Read in : English

சமீபத்தில் வந்த ஒரு முகநூல் பதிவில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஒரு குள்ளமான, வாடி வதங்கிய தோற்றமுடைய ஒரு நபரின் அருகில் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அவர் ஒரு தினக்கூலி தொழிலாளி என்று தெளிவாகத் தெரிந்தது. இருவரும் பிழைப்புக்காக வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து படத்தோடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மிகப் பிரபலமான ‘சூப்பர் ஸ்டாரை’க்கூட சில தமிழர்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள் என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான அவர்களின் மனப்பான்மையைக் கற்பனை செய்து பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற சமீபத்திய செய்திகள் பொய்யானவை என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், தமிழர்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் என்று போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாநில டிஜிபி ஆகியோரிடம் விளக்கங்களும் வேண்டுகோளும் வந்திருக்கின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் மக்களின் மனதில் பொதிந்திருக்கும் பாரபட்ச மனநிலையை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

சமூக ஊடகங்கள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. நமது அடிமனத்து அச்சங்கள் மற்றும் பாரபட்சங்களை அவை படம்பிடிக்கின்றன. பொதுவெளியிலும் ஆவணங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளியை மதிப்பும் மரியாதையும் மிக்க சொல்லாடல்களிலே நாம் விவரிக்கிறோம்.

இருபதாண்டுகளுக்கு முன்பு, சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சினை அமெரிக்காவின் மக்கள்தொகைக் கட்டமைப்பை மாற்றிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. அது ஒரு சூடான அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. பழமைவாதிகளின் வார்த்தைகளில் கூறுவதானால், பெரும்பான்மையான வெள்ளையர் அல்லாதவர்களின் நாடாக மாறும் “ஆபத்தில்” அமெரிக்கா இருந்தது. ஆனால் அந்த வாதத்தை எதிர்த்த தாராளவாத இடதுசாரிகள் அவர்களை விருந்தினர் தொழிலாளர்கள் என்று அழைத்தனர். பிரதான ஊடகங்களும் அப்படியே செய்தன.

“பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் தாய்மொழியில் பாடல்களை இசைப்பது பொருத்தமானது” என்றார் கருணாநிதி

அதைப் போல, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் பாகுபாடு காட்டத் தொடங்கிய பின்னர், அவர்களை விருந்தினர் தொழிலாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்று கேரள அரசு அறிக்கைகளை வெளியிட்டது. தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாடு முழுவதும் விருந்தினர் தொழிலாளிகள் (கெஸ்ட் ஒர்க்கர்ஸ்) என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஆனால் இது புலம்பெயர்ந்த தொழிலாளிகள் மீது ஒரு மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டதை மாற்றுகிறதா? அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க: கர்நாடகத்தில் அண்ணாமலை அரசியல்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உலகில் அது ஒரு புதிய நிகழ்வு அல்ல. குறிப்பிட்ட ஒரு வர்க்கத்துடன் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை இந்நிகழ்வு. பண்டைய நாகரிகங்கள் பிழைப்பு தேடி நகரும் மக்களின் இயக்கத்தால் கட்டமைக்கப்பட்டன. ஏழை வட இந்தியர்கள் பிழைப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வந்தால், வசதி குறைந்த தமிழர்கள் அதிக கூலிக்காகக் கேரளாவுக்குத் தொடர்ந்து செல்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். அமெரிக்காவில் உள்ள சிலர் வெளிநாட்டினர் வரத்தால் உள்ளூர்வாசிகளுக்கான ஊதியங்கள் குறைகின்றன என்று தொடர்ந்து புகார் சொல்கிறார்கள். மலிவான ஆனால் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிநவீன துறைகளில் முதலீட்டிற்கான மூலதனத்தை உருவாக்க உதவுகிறார்கள் என்றும், அமெரிக்காவை முன்னணியில் நிற்க வைக்கிறார்கள் என்றும் சுதந்திர சந்தை ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் பெரும்பான்மையான வெள்ளையர்கள் எல்லையைத் தாண்டி வந்து வசதியான அமெரிக்கர்களுக்காக தோட்டக்கலை, கட்டுமானப் பணிகள் போன்ற சிறிய வேலைகளைச் செய்யும் மெக்சிகோ நாட்டவர்கள் மீது வெறுப்பைக் கொட்டுகின்றனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் ’கலவரக்காரர்களையும்’ ’குற்றவாளிகளையும்,’ வெளியேற்றுவதற்காக ஒரு சுவர் கட்டுவேன் என்று கூறி அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையினரை நம்ப வைத்தார் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். அந்த அந்நிய விரோத உணர்வு அலையின் மீதேறிப் பயணம் செய்து அவர் வெள்ளை மாளிகையில் அரியணை ஏறினார்.

இதேபோல், பல ஆண்டுகளுக்கு முன்பு பம்பாயில் (மும்பை) வட இந்தியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு எதிராக சிவசேனா போராடியபோது தமிழர்கள் வெறுக்கப்பட்டனர்; மராத்தியர்களால் தாக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் வீசிய ‘வெளியாட்களுக்கு’ எதிரான அலையில் சவாரி செய்து சிவசேனாவும் ஆட்சியைப் பிடித்தது.

பம்பாயில் வட இந்தியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு எதிராக சிவசேனா போராடியபோது மராத்தியர்களால் தமிழர்கள் வெறுக்கப்பட்டனர்; தாக்கப்பட்டனர்

இதற்கு நேர்மாறாக, பீகார் மற்றும் பிற வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகத் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் அமரர் மு. கருணாநிதி, தனது கனவுத் திட்டமான புதிய தலைமைச் செயலகத்தின் (அவரது அரசியல் எதிரி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக அதை மாற்றினார்) கட்டுமானத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு பாராட்டு விருந்து அளித்தார். அப்போது அவர்கள் இந்தி திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடினர். 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த கருணாநிதிக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் அப்போது கவலைப்பட்டனர்.

ஆனால் கருணாநிதி, “பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் தாய்மொழியில் பாடல்களை இசைப்பது பொருத்தமானது. திமுக இந்தியை ஒரு மொழியாக எதிர்க்கவில்லை. பள்ளி பாடத்திட்டத்தில் இந்தியைத் திணிப்பதைத்தான் கட்சி எதிர்க்கிறது” என்றார்.

மேலும் படிக்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இலவசங்களின் ஆடுபுலி ஆட்டம்!

தற்போது, வன்முறையைத் தூண்டுதல் மற்றும் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இது, தற்போதைய சர்ச்சைக்கு பாஜகவின் சமூக ஊடக வதந்திகள் காரணமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை மோசமான ஓர் அரசியல் விளையாட்டு ஆடப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

இவை அனைத்திற்கும் மத்தியில், அடிப்படையாக ஓர் அவலமான உண்மை இருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தமிழர்களாகிய நாம் இழிவாகத்தான் பார்க்கிறோம். ரஜினிகாந்த் குறித்த அந்த முகநூல் பதிவு ஏதோ தனிப்பட்ட ஒன்று என்று சொல்லிவிட முடியாது. அது மாநிலம் முழுவதிலும், பல்வேறு பிரிவினர் மத்தியில் நிலவும் பொதுவான ஒரு கருத்து; பாரபட்ச வெளிப்பாடு. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூலியைக் குறைக்க வைத்து விட்டனர் என்றும், தங்களுக்கான வேலைகளை அரிதாக்கி விட்டனர் என்றும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். அந்த உணர்வுதான் சில நேரங்களில் அநாகரீகமான வழிகளில் வெளிப்படுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அங்கஹீனப்படுத்தல்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் வெறும் கும்பல் (அ)நீதிச் செயல்கள்; முற்றிலும் ஆதாரமற்றவை. இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் அச்சத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாகிறார்கள்.

பிரதமரை நோக்கித் தமிழர்கள் ஈர்க்கப்படாததற்கான காரணங்களில் ஒன்று, அவர் இந்தியில் பேசுகிறார் என்பதாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இந்தி என்பது இப்போது ஏராளமான தமிழர்கள் வெறுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மொழியாகப் பார்க்கப்படுகிறது, ஆனால் முன்பு ஆதிக்கம் செலுத்த முயன்ற ’ஆட்சியாளரான’ ஒன்றிய அரசாங்கம் திணிக்க முயன்ற மொழியாக இந்தியைத் தமிழர்கள் எதிர்த்தனர். இந்தி பேசும் புலம்பெயர்ந்தவர்களை விட தமிழர்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து ஓர் உயர்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.

வெகு காலத்திற்கு முன்பு என்று சொல்ல முடியாத ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் தனித்துவமான வளர்ச்சிக் குறியீடுகளில் இருந்து கேரளா விடுபட்டபோது, மலையாளப் பெருமிதம் ஓர் இருளைக் கட்டவிழ்த்துவிட்டது. மலையாளிகள் மெட்ராஸ் என்ற சென்னையை விரும்பினாலும், அவர்களுக்குத் தமிழர்கள் நாகரிகமற்ற கும்பல்கள்தான். ‘பாண்டி’ என்பது தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறியது, அது பாண்டியர்களைக் குறிக்கவில்லை.

அதைப் போல, தென் மாநிலங்களை அல்லது தென்னிந்திய மொழிக் குழுக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாததால், தென்னிந்தியாவைச் சேர்ந்த அனைவரையும் பணக்கார வடஇந்தியர்கள் ‘மதராஸிகள்’ அல்லது ‘காஃபி’ என்றழைத்தனர். இன்னும் தமிழர்களை அவர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இணைக்க அதிதி என்ற செயலி உட்பட பல முயற்சிகளைக் கேரள அரசாங்கம் எடுத்துள்ளன

தமிழ் பண்பாடு, மொழி, மண் ஆகியவற்றின் தனித்துவத்தையும், வரலாற்றுத் தன்மையையும் வெளிக்கொணரும் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் வரலாற்று ஆராய்ச்சிகளையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். திரையில் வரும் சோழ மகிமை நமக்குப் புல்லரிப்பைத் தருகிறது.

தொல்லியல் ஆய்வுகள் சொல்வது போல, தமிழ் சங்க இலக்கியம் அக்காலத்திய பிற நூல்களிலிருந்து மிகவும் வேறுபட்ட தன்மையைக் காட்டுகிறது. உபநிடதங்கள் ஆன்மாவின் ஆழத்தை அதிகப்படுத்தி, அக்காலத்தில் இருத்தலியல் சார்ந்தவையாக இருந்தன. ஆனால் அதே காலத்து தமிழ் சங்கப்பாடல்கள் காதல், வாழ்க்கை, போர், வீரம், பண்பாடு, அழகு ஆகியவற்றைக் கொண்டாடின. இலக்கியங்கள் ஓரளவு ஆரம்பகால அறிக்கைகளாக இருந்தன, மேலும் பெரிய நகரங்கள், பிரமாண்டமான படைகள் மற்றும் அநேகமாக கடற்படைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தின. அதே காலத்தில் வட இந்திய இலக்கியங்கள் தரிசிப்பவனைப் பற்றி, தரிசனங்கள் பற்றி, தரிசிக்கப்படுபவற்றை பற்றி வினாக்கள் எழுப்பிக் கொண்டிருந்தன. மீமெய்யியல் ஞானம் தேடுபவர்களுக்குப் பேரானந்ததைத் தந்தது.

ஆனால் போர், வணிகம், மற்றும் கைவினைத் திறன்கள் ஆகியவை தெற்கில் உள்ள மக்களை ஈர்த்தன

முற்காலத் தமிழர்கள் வாழ்க்கையில் முழுமையாக மூழ்கியிருந்தனர். ஆனால் ஆரம்பகால சங்க நூல்களில் இல்லாதது மற்றவர் மீதான வெறுப்பு.

இப்போது தமிழகம் முன்னேறி, தொழில் வளர்ச்சிக்கும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக மாறி வரும் நிலையில், நம்மிடையே ஊடுருவி வரும் அர்த்தமில்லாத வெறுப்புணர்வை கவனிக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இணைக்க ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படவுள்ள அதிதி (விருந்தினர்) என்ற செயலி உட்படப் பல முயற்சிகளைக் கேரள அரசாங்கம் எடுத்துள்ளன. அவர்கள் அனைவரும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணைப் பயன்படுத்திச் சுகாதார காப்பீடு உட்பட பல்வேறு நலத்திட்டங்களைப் பெற வழி செய்வது இந்த அதிதி செயலின் நோக்கம்.

ஏற்கனவே கேரளாவில் அதிதி இணையதளம் இருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் திட்டங்களும், தொழிலாளர்களுக்கே மலையாள மொழியில் வகுப்புகள் நடத்தவும் திட்டங்களும் உள்ளன.

இருப்பினும், சில தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள், திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், விருந்தினர் தொழிலாளர்களில் சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே பயனடைகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். தவிர, விருந்தினர் தொழிலாளர்களை நியாயமாகவும் பாகுபாடின்றியும் நடத்துமாறு கேரள அரசாங்கம் தன் மக்களைக் கேட்டுக் கொண்டாலும், ’வங்காளிகள்’ மீதான கேரள மக்களின் கண்ணோட்டம் சரியாகி விட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை

மேற்கு வங்கம், ஒரிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் கேரளா மக்கள் ‘பெங்காலி’ என்றுதான் அழைக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் விசயத்தில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival