Read in : English
நிதியாண்டு 2023-24க்கான நிதிநிலை அறிக்கை 2023 பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதை ஆழமில்லாத, மேம்போக்கான பட்ஜெட் என்று வர்ணித்திருக்கிறார் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
தற்போது ஆசிய பத்திரிக்கையியல் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார் ஆத்ரேயா. இன்மதிக்குக் கொடுத்த நேர்காணலில், பட்ஜெட் என்பது ஆகப்பெரும் செல்வந்தர்களும் பெருங்கொண்ட நிறுவனங்களும் பங்குபெறும் வருடாந்திர நிதி நாடகம் என்று வர்ணித்தார்.
“ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது ஊடகங்கள் அதன்மீது அதிகக் கவனம் செலுத்தி ஊதிப் பெரிதாக்குகின்றன. அது அரசுக்கு உருவாகக்கூடிய வருமானங்களின் செலவீனங்களின் மதிப்பீட்டு அறிக்கை மட்டுமே; அதற்கு மேல் அதில் சரக்கு ஒன்றுமில்லை” என்பதே ஆத்ரேயாவின் வாதம்.
“1990களில் தாராளமயப் பொருளாதாரக் கட்டமைப்பு வந்ததன் பின்னே அமெரிக்கா தும்மினால் நமக்குக் காய்ச்சல் வரும் என்று சொல்லுமளவுக்கு இந்தியப் பொருளாதாரம் உலகமயமாகிவிட்டது. அதனால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் காரணிகளும் நமது பட்ஜெட்டில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாட்டின் செல்வ வளங்கள் ஒரு சிலரின் கைகளில் குவிந்துக் கிடப்பதால், அவர்களின் அதிகாரமும் பட்ஜெட்டில் எதிரொலிக்கின்றன.
ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகளில் மூன்றில் ஒரு பங்குதான் பெரிய நிறுவனங்கள் வழங்குகிறது; மூன்றில் இரண்டு பங்கை மக்கள் கொடுக்கிறார்கள்
ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் அதிகாரப்பூர்வமான பட்ஜெட்டைத் தவிர, நித்தமொரு பட்ஜெட் யாருடைய அனுமதியும் இல்லாமல் அரங்கேறுகிறது. பெட்ரோல் விலையுர்வு, கலால் வரி உயர்வு, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவைதான் அந்த அதிகாரப்பூர்மற்ற பட்ஜெட்டுகள்.
பட்ஜெட் மதிப்பீடுகள், திருத்தப்பட்ட மதிப்பீடுகள், நடைமுறை நிஜங்கள் ஆகியவை அடங்கியதுதான் நிதிநிலை அறிக்கை என்னும் ஒட்டுமொத்த பொருளாதாரப் பயிற்சி. இந்தாண்டு பட்ஜெட் மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன; இனி அடுத்தாண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டில் நடைமுறை நிஜங்கள் பற்றிய அறிக்கை தரப்படும். ஆக நாட்டின் நிதிநிலை மதிப்பீடு என்பது ஒவ்வொரு இரண்டாண்டிலும் நடைபெறும் ஒரு நிதிச்சடங்கு.
மேலும் படிக்க: பொருளாதார ஆய்வு அறிக்கை காட்டும் தமிழ்நாட்டு முன்னேற்றம்!
கடந்த நான்கு ஆண்டுகளாகச் சரிந்திருந்த நாட்டின் பொருளாதார நிலை 2020ல் ஓரளவு எழுந்து நின்று 7 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியது. 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக நமது தேசிய உற்பத்தி விகிதம் (ஜிடிபி) மற்றும் வளர்ச்சி விகிதம் சரிந்துபோனது. ஆனாலும் நம் பொருளாதாரம் மீண்டெழுந்து 7 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்தது.

பொருளாதார அறிஞரும் இணை பேராசிரியருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, 2023 பட்ஜெட் குறித்து இன்மதிக்கு நேர்காணலில் விளக்கமளித்தார்.
அதை என்னவோ அரசின் ஆகப்பெரும் சாதனை என்று அவர்கள் சொல்கிறார்கள். இதை நாங்கள் மீட்சி வளர்ச்சி விகிதம் என்போம். ஆனால் விமர்சனக் கண்ணோட்டமில்லாத அரசியல்வாதிகள் நிஜத்தைத் திரித்து பேசுகின்றனர்” என்று வருத்தப்பட்டார் ஆத்ரேயா.
தொடர்ந்து பேசியவர், “இந்தப் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு ஆண்டுக்கு ரூ.7 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் வரிவிலக்கு அம்சங்களான வீட்டுக் கடன் வட்டித்தொகை, காப்பீட்டு பிரிமீயம் போன்றவை தூக்கப்பட்டு விட்டன. ஆதலால் இந்த வரிவரம்பு உயர்வு பெரிதாகக் கைகொடுக்கப் போவதில்லை.
ஆனால், இதனால் அரசுக்கு ரூ.35,000 கோடி நட்டம் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். ஆனால் பெரிய நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் மொத்தம் 3 இலட்சம் கோடி மதிப்புள்ள வரிவிலக்குகளை ஒப்பீடு செய்தால் பாவப்பட்ட ஜனங்களுக்கு வருமானவரி வரம்பை உயர்த்தியதால் ஏற்படும் ரூ.35,000 கோடி ஒன்றுமே இல்லை.
2019ல் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி கார்ப்பரேட்டுகளின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அரசு குறைத்தது. அதனால் அரசுக்கு ரூ.1.45 இலட்சம் கோடி நட்டம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஆண்டுகளிலும் வெவ்வேறு துறையில் இயங்கும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டன. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3 இலட்சம் கோடி. அதே சமயத்தில் மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களும் ரூ.3 இலட்சம்.
நாட்டின் செல்வ வளங்கள் ஒரு சிலரின் கைகளில் குவிந்துக் கிடப்பதால், அவர்களின் அதிகாரமும் பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது
இந்த இரண்டையும் இணைத்து பாருங்கள்; உண்மை புரியும். பொதுத்துறை நிறுவனங்களைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு அவற்றை தனியார் துறைக்குத் தாரை வார்க்கத் தயாராகிவிட்டது அரசு” என்றார் ஆத்ரேயா.
“தாராளமயமாதல், உலகமயமாதல் ஆகிய பொருளாதாரத் தாரக மந்திரங்களால் உந்தப்பட்ட அரசு தனியார்மயமாதலை ஆதரிக்கிறது. ஒரு காலத்தில் கல்வி, மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குதல் அரசின் கடமையாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. வசதி இருப்பவன் தனியார் மருத்துவமனைக்குச் செல்லட்டும் அல்லது தனியார் பள்ளிக்கு, கல்லூரிக்குப் போகட்டும் என்றாகி விட்டது. அடித்தட்டு மக்களை நிர்க்கதியாக்கிவிட்டது இந்தியப் பொருளாதார அமைப்பு. சிலர் அமோகமாக வாழ்கிறார்கள்; பலர் சீரழிகிறார்கள்.
மேலும் படிக்க: சீராகுமா தமிழ்நாடு பொருளாதாரம்?
கார்ப்பரேட்டுகளை ஆதரிப்பதால் ஏற்பட்டிருக்கும் நட்டஈட்டை ஈடுகட்டும் முகாந்திரமாக மக்கள் மீது அரசு வரிகளைத் திணிக்கிறது; பெட்ரோல் விலைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறது; ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது.
பொதுவாக அரசுக்கு நேர்முக வரிகளைவிட மறைமுக வரிகள் மூலமாகத்தான் அதிக வருமானம் வருகிறது. வருமான வரி நேர்முக வரிகளில் அடங்கும். நேர்முக வரிகள் தரும் வருமானம் மொத்தமே ஆறு சதவீதம்தான். ஆனால் ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகளில் மூன்றில் ஒரு பங்குதான் பெரிய நிறுவனங்கள் வழங்குகிறது; மூன்றில் இரண்டு பங்கை மக்கள் கொடுக்கிறார்கள்.
நாட்டில் இப்போது வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது; ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகச் செய்யப்படுவதால் இந்தப் பற்றாக்குறை உருவாகிறது. அந்நியச் செலவாணி இருப்பிலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. வெளிநாட்டிலிருக்கும் பெரிய நிறுவனத் தலைவர்களான இந்தியர்களின் வருமானம் அந்நியச் செலவாணியாக நாட்டிற்குள் வருவதில்லை.
அடித்தட்டு மக்களை நிர்க்கதியாக்கிவிட்டது இந்தியப் பொருளாதார அமைப்பு; சிலர் அமோகமாக வாழ்கிறார்கள்; பலர் சீரழிகிறார்கள்
ஆனால் வெளிநாட்டில் பணிபுரியும் கொல்லர், தச்சர், செவிலியர் போன்ற தொழிலாளிகளும், தகவல்தொழில் நுட்பப் பணியாளர்களும் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு அனுப்பி இந்தியாவின் அந்நிய செலவாணிக்குப் பெரிதும் உதவுகிறார்கள். பெரிய பணமுதலைகள் போல அந்தச் சாதாரண மக்கள் பணத்தை ஸ்விஸ் வங்கியில் போடுவதில்லை” என்றார் ஆத்ரேயா.
இந்தப் பட்ஜெட் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கென்று எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று கூறிய ஆத்ரேயா, “மொத்தத்தில் இந்தப் பட்ஜெட் மேம்போக்கானது; ஆழமில்லாதது; பட்ஜெட் போலத் தோன்றும் ஒரு பட்ஜெட்தான்” என்று முடித்தார்.
Read in : English