Read in : English
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகத்தோடும் உணர்வு வேகத்தோடும் வேலை செய்வதற்குப் பாஜக தொண்டர்களை முடுக்கிவிடக் கூடிய ஒரு தீப்பொறியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் அல்லது போட்டியிடுவார் என்ற கருத்து தான் அந்தத் தீப்பொறி.
கர்நாடக மாநிலத்தில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரூ அருகே பந்த்வாலில் கடந்த ஜனவரி 27 அன்று கிராம விகாஸ யாத்திரையை ஒட்டி அண்ணாமலை பேசியபோது, “எங்கள் தொண்டர்களும் தலைவர்களும் தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கு மோடியின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர்” என்றார்.
“அவர் (மோடி) குடிவாசிகள்-வந்தேறிகள் என்னும் வேற்றுமையைக் கடந்தவர். திராவிட-ஆரிய பிளவை நீக்கியவர்; வடக்கு-தெற்கு பேதத்தைத் தாண்டியவர். தமிழ்-சமஸ்கிருத வித்தியாசத்தை ஒழித்தவர்.
மோடி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 39 தொகுதிகளிலும் இருக்கும் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்று அண்ணாமலை கூறினார். இது சம்பந்தமான வதந்திகளுக்குப் பதில் சொல்லும் முகமாக அவர் அங்கே கூடியிருந்த ஊடகங்களிடம் பேசினார்.
அப்போது பாஜக தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவியும் உடனிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுலின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வைக் கேலி செய்த அண்ணாமலை அதை ‘பாரத் தோடோ யாத்ரா’ என்று வர்ணித்தார்
தனது பாத யாத்திரையைப் பற்றிப் பேசிய அண்ணாமலை, “கிராம மக்களுடன் வாழ்வதைப் பற்றிய நடைப்பயணம் இது. அவர்களின் கவலைகளைப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான யாத்திரை” என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுலின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வைக் கேலி செய்த அண்ணாமலை அதை ‘பாரத் தோடோ யாத்ரா’ என்று வர்ணித்தார். “அனைத்து தேசத்துரோகிகளையும் உள்ளே இழுத்துக் கொண்ட யாத்திரை” என்று கிண்டலடித்தார்.
காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திமுக உட்பட பாஜகவுக்கு எதிரான கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை திமுக அமைச்சர் கே.என்.நேரு தன் கட்சித் தொண்டர்களிடம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத முறையில் நடந்து கொண்டதை விமர்சித்தார். திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு பெண்ணை அவமரியாதையோடு நடத்தினார் என்பதைச் சுட்டிக்காட்டி அவரையும் தாக்கிப் பேசினார் அண்ணாமலை.
மேலும் படிக்க: தமிழர்களுக்கு வேலை: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
கடந்த ஜூலை மாதத்தில் அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியதையும் அண்ணாமலை குறிப்பிட்டார். இது போன்ற பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லாமல் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்ட நிகழ்வையும், அரசு ஊழியர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வையும் கூட குறிப்பிட்டார்.
கர்நாடகத்தோடு பழைய தொடர்பு கொண்டவர் அண்ணாமலை. அரசியல்வாதியாக மாறும் முன்பு, அங்கு அவர் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
2003ல் கர்க்கலா தக்ஷிண கன்னட மாவட்டத்தில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக அண்ணாமலை தன் பணியைத் தொடங்கினார். 2015 ஜனவரியில் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று உடுப்பியில் பணிபுரிந்தார். பின்பு 2016 ஆகஸ்டில் சிக்மகளூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்றார். 2018 அக்டோபர் முதல் 2019 செப்டம்பர் வரை தெற்கு பெங்களூருவில் துணை ஆணையராகப் பணிபுரிந்தார்.
காவல்துறை அதிகாரியாக அண்ணாமலை தன் பணியை ஈடுபாட்டோடு நேரங்காலம் பார்க்காமல் செய்தார் என்றும் அரசியல் சார்பற்று இருந்தார் என்றும் துறை வட்டாரங்கள் சொல்கின்றன
காவல்துறை அதிகாரியாக அண்ணாமலை தன் பணியை ஈடுபாட்டோடு நேரங்காலம் பார்க்காமல் செய்தார் என்றும், அரசியல் சார்பற்று இருந்தார் என்றும் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. குற்றங்களைக் களைந்தெடுப்பதில் அவர் காட்டிய தீவிரம் அவருக்குச் ‘சிங்கம் அண்ணாமலை’ என்ற பட்டப்பெயரைப் பெற்றுத் தந்தது என்று சமூக வட்டாரங்கள் கூறுகின்றன. தக்ஷிண கன்னட மாவட்ட ஊடகங்களில் இந்தப் பட்டப்பெயர் பிரபலமாக இருந்தது.
2020 ஜூலையில் பாஜகவில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அண்ணாமலையை அவரது கட்சித் தொண்டர்கள் தீயைப் போலத் தீவிரமானவர் என்று புகழ்கிறார்கள்.
(எழுத்தாளர் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்)
Read in : English