Read in : English
எதிர்ப்பு ஊர்வலங்கள், சாலை மறியல்கள், மின்னணு தளங்களில் சுவரொட்டிப் பிரச்சாரங்கள், சட்டப் போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், கவிதைகள், இசை ஆல்பங்கள்… என்று அரிக்கொம்பன் என்ற ஒரு யானைக்காக பல ஆரவாரங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் 35 வயது அரிக்கொம்பன் என்ற ஒரு யானைக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அத்தனை அதகளங்களும் அரங்கேறுகின்றன.
ஆக்ரோஷமான போக்கும், அரிசி, வெல்லத்தின் மீதான அதிகப்படியான ஈர்ப்பும் கொண்ட இந்த யானை ’அரிசியை நேசிக்கும்’ தன்மையினால் உள்ளூர் மக்களால் அரிகொம்பன் என்று அழைக்கப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோரைச் சாகடித்து, 30-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தி, தொலைதூர காட்டுக் குக்கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட கடைகளைத் தாக்கி ஒரு நெடிய வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறது அரிக்கொம்பன். தாக்கப்பட்டவைகளில் பெரும்பாலானவை ரேஷன் கடைகள்.
ஆக்ரோஷமான போக்கும், அரிசி, வெல்லத்தின் மீதான அதிகப்படியான ஈர்ப்பும் கொண்ட இந்த யானை ’அரிசியை நேசிக்கும்’ தன்மையினால் உள்ளூர் மக்களால் அரிகொம்பன் என்று அழைக்கப்படுகிறது
ஏழை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிக்கொம்பன் ஒரு சிம்ம சொப்பனம். நள்ளிரவுகளில் அரிசிக்காகத் திரியும் அந்த யானை அவர்களின் குடிசைகளையும் அழித்தது. இதனால் உள்ளூர் மக்களின் மத்தியில் ஒரு கலவரமான மனநிலை, அமைதியின்மை உருவானது. அதனால், கேரள வனத்துறையின் 150 பேர் கொண்ட குழு ஏப்ரல் 29, 2023 அன்று அந்த விலங்கைப் பிடித்தது, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, பெரியார் புலிகள் காப்பகத்தின் ஆழமான வனப்பகுதியில் யானை இடமாற்றம் செய்யப்பட்டது.
மேகமலை வனவிலங்கு சரணாலயத்தின் சுருளியூர் பகுதியிலிருந்து புறப்பட்டு 40 கி.மீ. தூரத்தை நான்கே நாள்களில் கடந்து இறுதியில் யானை கடந்த மே 4-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேனிக்கு வந்தது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் சின்னக்கனலில்தான் அரிக்கொம்பன் முதன்முதலில் பிடிபட்டது. பின்னர் யானைக்கு ரேடியோ காலர் மாட்டிவிட்டு பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த யானை தமிழக வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்தது. வீடுகள், மளிகைக் கடைகள், ரேஷன் கடைகளில் கடைகளைச் சேதப்படுத்துவதில்
மேலும் படிக்க: ’பிரச்சினை’ யானைகள்: வனப்பகுதியில் விட கேரள விவசாயிகள் எதிர்ப்பு
தனித்திறமை கொண்ட அரிக்கொம்பன் கடைசியாக மே 28-ம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் தாக்குதல்களைத் தொடர்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதற்கிடையில் ஒருநாள் யானையைப் பார்த்ததும் பாதுகாப்பு அதிகாரி பால்ராஜ், ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ் மே 29ம் தேதி இறந்தார்.
ஜூன் 6 அதிகாலை தேனி அருகே பூசனம்பட்டியில் உள்ள வாழைத் தோட்டம் அருகே 75 பேர் கொண்ட தமிழக வனத்துறை குழுவினர் அரிக்கொம்பன் யானையைப் பிடித்தனர். நான்கு கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு அந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதன் உடல்நிலையை ஆய்வு செய்தது. கால்களைக் கட்டி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட யானை ஆம்புலன்ஸில் ஏற்றி விடப்பட்ட அரிக்கொம்பன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது.
கம்பம் நகருக்குள் பொதுமக்களிடையே யானை பீதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் கடந்த 27-ஆம் தேதி ’அரிக்கொம்பன் மிஷன்’ தொடங்கப்பட்டது. பொதுமக்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் விளைவாகப் போர்க்கால அடிப்படையில் அந்த யானையை விரைவாகப் பிடித்தனர்.
இந்த முறை அரிக்கொம்பன் தனது சொந்த மண்ணில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டது யானை ஆர்வலர்களின் கவலையை அதிகரித்தது.
இருப்பினும் அந்த யானை ஆம்புலன்ஸுக்கு வெளியே காயமடைந்த தும்பிக்கையுடன் கட்டப்பட்டு வைக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரிக்கொம்பன் ஆர்வலர்களைக் கொந்தளிக்க வைத்தது. முகநூலில் அரிக்கொம்பனின் சோகமான புகைப்படங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வைரலாகின. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் நீர் வளம் மற்றும் குளிர்ந்த சூழலிலிருந்து யானை இப்போது தண்ணீர் இல்லாத வறண்ட காட்டுப் பகுதிக்கு தள்ளப்பட்டதாகச் சில சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், நீர்வளமிக்க மணிமுத்தாறு அணை வளாகத்தில் இருந்து யானை தண்ணீர் அருந்துவதைக் காட்டும் காணொளியை முகநூலில் பகிர்ந்து தமிழக வனத்துறை பதிலடி கொடுத்தது.
ஏகப்பட்ட ஊடக வெளிச்சத்தால் அரிகொம்பன் இப்போது ’சூப்பர் ஸ்டார்’ ஆகிவிட்டது. அரிகொம்பன் ஆதரவாளர்கள் ஒருபக்கம்; எதிர்ப்பாளர்கள் மறுபக்கம் என்று சமூக வலைத்தளங்கள் அதகளப்படுகின்றன. யானையைப் புகழ்ந்து தயாரிக்கப்பட்ட இசைக் காணொளி ஆல்பம் ஒன்று வெளிவரவிருக்கிறது. ’அரிக்கொம்பன்: காலம் தக்க பதில் சொல்லும்’ என்ற தலைப்பில் அந்த வீடியோவின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இசையமைப்பாளர் காவலம் ஸ்ரீகுமார் இசையமைத்து பாடியுள்ள இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் வெளியிட்டனர். கொல்லத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் பிரமோத் கண்ணன் பிள்ளை சில வாரங்களுக்கு முன்பு இந்தப் பாடலை எழுதினார்.
இரு அணிகளைச் சேர்ந்த பல குழுக்கள் பதிவேற்றிய காணொளிகள் புகைப்படங்கள், சுவரொட்டிகள், கவிதைகளால் முகநூல் நிரம்பி வழிகிறது. ’அரிக்கொம்பன் ரசிகர் மன்றம்’, ’அரிக்கொம்பன் ரசிகர்கள்’, ‘அரிக்கொம்பன் காப்போம்’, ‘அரிக்கொம்பனுக்கு நீதி’ போன்றவை அந்த யானைக்கு ஆதரவான முகநூல் பக்கங்களில் சில.
கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அணைக்கரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து, அரிக்கொம்பன் ரசிகர் மன்றத்தை உருவாக்கினர். கண்ணூரில் தனியார் பேருந்திற்கு அரிக்கொம்பன் பெயர் சூட்டப்பட்டு வாகனத்தின் முன்பக்கம் யானையின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சின்னக்கனல் அருகே தேயிலைத் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த அரிக்கொம்பன் புகைப்படம் ஒன்று வைரலானது.
அரிக்கொம்பன் பிடிபட்டு இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடந்த சில மாதங்களாக சட்டப் பிரச்சினைகளை உருவாக்கி விட்டது… ஆனால் தன்னால் மனித உலகில் ஏற்படும் சச்சரவுகளையும், சர்ச்சைகளையும் அறியாத அரிக்கொம்பன் புதிய புவியியல் மண்டலத்தில் தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கிறது
அரிக்கொம்பன் பிடிபட்டு இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடந்த சில மாதங்களாக சட்டப் பிரச்சினைகளை உருவாக்கி விட்டது. யானையைப் பிடிக்க கேரள வனத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் கேரள உயர் நீதிமன்றம் மார்ச் 29 அன்று தலையிட்டு, அதைப் பிடிக்கத் தடை விதித்தது. நீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி கோபிநாத் பி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், யானையைப் பிடிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

சில வாரங்களுக்கு முன்பு சின்னக்கனல் அருகே தேயிலைத் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த அரிக்கொம்பன் புகைப்படம் ஒன்று வைரலானது.
யானையைப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் அரசு முயற்சிக்கு எதிராக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவின் தொடர்ச்சியாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யானை மனித வாழ்விடங்களுக்குள் வழிதவறிச் செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கக் கேரள உயர் நீதிமன்றம் நிபுணர்கள் குழுவை அமைத்தது.
ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தனது பரிந்துரைகளை ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகு கேரள வனத்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் ஸ்தம்பித்தன. பயிற்சி பெற்ற கும்கி யானைகள் மற்றும் வனத்துறையினரைப் பயன்படுத்தி அரிக்கொம்பன் மனித வாழ்விடங்களுக்குள் செல்வதைத் தடுக்குமாறு வனத்துறை ஊழியர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. யானை மேலும் சிக்கல்களை உருவாக்கினால், எதிர்காலத்தில் அதன் இயக்கங்களைக் கண்காணிக்க, ரேடியோ காலரிங் பொருத்துவதற்காக தற்காலிகமாக அதனை மயக்கநிலைக்குக் கொண்டுபோகலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.
மேலும் படிக்க: காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!
இந்த உத்தரவால் யானைப் பிரியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், விவசாய ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் சின்னக்கானலில் உள்ள வனத்துறை அலுவலகத்தை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 12-மணி நேர முழுக்கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தின் பைசன் பள்ளத்தாக்கு, சேனாபதி மற்றும் ராஜாக்காடு ஆகிய மூன்று பஞ்சாயத்துகள் கடையடைப்பில் பங்கேற்காதபோதிலும், பள்ளிவாசல் பகுதியில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை (என்எச் 85) தடுத்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் சேர்ந்துகொண்ட கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், ”யானை அடிக்கடி சுற்றித் திரியும் பகுதிகளில் வாழ்ந்து பாருங்கள்,” என்று நீதிபதிகளுக்கு சவால் விடுத்தார்.
இதற்கிடையே, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், யானையை இடமாற்றம் செய்ய தமிழக வனத்துறைக்கு ஜூன் 6-ம் தேதி ஒருநாள் தடை விதித்து தமிழக உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டன் சோலை தேசிய பூங்காவை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு வன அமர்வுக்கு மாற்ற நீதிமன்றம் முடிவு செய்ததால், ஒருநாள் முழுவதும் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த அரிக்கொம்பனை விடுவிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நீதிமன்றம் மூலம் விளம்பரம் தேட முயன்றதற்காக மனுதாரரை நீதிமன்றம் கண்டித்தது. பிரச்சினைக்குரிய யானையை கேரளாவுக்குத் திருப்பி அனுப்பக் கோரி மதுரையைச் சேர்ந்த கோபால் என்பவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவையும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிசீலித்தது.
ஆனால் தன்னால் மனித உலகில் ஏற்படும் சச்சரவுகளையும், சர்ச்சைகளையும் அறியாத அரிக்கொம்பன் புதிய புவியியல் மண்டலத்தில் தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கிறது. புல்வெளிகள், தீவன மண்டலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் பற்றி அறிந்து கொள்ளும் புதிய பணியில் அது ஈடுபட்டுள்ளது.
அரிக்கொம்பனின் நண்பர்களும் எதிரிகளும் மனித வாழ்விடங்களில் அரிக்கொம்பனின் அடுத்த நகர்வுக்காகக் காத்திருக்கின்றனர், அதே நேரத்தில் யானை மனித குடியிருப்புகளிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினையை உருவாக்காது என்று வனத்துறையினர் நம்புகிறார்கள்.
Read in : English