Read in : English

திரையில் சொல்ல இயலாத, குறிப்பிட்ட பார்வையாளர்களை மட்டும் சென்றடைகிற, புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலான வாய்ப்புகளை ஓடிடி தளங்கள் வழங்கும்போது, தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்ற கேள்வி நீண்டகாலமாகத் துளைத்தெடுக்கிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி, இந்தி என்று பல மொழிகளில் ஓடிடி தளங்கள் புதிய திசையில் செல்வதற்கான பாதையாக பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா முழுக்க அறிமுகமானப் பல புகழ்பெற்ற படைப்பாளிகளைக் கொண்டிருந்தும், தமிழ் திரையுலகில் இருந்து குறிப்பிடத்தக்க வெப்சீரிஸ்கள் வெளியாகாதது ஏன் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

ஓடிடி வீச்சு!

‘உள்ளங்கைக்குள் உலகம்’ என்ற வார்த்தைகளைக் கேட்டபோது நகைத்தவர்கள் எல்லாம், இப்போது கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், கையில் கனக்கும் மொபைல் அதனை ஒவ்வொரு நொடியும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. உலகமே கைக்குள் சுருளும்போது பொழுதுபோக்கு அம்சங்கள் எம்மாத்திரம்? ஓடிடி தளங்கள் அதனைச் செயல்படுத்தும் கருவிகளாக மாறிச் சில ஆண்டுகளாகி விட்டன.

ஆங்கிலம் உள்ளிட்ட அயல்மொழிகளில் ஓடிடி தளங்களுக்காகவே பிரத்யேகமான திரைப்படங்கள் தயாரிக்கப்படும் வழக்கம், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை எட்டியுள்ளது. தனி ஆல்பங்களை வெளியிடும் இசையமைப்பாளர்களைப் போன்று, திரைக்கதையாசிரியர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மிகச்சுதந்திரமான படைப்பாக்கத்தை வெளிப்படுத்துவதற்கான இடமாக ஓடிடி தளங்களைப் பயன்படுத்தினர். தவிர, தொலைக்காட்சியிலும் குறிப்பிட்ட எபிசோடுகள் மட்டுமே கொண்ட சீரியல்களை உருவாக்கும் வழக்கமும் ஏற்கனவே இருந்ததால், அவற்றின் இன்னொரு பரிமாணமாகவே ‘வெப்சீரிஸ்கள்’ நோக்கப்பட்டன.

2018க்கு முன்னரே வெப்சீரிஸ்கள் வரத் தொடங்கிவிட்டாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அவற்றுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது

ஸ்பானிஷ் தொலைக்காட்சியொன்றில் தொடராக ஒளிபரப்பப்பட்டு, சில மாத இடைவெளிக்குப் பின் நெட்பிளிக்ஸ் மூலமாக உலகையே ஈர்த்த ‘மனிஹெய்ஸ்ட்’ இதற்கொரு உதாரணம். மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் படைப்பு முயற்சிகளை உடனடியாகப் பிரதிபலிக்கும் இந்தி திரையுலகம், ஓடிடி தளங்களையும் அவ்வாறே நோக்கியது. அதன் விளைவாக, கதை சொல்லலில் பெரும் மாற்றமே நிகழ்ந்தது.

சோதனைக்கான ஆய்வகம்!

ஓடிடி தளங்களை இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமாக மாற்றிய புண்ணியம் கொரோனா கால ஊரடங்குக்கு உண்டு. 2018க்கு முன்னரே வெப்சீரிஸ்கள் வரத் தொடங்கிவிட்டாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அவற்றுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

அனுராக் காஷ்யப்பின் ‘சேக்ரட் கேம்ஸ்’, ராஜ் டிகேவின் ‘பேமிலிமேன்’, ‘பாதாள் லோக்’, ‘மிர்ஸாபூர்’, ’கவுல்’, ’மேட் இன் ஹெவன்’, ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’, ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்’, ‘ஸ்கேம் 1992’, ‘ஹை’, ‘ஷீ’ என்று புகழ் வாய்ந்த இந்தி வெப்சீரிஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் சிலவற்றுக்கு இரண்டாம், மூன்றாம் பாகங்களும் கூட உண்டு. இப்படைப்புகள் சர்வதேச விருது விழாவில் வரிசைப்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றன.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, சோனிலிவ் என்ற முன்னணி தளங்கள் மட்டுமல்லாமல் பதின்பருவத்தினரை மட்டுமே குறிவைத்து இயங்கும் வூட், உல்லு போன்ற தளங்களும் கூட பிரபலமான படைப்புகளைத் தந்து வருகின்றன. எம்எக்ஸ் பிளேயர் தனக்கான தனித்துவமான பார்வையாளர் பரப்பைக் கொண்டுள்ளது.

புதிதாக ஒரு வெப்சீரிஸ் வெளியாகும்போது, ஏற்கனவே இருக்கும் தர வரிசை மாறிவிடுமோ என்று பதற்றப்படும் நிலை அங்கிருக்கிறது. இந்த வெப்சீரிஸ்களை ஒரே தராசில் வைத்தால், இந்தி தவிர்த்த பிற மொழிகளில் வெளியாகும் வெப்சீரிஸ்களின் எடை மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

இதற்கான காரணமாக, இந்தியில் வெளியான வெப்சீரிஸ்களின் இயக்குநர்கள், திரைக்கதையாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று ஏதேனும் ஒரு தரப்பினராவது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர்களாக இருப்பதைக் காண முடியும். அதாகப்பட்டது, திரையுலகில் ஏற்கனவே மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளின் நீட்சியாகவே இப்படைப்புகள் அமைந்தன.

நாவல் முயற்சிகள்!

ஒரு நாவல் அல்லது புதினத்தைப் படிக்கும்போது பல கிளைகள் கொண்ட ஒரு பெருவிருட்சத்தை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். பல கதாபாத்திரங்கள், பல்வேறுபட்ட களங்கள், பலவித உணர்வுகள் என்று எட்டுத்திக்கும் பாயும் குதிரைகளை ஒரு பிடியில் அடக்க அசாத்தியமான திறமை வேண்டும். எழுத்தில் வெளிப்பட்ட அத்தகைய கதை சொல்லலை காட்சியனுபவமாக மாற்றுவதற்கு அசாத்தியமான பொறுமையும் கலை நேர்த்தியும் தேவைப்படும். ஒரு திரைப்படம் உருவாக்குவதைப் போல இரண்டு அல்லது மூன்று மடங்கு உழைப்பைக் கொட்ட வேண்டிய அவசியமும் ஏற்படும்.

இதனாலேயே, ஏற்கனவே புகழ் பெற்றிருக்கும் நாவலின் உரிமையைப் பெற்று அல்லது அந்நாவலாசிரியரைக் கொண்டே திரைக்கதை அமைத்து பல வெப்சீரிஸ்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கே இன்னும் முழுதாகப் பதில் கிடைக்காத நிலையில், வெப்சீரிஸ்களில் ஏன் அத்தகைய முயற்சி நடைபெறவில்லை என்று கேட்பது அபத்தம்.

யூடியூப்பில் வெளியான தமிழ் வெப்சீரிஸ்களில் ‘லிவ் இன்’, ‘கால்கட்டு’ போன்ற படைப்புகள் காதலையும் எதிர்பாலின ஈர்ப்புக்குப் பின்னால் இருக்கும் உறவுப் பிணைப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தன. பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ வெளியானபோது, தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல இயக்குநர்கள் வெப்சீரிஸ் பக்கம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு உண்டானது. அது வரவேற்பைப் பெறாததால் அந்த எண்ணமும் அப்படியே அமுங்கிப் போனது. ’கைதி’ சூப்பர்ஹிட்டான சூட்டோடு லோகேஷ் கனகராஜின் வட்டாரத்தில் இருந்து வெளியான ‘வெள்ளராஜா’வும் அந்த வரிசையில் சேர்ந்தது துரதிர்ஷ்டமான விஷயம். வெங்கட்பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’, கொஞ்சம்கூட அவரது படைப்புக்கான சாயலை கொண்டிருக்கவில்லை.

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசனின் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ பரவலான வரவேற்பைப் பெற்றதால், அதன் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் முயற்சி தொடர்கிறது. ஒரு பிரபலமான அரசியல் தலைவரைப் பற்றிய கதை என்பதோடு, பல்வேறு திருப்பங்களோடு கூடிய திரைக்கதையும் அதற்குக் காரணமாக இருந்தது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த ‘நவம்பர் ஸ்டோரிஸ்’, தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளைச் சார்ந்த பார்வையாளர்களையும் ஈர்த்தது. இந்த வரிசை மிகச்சிறியது என்பதுதான் வருத்தமான விஷயம்.

அதே நேரத்தில் ‘புத்தம் புது காலை’, ‘பாவ கதைகள்’, ‘கசடதபற’ என்று ஆந்தாலஜி திரைப்படங்கள் ஒரு புதுவித ரசனையை விதைத்தன. பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’யின் பிரமாண்ட வெற்றி, தியேட்டர்களில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடியிலும் படங்களை வெளியிடலாம் என்ற யோசனைக்கு உரம் சேர்த்திருக்கிறது.

திரைப்படமானாலும், வெப் சீரிஸானாலும், ஓடிடி தளங்களில் போதுமான பட்ஜெட் இல்லை என்ற காரணம் படைப்பாளிகள் மத்தியில் அதிகமாகப் புழங்குகிறது

இதுவே, தமிழ் திரையுலகப் படைப்பாளிகள் ஓடிடி தளங்களில் திரைப்படங்களை உருவாக்குவதற்கு ஈடாக வெப்சீரிஸ்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்கிற வாதத்தை தானாக வலுவாக்கிவிட்டது.

பட்ஜெட் இல்லையா?!

திரைப்படமானாலும், வெப் சீரிஸானாலும், ஓடிடி தளங்களில் போதுமான பட்ஜெட் இல்லை என்ற காரணம் படைப்பாளிகள் மத்தியில் அதிகமாகப் புழங்குகிறது. ஒரு ‘பாகுபலி’யையோ, ‘பொன்னியின் செல்வனை’யோ, ‘எந்திரனை’யோ ஓடிடி தளங்களில் உருவாக்க முடியாவிட்டாலும் கூட, ஒரு படைப்பாளி சுதந்திரமாகத் தனது எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான பட்ஜெட் கண்டிப்பாகத் தேவை. இதனால் வேறு மொழிகளில் இருந்து தமிழில் ‘டப்’ செய்யப்படும் படைப்புகளைப் பார்த்தே திருப்திப்பட வேண்டியிருக்கிறது.

தமிழில் வெளியான ஆந்தாலஜி திரைப்படங்களின் பெருக்கமும் பிரபல்யமும் அதையே பறை சாற்றுகிறது. அதேநேரத்தில் தமிழில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட பல இயக்குநர்கள், இன்னும் ஓடிடி தளங்களின் வீச்சைப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

விருது வழங்கும் குழுவில் படைப்பாளிகள் இருக்கும் போன்றதொரு நிலைமை, ஓடிடி தளங்களில் வெப்சீரிஸ்களுக்கு அனுமதி தரும் இடத்தில் நிலவவில்லை என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது. இதனாலேயே மேற்கத்திய தாக்கம் கொண்ட படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலை இருப்பதாகவும், தமிழ் மற்றும் தமிழ்நாடு சார்ந்த படைப்புகளுக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது.

பார்வையில் மாற்றம்!

தொலைக்காட்சித் தொடருக்கும் திரைப்படத்திற்குமான இடைவெளியே வெப் சீரிஸுக்கான பரப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் அந்த பார்வையை மாற்றிக்கொள்ளாதவரை, தேவையானவற்றை பூர்த்தி செய்யாதவரை, தமிழில் குறிப்பிடத்தக்க வெப்சீரிஸ்கள் வெளியாவது தாமதமாகத்தான் செய்யும்.

உண்மையில், இவ்விரண்டையும் போலவே மிகச்சீரிய தனித்துவமும் இலக்கணமும் வெப்சீரிஸுக்கு உண்டு. வெடிக்காத கண்ணி வெடியாகத் தோற்றமளிக்கும் விஷயம், திரைக்கதையின் பின்பாதியில் புதையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திரையில் பரபரப்பு காட்டப்படாவிட்டாலும், பார்வையாளர்களிடம் அது தொற்றும் வகையில் கதை சொல்லலில் இறுக்கம் அதிகமாக வேண்டும். அப்போது, அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட்களை வாங்க வரிசையில் நிற்பதுபோல, ஒரே மூச்சில் தமிழ் வெப்சீரிஸ்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival