Read in : English
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. நிலம் வழங்குபவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்குபவர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
மின்பற்றாக்குறை நிலவும் தமிழகத்தில் மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் எழுப்படுகிறது. நெய்வேலி அனல் மின் நிலையங்கள் தமிழகத்தின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிக முக்கியமானவை. நெய்வேலி திட்டம் 1950களில் துவங்கப்பட்டப்போது இருந்த சூழ்நிலை வேறு. அன்று தமிழகத்தில் பெரிய மின் திட்டங்கள் இல்லை. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் பெருமளவில் தேவைப்பட்டது.
அதை முழுமையாக வழங்க நெய்வேலியின் முதல் மற்றும் இரண்டாம் அனல் மின் நிலையங்கள் பெரிதும் உதவின. இன்றும் கூட நெய்வேலியின் பங்களிப்பு தமிழகத்தின் தேவையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு.தற்போது நான்கு திட்டங்கள் செயல்பாட்டிலும், தூத்துக்குடியில் தமிழக அரசின் மின் பகிர்மானக் கழகத்துடன் இணைந்தும் மின் திட்டங்களை என்.எல்.சி. நிறுவனம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் அமைந்துள்ள நெய்வேலி மின் திட்டங்கள் மூலம் மாநிலத்திற்கு சுமார் 2180 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மொத்தமாக மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மாநிலத்திற்கு சுமார் 7000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது தவிர காற்றாலைகள், கதிரொளி ஆற்றல் மூலம் சுமார் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று இதுவரை இல்லாத அளவில் ஒரு நாளைக்கான மின் தேவை அளவு 17,705 மெகாவாட்களாக அதிகரித்துள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அக்னி நட்சத்திரம் துவங்கியப் பிறகு மின்தேவை 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
இவை நிறுவப்பட்ட உற்பத்தித் திறனை முழுமையாக அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மின் அளவாகும். இப்போதைய மாநிலத்தின் தேவை சுமார் 17 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து செல்லலாம் எனும் நிலையே காணப்படுகிறது. கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று இதுவரை இல்லாத அளவில் ஒரு நாளைக்கான மின் தேவை அளவு 17,705 மெகாவாட்களாக அதிகரித்துள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் துவங்கியப் பிறகு மின்தேவை 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெய்வேலி மின் திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும், என்.எல்.சி. நிறுவனத்தை அம்மாவட்டத்தை விட்டுத் துரத்த வேண்டும் என்றும் பாமக கூறியுள்ளது.
மேலும் படிக்க: தமிழக ஆலைகளில் தமிழர்களுக்கு இடமில்லை!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) என்பது மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு கிடைக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் அனைத்திற்கும் மின்சாரம் பகிர்மானம் செய்யப்படுகிறது.
நெய்வேலி நிறுவனம் இந்தியாவின் பிற பாகங்களிலும் நிலக்கரி சுரங்கங்களையும், அனல் மின் நிலையங்களையும் நடத்தி வருகிறது. அங்கிருந்தும், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மின்சாரம் பகிர்மானம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பது, அனல் மின் உற்பத்தி செய்வது போன்றவற்றுடன் புதிதாக மெத்தனால் எனும் எரிபொருளைத் தயாரிக்கும் பணியையும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மேற்கொள்ள உள்ளது.
இத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்தக் கோரியுள்ளது. நிலத்தைக் கையகப்படுத்தி என்.எல்.சி. நிறுவனத்திற்கு அளிக்கும் பணியை தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்துவதில் பல சிக்கல்களும் பிரச்சினைகளும் உள்ளன. குறிப்பாக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் போது எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து தெளிவான கொள்கைகள் இல்லை அல்லது அவை போதுமானவையாக இல்லை. விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பறிபோவது குறித்து கோபப்படுவது நியாயமே. தோண்டி எடுக்கப்படும் நிலக்கரியின் அளவைப் பொருத்து மாநில அரசிற்கு ஆண்டுதோறும் பங்குத் தொகையை என்.எல்.சி. நிறுவனம் அளித்து வருகிறது. சமீபத்தில் பங்குத் தொகையாக ரூ.பு5.பு6 கோடியை அந்நிறுவனம் தமிழ்நாடு முதல்வரிடம் அளித்தது. நிலம் கையகப்படுத்துவதை முறையாகச் செய்ய வேண்டியது தொடர்புள்ள துறையின் பொறுப்பு.
நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டத்திலும் பலத் திருத்தங்களை மத்திய அரசு செய்து விட்டது. கடந்த 2013ஆம் ஆண்டில் அச்சட்டம் பிரிட்டிஷ் காலத்தில் இடப்பட்ட 1894ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்டது. இதன்படி கிராமப்புறங்களில் இழப்பீட்டுத் தொகை சந்தை மதிப்பை விட 4 மடங்கு அதிகமாகவும், நகர்ப்புறங்களில் 2 மடங்காகவும் இருக்க வேண்டும். ஆயினும், மின் திட்டங்களைப் பொருத்தவரை உற்பத்தித் துவங்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலும் ஆகலாம் என்பதும், நிலத்திற்கு தரப்படும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருப்பின் மின் கட்டணமும் அதிகமாகவே இருக்க நேரிடும் என்பதால் விலக்குகளைக் கோரின. இதனால் பல மாநிலங்களில் தெளிவான இழப்பீட்டு முறை நடைமுறையில் இல்லாமல் உள்ளது.
நிலத்தைக் கையகப்படுத்தி என்.எல்.சி. நிறுவனத்திற்கு அளிக்கும் பணியை தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்துவதில் பல சிக்கல்களும் பிரச்சினைகளும் உள்ளன. குறிப்பாக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் போது எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து தெளிவான கொள்கைகள் இல்லை அல்லது அவை போதுமானவையாக இல்லை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன விரிவாக்கத் திட்டம் வேண்டாம் என்றால் மாற்று வழிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கெனவே கூறியது போல, தமிழ்நாட்டில் காற்றாலை, சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி சிறப்பானதாகவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது போல, கட்டடக் கூரைகளின் மேல் பொருத்தப்படும் கதிரொளி ஆற்றல் மின் உற்பத்திக்கு 40 சதவீதம் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதைப் பரவலாக்கி வசதி படைத்தோர் மத்தியிலும், மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் அமைத்தால் மேலும் அனல் மின் உற்பத்தையைச் சார்ந்திருக்கத் தேவையில்லை. ஏற்கனவே விவசாயிகளின் நீர்ப்பாசனம் செய்ய சூரியஒளி ஆற்றல் வசதியைப் பயன்படுத்துவதற்காக மத்திய அரசின் திட்டம் ஒன்று நடைமுறையிலுள்ளது.
இதற்கு 70 சதவீதம் வரையில் மானியம் உண்டு. பட்டியலின/பழங்குடியினருக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் உண்டு. இந்த ஆண்டில் சுமார் 5000 விவசாயிகளுக்கு இத்திட்டத்தைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு முனைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத்திற்காக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சுமார் 16 சதவீதம் வரை நுகரப்படுகிறது. இது அடுத்தப் பத்தாண்டில் 13 சதவீதமாகக் குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்தப் பத்தாண்டில் மொத்த நுகர்வு 1,63,156 மில்லியன் யூனிட்களாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான நுகர்வு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே மின் உற்பத்தியை அதிலும் மரபுசாரா அல்லது வளங்குன்றா வழிகளில் உற்பத்தி செய்ய வேண்டியத் தேவை உள்ளது. இந்தியப் பிரதமர் கிளாஸ்கோ புவிவெப்பமயமாதல் தடுப்பு குறித்த மாநாட்டில் 2070ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 100 சதவீத ஆற்றல் வளங்கள் பசுமை உற்பத்தியாக (அதாவது கரிய அமில வாயுவை வெளியிடாத) இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார். எனவே அதை நோக்கியப் பயணமாக இருக்கும் நிலையில் இடைக்காலத்தில் அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையுள்ளது.
மேலும் படிக்க: தமிழர்களுக்கு வேலை: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
இங்கு வேறொரு போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. அண்மையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பெங்களூருவில் மெத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தினார். இந்த வாகனங்கள் வழக்கமான எண்ணெய்களுடன் கலந்தும், 100 சதவீதம் தனித்தும் இயங்கும் தன்மை உடையவை. இத்திட்டன்படி பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பரிசோதனை முறையில் மெத்தனாலில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாநகரப் போக்குவரத்துக் கழகம் இதற்காக 10 பேருந்துகளை ஒதுக்கியுள்ளது. எம் டி 15 எனும் பேருந்துகளில் 15 சதவீத மெத்தனால் கலந்தும், எம் 100 என்னும் சரக்கு வாகனங்களில் 100 சதவீத மெத்தனாலிலும் இயங்கும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான வாகனங்களை அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மெத்தனாலை நிலக்கரியிலிருந்தும் எடுக்க முடியும்.
நிலக்கரி சாம்பலில் இருந்தும் பெற முடியும். ஏற்கெனவே என்.எல்.சி. இப்படியொரு திட்டத்தை வைத்துள்ளது. அனல் மின் நிலையங்கள் அனைத்திலும் இதை நடைமுறைக்குக் கொண்டு வர முடியும். எனவே நிலக்கரியை வைத்து மாசு ஏற்படுத்துகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எடுபடாமல் போகலாம்.
நமக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கும் எனும்போது மெத்தனாலை அரசு ஊக்குவிப்பதில் வியப்பில்லை. இப்போது 20 சதவீத மெத்தனால் என்பது 15 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் அந்நிய செலாவணி மிச்சப்படுகிறது.
ஆகையால் விவசாயிகள், பொது மக்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்காத வண்ணம் என்எல்சி விரிவாக்கத் திட்டங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு. நாம் மாற்று பசுமை மின் உற்பத்தியை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு பாமக போன்ற, நீண்ட காலம் முன்பே தமிழகத்தில் சூழலியல் கேடுகளைப் பற்றி பேசத்துவங்கிய கட்சிகள் மாற்று மின்சார முயற்சிகளை மேற்கொள்ள கடும் பரப்புரைகளை செய்ய வேண்டும்.
இதுவே இன்றைய உண்மையான தேவையாகும். மாறாக போராட்டங்களைத் தூண்டி மின் திட்டங்களைத் தடுப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்குத்தான் ஊறு விளைவிக்கும்.
மேலும் திட்டங்களின் பலன் மாநிலம் கடந்தும் போகிற போது நாம் தனித்து இயங்கவில்லை என்பதும், இன்றைக்கு பிற மாநிலங்களிலிருந்தும் நாம் மின் வசதியைப் பெறுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகையால், பாமகவும் அதன் தலைமையும் மாற்றம் முன்னேற்றம் என்று சிந்திக்கும் வழியில் பசுமை மின்சார உற்பத்தியை ஆதரித்து வீடுகள் தோறும் பரப்புரை செய்வார்களா?
Read in : English