Read in : English
சுமார் இரண்டாண்டாக ஆட்சியிலிருக்கும் திமுகவுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு பரீட்சை. அதேநேரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகுதியைத் தன்வசம் வைத்திருந்த தற்போதைய எதிர்க்கட்சியான அஇஅதிமுக அதை மீட்டெடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸைச் சார்ந்த திருமகன் ஈவேரா திடீரென்று காலமாகிவிட்டதால் தற்போது இங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு மாநகராட்சியின் 33 வார்டுகள் இருக்கின்றன. 238 தேர்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் நகர்ப்புறமயமான தொகுதி ஈரோடு கிழக்கு. ஈரோடு மாநகராட்சியின் முக்கியமான மொத்த காய்கறி, ஜவுளிச் சந்தைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இந்தத் தொகுதியில் இருக்கின்றன. அதனால் பெரும்பான்மையான வாக்காளர்கள் நடுத்தர வகுப்பினராகவும், தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள்.
திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாதி அரசியல் கணக்கு விளையாட்டில் ஈடுபட்டாலும், ஈரோட்டில் இருக்கும் பிரதான பிரச்சினையான உள்ளூர் – வெளியூர்க்காரர்களுக்கு இடையிலான போட்டி, புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கும் இடையிலான உரசல் ஆகியவற்றையும் தங்களின் பிரச்சார ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன.
பால்விலை, மின்கட்டணங்கள், சொத்துவரி உயர்வுகளால் ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு மனப்போக்கு இந்தத் தொகுதியில் நிலவுகிறது
எனினும் பால்விலை, மின் கட்டணங்கள், சொத்துவரி உயர்வுகளால் ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு மனப்போக்கும் இந்தத் தொகுதியில் நிலவுகிறது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஈரோடு கிழக்கின் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பேசாமல், எதிர்க்கட்சிகளின் உட்கட்சிப் பிரச்சினைகளைப் பற்றியும் தேசிய கட்சியுடன் எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் கூட்டணியைப் பற்றியும் மட்டுமே பரப்புரை நிகழ்த்துகிறது.
2021க்கு முன்பு ஈரோடு கிழக்குத் தொகுதியைத் தன்வசம் வைத்திருந்த அஇஅதிமுக, தொகுதிக்காக அப்போது செய்த பணிகள் பற்றி பரப்புரைகளில் பேசிக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கில் நிறைவேற்றப்பட்ட குடிநீர்த் திட்டம், மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்ட புதிய கட்டிடம், பல்துறை சார்ந்த மருத்துவச் சிகிச்சைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைக்கருகே கட்டப்பட்ட புதிய பாலம், பெரும்பள்ளம் ஓடையை அழகுப்படுத்திய திட்டம், ஓடையின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்ட காங்கிரீட் சுவர்கள், கனிராவுத்தர் குளம், எலப்பாளையம் நீர்நிலை போன்றவற்றைப் புதுப்பித்த திட்டங்கள், கனிச்சந்தை, காளைமாடுச் சிலை, ஈவிஎன் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட மாநகராட்சி வணிக ஜவுளிச் சந்தைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது அஇஅதிமுக.
மேலும் படிக்க:பெரியார் புகழை அறுவடை செய்யும் ஈவிகேஎஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குச் செய்ததாகப் பெரிதாக எதையும் திமுகவாலும் காங்கிரஸாலும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. காலஞ்சென்ற எம்எல்ஏ ஈவேரா ஒரு பொது வினியோக நிலையத்தைக் கட்டியமைக்க உதவி செய்தார். ஆனால் அது இன்னும் திறக்கப்படவில்லை.
ஈரோடு கிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. தோல் பதனிடும் நிலையங்களுக்காகவும் ஜவுளித்துறை நிறுவனங்களுக்காகவும் சாயப்பட்டறைகளும் பிளீச்சிங் ஆலைகளும் செயல்படுகின்றன; ஆனால் அவை சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றின் கழிவுகள் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, நரிப்பள்ளம் ஓடை ஆகிய நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன; ஏற்கனவே அந்த நீர்நிலைகள் நகராட்சியின் திடக்கழிவுகளால் மாசுபட்டிருக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளால் நோய்கள் அதிகரித்து உழைப்பாளி வர்க்கத்தின் மருத்துவச் செலவுகளும் அதிகரித்திருக்கின்றன.
இன்னொரு பிரச்சினை உச்சகட்ட நேரத்தில் ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெருக்கடிகள்.
ஆரம்பச் சுகாதார நிலையங்கள், ஆரம்பப் பள்ளிகள், குடிநீர்க் குழாய்கள், மழைநீர் வடிகால்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பல்வேறு வசதிகளையும், சேவைகளையும் மேம்படுத்தக் கோரி ஒரு பத்து அம்சக் கோரிக்கை மனுவை ஈரோடு கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் சிலமாதங்களுக்கு முன்பு சமர்ப்பித்திருந்தார் ஈவேரா. அந்தப் பத்து அம்சங்களும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகள் தான்.
திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஈரோடு கிழக்கின் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பேசாமல், எதிர்க்கட்சிகளின் உட்கட்சிப் பிரச்சினைகளைப் பற்றியும் தேசிய கட்சியுடன் எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் கூட்டணியைப் பற்றியும் மட்டுமே பரப்புரை நிகழ்த்துகிறது
பெரும்பான்மையான மக்களிடம் இந்த குடிமைப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் கட்சிகள் எதுவும் இவற்றைப் பற்றி பரப்புரைகள் நிகழ்த்துவதில்லை. இந்தப் பகுதியிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் கூட இந்தப் பிரச்சினைகளை ஆய்வு செய்து அதற்கேற்றாற் போன்ற கொள்கை மாற்றங்களைப் பரிந்துரை செய்து மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயல்வதில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அஇதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. இதுவரை இந்தத் தொகுதி காங்கிரஸ் வசத்தில் இருந்தாலும், தொகுதியில் காங்கிரஸுக்கு பெரிதாகச் செல்வாக்கு ஒன்றுமில்லை. திமுகவின் தோளில் ஏறித்தான் அது தேர்தலில் பயணிக்கிறது. தேமுதிக போன்ற சிறிய கட்சிகளுக்கு வாக்காளர்களிடம் செல்வாக்கு இல்லை. சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்த வாக்கு வங்கியைச் சிதறடிக்க மட்டுமே பயன்படும்.
மேலும் படிக்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக நிலை?
சமீபத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்பு கணக்கில் வராத பணம் ரூ.11 இலட்சம் கைப்பற்றப்பட்டது. தேர்தல் என்றாலே பொதுவாகப் பண நடமாட்டம் அதிகமாகத்தான் இருக்கும். பரிசுப் பொருட்கள், ரசீதுகள், சாராயம், உணவு, தங்க நாணயங்கள் என்று வாக்காளர்களுக்கு லஞ்சங்கள் அள்ளிக் கொடுக்கப்படுகின்றன. இந்தத் தீய நடைமுறைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
இந்த லஞ்சங்களை அடித்துப் பிடித்து வாங்கும் மும்முரத்தில் இருப்பதால் பல தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலைக்குச் செல்வதில்லை என்று புகார்கள் எழுந்திருக்கின்றன.
யார் ஜெயித்தாலும், எந்த வழியில் ஜெயித்தாலும், வெற்றி வித்தியாசம் பெரிதாக இருக்கச் சாத்தியமில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகளையும், வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படும் இலவசங்களையும் பரிசுகளையும் வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தேர்தல் ஒரு முன்மாதிரியான தேர்தலும் அல்ல; தீர்க்கதரிசனம் உள்ள ஆகப்பெரும் தலைவர் என்று யாரும் உருவாகப் போவதும் இல்லை.
இந்தியாவில் எந்தத் தேர்தல்தான் வித்தியாசமாக இருந்திருக்கிறது?
(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English