Read in : English

2023 ஜனவரியில் முதன்முதலாக இரட்டை சிலிண்டர் பொருத்திய சொகுசு மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்ட். உள்ளூர் மற்றும் உலகச் சந்தையைப் பிடிக்கும் நோக்குடன் தமிழ்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இந்த ராயல் சூப்பர் மீட்டியோர் 650 வாகனம்.

இந்தியாவில் இருக்கும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் தேவைகள் மற்ற நாடுகளில் இருப்பதைப் போன்றதல்ல. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இந்தத் துறை பெரும்வளர்ச்சி கண்டிருக்கிறது. அதற்குக் காரணம், மோட்டார்சைக்கிளில் பயணம் செய்யப் பிரியப்படும் வீரதீர இளைஞர்களும், மூத்தோர்களும் தான்.

நீண்டகாலமாக இந்திய சொகுசு மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணியில் நிற்கிறது ராயல் என்ஃபீல்ட். கிளாசிக், எலெக்ட்ரா, தண்டர்பேர்டு, மீட்டியோர், இண்டெர்செப்டர் மற்றும் புகழ்பெற்ற ஸ்டாண்டர்டு புல்லட் என்று பல்வேறு மாடல்களை கொண்டுவந்துள்ளது.

எய்ச்சர் ராயல் என்ஃபீல்டுக்கு மற்றுமொரு வாய்ப்பு நல்கியதால், சிறப்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு மேம்பட்ட மாடல்களை உருவாக்கி வெளியிட்டது என்ஃபீல்டு. இப்படியே முன்னேறி ராயல் என்ஃபீல்டு இப்போதைய நிலையை அடைந்திருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு புதிய பைக்குகளின் விலைகள் முந்தைய மாடல்களை விட மிகவும் செளகரியமான ஓட்டத்தினை அல்லது செம்மைப்படுத்தப்பட்ட திறன்களைச் சார்ந்திருக்கின்றன. அதே சமயத்தில் வடிவமைப்பு நேர்த்தி அம்சங்கள் நன்றாக வேரூன்றி இருக்கின்றன. சமீபகாலமாக, என்ஃபீல்டு மற்ற இந்திய பிராண்டுகளின் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

நீண்டகாலமாக இந்திய சொகுசு மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணியில் நிற்கிறது ராயல் என்ஃபீல்ட்;  கிளாசிக், எலெக்ட்ரா, தண்டர்பேர்டு, மீட்டியோர், இண்டெர்செப்டர் மற்றும் புகழ்பெற்ற ஸ்டாண்டர்டு புல்லட் என்று பல்வேறு மாடல்களை கொண்டுவந்துள்ளது

ஜாவா மற்றும் யெஜ்டி வண்டிகளின் புத்தாக்கமும், ஹோண்டா, சுசூகி, கவாசாகி, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் நுண்மைமிக்க மாடல்களும் என்ஃபீல்டை அடக்கி வைத்திருந்தன என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. உதாரணமாக, ஜாவாவின் வெளியீடும் என்ஃபீல்டின் இண்டர்செப்டார் 650இன் வெளியீடும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. ஆனால் ஜாவா இந்தியாவில் இரட்டை சிலிண்டர் கட்டமைப்பை வெளியிடவில்லை.

ஆனால் செக்கோஸ்லோவாகியா குடியரசு நாட்டில் இரட்டை சிலிண்டர் ஆற்றலில் ஓடும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றன. அவை ஆர்விஎம் 500 ஸ்கிராம்பளர் மற்றும் அட்வெண்ட்சர் மாடல்கள். ஸ்கிராம்பளர் பிலிப்பைன்ஸில் இயங்கும் ‘பிரிஸ்டல் மோட்டார்சைக்கிள்ஸ்’ என்ற நிறுவனத்தின் கூட்டோடு தயாரிக்கப்பட்டது.

மேலும் படிக்க: ராயல் என்ஃபீல்டு: உலகம் சுற்றும் வாலிபன்!

ஜாவா ஆர்விஎம் 500 பிரிஸ்டல் வெளோஸ் 500 மாடலைப் போலவே இருந்தது. இரட்டை சிலிண்டர் ஜாவாவின் இன்னொரு சிறந்த மாடல் 640 ஸ்போர்ட்; அது 350 சிசி இரட்டை உந்துதல் கொண்ட ஆற்றல் வாகனம்.

தனது உற்பத்தி தரத்தை மேம்பட்ட ஆராய்ச்சிகளால் உயர்த்திக் கொண்ட என்ஃபீல்டு புத்தம்புதிய சிறப்பான மாடல்களைக் கொண்டுவந்திருக்கிறது.

. கிளாசிக் ஜாவா 640 ஸ்போர்ட்

சூப்பர் மீட்டியோர் 650
2018ல் இண்டர்செப்டார் 650 மாடலை என்ஃபீல்டு வெளிக்கொண்டு வந்தது. அப்போதிருந்து இரட்டைச் சிலிண்டர் பொருத்தப்பட்டு உற்சாகமூட்டும் வேகத்தில் ஓடுகின்ற ஓர் எந்திர வாகனம் உருவாகாதா என்ற ஏக்கம் இந்திய மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இண்டர்செப்டார் 650 தெருவில் ஓடுகிற, வழமையான, நடுத்தர எடை கொண்ட சாதாரண மாடல்தான்.

ஆனால் சூப்பர் மீட்டியோர் 650 அப்படியல்ல. நிதானமான பதற்றமில்லாத சவாரி சுகத்தைத் தரக் கூடியது இது. இணைந்து செல்லும் இரட்டை எஞ்சின் (650) கொண்டு நெடுஞ்சாலைகளுக்கேற்ற முறுக்குவிசையோடு இயங்கும் வல்லமை படைத்தது சூப்பர் மீட்டியோர் 650.

ஹார்லே டேவிட்சனுக்கு இணையான பாணி கொண்டது, மென்மையாக வழுக்கியோடும் இந்த சொகுசு மோட்டார்சைக்கிள். என்றாலும், 1940 மற்றும் 1950களில் உள்ள அசலான மீட்டியோர் மாடல்களான மீட்டியோர் 700, சூப்பர் மீட்டியோர் 700 ஆகியவற்றிலிருந்து இரவல் வாங்கப்பட்ட வடிவமைப்புகளின் தடயங்கள் ஏதும் சூப்பர் மீட்டியோர் நவீன மாடலில் இல்லை.

கிளாசிக் மீட்டியோர்

மீட்டியோரின் 350 சிசி வகையறா என்பது தண்டர்பேர்டை மேம்படுத்தும் முயற்சிதான். ஆனால் சூப்பர் மீட்டியோர் மாடல் மீட்டியோர் வகையின் ஆகச்சிறந்த வடிவம். தண்டர்பேர்டு எக்ஸை போல திடகாத்திரமான கட்டமைப்பு கொண்டது சூப்பர் மீட்டியோர்; ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் சூப்பர்லோ 883 மாடலில் இருந்து இரவல் வாங்கப்பட்ட வடிவமைப்பு அம்சங்களின் பிரதிபலிப்பைக் கொண்டது சூப்பர் மீட்டியோர்.

இந்த மோட்டார்சைக்கிள் ஆகச்சிறந்த மாஸ்டர்பீஸ் என்பதால் இதன் விலை சரியானதுதான். ரூ.4 இலட்சத்திற்குக் கீழான விலையில் கிடைக்கும் இந்த மாடல் மிகவும் சல்லிசான நடுத்தர எடை கொண்ட மாடல். இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்பட்டதால் இதன் விலை குறைவு.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ஸ்லோவாக்கியா, செர்பியா மற்றும் செக்கோஸ்லோவாகியா ஆகிய வெளிநாடுகளில் இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு எகிறிப் போயிருக்கின்றன.

சூப்பர் மீட்டியோர் 650 பதற்றமில்லாத சவாரி சுகத்தைத் தரக் கூடியது; நெடுஞ்சாலைகளுக்கேற்ற முறுக்குவிசையோடு இயங்கும் வல்லமை படைத்தது

இரண்டு சூப்பர் மீட்டியோர் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட காணொலிக் காட்சி ஒன்று சென்னையிலிருந்து வெளியாகியிருக்கிறது. சாலைப் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியபோது, இரண்டு சூப்பர் மீட்டியோர் வாகனங்களின் பரிசோதனை ஓட்டத்தைப் படம் பிடித்திருக்கிறார் ஒரு வாகன ஓட்டி.

எவ்வளவு சிறந்தது?
பல மைல்களை அநாயசமாகக் கடந்து தொலைதூரத்தைத் தாண்டிச் செல்லும் அதிதிறன் படைத்தது இந்த சூப்பர் மீட்டியோர் 650. சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட மின், எந்திரவியல் கூறுகள் இதை நிலையான, நவீனபாணியிலான அதிதிறன் மோட்டார்சைக்கிளாக மாற்றியிருக்கின்றன. மத்தியப் பகுதி குறுகலாக இருப்பதால் வாகனத்தை எளிதில் மாற்றி மாற்றி இயக்க முடியும்.

இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது சில அம்சங்கள் ஓட்டுனருக்குத் தெளிவாகும். உதாரணமாக, சாலையை விட்டு விலகிப் போக இந்த வண்டியால் முடியாது. அப்படியே விலகிப் போனாலும், வாகனத்திற்குள் இருக்கும் ‘பாஷ் பிளேட்’ எஞ்ஜினையும், கட்டமைப்பையும், புகைப்போக்கிக் குழாயையும் பாதுகாக்கும். மேலும், குன்று போன்ற மேடான பகுதியில் செல்லும்போது ஓட்டுநர் கவனமாக இல்லாவிட்டால், தாழ்வான இந்தப் பைக் மேட்டில் மோதிவிடலாம்.

மேலும் படிக்க: எரிபொருள் சிக்கனத்துக்கா, சென்னை ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம்?

ஆனால் சாலைகளில் ஓடும்போது சூப்பர் மீட்டியருக்குத் தொல்லை கொடுக்கும் விசயங்கள் ஒன்றும் இல்லை. 240 கிலோ எடைகொண்ட இந்த வாகனம் நெடுஞ்சாலையில் அற்புதங்கள் நிகழ்த்தக் கூடியது. வழமையான இண்டர்செப்டார் 650யின் எடை 200 கிலோ. 40 கிலோ எடையைக் கூடுதலாகப் பெற்றிருக்கும் சூப்பர் மீட்டியர் மேம்பாலங்களில் செல்லும்போது வீசும் எதிர்க்காற்றை, பிற வாகனங்களான பேருந்து, டிரக் ஆகியன கடந்து செல்லும்போது படபடக்கும் குறுக்குத்திசைக் காற்றை எதிர்கொண்டு தாக்குப் பிடிக்கும்.

மனிதன்-எந்திரம் தொடர்புவியல்படி பார்த்தால் சூப்பர் மீட்டியர் இந்திய பைக் மாடல் மரபை மீறிய வகையறா ஆகும். ஆனால் பல மைல் தூரம் அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக இந்த வாகனத்தை இயக்கலாம். ஆனால் இந்த வாகனத்தில் எந்திரங்களுக்குப் பதில் சென்சார் போன்ற மின்னணு கருவிகளைப் பயன்படுத்தும் ‘ரைடு பை வயர்’ தொழில்நுட்பமும், மின்னணு எஞ்ஜின் வேகக்கட்டுப்பாட்டு அமைப்புகளும் இல்லை. அவை பொருந்தப்பட்டால் வாகனங்களின் விலை அதிகமாகிவிடும்.

இதிலிருக்கும் புகைப்போக்கி அம்சம் இண்டர்செப்டார் போலத்தான் இருக்கிறது. ஆயினும் சற்று மென்மையானது. இரண்டுக்கும் இடையிலான புகைப்போக்கி அம்சங்கள் தெளிவான வித்தியாசம் கொண்டவை. ஒருவேளை சூப்பர் மீட்டியர் வேறுமாதிரியாக டியூன் செய்யப்பட்டிருக்கலாம். இரண்டு பைக்குகளிலும் எஞ்சின் ஒரே மாதிரியான ஆற்றல் வெளிப்பாட்டைத் தான் கொண்டிருக்கிறது.

சூப்பர் மீட்டியோர் 650 எஞ்ஜின்

சூப்பர் மீட்டியர் 650, மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்கிறது. எஞ்சின் கடுமையாக உறுமினாலும், உங்களால் இதன் ஒரு நிமிடத்திற்கான சுழற்சி (ஆர்பிஎம்) விகிதத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் எஞ்சின் வேகத்தை அளக்கும் டாக்கோமீட்டர் இதில் இல்லை.

சொகுசு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்கிறது இந்த சூப்பர் மீட்டியோர் 650. இந்த பிராண்ட் சந்தையில் சிறப்பானதோர் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதால் இனிவரும் ஆண்டுகளில் போட்டி பலமாக இருக்கலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம், ராயல் என்ஃபீல்டு தனது 650 சிசி இரட்டை எஞ்ஜின்களுடன் அதிதீவீரமாகச் செயல்படலாம். அடுத்து அதன் தயாரிப்புகள் ஹிமாலாயன்/ஸ்க்ராம் 650 (சூப்பர் ஹிமாலயன்) அல்லது ஷாட்கன் 650 பாப்பர் மாடல்களாக இருக்கலாம் என்பதைக் கணிப்பது கடினமல்ல.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival