Read in : English
அரிசி தேடித் திரிந்த இரண்டு யானைகள் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் காட்டின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் மக்களை இரவிலும் தூக்கமில்லாமல் செய்து வரும் நிலையில், அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து ரேடியோ காலரிங் செய்து விடுவித்த தமிழக வனத்துறையின் செயல்பாடு, கேரளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரிசியைத் தேடி வீடுகளைத் தாக்கிய அரிசி ராஜா என்ற பந்தலூர் மக்னா (பிஎம்2) நீண்ட தூரம் சுற்றித் திரிந்து கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்குள் வனத்துறையின் 24 மணி நேர கண்காணிப்பையும் ஏமாற்றிவிட்டு நுழைந்துவிட்டது.
ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சுல்தான் பத்தேரி நகரில் வேகமாக வந்த பேருந்தை யானை தாக்கிய நிகழ்வு சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த சில தினக்கூலி தொழிலாளர்களும் மயிரிழையில் உயிர்தப்பினர். பின்னர் அந்த யானையை கேரள வனத்துறையினர் பிடித்து சுல்தான் பத்தேரி அருகே முத்தங்காவில் உள்ள யானைகள் முகாமில் அடைத்து வைத்தனர்.
பிஎம்2 யானையை முன்பு அடக்கியதைப் போல வனத்துறையினர், ’மிஷன் அரி கொம்பன்’ என்ற திட்டத்தின் மூலம் அரி கொம்பனையும் பிடித்து அடக்கி வைக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிலையில், அரி கொம்பனைப் பிடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் அரி கொம்பன் (அரி என்றால் அரிசி; கொம்பன் என்றால் யானை) என்ற யானையை பிடிப்பதற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, மேலே சொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
அரி கொம்பனைப் பிடித்து அடக்குவதற்குப் பதிலாக, வனத்துறை ஊழியர்கள் அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ரேடியோ காலர் பொருத்தி அதைப் பின்னர் காட்டுக்குள் விடவேண்டும் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!
அரி கொம்பன் யானை சின்னக்கானல், சாந்தன்பாறை ஊராட்சிகளில் 11 பேரைக் கொன்றதாகவும், 30-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வனத்துறையின் தரவுகளின்படி பார்த்தால், யானையின் தாக்குதல்களில் 180 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை 30-க்கும் மேற்பட்ட தடவை யானை தாக்கியுள்ளது.
நடத்தை மாறுபாடுகள் மற்றும் வன்முறைக் குணம் கொண்ட மனிதர்கள் கூட மற்றவர்களின் பாதுகாப்பிற்காக சமூக வாழ்க்கையிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
இதை மனதில் வைத்து யானை விசயத்தில் உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு சரியானதா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. சுற்றுச்சூழல் நல விரும்பிகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இந்தப் ’பிரச்சினை’ யானைகள் மீதும் சட்டம் அதே நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தத் தீர்ப்புக்கு விவசாய ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதுபோன்ற விலங்குகளை விடுவிப்பது காட்டிற்கு அருகில் வசிக்கும் விவசாய சமூகத்தினருக்கும், காட்டிற்குள் வாழும் பழங்குடி சமூகத்தினருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்தத் தீர்ப்பை அடுத்து, விலங்கு ஆர்வலர்களில் ஒரு பிரிவினர், தற்போது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் பிஎம்2-ஐ மீண்டும் காட்டிற்குள் விடுவிக்கக் கோரி வனத்துறையை அணுகினர். இது அதன் பின்விளைவுகள் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
”நடத்தை மாறுபாடுகள் கொண்ட இதுபோன்ற விலங்குகளை சிறைப்பிடித்து, அடக்கி, பயிற்சி அளித்து, யானை ரோந்துக் குழுவில் சேர்த்திருக்க வேண்டும்,” என்று விவசாய ஆர்வலர்கள் கூறுகின்றனர். அரிசி ராஜாவாக இருந்தாலும் சரி, அரி கொம்பனாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விலங்குகள் தொடர்ந்து மனிதர்களைத் தாக்குவதும், அரிசியைத் தேடி எண்ணற்ற வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளைத் தாக்கி அழிப்பதும், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி மனித வாழ்விடங்களில் பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கதையாக உள்ளன.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவில் தினக்கூலி தொழிலாளர்களின் சிறிய குடிசைகள் உட்பட எண்ணற்ற வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் ’அரிசி ராஜா’ என்ற பெயரை அந்த யானை பெற்றது. விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த விலங்கின் நடத்தை மேம்பாடு அடைந்துள்ளது என்று வனத்துறையினர் கூறினாலும், அரிசி ராஜா கேரள வனப்பகுதிக்குள் நுழையும் வரை தங்களை தொடர்ந்து பயமுறுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ரேடியோ காலரில் இருந்து சிக்னல்களை பெற முடியும் என்பதால் வனத்துறையினர் யானைக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். இந்த விலங்கு மனித வாழ்விடங்களுக்குள் நுழைய பலமுறை முயற்சித்தது, ஆனால் வனத்துறை ஊழியர்களால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 24 மணி நேரமும், யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, மனித வாழ்விடங்களுக்குள் நுழையும் போதெல்லாம் காட்டுக்குள் அதை விரட்டினர்.
விவசாய அமைப்புகளின் கடும் அழுத்தத்தால், அரி கொம்பனைப் பிடித்து அடக்குவதற்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசு தயாராகி வருகிறது
பிஎம்2 யானையை முன்பு அடக்கியதைப் போல வனத்துறையினர், ’மிஷன் அரி கொம்பன்’ என்ற திட்டத்தின் மூலம் அரி கொம்பனையும் பிடித்து அடக்கி வைக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிலையில், அரி கொம்பனைப் பிடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விலங்குகள் ஆர்வலர் விவேக் மேனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நிபுணர் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் அரி கொம்பனை ரேடியோ காலர் செய்த பின்னர் விடுவிக்குமாறு வனத்துறைக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால் இந்தத் தீர்ப்பு வனத்துறைக்கு ஓர் இக்கட்டைத் தந்திருக்கிறது. பரம்பிக்குளத்திற்கு அரி கொம்பனை மாற்றுவதற்கு எதிராகப் பரம்பிக்குளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரி கொம்பனை காட்டு வழியாக பரம்பிக்குளம் முத்துவராச்சலுக்கு மாற்றுவதற்காக வனத்துறையினர் திருச்சூர் மாவட்டம் வாழச்சலில் நடத்திய சோதனை ஓட்டத்தை கடந்த ஏப்ரல் 11-ம் தேதி மலைவாழ் மக்கள் உட்பட பொதுமக்கள் பெருமளவில் முறியடித்தனர்.
மக்கள் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர் மன்றங்களும் பொதுமக்களுடன் கைகோர்த்து விட்டதால் வனத்துறை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!
பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் அரி கொம்பனைக் கொண்டுசேர்க்கும் வனத்துறையின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பரம்பிக்குளம் பகுதியில் கேரள சுயாதீன விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கேரள சட்டமன்றத்தில் பரம்பிக்குளம் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நென்மாரா எம்எல்ஏ கே.பாபு, வனவிலங்கு சரணாலயத்திற்குள் 600-க்கும் மேற்பட்ட பழங்குடிக் குடும்பங்கள் வசிப்பதாலும், புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 2000 குடும்பங்கள் வசிப்பதாலும், அரி கொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு மாற்றுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்க் குழு நீதித்துறையை தவறாக வழிநடத்தியுள்ளது என்று பாபு கூறி உள்ளார்.
அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அரி கொம்பன் இடமாற்றத்திற்கு பொருத்தமான இடத்தை தீர்மானிக்க மாநில அரசுக்கு ஒருவாரம் அவகாசம் வழங்கியது. அதற்குள் மாநில அரசு இடத்தை உறுதிசெய்யத் தவறினால், யானையை பரம்பிக்குளத்திற்கு மாற்றுவதற்கான நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு மாற்றப்படாது என்றும் அது கூறியது.
மேலும், அரி கொம்பன் யானைக்கும் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் 24 மணி நேரக் கண்காணிப்புகளை தீவிரப்படுத்துமாறு கேரளா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதனிடையே, விவசாய அமைப்புகளின் கடும் அழுத்தத்தால், அரி கொம்பனைப் பிடித்து அடக்குவதற்கு எதிரான உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக கேரள அரசு தயாராகி வருகிறது.
Read in : English