தென்கிழக்கு ஆசியாவில் இல்லாவிட்டாலும், நாட்டில் முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இது நீண்டகாலமாக நாட்டின் ‘முட்டைத் தலைநகரம்’ என்று போற்றப்படுகிறது. அதன் வளமான கோழிப்பண்ணைத் தொழில் உள்ளூர் மக்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாகவும் இருக்கிறது; மாவட்டத்தின் பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவில் பங்களிப்பும் செய்கிறது.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் நாமக்கல்லின் முட்டை உற்பத்தியை முடக்கிப் போடும் அளவுக்குக் கடுமையானதொரு சவால் எழுந்துள்ளது. அது நீர்ப்பற்றாக்குறை. நாமக்கல் மாவட்டத்தில் ஒருகாலத்தில் செழித்தோங்கிய முட்டைத் தொழிலில்மீது தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுத் தாக்கம் குறித்து இக்கட்டுரை அலசுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தண்ணீர்ப்பஞ்சம் காரணமாக முட்டை உற்பத்தி சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த ஆண்டு உற்பத்தி 15 சதவீதம் குறைந்தது; 2021-இல் 20 சதவீதம், 2022-இல் 22 சதவீதம் குறைந்தது, ஆனால் இந்த ஆண்டு மிக மோசமான நீர் நெருக்கடியை எதிர்கொள்வதால் முட்டை உற்பத்தியை 30 சதவீதம் குறைக்கப்பட வேண்டியதாயிற்று. இதனால் நான்கு மாநிலங்களில் முட்டை விலைகள் 20 சதவீதம் உயர்ந்து விட்டன.
தமிழகத்தின் பல பகுதிகளைப் போலவே நாமக்கல் மாவட்டத்திலும் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. சீரற்ற மழைப்பொழிவு மற்றும் நிலத்தடி நீர்க்குறைவு ஆகிய காரணங்களால் விவசாயிகளால் தங்கள் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்யவும், கால்நடைகளைப் பராமரிக்கவும் முடியவில்லை. இப்பகுதியின் உயிர்நாடியான கோழிப்பண்ணைத் துறையும் நீர்ப்பஞ்சத்தால் நீர்த்துப் போனது போல தோற்றமளிக்கிறது.
நாட்டில் முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. நாட்டின் ‘முட்டைத் தலைநகரம்’ என்றும் போற்றப்படுகிறது
நாமக்கல் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத்தின் தரவுகள்படி, மாவட்டத்தின் முட்டை உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில், 30 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில், நாமக்கல் மாவட்டம் சுமார் 350 கோடி முட்டைகளை உற்பத்தி செய்தது, இது முந்தைய ஆண்டுகளை விட கடுமையான வீழ்ச்சியாகும்.
தண்ணீர்ப் பற்றாக்குறை, கோழிகளின் ஆரோக்கியத்தையும், உற்பத்தித்திறனையும் நேரடியாக பாதித்துள்ளது. ஆதலால் கோழிகளில் முட்டையிடும் திறனும் குறைந்துப் போனது.
”தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, முட்டை உற்பத்தியைக் குறைத்து விட்டோம். 5,000 கோழிகள் கொண்ட ஒரு பண்ணைக்கு குறைந்தது ஒவ்வொரு நாளும் 1,000 லிட்டர் நீர் தேவைப்படும். 130 கோடி கோழிகள் கொண்ட ஒரு நகரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்,” என்று ஒரு சங்க நிர்வாகி கூறுகிறார்.
மேலும் படிக்க: தீராத ஈக்கள் பிரச்சினை: திரிசங்கு நிலையில் கிராம மக்கள்!
“தண்ணீர் பற்றாக்குறை எங்களை விளிம்புக்கு தள்ளிவிட்டது. எங்கள் கோழிகளுக்கு குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆதலால் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது. ஒருநாளைக்கு சராசரியாக 10,000 முட்டைகள் உற்பத்தி செய்தது போய், இப்போது 6,000 முட்டைகளே கிடைக்கின்றன. எங்கள் வாழ்வாதாரத்திற்குக் கிடைத்த கடுமையான அடி இது” என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த கோழிப்பண்ணை விவசாயி கோவிந்தன் நாடார்.
“கோழிகளுக்கு தண்ணீரை அளந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சரியான அளவுக்கு நீர் கிடைக்காததினால், கோழிகளின் ஆரோக்கியம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுகிறது. மேலும் டேங்கர்கள் போன்ற மாற்று நீர் ஆதாரங்களின் விலை அதிகரித்து வருவதால் எங்களுக்குக் கடுமையான நிதிசுமை ஏற்பட்டுள்ளது” என்று மொத்த முட்டை கொள்முதல் வியாபாரி முகமது முஸ்தபா இன்மதியிடம் கூறினார்.
நாமக்கல் முட்டைக்கு வணிக மதிப்பும் விரிவான சந்தையும் உண்டு. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் நாமக்கல் முட்டைக்குச் சந்தைகள் இருக்கின்றன. மேலும் இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒருநாளில் 5-6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன; கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனை ஒட்டி ஒரு நாளைக்கு 8 கோடி வரை முட்டைகள் உற்பத்தியாகின்றன.
நாமக்கல்லில் மட்டும், 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் மூன்றில் ஒருபங்கை நாமக்கல் உற்பத்தி செய்கிறது. ஆந்திரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக நாமக்கல்தான் நாட்டில் இரண்டாவது பெரிய முட்டை உற்பத்தியாளர். ஆந்திரப்பிரதேசம் தினமும், 7 கோடி முதல் 8 கோடி வரை முட்டைகள் உற்பத்தி செய்கின்றது.
நாமக்கல் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத்தின் தரவுகள்படி, மாவட்டத்தின் முட்டை உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில், 30 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை, கோழிகளின் ஆரோக்கியத்தையும், உற்பத்தித்திறனையும் நேரடியாக பாதித்துள்ளது
2022 ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூன் 1-ஆம் தேதி ஒரு முட்டைவிலை ரூ.4.80 ஆகவும், ஜூன் 9-ஆம் தேதி ரூ.5.05 ஆகவும் இருந்தது. இது 2023 ஜூன் 1 அன்று ரூ.5.10-லிருந்து ரூ .5.35 ஆக உயர்ந்தது. பின்னர் ஜூன் 9 அன்று ரூ.5.50-யைத் தொட்டது. இந்த விலைஉயர்வு தமிழகத்துடன் நின்றுவிடவில்லை.
பெங்களூரு, மங்களூர், எர்ணாகுளம், கண்ணூர் போன்ற நகரங்களில் ஒரு முட்டை விலை 5.50 ரூபாயில் இருந்து 5.75 ரூபாயாகவும், 5.90 ரூபாயாகவும், உயர்ந்தது. நாமக்கல்லில் இருந்து முட்டைகளை வரவழைக்கும் பல மாநகரங்களில் டஜன் முட்டைவிலை 75 ரூபாயில் இருந்து, 79-80 ரூபாய் வட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: உடல் எடை குறைப்பு: என்ன செய்ய வேண்டும்?
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தண்ணீர்ப் பிரச்னையை சமாளிக்க, விவசாயிகளும், உள்ளூர் சமூகத்தினரும் கைகோர்த்துள்ளனர். நாமக்கல் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மழைநீரைச் சேகரிப்பது, திறமையான நீர்ப்பாசன நுட்பங்களை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகளிடையே பொறுப்பான நீர்ப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இந்தத் திட்டங்களின் நோக்கங்களாக உள்ளன.
மழைக்காலங்களில் மழைநீரைச் சேகரிக்க சிறிய நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள் கட்டுவது அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இந்த நீர்த்தேக்கங்கள் சேமிப்பு அலகுகளாக செயல்படுகின்றன. பற்றாக்குறை காலங்களில் கோழிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிலையான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்கின்றன.
மேலும், சொட்டுநீர்ப் பாசன முறைகளை செயல்படுத்தி, பயிர்களின் வேர்களுக்கு நேரடியாகத் தண்ணீர் கொண்டு செல்லுமாறு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனால் நீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
தண்ணீர்ப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, நாமக்கல் விவசாயிகளுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீர் சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், நவீன விவசாய முறைகளைப் பின்பற்றவும் நிதி உதவி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு எதிரான போரில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன.
நீர்த்தேக்கங்கள் மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீரை இறைப்பதற்கான நம்பகமான ஆற்றல் ஆதாரத்தைச் சூரியஒளி வழங்குவதால், சூரிய சக்தியால் இயங்கும் பம்புகள் கோழிப்பண்ணை விவசாயிகளிடையே பிரபலமடைந்துள்ளன. இந்தப் பம்புகள் பாரம்பரிய மின்சார ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைப் பெரிதும் குறைக்கின்றன, இதன் விளைவாக செலவு மிச்சமாகிறது; நிலையான ஆற்றல் நுகர்வு ஏற்படுகிறது. சில விவசாயிகள் சென்சார் அடிப்படையிலான நீர்ப்பாசன முறைகளையும் பின்பற்றுகின்றனர், இது மண்ணின் ஈரப்பத அளவைக் கண்காணித்து அதற்கேற்ப நீர் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் படிப்படியாகச் சாதகமான விளைவுகளைத் தருகின்றன. நீர்ச்சேமிப்பு நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம், சில பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியின் சரிவைக் குறைத்திருக்கிறார்கள்.
சொட்டுநீர்ப் பாசன முறையும், சிறிய நீர்த்தேக்கங்களும் கோழிப் பண்ணைகளில் நீர் மேலாண்மையை கணிசமாக மேம்படுத்தியுள்ளன.
சவால்கள் நீடித்தாலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீர்ச்சேமிப்பு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்திய விவசாயிகளின் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு எழுச்சி ஊட்டியிருக்கின்றன.
திறமையான நீர்ப்பயன்பாடு மற்றும் நவீன விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி நிகழ்வுகள், பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டுமுயற்சி முட்டை உற்பத்தித் துறைக்கு புத்துயிர் அளித்ததுள்ளதுடன் விவசாய சமூகத்தினரிடையே மீள்திறனையும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.