Read in : English
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது. தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தந்தை பெரியார் பெயர் உச்சரிக்கப்படாத தேர்தல் அரசியல் களத்தைத் தமிழ்நாடு கண்டதில்லை.
அதிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (74) அறிவிக்கப்பட்டதால் இந்தத் தொகுதிக்கும் பெரியாருக்குமான ரத்தவழி தொடர்பு உறுதிப்பட்டுள்ளது. ஏனெனில், பெரியாருடைய பேரன்தான் இளங்கோவன்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரிந்த செய்திதான் இது. ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையோ திராவிட இயக்கம் பற்றியோ பெரியார் பற்றியோ அதிகம் அறிந்திராத புதிய தலைமுறையினருக்கு இது புதுச்செய்தியாக அமையும். அவர்களுக்காக பெரியாரின் குடும்பத்தைப் பற்றி ஒரு சிறிய சித்திரத்தைக் கொடுப்பது இந்த நேரத்தின் தேவையாக இருக்கிறது. அதற்கு முன்னர் தற்போதைய வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தேர்தல் வரலாற்றைப் பற்றிச் சிறிது அறிந்துகொள்வோம்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சிக்காரர்; தனது அதிரடிப் பேச்சால் அரசியல் களத்தில் அடிக்கடி கவனத்தை ஈர்ப்பவர்
பெரியார் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து அது தமிழ்நாடு அறிந்த இயக்கமாக சமூகம்சார் பிரச்சினைகளில் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றபோதும், அவரது குடும்பத்தினர் எனப் பெரிதாக யாரும் இப்போது திராவிடர் கழகத்தில் பெரிய ஈடுபாட்டுடன் இயங்கவில்லை. இளங்கோவன் காங்கிரஸ் கட்சிக்காரர். அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர். தனது அதிரடிப் பேச்சால் அரசியல் களத்தில் அடிக்கடி கவனத்தை ஈர்ப்பவர்.
இளங்கோவனுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர்தான் அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான திருமகன் ஈவெரா. அவரது மறைவால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது. இன்னொருவர் சஞ்சய் சம்பத். அவர்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் கட்சி இளங்கோவனையே வேட்பாளராக அறிவித்தது. அவரும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, களத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக நிலை?
1984 சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இளங்கோவன். பிறகு 1989இல் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானி சாகர் தொகுதியில் போட்டியிட்டு 8,381 வாக்குகள் பெற்றுத் தோல்வியுற்றார். இப்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
2004இல் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார் இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஜவுளித் துறையின் இணை அமைச்சர் பொறுப்பையும் வகித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு நாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றியை இழந்த ஒரே வேட்பாளர் இளங்கோவன்தான். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திடம் 76,672 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
அதன்பிறகு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இவருடைய மகன் திருமகன் ஈவெரா காங்கிரஸ் வேட்பாளராக நின்று அதிமுகவின் யுவராஜை வென்றார். திருமகனது அகால மறைவால் அந்தத் தொகுதியில் இளங்கோவனே போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இப்போது இளங்கோவனுக்கும் பெரியாருக்குமான ரத்தவழி உறவு பற்றிப் பார்ப்போம்.
தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையோர் தந்தை பெரியார் எனக் குறிப்பிடும் ஈ.வெ.ராமசாமியின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர், தாய் சின்னம்மாள். பெரியாரின் பெற்றோருக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்து இறந்துபோய்விட்டனர். 1877 செப்டம்பர் 28 அன்று பெரியாரின் தமையனான கிருஷ்ணசாமி பிறந்தார். அதன் பின்னர் 1879 செப்டம்பர் 17 அன்று ராமசாமி பிறந்தார். அதன்பின்னர் அவரது தங்கைகளான பொன்னுத்தாயம்மாள் 1881லும் கண்ணம்மாள் 1891லும் பிறந்தனர்.
பெரியார் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து அது தமிழ்நாடு அறிந்த இயக்கமாக சமூகம்சார் பிரச்சினைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றபோதும், அவரது குடும்பத்தினர் யாரும் இப்போது திராவிடர் கழகத்தில் பெரிய ஈடுபாட்டுடன் இயங்கவில்லை
பெரியாருடைய அண்ணன் கிருஷ்ணசாமி வைத்திய வள்ளல் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தார். இவருடைய முதல் மனைவி நாகம்மாள் வாயிலாகப் பிறந்த மகன் ரங்கராம் இங்கிலாந்தில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, 20ஆம் வயதில் இறந்துவிட்டார். தாயாரம்மாள் என்ற மகள் இவருக்கு இருந்தார். இரண்டாம் மனைவியான ரங்கராஜ் அம்மாள் வாயிலாக மிராண்டா, சம்பத், செல்வராஜ், செல்லாம் கஜராஜ் என்று மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர்.
இந்த சம்பத் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு நன்கு அறிந்திருக்கும் ஈ.வி.கே.சம்பத். வழக்கறிஞரான சம்பத்துடைய மனைவி சுலோசனா சம்பத். இவர் அதிமுகவில் கட்சிப் பணியாற்றினார். ஈ.வி.கே.சம்பத் – சுலோசனா சம்பத் தம்பதியின் மகன்தான் தற்போதைய ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இளங்கோவனுக்கு மதிவாணன், இனியன் சம்பத், கவுதமன் ஆகிய மூன்று சகோதரர்களும், நாகம்மாள், அன்பு எழில் என்ற இரு சகோதரிகளும் உண்டு.
பெரியாரின் தங்கை கண்ணம்மாளுடைய கணவர் எஸ்.இராமசாமி நாயக்கர். இந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. என்றாலும், இராமசாமி நாயக்கரின் இரண்டாம் மனைவியான பொன்னம்மாள் மூலமாக ராஜாத்தி என்ற சுப்புலட்சுமி, காந்தி, சரோஜினி என்ற மகள்களும், சந்தானம், சாமி என்ற மகன்களும் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கண்ணம்மாளுடைய குழந்தைகளாகவே கருதப்பட்டனர். பெரியாரின் இன்னொரு தங்கையான பொன்னுத்தாயம்மாளை எஸ்.இராமசாமி நாயக்கரின் அண்ணன் கல்யாணசுந்தரம் நாயக்கர் மணந்திருந்தார்.
மேலும் படிக்க: மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?
இந்தத் தம்பதிக்கு அம்மாயி அம்மாள், அப்பய்யன் என்ற இரு மக்கள் பிறந்தனர். பொன்னுத்தாய் அம்மாள் 25 வயதிலேயே மறைந்துவிட்டார். தங்கை மகளான அம்மாயி அம்மாள் கைம்பெண்ணாகிவிட பெரியார் அவருக்கு மறுமணம் நடத்தி வைத்துள்ளார்.
1922இல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் பெரியார் கைதாகி சிறை சென்றதை அடுத்து பெரியாருடைய மனைவி நாகம்மையாரும் கண்ணம்மாளும் தலைமை ஏற்று மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இது பற்றிய செய்தி 1922 ஜனவரி 19 அன்று இந்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது. பெரியாரின் மனைவியான நாகம்மையார் 1933 மே 11இல் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். இந்த விவரங்களை எல்லாம், தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு நூலில் கவிஞர் கருணானந்தம் விரிவாக எழுதியுள்ளார்.
அன்று முதல் இன்று வரை பெரியாருடைய குடும்பத்தினரில் சிலர் அரசியல் ஈடுபாட்டுடன் இருந்திருக்கிறார்கள். இளங்கோவனுடைய தந்தையான ஈ.வி.கே.சம்பத் பெரியாரின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டார். ஆனால், பெரியாருடன் கருத்து மாறுபட்டு அண்ணாவுடன் அவர் திமுகவுக்கு வந்ததால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று.
அண்ணாவுடனும் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன் போன்றவர்களுடன் இணைந்து அவர் தமிழ் தேசியக் கட்சியை 1962 ஏப்ரல் 19 அன்று தொடங்கினார். அந்தக் கட்சி 1962 தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், வெற்றி வாய்ப்பு ஓரிடத்தில்கூட கிடைக்கவில்லை. பின்னர் 1964இல் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார்.
இளங்கோவன் 2004இல் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்; காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஜவுளித் துறையின் இணை அமைச்சர் பொறுப்பையும் வகித்திருக்கிறார்
ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியான சுலோசனா சம்பத் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தார். இவர் 2015இல் காலமானார். இவருடைய மகனும் இளங்கோவனின் தம்பியுமான இனியன் சம்பத்தும் அதிமுகவில் இருந்து செயல்பட்டார்.
இப்படியாகப் பெரியார் வழியில் வந்த சம்பத் தொடங்கி இளங்கோவன் வரை பலர் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். ஈ.வி.கே.சம்பத் ஓரளவு கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டார்; புது வாழ்வு இதழில் க.அன்பழகனுடன் இணைந்து பணியாற்றினார்.
நாடாளுமன்றத்தில் இந்தியா ஒரு நாடல்ல பல நாடுகளைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் எனப் பேசியதை 1957 செப்டம்பர் 15 தேதியிட்ட ’திராவிட நாடு’ இதழில் அண்ணா பாராட்டி எழுதியுள்ளார்.
ஆனால், பெரியார் வலியுறுத்திய கடவுள் மறுப்பு, சமூக நீதி, சுய மரியாதை, பெண்ணுரிமை ஆகிய அம்சங்களில் தோய்ந்தவர் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். பெரியார் கொள்கைக்கு ஒத்துவராத பலவற்றைச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் இளங்கோவன். அவை எல்லாம் இப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் இப்போதைய வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் மக்கள் நீதி மய்யம் அதன் ஆதரவு அறிக்கையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பேரன் என்றே குறிப்பிட்டுள்ளது. ஆக, கொள்கைரீதியாகப் பெரியாருக்கெனப் புகழ் எதையும் தேடித் தராத இளங்கோவன் பெரியாரின் புகழை அறுவடை செய்து கொள்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
Read in : English