Read in : English
அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியானது. மொத்தம் 18 படங்கள் அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தன. அவற்றில் ஒரு படம் கூடக் குறைந்த முதலீட்டில் தயாரான படங்கள் இல்லை. எல்லாமே பெரிய படத் தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய நடிகர்கள் பங்குபெறும் திரைப்படங்களாக இருந்தன. தனுஷின் வாத்தி, விக்ரமின் தங்கலான், கார்த்தி நடித்த ஜப்பான், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் போன்றவை சில உதாரணங்கள்.
இந்தப் பட்டியலைப் பார்த்து அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்திருப்பார்கள். வீட்டில் சோபாவில் குடும்பத்தினருடன் அமர்ந்து தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்தைப் பார்த்து மகிழ்வது என்ற கற்பனை அவர்களைக் குதூகலப்படுத்தியிருக்கும். ஆனால், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் குறைந்த முதலீட்டுப் படங்களுக்கான வாய்ப்பு என்று நம்பியிருந்த திரைப்பட ரசிகர்களை இந்தப் பட்டியல் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியிருக்கும்.
இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்த தங்கலான் படத்தின் இயக்குநரான பா.இரஞ்சித், சமீபத்தில் பொம்மை நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை வெளியிடும் நடைமுறையில் உள்ள சிரமங்களைப் பற்றிக் கூறினார். அத்தகைய சிறிய படங்களைத் திரையரங்கில் வெளியிடுவதைவிட ஓடிடியில் வெளியிடுவது மிகவும் சவாலானது என்பதை சுட்டிக்காட்டினார்.
இன்னும் ஒரு படி மேலே போய், திரையரங்குகளில் பட வெளியீட்டில் காணப்பட்ட குறைந்தபட்ச ஜனநாயகத்தன்மைகூட இந்த ஓடிடி தளங்களில் காணாமல் போயிருப்பதை உணர்த்தும் வகையில் கருத்தைப் பகிர்ந்தார். பொதுவாக, ஓடிடி தளங்கள் என்பவை குறைந்த முதலீட்டுப் படங்களுக்கானவை என நம்பியிருந்த ரசிகருக்கு ரஞ்சித்தின் கூற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.
நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் திரையரங்குகளில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்ற அல்லது வெற்றி பெறும் வாய்ப்புள்ள படங்களையே வெளியிட்டார்கள் எனில், சிறிய படங்களின் நிலைமை என்னவாகும்
கொரோனோ பெருந்தொற்று திரையரங்குகளை மூடச் செய்திருந்த காலகட்டத்தில் பல தமிழ்ப் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகி ரசிகர்களுக்கு ஆசுவாசமளித்திருந்தன. அவற்றில் பல சிறிய படங்கள். திரையரங்குகளில் அதிக நாள்கள் ஓடியிருக்காத சிறிய படங்களை ஓடிடியில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெற்றிருந்தார்கள். ஏனெனில், ஓடிடியில் ஒரு படம் வெளியாகும்போது தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் அந்தப் படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொள்வார்கள்.
ஆனால், ஒரு படம் ஓடிடியில் வெளியிடப்படவில்லை என்றால், ரசிகரைச் சென்றடைய தொழில்நுட்பம் அளித்த ஒரு வாய்ப்பு அடைபட்டுவிடுகிறது.
நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் திரையரங்குகளில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்ற அல்லது வெற்றி பெறும் வாய்ப்புள்ள படங்களையே வாங்கி வெளியிட்டார்கள் எனில், திரையரங்குகளுக்குச் செல்ல முடியாத சிறிய படங்களின் நிலைமை என்னவாகும்? இப்படிச் சிறிய படங்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டியது ஏன் அவசியம் என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது.
மேலும் படிக்க:தமிழ் வெப் சீரிஸ்கள்: ஓடிடி தளங்களுக்கும் தமிழ் திரையுலகுக்கும் இடைவெளி ஏன்?
அடிப்படையில் திரைப்படங்கள் என்பது முதலீட்டைப் போட்டு லாபம் அடைய முயலும் ஒரு வியாபாரமே. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அதே நேரத்தில், கிடைக்கும் சிறிய வாய்ப்பில் கலைத்தன்மை கொண்ட மாறுபட்ட ரசனையின் அடிப்படையிலான படங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதற்குக் குறைந்த முதலீட்டுப் படங்களே உதவும். ஒரு பரிசோதனை முயற்சியை அதிக முதலீட்டில் தயாரிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அந்த முயற்சி வணிகரீதியிலான தோல்வியைத் தழுவும்போது ஏற்படும் பொருளாதார இழப்பைக் கருத்தில் கொண்டு, இயன்றவரை பொருளாதார இழப்பைக் குறைக்கப் பார்ப்பது எந்தத் தொழிலுக்கும் பொருந்தும் ஓர் அடிப்படையான அணுகுமுறை. அது திரைப்படத் துறைக்கும் பொருந்தும்.
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் எல்லாக் காலத்திலும் இப்படியான சிறிய படங்கள் உருவாக்கப்படுவதும் அவற்றில் சில பெரிய வெற்றியைப் பெறுவதும் இயல்பாக நடந்தேறும் நிகழ்வே. எண்பதுகளில் ஒரு தலை ராகம் தொடங்கி, தொண்ணூறுகளின் இறுதியில் சேது, இரண்டாயிரத்தின் பின்னே சுப்பிரமணியபுரம், சூதுகவ்வும், ஆரண்ய காண்டம், அண்மையில் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்ற லவ் டுடே வரை பல உதாரணங்களைக் காட்ட முடியும். இத்தகைய படங்கள் உருவாக்கப்படவில்லை; வெற்றியைப் பெறவில்லை என்றால் திரைப்படங்களில் சிறிய அளவிலான கலை முயற்சிகள் கூடத் தூர்ந்துபோய்விடக் கூடிய ஆபத்து உள்ளது.
திரையரங்குகளே திரைப்படங்களுக்கான வாய்ப்பாக இருந்த முந்தைய காலத்தில், பெரிய நடிகர்களின் படங்கள் அதிக நாள்கள் ஓடி வசூலை அள்ளும்; வெள்ளிவிழா நாயகன் என்றெல்லாம் நடிகருக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தமிழ்த் திரையுலகின் இன்றைய நிலை என்ன? படம் வெளியாகி இரண்டு மூன்று நாள்களில் படத்தின் வெற்றிவிழாவை நட்சத்திர விடுதிகளில் கொண்டாடி, கொண்டாட்டப் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுகிறார்கள்.
திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்கள் வெளியான காலத்தில் சிறிய படங்களும் வெளியாகும்.
பெரிய படங்களுக்குப் போய் டிக்கெட் கிடைக்காதவர்கள் இத்தகைய சிறிய படங்களைப் பார்ப்பார்கள். அவையும் பொருளீட்டும். இயக்குநர் ருத்ரய்யா உருவாக்கிய முதல் படமான அவள் அப்படித்தான் திரைப்படம் அப்படித்தான் 1978இல் ஒரு தீபாவளி நாளில் வெளியானது; இன்றளவும் அது தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஓர் அத்தியாயமாகக் குறிப்பிடப்படுகிறது.
இயக்குநர் பார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதையை வெளியிட்டபோது, பெரிய படங்களுக்குப் போய் டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்தப் புதிய படத்துக்கு வாருங்கள், வாய்ப்பு தாருங்கள் என்று விளம்பரப்படுத்தியே பெரிய வெற்றியைப் பெற்றார் என்பது வரலாறு.
கிடைக்கும் சிறிய வாய்ப்பில் கலைத்தன்மை கொண்ட மாறுபட்ட ரசனையின் அடிப்படையிலான படங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதற்குக் குறைந்த முதலீட்டுப் படங்களே உதவும்; ஒரு பரிசோதனை முயற்சியை அதிக முதலீட்டில் தயாரிக்க யாரும் விரும்ப மாட்டார்கள்
இந்தப் போக்கு இப்போது மாறிவிட்டது, ஒற்றைத் திரையரங்கு என்பது இப்போது சிற்றினமாக அருகிவிட்டது. பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளைக் கொண்ட வளாகங்களாகத் திரையரங்குகள் மாற்றப்பட்ட பின்னர், குறுகிய காலத்தில் பெரிய வசூலை எட்டிவிட வேண்டும் என இலக்கு வைத்துத் திரைப்படங்கள் செயல்பட வேண்டிய ஒரு சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. பெரிய படங்களுடன் இணைந்து சிறிய படங்கள் வெளியாகும் சூழல் இப்போது இல்லை. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது, பெரிய நடிகர்களது படங்களோ பெரிய நிறுவனங்களது படங்களோ மட்டுமே திரையிடப்படுகின்றன. அங்கே சிறிய படங்கள் வெளியிடப்படும் பேச்சுக்கே இடமில்லை.
இந்த மாதிரி சூழலில்தான் சிறிய படங்களுக்குச் செயற்கைக்கோள் அலைவரிசைகளும் சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களும் உதவி வந்தன. திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறாதபோதும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதன் மூலம் பொருளாதார லாபமும் கிட்டும்; கணிசமான பார்வையாளர்களையும் ஒரு படம் சென்றடைய முடியும். அண்மையில் ஒரு பொதுநிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியபோது, நான்கைந்து திரைகள் கொண்ட வணிக வளாகங்களில் ஒரு திரையிலாவது சிறிய படங்களை வெளியிட வேண்டும் என அரசு உத்தரவு போட்டால் சிறிய படங்கள் பிழைத்துக்கொள்ள வழியுண்டு என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஓ.டி.டி-யில் ஓடும் சினிமாவால் மூடிவிடுமா திரையரங்குகள்?
இதற்குச் சட்டரீதியாக என்ன வாய்ப்பு இருக்கிறது எனத் தெரியவில்லை. இந்தக் கோரிக்கையின் பின்னே சிறிய படங்களும் வெளிவர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதே உண்மை.
இப்படித் திரையுலகினர் முதல் ரசிகர்வரை ஆர்வம் காட்டும் சிறிய படங்களைக் காண்பதற்கான வாய்ப்புகளை நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் தக்கவைக்காதபோது ஏற்படும் இழப்பு ரசிகருக்கும் சிறிய படங்களை உருவாக்குபவருக்கும் மட்டுமே..!
Read in : English