Read in : English
இந்தப் பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கண்ணில் விரலை ஆட்டும் தலைமை அதிகாரி மட்டுமல்ல; திராவிடச் சித்தாந்தத்திற்கும் திமுக அரசிற்கும் மாற்றாக தேசிய வாதத்தைப் பெரிதாக ஊதி ஊதி முன்னெடுக்க வந்தவரும் கூட.
அரசுப் பணிக்குத் தடை ஏற்படுத்தும் கடுமையான வாடிக்கையாளர் மட்டுமல்ல அவர்; பதவி தந்த வசதியினால் திராவிட சித்தாந்தத்தைப் பொதுவெளியில் உரக்கப் போட்டுடைக்கும் சித்தாந்த எதிரியும் கூட.
இந்தக் கருத்தை மீண்டும் நிரூபிக்கும் விதமாகவும் அவரது வழமையான இயல்பை வடிகட்டி எடுத்தது போலவும் அமைந்திருக்கிறது அவரது சமீபத்துத் தாக்குதல்.
ஆளுநர் ஒரு மாநில அரசின் அடையாள குறியீட்டுத் தலைவர். இந்த நிலைமையில் அவரே அந்த அரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது அவருக்குரிய வேலை அல்ல. ஆனால் அந்த வேலையைச் செய்வதற்கான பாத்திரத்தைத்தான் அவருக்கு ஒன்றிய அரசும், பாஜகவும் வரையறுத்துத் தந்திருக்கிறது என்பது நிதர்சனம்
சம்பிரதாயமாக தான்தலைமை தாங்கும் ஒரு மாநில அரசிற்கு எதிரான தனது பகையுணர்வால் ஆளுநர் ரவி அரசமைப்புச் சட்ட வரம்புகளை நிச்சயமாகத் தாண்டித்தான் போய்க் கொண்டிருக்கிறார். ஆளுநர் ஒரு மாநில அரசின் அடையாள குறியீட்டுத் தலைவர். இந்த நிலைமையில் அவரே அந்த அரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது அவருக்குரிய வேலை அல்ல.
ஆனால் அந்த வேலையைச் செய்வதற்கான பாத்திரத்தைத்தான் அவருக்கு ஒன்றிய அரசும், பாஜகவும் வரையறுத்துத் தந்திருக்கிறது என்பது நிதர்சனம். ஒவ்வொரு சர்ச்சைக்குப் பின்னரும் அவர் டில்லிக்குச் செல்கிறார்; உயர்மட்டத் தலைமையைச் சந்திக்கிறார்; பின்பு விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறார்.
மேலும் படிக்க: தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?
இதுவரை தமிழ்நாட்டில் ஆழங்காற்பட்டு ஆட்சி செய்துவரும் திராவிடச் சித்தாந்தத்தைப் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் அளவில் எவரும் கேள்வி கேட்டதில்லை. பாஜகவின் மரபணுக்கூறுகள் சற்று திரிந்து மறைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தேசிய வாதத்தை முன்னிறுத்தி பேசியிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் திராவிடச் சித்தாந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்திருக்கின்றன. ஆனால் எண்ணிக்கைப் பலமற்ற இந்தக் கட்சிகளின் விமர்சனம் திராவிடச் சித்தாந்தத்திற்கு விசனமும் தந்ததில்லை; விரயமும் தந்ததில்லை. வீரியமான விமர்சனம் செய்வதற்கு பாஜகவில் யாருமில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புகிறார் ஆளுநர் ரவி. ஆனால் அதுவல்ல, அரசமைப்புச் சட்டம் அவருக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் பாத்திரம்.
இப்போது தேசம் முழுவதும் கொடிகட்டிப் பறக்கிறது பாஜக தேரோட்டம். பெரும்பாலும் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தேசிய நீரோடைக்குப் புறத்தே நின்ற வடகிழக்குப் பகுதியில் கூட பாஜக தேர்தல் வெற்றிகள் மூலம் உலா வந்து கொண்டிருக்கிறது. ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கட்சி… இதுதான் இந்தியாவிற்கான பாதையாகத் தோன்றுகிறது.
திராவிடம், திராவிடச் சித்தாந்தம் என்பதெல்லாம் இப்போது வெறும் சரித்திரம் மட்டுமே என்று சொல்லத் துணிந்து விட்டார்கள் சங்கிகள். அவர்களைப் பொறுத்தவரை, இதெல்லாம் இன்றைய இந்தியாவுக்குப் பொருந்தாத வினோதமான, காலங்கடந்த மலரும் நினைவுகள் மட்டுமே.
ஒரு தேசமாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருந்த ஆரம்பக் காலங்களில், மற்ற பகுதிகளைப் போலவே இன்றைய தமிழ்நாடும் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆதலால் திராவிடவியலின் ஆதிமூலம் ஆங்கிலேயர்க்கு சார்பான கட்டமைப்பில் உருவானதுதான் என்பதை திராவிடச் சித்தாந்தவாதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய காலகட்டம் இது என்று சங்கிகள் சொல்கிறார்கள்.
தேர்தல்களில் திமுக வெற்றி பெறலாம்; அல்லது தோல்வி அடையலாம். ஆனால் ஒரு நூற்றாண்டுகாலச் சிந்தனைகளால், பேச்சால், எழுத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் திராவிட சித்தாந்தத்தை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது
கடந்த காலத்தில் சிபிஎம் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி, விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் (ஆரிய மாயையா? திராவிட மாயையா?) என்ற தனது புத்தகத்தில் மார்க்சிச ஆயுதத்தால் திராவிடச் சித்தாந்தத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மார்க்ஸ், லெனின் முதல் க்ராம்ஷி, அல்தூசர் வரையிலான ஆயிரக்கணக்கான சிந்தனாவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் (மார்க்சிசம்) சித்தாந்தத்தின் முன்பு திராவிடக் கொள்கையால் நிலைத்து நிற்க முடியாது.
உதாரணமாக, ஆலைத் தொழிலாளர் பிரச்சினைகளில் பிராம்மண பூர்ஷ்வாக்களுக்கு திமுக அளித்த ஆதரவை ராமமூர்த்தி கடுமையாக விமர்சிக்கிறார். சாதி அரசியல் திமுக என்னும் பூர்ஷ்வா கட்சிக்கும் வெறும் முகமூடிதான். ஆனாலும் திராவிடக் கொள்கையின் வசீகரமும் கீர்த்தியும் வற்றிப் போகவில்லை. இன்னும் கோலோச்சுகின்றன.
திமுக தேர்தல்களில் திமுக வெற்றி பெறலாம்; அல்லது தோல்வி அடையலாம். ஆனால் ஒரு நூற்றாண்டுகாலச் சிந்தனைகளால், பேச்சால், எழுத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் திராவிட சித்தாந்தத்தை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது.
திராவிட நலத்திட்டம் என்பது இங்கே அரசியலில் இணைபிரியாத வழக்காறாகிவிட்டது; வரலாறாகி விட்டது.
நீதிக்கட்சியைத் தாண்டி ஜனநாயகமயமாக்கலை திமுக பிரதிநிதித்துவப்படுத்தியது. அஇஅதிமுக அதிகாரத்தை அடித்தட்டு மக்கள் வரைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. காங்கிரஸ் உள்ளூர் பெரிய மனிதர்களின் கட்சியாக இருந்தது; இருக்கிறது. பாஜக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நிலையான, பலமான சமூக அஸ்திவாரம் இல்லாமல் அது போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பரந்துபட்ட திராவிடக் கட்டமைப்பிற்குள் வரமுடியாத விசயம் என்று எதுவுமில்லை, இதுவரையிலும்.
மேலும் படிக்க: ஆளுநர் தேவையா?: அனல் கிளப்பிய தீர்ப்பு!
மொழிப்பற்று, சாதி அடிப்படையிலான அதிகாரம், மொழி அடையாளம், பிராமண எதிர்ப்புணர்வு, அதன் விளைவுகள் ஆகியவையே தமிழ்நாட்டு அரசியல் உரைகற்கள். எறும்பு ஊர ஊர கல் தேயும் என்பது போல மெல்ல மெல்ல எடுக்கும் முயற்சிகளாலும், பரந்துபட்ட பரப்புரைகளாலும் பாஜக தமிழ்நாட்டில் வளரலாம். காலப்போக்கில் திராவிடக்கட்சி நம்பகத்தன்மையை இழந்து விடலாம். மாறிக்கொண்டே இருக்கும் வாக்காளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான கருத்துக்களும் திட்டங்களும் அவர்களிடம் இல்லாமல் போய்விடலாம்.
ஆனால் அப்போது கூட ஆளுநர் ரவி போன்றவர்களால் பாஜகவுக்குப் பிரயோஜனம் இல்லை. ஒருவேளை பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வரலாம். ஆனால் அந்த வளர்ச்சி ஆளுநர் ரவி தூக்கிப் பிடிக்கும் பாஜக வகையறா தேசியவாதத்தின் முதுகில் செய்யும் சவாரியால் சாத்தியமாகாது.
Read in : English