Read in : English
அமலாக்கத்துறையின் விசாரணையைத் தொடர்ந்து மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அமலாக்கத்துறையின் விசாரணையும் கைது நடவடிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலையும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் குறித்து இன்மதியுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.
அதிமுக ஆட்சியின் போது 2014-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, தனது பி.ஏ.சண்மூகம் மூலம் லஞ்சம் பெற்றதாகவும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தந்ததுடன், லஞ்சம் தந்த சிலருக்கு பணத்தைத் திரும்பி தராமல் ஏமாற்றியதால் அவர் மீது இருவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்த இரு புகார்களின் அடிப்படையில், C.C.No.19 of 2020, C.C.No.25 of 2021 மற்றும் C.C.No.24 of 2021 என மூன்று குற்றப்பத்திரிகைகளை சென்னை குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில் ஊழல் புகாரில் கொடுக்கப்பட்டதாக கூறும் பணம் எந்த வழியில் செலவிடப்பட்டது என்பது குறித்து அறிந்து கொள்ளவே அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி செந்தில் பாலாஜி தப்பித்து விட கூடாது என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அதில் தவறு ஏதும் இல்லை என்றார் ஜெயராமன்.
அமைச்சரை சிறையில் அடைப்பது ஊழல் புகாரில் தீர்வு கிடையாது. வழக்கை நேர்மையாக விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கி தருவதே முக்கியமானது. அது தான் இங்கு கேள்வி குறியாக உள்ளது
அமைச்சர் பதவியில் இருப்பவரை அதிரடியாக கைது செய்வதும், அப்போது நெஞ்சுவலியை காரணம் காட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த ஜெயராமன், அமைச்சரின் கைது நடவடிக்கையும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் திரைப்பட காட்சிகளை கண் முன் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இருப்பினும், உடல்நிலை சரியில்லை என மருத்துவர்களும், அமைச்சர் தரப்பிலும் கூறப்படுவதால், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும். தீவிர சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் உடல் நலம் பெற்றதுடன், மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது என்றார். மேலும், அமைச்சரை சிறையில் அடைப்பது ஊழல் புகாரில் தீர்வு கிடையாது. வழக்கை நேர்மையாக விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கி தருவதே முக்கியமானது. அது தான் இங்கு கேள்வி குறியாக உள்ளது.
மேலும் படிக்க: திமுக முகமாக மாறுவாரா உதயநிதி?
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழலுக்கு பேர் போனதாக இருப்பதால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமா என்பதே கேள்வியாக உள்ளது என்றார்.
ஊழல் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன்? என்பதற்கு பதிலளித்த அவர், முதலில் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லிவிட்டு, அவர் மீதான குற்றச்சாட்டிற்கு தீர்வு கண்ட பின்பு அமைச்சராக இருக்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால், செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் குரல் கொடுப்பது அரசியல் ஆதாயத்தை மட்டுமே காட்டுவதாக உள்ளது என்று விமர்சித்தார்.
செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்த போது ஊழல் புகாரில் அவரை பதவி விலக வலியுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது, அவருக்கு ஆதரவு தெரிவித்து முற்றிலும் முரண்பாடாக உள்ளதே? என்பதற்கு பதிலளித்த அவர், செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுக ஆட்சிக்கு வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என குரல் கொடுத்த திமுக, தற்போது அவருக்கு அமைச்சர் பதவியும், முக்கியமான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை ஒதுக்கீடு செய்து முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஒரு துறையை முறையாக நிர்வகித்து கையாளும் திறன் கொண்ட பிடிஆர் போன்றோரை ஓரம்கட்டிவிட்டு, ஊழல் புகார் உள்ள செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதன் மூலம் ஊழலுக்கு முதலமைச்சரும் துணை போகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி செந்தில் பாலாஜி அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார். இதே காரணத்துக்காக அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு இல்லை என கூறி கடந்து விட முடியாது என்றார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்
பாஜகவின் நெருக்கடியால் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? என்பதற்கு பதிலளித்த ஜெயராமன், செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையில் அரசியல் ஆதாயம் இல்லை என்று கூற முடியாது. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி செந்தில் பாலாஜி அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார். இதே காரணத்துக்காக அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு இல்லை என கூறி கடந்து விட முடியாது என்றார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டால், அவர் வகித்து வந்த பொறுப்புகள் திமுகவில் வேறு யாருக்கு வழங்கப்படலாம்? என்ற கேள்விக்கு, மின்சாரம் மிகப்பெரிய துறை, மது விலக்கு துறையிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும். இதனால், திறன் மிக்க, ஊக்கமும், ஆர்வமும், ஊழல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கு திமுக தலைமையும், முதலமைச்சர் ஸ்டாலினும் வாய்ப்பு வழங்கலாம் என்றார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.
Read in : English