல இருக்கும். அறிவார்ந்தவர்கள், வீணான, ஆடம்பரமான செலவுகளை குறைத்து சிக்கனமாக வாழ்ந்து சமுதாய ஏற்றத்திற்கு அச்செல்வத்தை பயன்படுத்துவர். பெரியாரும் அதைத்தான் செய்தார்.
Read in : English