Read in : English
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்து வந்து விட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஊழல் செய்துள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்றவர் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஓ. பன்னீர்செல்வம், “ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என அண்ணாமலையைச் சாடியுள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓ பன்னீர் செல்வத்தையோ எடப்பாடி பழனிசாமியையோ சந்திக்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியலில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து இன்மதியுடன் கலந்துரையாடினார் மூத்த பத்திரிகையாளரும் , அரசியல் விமர்சகருமான ஆர். ரங்கராஜ்.
கேள்வி: அமித்ஷாவின் வருகைக்கு பிறகு அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வருவது மேலும் தீவிரமடைந்துள்ளதே. அது உண்மை தானா?
ஆர். ரங்கராஜ்: அதிமுக, பாஜக கூட்டணி பிரச்சினை தொடர்கதையாக வருவது வாடிக்கையானது. அதிமுக உடன் பாஜகவுக்கு இருக்கும் பிரச்சினை என்ன என்று கூட அவர்கள் வெளிப்படையாக கூறுவதில்லை. ஊழல் குற்றச்சாட்டில் இருமுறை சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருப்பது தவறானது என்று கூற முடியாது. மக்கள் சேவை செய்யும் பதவியில் இருந்து கொண்டு ஊழல் செய்வது சாதாரணமான குற்றம் இல்லை. நீதிமன்றமே குற்றவாளி என அறிவித்த பிறகு அவர் மீது வைக்கப்படும் பொதுவான விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சிப்பது சரியானதா என்று தெரியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதால் 25 இடங்களில் வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 10 இடங்கள் கொடுப்பதே நடக்காதது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள பாஜகவுக்கான முக்கிய பிரச்சினையே தொகுதி பங்கீடு தான்
கேள்வி: கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவின் ஆட்சியில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை விமர்சிப்பது, கட்சியின் கூட்டணி பலத்தை குறைக்குமே?
ஆர். ரங்கராஜ்: கூட்டணி கட்சியில் இருந்தால் தவறு செய்தவர்கள் நிரபராதியாகி விட முடியுமா? 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. மக்களவைத் தேர்தலின் போது தன் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை நீக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு வாய்பாய் மறுப்பு தெரிவித்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா, நாடாளுமன்றத்தில் பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. தற்போது இருப்பது போல் 20 ஆண்டுகளுக்கு முன்பும் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல்கள் இருந்துள்ளன.
மேலும் படிக்க: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
கேள்வி: அண்ணாமலை விமர்சனத்துக்கு பதிலடியாக கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது ஆரோக்கியமான அரசியலா?
ஆர். ரங்கராஜ்: ஓ.பி.எஸ். மட்டும் இல்லாமல் டிடிவி தினகரன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் அண்ணாமலைக்கு காட்டமான பதில்களை கொடுத்துள்ளனர். அண்ணாமலை பேச்சில் தவறு ஏதும் இல்லை. அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்ததாக சாதாரணமாக கூறினார். ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட தாக்குதலாக அண்ணாமலை பேசவில்லை. ஊழலுக்கு பாஜக எதிரானது என்றால், திமுக மற்றும் அதிமுக உடனான ஊழல் கூட்டணியில் பாஜக இருக்காது என்று பகிரங்கமாக அண்ணாமலை அறிவிக்கலாம்.
கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களின் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என அமித்ஷா கூறியதற்கான பின்னணி என்ன? அதிமுகவை தவிர்த்து பாஜக தனித்து போட்டியிட திட்டமா?
ஆர். ரங்கராஜ்: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதால் 25 இடங்களில் வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 10 இடங்கள் கொடுப்பதே நடக்காதது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள பாஜகவுக்கான முக்கிய பிரச்சினையே தொகுதி பங்கீடு தான். தலைமைக்காக அதிமுக, பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் என அனைவரும் ஒன்றுப்பட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் பாஜக தலைமை சார்பாக அமித்ஷா வலியுறுத்துகிறார். ஆனால், சசிகலாவை ஆதரிப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்த்து வருகிறார். இது தான் பிரச்சினைக்கு காரணமாக உள்ளது.
கேள்வி: அமித்ஷாவின் வருகைக்கு பிறகு அதிமுக, பாஜகவின் செயல்பாடுகளும், திமுகவின் அடுத்த கட்ட நகர்வும் எவ்வாறு இருக்கும்?
ஆர். ரங்கராஜ்: ஒரு பக்கம் திமுகவும், மற்றொரு பக்கம் அதிமுகவும் பாஜகவை தாக்கி வருகின்றன. இருபக்கமும் கடுமையான எதிர்ப்பை பாஜக சந்தித்து வருகிறது. பீகார், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்கள் பாஜக சரிவை சந்தித்து வருகிறது. 10 மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இதனால், தென்னிந்தியாவில் காலூன்றினால் தான் தொடர் சரிவை பாஜக ஈடு செய்ய முடியும். இதனால், தமிழகத்தின் மீது பாஜகவின் பார்வை மிகவும் கவனமாக உள்ளது.
கேள்வி: வடமாநிலங்களில் பாஜக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதா?
ஆர். ரங்கராஜ்: 2004ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு, அனுதாபத்தின் அடிப்படையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்தார். அதன்படி முன்கூட்டியே நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இதே தவறை மீண்டும் பாஜக செய்யுமா என்பது கேள்வி தான். முன்கூட்டியே தேர்தலை வைத்தால், பாஜகவுக்கு பின்னடைவை தான் தரும். தேர்தல் ஆணையத்தின் கொள்கைப்படி முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளும் மிக குறைவாகவே உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக 4 அணிகளாகப் பிரிந்துள்ளது. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸை சந்திப்பதை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தவிர்த்து வருகின்றனர்
கேள்வி: தமிழகத்துக்கு வருகை தந்த அமித்ஷா திட்டமிட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்தாரா?
ஆர். ரங்கராஜ்: அதிமுக மீது பிரதமர் மோடியும் அமித்ஷாவும் அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக 4 அணிகளாகப் பிரிந்துள்ளது. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸை சந்திப்பதை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தவிர்த்து வருகின்றனர்.
கேள்வி: தமிழகத்தில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளதா?
ஆர். ரங்கராஜ்: நிர்வாகத்தில் மக்களுக்கு அதிருப்தி இருப்பது என்பது இயல்பு தான். பெண்களுக்கு மட்டும் இலவசப் பஸ் பயண சலுகை, மகளிருக்கான ரூ.1000 உள்ளிட்ட நலத்திட்டங்களால் திமுக நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படலாம்.
கேள்வி: தமிழரை பிரதமர் ஆக்குவோம் என அமித்ஷா கூறியுள்ளார். அப்படி பார்த்தால் தமிழகத்தில் யாரை பிரதமராக கொண்டு வருவார்கள்?
ஆர். ரங்கராஜ்: முதலில் நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் தமிழகத்தில் போட்டியிட்டு எம்பியாக வெற்றிப்பெறட்டும். அப்பறம் பிரதமர் ஆகட்டும். தமிழகத்தை தவிர்த்து வேறொரு இடத்தில் போட்டியிட்டவர்கள் எப்படி பிரதமர் ஆவார்கள். தேர்தலுக்கு முன்பு இவர் தான் பிரதமர் வேட்பாளர் என பகிரங்கமாக பாஜக தலைமை அறிவிக்கட்டும். தமிழர் பிரதமராக வர வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்க முடியாது. ஆனால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தான் பிரதமர் என பாஜக அறிவித்துள்ளது. இப்போது தேர்தலுக்காக தமிழர் பிரதமர் ஆவார் என கூறுவது பாஜகவின் முரண்பாடான அரசியலை காட்டுகிறது என்று உரையாடலை முடித்தார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்.
Read in : English