Read in : English
செயின்ட் ஜார்ஜ் கோட்டை சிம்மாசனத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்து அதிர்ஷ்டத்தின் ஏற்ற இறக்கங்களைக் காணுகின்ற சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மூன்று நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. விழாவுக்காகப் பூங்காவைத் தயார்ப்படுத்தும் முகாந்திரத்தில் கிரானைட் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அழகுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அடையாறு காந்தி நகரில் உள்ள புதிய பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நுழைவு மற்றும் புகைப்படக் கட்டணங்களை வசூலிக்கும் பகட்டுக்காட்சிப் பூங்காக்கள் எழுப்பும் கேள்வி இதுதான்: மக்கள்தொகை அதிகம் கொண்ட பரந்து விரிந்த ஒரு மாநகரத்தில் பசுமைப் பூங்காப் பொதுவெளிகளை அதிக செலவில் மட்டும்தான் உருவாக்க முடியுமா?
நகர்ப்புற பசுமை வெளிகள் இல்லாத ஒரு பெரிய மக்கள்தொகைக்கு, குறிப்பாக நடப்பதற்குப் பாதுகாப்பான இலவச பொதுவெளிகளை நாடுகின்ற 60 வயதிற்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு, சென்னை போன்ற அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் வசதிகள் பண்ணித்தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாகும்.
சென்னையில் பூங்காக்கள் திட்டம் தடுமாறுகிறது. காரணம் அனைத்து மண்டலங்களிலும் முழுமையாக அணுகக்கூடிய வசதிகளை வழங்க மாநகராட்சியால் முடியவில்லை. மோசமான சாலைகளால் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் அந்தப் பூங்காக்களைப் பயன்படுத்த இயலவில்லை
பெருநகர சென்னை மாநகராட்சி பத்து பூங்காக்களை சீரமைக்கும் திட்டத்துடன் மே மாதம் கோடைக்காலத்தை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களில் பெய்யும் மழையை, வறட்சி ஆண்டிலும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில், மழை நீரை ஈர்த்து சேமிக்கும் பத்து பூங்காக்களை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆனால், சென்னையில் பூங்காக்கள் திட்டம் தடுமாறுகிறது. காரணம் அனைத்து மண்டலங்களிலும் முழுமையாக அணுகக்கூடிய வசதிகளை வழங்க மாநகராட்சியால் முடியவில்லை. மோசமான சாலைகளால் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் அந்தப் பூங்காக்களைப் பயன்படுத்த இயலவில்லை.
நகர்ப்புற பசுமை வெளிகளைத் தேடும் வயதானவர்களுக்குச் சேவை செய்ய சென்னையில் (மற்றும் டெல்லியில்) பொருத்தமான பூங்காக்கள் மற்றும் நடைப்பயிற்சி உள்கட்டமைப்புகள் இல்லை என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தீப்தி அட்லாகா மற்றும் அவரது சகாக்கள் ஆய்வை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை 2021ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதார சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டனர்.
மேலும் படிக்க: வெப்ப அலை செயல் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்
அந்த ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னவர்கள் சென்னையில் கட்டமைக்கப்பட்ட சூழல் உண்மையில் மூத்த குடிமக்களை தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள பசுமைப் பொதுவெளிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது என்றார்கள். இவ்வளவுக்கும் பசுமைப் பொதுவெளிகள் (யுஜிஎஸ்) காற்று மற்றும் ஒலி மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன; மேலும் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும் இருக்கின்றன.
அட்லாகா மற்றும் சகாக்கள் எழுதுகிறார்கள்: ”பசுமைப் பொதுவெளிகளின் தரம் என்பது, சுற்றுப்புறத் திட்டமிடல், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் பாதசாரி உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு அது ஒருங்கிணைவதைப் பொருத்தது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா ஆகியவை அணுகக்கூடிய பசுமைப் பொதுவெளிகளை ’ஆரோக்கியமான முதுமைக்கு’ முக்கியமானவை என்று அடையாளம் கண்டுள்ளன. ’ஆரோக்கியமான முதுமை’ என்ற சொற்றொடர் மூத்தவர்களின் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், பொதுவாக சமூக ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. பசுமை வெளிகள், நடைப்பயிற்சி மூலம் சாத்தியமான அதிக சமூகத் தொடர்புகள் மூலம் இந்த ஆரோக்கியம் உருவாகும். .
இன்று நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கட்டடக்கலைக்கு முக்கியமான காரணி ‘இருக்கும் இடத்தில் முதிர்வு’ என்றவொரு சமூகப் போக்கு. ஏனெனில் வயதான குடிமக்களில் கணிசமான பேர் மூத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய புறநகர் சமூகங்கள் மத்தியில் வாழ்வதை விட தங்கள் சொந்த வீடுகளிலே வசிக்க விரும்புகின்றனர்.
இந்த இரண்டு அணுகுமுறைகளுக்காக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), ஜிசிசி போன்ற நகர்ப்புறத் திட்டமிடல் முகமைகள், புறநகர் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் மற்றும் பெருநகர சென்னையில் உள்ள டஜன் நகராட்சிகள், பேரூராட்சிகள் தங்கள் திட்டங்களில் பசுமைப் பொதுவெளிகளை இணைக்க வேண்டும். பாதுகாப்பான பொது போக்குவரத்துடன் இந்தப் பசுமை வெளிகளுக்கு நடந்து செல்லக்கூடிய வசதியும் பசுமை வெளிகளின் பயன்பாட்டை அளவீடு செய்வதற்குச் சேர்க்கப்பட்ட ஒரு முக்கிய காரணி.
இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்த சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் (வயது 66) கூறுகிறார்: “இங்கே நடைபாதைகள் மக்கள் நடந்து செல்லக்கூடிய இடங்களாக இல்லை. அவை கார்களை நிறுத்தும் இடங்களாக மாறிவிட்டன. பூங்கா இல்லாமல், நான் எங்கு பாதுகாப்பாக நடந்து உடற்பயிற்சிக்குச் செல்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் தெருக்களில் நடக்கவே முடியாது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள், ஆட்டோக்கள் நிரம்பி வழிகின்றன, எங்களுக்கு இடமில்லை”
அதிகாரப்பூர்வமான பூங்காத் திட்டங்கள் அதிகம் செலவு வைக்கக் கூடியவை. தேவையில்லாமல் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் அவை. .அவற்றிற்குப் பதிலாக மக்களே சமூக அளவில் அதிகமான பசுமை வெளிகளை உருவாக்க முடியும்.
அதிகாரப்பூர்வமான பூங்காத் திட்டங்கள் அதிகம் செலவு வைக்கக் கூடியவை. தேவையில்லாமல் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் அவை. அவற்றிற்குப் பதிலாக மக்களே சமூக அளவில் அதிகமான பசுமை வெளிகளை உருவாக்க முடியும்
அந்த ஆராய்ச்சிக் கட்டுரை பின்வருமாறு சொல்கிறது: ”சமூக பொறுப்புகளை சொத்துக்களாக மாற்ற முடியுமென்பதை நிரூபித்தது. இரு நகரங்களிலும் (டெல்லி மற்றும் சென்னை), அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் சமூகத்தினர் உதவியுடன் சமூகத் தோட்டங்கள் நிறுவப்பட்டன. நகர்ப்புற பசுமையாக்கத்திற்கும் சமூகக் கட்டுமானத்திற்கும் இடையிலான உறவுகளை சமூகத் தோட்டங்களின் சமூக இயக்கவியல் பற்றிய ஆய்வுகள் விளக்கியுள்ளன.
சமூகத் தோட்டங்கள் போன்ற அடிமட்ட முன்முயற்சிகள் பாழடைந்த காலி இடங்களை பயன்படுத்தக்கூடிய பசுமைப் பொதுவெளிகளாக மாற்ற முடியும். இந்த பசுமைப் பொதுவெளிகளை உருவாக்குவதன் மூலம் சமூக உறவுகளை வலுப்படுத்தவும், சமூக உணர்வை உருவாக்கவும் முடியும்.”
மேலும் படிக்க: பெருநகரங்களில் காங்கிரீட் காடுகளையும் வண்ணமயமாக்கும் வண்ணத்துப்பூச்சிகள்!
வீடுகளிலிருந்தும் உணவகங்களிலிருந்தும் உருவாகும் பசுமைக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதற்கான முயற்சிகளுக்குத் தடங்கல்கள் இருக்கக்கூடாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தப் பத்திரிகையாளர் கொடுத்த விண்ணப்பத்திற்கு, பசுமைக் கழிவுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே 2022-ஆம் ஆண்டில் 5,443 டன் உரமாக மாற்றப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி சொன்னது. ஆனால் குறைந்தபட்சம் மக்கும் கழிவு உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 1,600 டன். குடிமை அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட மற்றும் அந்தந்த உள்ளூர் சமூகங்களால் பராமரிக்கப்படும் பல நகர்ப்புற பசுமை வெளிகளை மேலும் பசுமையாக்க உதவும். .
இந்த ஆய்வின் முடிவுகள், பசுமைப் பொதுவெளிகளிலிருந்து அனைவரும் பயனடைய முடியும் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, ஆனால் அவை சமூகத்தில் பின்தங்கிய அல்லது பின்தங்கிய சமூகங்களில் வாழும் வயதானவர்களுக்குக் குறிப்பாகப் பொருத்தமானதாக இருக்கும். பெரும்பாலும் அவர்களால் உயர்தர பூங்காக்கள் மற்றும் பசுமையான வெளிகளுக்குச் செல்ல முடிவதில்லை. அவர்களுக்காக நுழைவுக் கட்டணமில்லாமல் பயன்படுத்தக்கூடிய அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பான பூங்காக்கள் உருவாக வேண்டும்.
ஒரு சில பகட்டுக் காட்சிப் பூங்காக்களைத் தாண்டி, சிறிய அளவிலான பசுமைத் தோட்டங்கள் முதல் பரந்து விரிந்த பூங்காக்கள் வரை உருவாக்கும் வகையில் கொள்கை இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. செம்மொழி பூங்கா, அடையாறு பல்லுயிர்ப் பூங்கா மற்றும் பிற புதிய பூங்காக்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், உள்ளூர் நடைப்பயிற்சிச் சூழல் மற்றும் அருகிலுள்ள பசுமைப் பகுதிகள் ஆகியவை மக்களுக்குப் பயனளிக்கக் கூடியவை.
Read in : English