Read in : English
ஒன்றிய அரசின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கை வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு செயற்பாடுகளையும் எதிர்காலச் சவால்களையும் வாய்ப்புகளையும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விசயங்களின் பின்புலத்தில் ஆய்வு செய்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் உறுதியளித்திருந்த மாநிலப் பொருளாதார ஆய்வு அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. ஆதலால் ஒன்றிய அரசின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி தமிழ்நாடு எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற பின்தங்கிய மாநிலங்கள் கூட வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளிவிட்டிருக்கின்றன. ஆனால் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியையும் புள்ளிவிவரங்களோடு ஆராய்ச்சி செய்யும் பொருளாதார ஆய்வு அறிக்கை தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை.
2022-23க்கான ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு 2022ல் தமிழ்நாடு கொண்டுவந்த சொத்து வரி சீர்திருத்தங்களையும், மின்கட்டண உயர்வையும் குறிப்பிட்டிருக்கிறது. மின்சார உற்பத்தி செலவுக்கும் மின்வழங்கல் கட்டணங்களுக்கும் இடையில் நிலவிய வித்தியாசத்தைச் சரிசெய்யும் விதமாக தமிழ்நாடு மின்கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது.
தொழில் உறவுகள், பணியிடங்களில் பாதுகாப்பு ஆரோக்கியம் ஆகிய விசயங்களில் ஒன்றிய அரசின் ஆணைக்கேற்ப தமிழ்நாடு சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் உறுதியளித்திருந்த மாநிலப் பொருளாதார ஆய்வு அறிக்கை இன்னும் வெளிவரவில்லை
2020ஆம் ஆண்டு தொழில் உறவுகள் நியதிகளையும், 2019ஆம் ஆண்டு சம்பளங்கள் நியதிகளையும் மேற்கொள்ளும் முகமாக வரைவு விதிமுறைகளையும் தமிழ்நாடு முன்னமே வெளியிட்டிருக்கிறது. அதைப் போல 2020ஆம் ஆண்டு பணியிடப் பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் நிலவும் சூழல் பற்றிய நியதிகளை மேற்கொள்வதற்கான வரைவு விதிமுறைகளையும் தமிழ்நாடு வெளியிட்டிருக்கிறது. எனினும் 2020ஆம் ஆண்டு சமூகப் பாதுகாப்பு நியதிகளை தமிழ்நாடு இன்னும் வெளியிடவில்லை. மற்ற மாநிலங்கள் அதை வெளியிட்டுவிட்டன.
பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டிருக்கும் 2019-20ஆம் ஆண்டு வருடாந்திர தொழில்கள் ஆய்வுப்படி, ஆலைகளில் பணி செய்யும் மக்கள் நாட்டிலே தமிழ்நாட்டில்தான் மிக அதிகம்: தமிழ்நாட்டில் 26.6 இலட்சம்; குஜராத்தில் 20.7 இலட்சம்; மகாராஷ்டிராவில் 20.4 இலட்சம்; உத்தரப்பிரதேசத்தில் 11.3 இலட்சம்; கர்நாடகத்தில் 10.8 இலட்சம்.
மேலும் படிக்க: சீராகுமா தமிழ்நாடு பொருளாதாரம்?
18 முதல் 25 வயது வரையிலான மக்கள்தான் கட்டமைக்கப்பட்ட துறையில் சேமநல நிதி பிடித்தம் செய்யும் நிறுவனங்களில் மிக அதிகமாகப் பணி செய்கிறார்கள். பின்வரும் மாநிலங்களில் சேமநல நிதியில் சேர்ந்திருக்கும் பல்வேறு நிறுவனப் பணியாளர்கள் இருக்கிறார்கள்: மகாராஷ்டிரா (21.4%); கர்நாடகம் (12.1%); தமிழ்நாடு (10.9%); ஹரியானா (9.0%); குஜராத் (8.4%); டில்லி (7.6%). ஊழியர் சேமநல நிறுவனத்தில் சேமிப்பைக் கொண்டிருக்கும் மொத்த ஊழியர்களில் 70 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாநிலங்களில் இருக்கிறார்கள்.
மருத்துவ வசதி மேம்பாட்டில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபையின் தொடர் முன்னேற்ற இலக்குகள் விதித்திருக்கும் இலட்சியங்களை வெற்றிகரமாக அடைந்திருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உதாரணமாக, ஒரு இலட்சம் மகப்பேறுகளில் 100க்கும் குறைவாக தாய் மரண விகிதங்கள் 2020ஆம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சபை இலக்கு விதித்திருந்தது. எட்டு மாநிலங்களில் இந்த மகப்பேறு தாய் மரணவிகிதம் ஒரு இலட்சத்திற்கு 70க்கும் கீழே இறங்கிவிட்டன. இந்த இலக்கை அடைவதற்கான காலக்கெடு 2030 ஆகும். ஆனால் அதற்கு முன்னே இலக்கை எட்டிவிட்டன இந்த எட்டு மாநிலங்கள். அவை பின்வருமாறு: கேரளா (19), மஹாராஷ்டிரா (33), தெலங்கானா (43), ஆந்திரப் பிரதேசம் (45), தமிழ்நாடு (54), ஜார்க்கண்ட் (56), குஜராத் (57) மற்றும் கர்நாடகம் (69).
மஹாராஷ்டிராவையும் கேரளாவையும் முன்னுதாரணங்களாகக் கொண்டு தமிழ்நாடு இந்த விசயத்தில் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பரம்பரகாட் கிரிஷி விகாஸ் யோஜனாவின் உபதிட்டமான பாரதீய பிரகிரதிக் கிரிஷி பதாத்தி திட்டத்தின் கீழ், முன்னணி விவசாயிகள் மூலம் இயற்கை விவசாயத்திற்குப் பெரும்பங்களித்த எட்டு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முன்னேற்றத்தைத் துரிதகதியில் முன்னெடுத்துச் செல்லும்
மற்ற ஏழு மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கார், கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம். இந்த மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக 4.09 இலட்சம் ஹெக்டேர் நிலத்தை இயற்கை விவசாயத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன. பூஜ்ஜியம் செலவில் நம் நாட்டின் பாரம்பரியமான இயற்கை விவசாயம் 2019-20ல் ஆரம்பிக்கப்பட்டது.
விவசாயிகளைக் கவர்ந்திழுத்ததில் உலகத்திலே ஆகப்பெரிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக விளங்குகிறது, இந்தியாவின் பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 5.5 கோடி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பிரீமியத் தொகைக் கணக்கில் இந்தத் திட்டம் மூன்றாவது ஆகப்பெரிய திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் 100 சதவீதத்திற்கும் மேல் நட்ட ஈடு பெற்ற மாநிலங்கள் பின்வருமாறு: சட்டிஸ்கார் (2017 – 384%), ஒடிசா (2017 – 222%), தமிழ்நாடு (2018 – 163%), ஜார்க்கண்ட் (2019 – 159%).
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொழில்கள் பெரிதாக வளராமல் இருப்பதேன்?
கூட்டுறவுத் துறையில் தமிழ்நாடு 126 சங்கங்களோடு நாட்டில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மற்ற மாநிலங்கள்: மஹாராஷ்டிரா (661), டில்லி (159) மற்றும் உத்தரப் பிரதேசம் (156). 1984ஆம் ஆண்டின் மல்டி ஸ்டேட் கோஆப்பரேட்டிவ் சட்டத்தை ஒழித்துவிட்டு 2002ல் கொண்டு வரப்பட்டது மல்டி ஸ்டேட் கோஆப்பரேட்டிவ் சங்கங்களின் சட்டம். இந்தப் புதிய சட்டத்தின்படி, கூட்டுறவுக் கொள்கைகளுக்கேற்ப கூட்டுறவு சங்கங்களில் சுயாட்சித்தன்மையோடு கூடிய ஜனநாயகச் செயற்பாடுகள் நிலவின.
வெவ்வேறான மாநிலங்களின் ஊடான எளிதான போக்குவரத்து விசயத்தில் தமிழ்நாடு 2022ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உத்தரப்பிரதேசம் 90 சதவீதத்தோடு முதலிடத்தைப் பிடித்தது.
நாட்டில் தொலைதொடர்பு வசதி்கள் அபாரமாக முன்னேறியிருக்கின்றன. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைபேசி பயனர்கள் எண்ணிக்கை 117 கோடி ஆகும். அவர்களின் 97 சதவீதத்தினர் வயர்லெஸ் தொடர்பு பெற்றவர்கள் (2022 நவம்பர் நிலவரப்படி அவர்கள் 114.3 கோடி பேர்). 2022ஆம் ஆண்டு ஜூன் நிலவரப்படி, இணையத் தொடர்பு பெற்றவர்கள் 83.7 கோடி பேர். இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது 84.8 சதவீதத்தில் இருக்கிறது. மாநிலங்களில் இது வித்தியாசப்படுகிறது. பீகாரில் இது 55.4 சதவீதம்; டில்லியில் 270.6 சதவீதம். தமிழ்நாடு உட்பட எட்டு உரிம சேவைப் பகுதிகள் 100க்கும் மேலான சதவீதத்தில் தொலைதொடர்பு அடர்த்தியைக் கொண்டிருக்கின்றன. மற்ற ஏழு பகுதிகள்: டில்லி, மும்பை, கொல்கத்தா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் கர்நாடகம்.
தொலைதொடர்பு விசயத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் இடையிலான பேதம் குறைந்திருக்கிறது. கிராமங்களில் தொலைதூரப் பகுதிகளிலும் இப்போது மின்னணு சேவைகள் கிடைக்கின்றன.
ஒன்றிய அரசின் வருடாந்திரப்பொருளாதார ஆய்வு அறிக்கையில் உள்ள “இந்தியாவின் நடுத்தர காலத்து வளர்ச்சி வாய்ப்பு: நம்பிக்கையும் இலட்சியமும்” என்ற அத்தியாயம் சொல்வது இதுதான்: “மின்துறையின் பிரச்சினைகளையும், மின்சாரப் பங்கீட்டு நிறுவனங்களின் நிதி ஸ்திரப் பிரச்சினைகளையும் மாநில அரசுகள் அலசி ஆராய்ந்து தீர்க்க வேண்டும்.“
தமிழ்நாட்டில் மின்துறையின் நெருக்கடி பல ஆண்டுகளாகத் தெரிந்த ஒரு பிரச்சினைதான். ரிசர்வ் வங்கியின் சமீபத்து அறிக்கைகள் மின் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு நிறுவனமயமான ஸ்திரத்தன்மையைக் கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இந்தப் பொருளாதார ஆய்வு அறிக்கை இப்படிச் சொல்கிறது: “அதிகரிக்கப்பட்ட முதலீட்டு செலவீனங்கள் மூலம் உட்கட்டமைப்பை உருவாக்குவதில் இருக்கும் அர்ப்பணிப்பு ஆதரவினாலும், பலமான பெரிய பொருளாதார அடிப்படைகளாலும் இந்தியாவால் இப்போதைய நிலையைச் சமாளித்து வெற்றி பெற முடியும்.”
இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது 84.8 சதவீதத்தில் இருக்கிறது; தமிழ்நாடு உட்பட எட்டு உரிம சேவைப் பகுதிகள் 100க்கும் மேலான சதவீதத்தில் தொலைதொடர்பு அடர்த்தியைக் கொண்டிருக்கின்றன
தேச வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்வதின் மூலமும், மறைதிறன்களை கண்டெடுத்து வளர்த்தெடுப்பதின் மூலமும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரோடும் பங்கீடு செய்யக்கூடிய செல்வ வளத்தை உருவாக்குவதில் பிராந்திய பொருளாதாரங்களுக்குப் பெரியதொரு பங்கு இருக்கிறது.
”மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முன்னேற்றத்தைத் துரிதகதியில் முன்னெடுத்துச் செல்லும்” என்று ஒன்றிய அரசின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கை வலியுறுத்திச் சொல்கிறது.
அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் தமிழ்நாடு செயல்படுகிறதா என்பதைக் காலம் சொல்லும் அல்லது வருமென்று உறுதியளிக்கப்பட்டிருக்கும் மாநிலப் பொருளாதார ஆய்வு அறிக்கை சொல்லும்.
(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English