Read in : English
மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் பேராசிரியர் இன்மதி இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் பட்ஜெட் குறித்து பேசினார். அவரது நேர்காணலில் முக்கிய அம்சங்கள்:
“பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற தமிழக பட்ஜெட் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான அறிவிப்பை அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்; இந்தக் கோரிக்கை இப்போது நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது, அநேகமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கூடும்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற தமிழக பட்ஜெட் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
மாநிலத்தின் நிதி நெருக்கடிகள் குறித்தும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்தும் எப்போதும் உரக்கப் பேசும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்டுக்கு வாய்ப்பு இருந்தபோதிலும் மிதமான பட்ஜெட்டையே தாக்கல் செய்தார். வரவிருக்கும் பட்ஜெட்டில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்ப்போம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.
பட்ஜெட் முன்மொழிவுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து பேசிய ஆத்ரேயா பட்ஜெட் உரை மற்றும் மத்திய கால நிதிக் கொள்கையைத் (medium-term fiscal policy) தவிர, தமிழக பட்ஜெட் ஆவணம் மத்திய அரசு செய்வதைப் போல இணையத்தில் பதிவேற்றப்படுவதில்லை. உண்மையில், பொருளாதார ஆய்வாளர்களைத் தவிர, வேறு யாரும் பட்ஜெட்டில் துறைவாரியான ஒதுக்கீடுகளை உற்றுக் கவனிப்பதில்லை.
மத்திய அரசு எப்போதுமே மாநிலங்களை வஞ்சிக்கிறது என்று சொன்ன ஆத்ரேயா சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்டினார். பல மத்திய அரசுத் திட்டங்களுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற குரூப் 1 மாநிலங்கள் 80 சதவீதம் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது நமது பணம்; நமது திட்டங்கள். ஆனால் மாநிலங்களின் பங்களிப்பைப் பற்றிக் கவலைப்படாமல், திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பெருமையை மத்திய அரசு தட்டிக்கொண்டு போகிறது.
மேலும் படிக்க: மேம்போக்கான பட்ஜெட்: ஆத்ரேயா விமர்சனம்!
அடுத்து வரிவிதிப்பு முறை. கார்ப்பரேட் வரி மற்றும் தனிநபர் வருமான வரி குறித்து முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசு எப்போதும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. வரிகளில் மாநிலங்களுக்கான பங்குகள் வழங்கப்பட வேண்டும் என்றாலும், நடைமுறையில் அது இல்லை. இதனால் வரிவருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் மத்திய அரசு மாநிலங்களை ஏமாற்றுகிறது.
அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு அவ்வப்போது வரிச்சட்டங்களில் மாற்றம் கொண்டுவருகிறது. உதாரணமாக, கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார், இந்த நடவடிக்கையால் ரூ.1,45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறினார். இந்தப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது யார்? இந்த வரிச்சலுகை மூலம் கார்ப்பரேட்டுகளை மகிழ்விக்க மத்திய அரசை தூண்டியது எது? இது மத்திய அரசுக்கு இழப்பு என்று சொல்லப்பட்டது.ஆனால், அதற்கு நேர்மாறாக, வரிகள் பிரிக்கக்கூடிய தொகுப்பில் இருப்பதால் மாநிலங்களும் பாதிக்கப்பட்டன. என்பதுதான் உண்மை. மத்திய அரசு வரிச் சட்டங்களை மாற்றி மாநிலங்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், வேறு சில வரிவருவாய் ஆதாரங்களில் மாநிலங்களுக்கு உரிய பங்கை மத்திய அரசு மறுத்தது குறித்து பிடிஆர் அடிக்கடி பேசியுள்ளார். அவரது கூற்றின் உண்மைத் தன்மைக்கு செஸ் கூடுதல் கட்டணம் ஒரு சான்றாகும். செஸ் சர்சார்ஜ் நீண்ட காலமாக பகிர முடியாத வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே மாநிலங்கள் தங்கள் பங்கிற்கு உரிமை கோர முடியாது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த நடைமுறை இருந்து வருகிறது. மாநிலங்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை பொதுவெளியில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு மாநிலங்களுக்குத் மாற்றாந்தாயாக நடந்து கொள்ளும் விதம் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள்.
கார்ப்பரேட் வரி மற்றும் தனிநபர் வருமான வரி குறித்து முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசு எப்போதும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. வரிகளில் மாநிலங்களுக்கான பங்குகள் வழங்கப்பட வேண்டும் என்றாலும், நடைமுறையில் அது இல்லை
ஆனால் சில அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மெளனம் சாதிக்கின்றன. இப்போது திமுகவுக்கு வலுவான மக்கள் ஆதரவும் உள்ளதால், ஆளும் திமுகவால் இப்பிரச்சினையில் இன்னமும் தீவிரமாகச் செயல்பட முடியும்.
தமிழக அரசியல் களத்தில் சமூகநீதி என்பது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தபோது இது எல்லாப் பெண்களுக்குமான பொது உதவியாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாக சில அளவுகோல்கள் இருப்பதாக சமீபகாலமாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: புதிய வருமான வரி சிறப்பானதா?
நவ தாராளவாத பொருளாதார வல்லுநர்களும் ஆளும் வர்க்கமும் இந்த உதவித் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த ரூ.1,000 உதவித் திட்டம் பயனற்றது; அர்த்தமற்றது. ஏனெனில் பணவீக்கம் அதன் மதிப்பை அரித்துவிடும்.
அதை ரொக்கமாக கொடுப்பதை விட, உறுதியான வருமான ஆதாரமாக மாற்றுவது நல்லது. எது எப்படியோ இது அவர்களின் திட்டம், அதைச் செயல்படுத்த அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. தமிழக பட்ஜெட்டில் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வருமா? புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் பழைய முறையில் அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளையும் பறிக்கும் அம்சங்கள் உள்ளன என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டுள்ளதால் இந்தக் கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. உண்மையில், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமீபகாலமாக, பிரான்சில் வீதிகளில் இறங்கி தங்கள் சொந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் குறைந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையுடன் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஓய்வூதியதாரர்களை வாட்டியெடுப்பது மிகப் பெரிய குற்றம். மூத்த குடிமக்கள் விசயத்தில் சமூகத்திற்கு ஒரு தார்மீகக் கடமை உள்ளது.
பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளிகளின் பாரிய லாபங்களை கேள்விக்குள்ளாக்காமல் ஓய்வூதிய பிரச்சினையை ஆராய முடியாது என்று அவர் கூறினார். கார்ப்பரேட்டுகள் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்று கூறி, அவர்களுக்கு அரசாங்கம் தனது ஆதரவை நியாயப்படுத்துகிறது.
பெருநிறுவனங்களின் அபரிமிதமான வருவாய் ஆட்சியாளர்களை அதிருப்தியடையச் செய்வதில்லை; ஆனால் மக்கள் நலனில் எப்போதும் அக்கறை காட்வதாகச் சொல்லிக் கொள்ளும் ஆட்சியாளர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகள் உறுத்துகின்றன. இதுவொரு நகைமுரண்.
ஆடம்பரமான சொற்களைத் தவிர்த்துவிட்டு மிக எளிமையாகச் சொல்வதென்றால், தொழிலாளர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருநாட்டின் செல்வத்தை உருவாக்க முடியாது.ஆட்சியைக் கவிழ்க்கும் வல்லமை கொண்ட இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாறக் கூடிய சாத்தியம் உள்ளது.
நவதாராளமயத்தை எதிர்த்துப் போராடாமல் திராவிட மாடல் சமூக நீதி சாத்தியமில்லை. ஒரு சில நலத்திட்டங்கள் மட்டும் திராவிட மாடல் ஆகிவிடாது
பெரிய கார்ப்பரேட்டுகள் மற்றும் வசதி படைத்தவர்கள் மீது கடுமையான வரி விதிக்காமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பெரும்பான்மையாக இருக்கும்போது, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரிகளை விதிக்காமல் ஏழை எளியவர்களின் நலனையோ அல்லது சமூக நீதியையோ நிலைநாட்ட முடியாது. இந்த விசயத்தில்தான் திராவிட மாடலுக்கு அடிவிழுகிறது.
ஒருபக்கம் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு நிதிவரத்து குறைந்து வருகிறது. மறுபுறம், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டியிருக்கிறது. நவதாராளமயத்தை எதிர்த்துப் போராடாமல் திராவிட மாடல் சமூக நீதி சாத்தியமில்லை.
ஒரு சில நலத்திட்டங்கள் மட்டும் திராவிட மாடல் ஆகிவிடாது. எடுத்துக்காட்டாக, மருத்துவத் துறை மற்றும் பல துறைகளில் பெண்களின் வேலைவாய்ப்புகள் குறைவாகவும், அவர்கள் பெறும் ஊதியங்களும் மிகக் குறைவாக உள்ளன. இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் திராவிட மாடலை நிறுவ முடியாது.
நேரடி வரிகளில் எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கின்றன மாநிலங்கள். ஜிஎஸ்டியால் மறைமுக வரிகளில் மாநிலங்களுக்கு இருந்த உரிய பங்கும் நசுக்கப்பட்டு விட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு மாநிலங்கள் இணங்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் எந்த மாநிலமும் இதை முன்னிலைப்படுத்தி தங்கள் உரிமைகளுக்காகப் போராடவில்லை. ஆளும் கட்சியான பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில், தங்கள் குரல்கள் எடுபடாமல் போய்விடும் என்று மாநிலங்கள் அஞ்சுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் கட்சிகளின் ஜீவாதாரப் பிரச்சினை இது. இடதுசாரிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மத்தியில் ஆளும்கட்சியோடு இணக்கமாகப் போவதில் அவற்றின் சுயநலம் இருக்கிறது. அரசியலும் பொருளாதாரமும் பிரிக்க முடியாதவை.
இந்தச் சூழ்நிலையில் நமது நிதி அமைச்சர் என்ன மாதிரியான நிதிநிலை அறிக்கையை வழங்கப் போகிறார் என்பதைப் பார்ப்போம் என்று முடித்தார் பேராசிரியர் ஆத்ரேயா.
Read in : English