Read in : English

தற்போது வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் ஏற்கனவே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் மெதுவாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தீவிர வானிலை காரணமாக ஏற்படும் அமைப்பின் விளைவுகளைச் சந்திக்க அனைத்து கிழக்குக் கடலோர மாநிலங்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளன.

இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை வருவதற்கு முன்பாக இந்த வானிலை உருவாகியுள்ளது. இது இந்தியாவில் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் வருடாந்திரச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். வானிலையின் போக்கு தெளிவாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ மழையும், விருதுநகர் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் மற்ற இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

ஓராண்டில் இந்திய தீபகற்பத்தை இரண்டு உச்ச வெப்பமண்டல சூறாவளிகள், பருவமழைக்கு முன்பாகவும் பின்பாகவும் தாக்குகின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன

வானிலை கண்காணிப்பு இணையத்தளமான விண்டி வெளியிட்ட ஒரு கணிப்பில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தற்போதைய வானிலை, புயலாக தீவிரமடைந்து வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகரும் என்றும், வார நடுப்பகுதியில் அந்தமான் தீவுகளைத் தாக்கும் என்றும், அதன் பிறகு பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி வடகிழக்கு திசையில் திரும்பும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த சில நாட்களுக்கு மிகவும் துல்லியமான கணிப்புகள் தேவைப்படும். ஓராண்டில் இந்திய தீபகற்பத்தை இரண்டு உச்ச வெப்பமண்டல சூறாவளிகள், பருவமழைக்கு முன்பாகவும் பின்பாகவும் தாக்குகின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மேலும் படிக்க: மாண்டஸ் புயலுக்குப் பிறகும் மழை அபாயம்!

பருவமழைக்கு முந்தைய (ஏப்ரல்-மே) காலகட்டம் சராசரியாக 11 வெப்பமண்டல சூறாவளி நாட்களைக் கொண்டிருந்தாலும், பருவமழைக்கு பிந்தைய (அக்டோபர்-டிசம்பர்) உச்ச காலகட்டம் 18 நாட்களைக் கொண்டுள்ளது. உலகளவில் ஏற்படும் சூறாவளிகளில் வங்காள விரிகுடாவில் மட்டும் 5 சதவீதம் நிகழ்கின்றன. என்றாலும், அதன் விளிம்பு நாடுகளில் 80 சதவீத மரணங்கள் ஏற்படுகின்றன என்று தரவுகள் சொல்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் அரபிக் கடல் அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் வங்காள விரிகுடாவில் சூறாவளிகள் அடிக்கடி நிகழ்வது குறைந்துள்ளது.

உலக வானிலை அமைப்புக்கு யேமன் முன்மொழிந்தபடி மோக்கா என்று பெயரிடப்பட்டிருக்கும், தெற்கு வங்காள விரிகுடாவில் தற்போது உருவாகியிருக்கும் புதிய புயல் செவ்வாய்க்கிழமை 80 கடல் மைல் (148 கி.மீ) வேகத்தில் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இது தற்போது மிகவும் கடுமையான சூறாவளிப் புயல் (விஎஸ்சிஎஸ்) பிரிவில் உள்ளது. ஆதலால், இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவின் பெரும்பகுதி `மீன்பிடிக்கக்கூடாத’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Photo credit: IMD)

செவ்வாய்க்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு கேரளா மற்றும் மாஹேவில் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர கர்நாடகாவிலும், வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும், ஆங்காங்கே கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆரம்ப வானிலை அமைப்புகளின் செயல்திறன் எப்படியிருக்கும் என்பது எதிர்காலத்திற்கு சுவாரஸ்யமூட்டும் தகவலாகும். ஆராய்ச்சியாளர்கள் சிராக் தாரா மற்றும் ராக்ஸி மேத்யூ கோல் ஆகியோர் ’தி இந்தியா ஃபோரம்’ இதழில் எழுதிய கட்டுரையில், சமீபத்தில் ஏற்பட்ட ஓகி, ஃபானி, ஆம்ஃபன் மற்றும் டெளக்தே போன்ற புயல்கள் ஒரே நாளில் கூட வேகமாக வலுவடைந்து, ‘மிகவும் கடுமையான’ நிலைக்குத் தீவிரமடைந்து, அதிக சேதத்தை ஏற்படுத்தின என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடல்கள் வெப்பமாக இருக்கும்போது வானிலை விரைவாக தீவிரமடைவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதால், உலகளாவிய வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் பங்கு இங்கு ஆராயப்படுகிறது. இங்கும், புயலின் தீவிரத்தில் வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது; அதிக வெப்பநிலை அதிக தீவிரத்துடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், எல் நீனோ நிலத்திலும் கடலிலும் வெப்பநிலையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உன்னிப்பாக கவனிக்கப்படும். காலநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் மற்றும் அவரது சகாக்கள் 2024-ஆம் ஆண்டு எல் நினோவின் தாக்கத்தினால் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கலாம் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளனர்.

பல தசாப்தங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வட்டவடிவமான சூறாவளிப் பாதுகாப்பிடங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இலங்கைத் தீவில் இனக் கலவரம் வெடித்தபோது, அவை அகதிகள் முகாம்களாக மாற்றப்பட்டன

மாறிவரும் தட்பவெப்பநிலை, வானிலை நிகழ்வுகளைத் தீவிரப்படுத்துகின்றன. ஓராண்டில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கையையும் அவை அதிகரிக்கின்றன. எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் வசிக்கும் கடலோரச் சமூகங்கள் இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

பல தசாப்தங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வட்டவடிவமான சூறாவளிப் பாதுகாப்பிடங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இலங்கைத் தீவில் இனக் கலவரம் வெடித்தபோது, அவை அகதிகள் முகாம்களாக மாற்றப்பட்டன.

இன்று, உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்ற உதவும் ஆரம்பகட்ட எச்சரிக்கைகளை வழங்குவதற்கான சிறந்த அறிவியல் மாதிரிக் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புயல் தீவிரம் மற்றும் இயக்கத்திற்கும் கடல் வெப்பநிலைக்கும் உள்ள சம்பந்தம் பற்றிய அறிவு இப்போதுதான் பெரிதாக உருவாகிக் கொண்டு வருகிறது என்றாலும், அடிப்படைகள் இன்று நன்கு புரிந்து கொள்ளப்படுகின்றன என்று பேராசிரியர் கோல் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் படிக்க: ஆண்டுமுழுவதும் சவால்தரும் அதிசக்திப் புயல்கள்

இந்த நிச்சயமற்ற சூழலில், கடனை ஒழுங்காகக் கட்டமுடியாதவர்களுக்கும் கடன் ஏற்பாடு செய்து அவர்களைக் கடற்கரையோரங்களில் அதிக விலைக்கு நிலங்களை வாங்க வைக்கும் ரியல் எஸ்டேட்டின் சந்தை சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி கடற்கரைகளில் வீடுகட்டி வசிக்கும் மக்கள்தான் சூறாவளிகள் தாக்கும்போது முதலில் பாதிக்கப்படுவார்கள்.

சுற்றுச்சூழல் என்னும் ஒட்டுமொத்த கட்டமைப்புக்குள் பருவநிலை மாற்றத்திற்காக தனியான துறையை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. எதிர்காலத்தில் ஏற்படும் புயல் பாதிப்புகள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும். மீள்திறனை அதிகரிப்பதையும், அபாயத்தை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவதையும் அரசு இலக்காகக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival