Read in : English

Share the Article

உருளைக்கிழங்கு உடலுக்கு ஆரோக்கியமானதா அல்லது தீமையானதா என்ற கேள்வி பரவலாகக் காணப்படுகிறது. உருளைக்கிழங்கு புற்றுநோயைத் தவிர்க்கும் என்றும், அது புற்றுநோயை உருவாக்கும் என்றும் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், மருத்துவரீதியில் உருளைக்கிழங்கு ஆபத்தானதா என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

உருளைக்கிழங்கு பல்லாண்டுகள் வாழ்கின்ற பூண்டுத் தாவரமாகும். செடியின் தரைகீழ் கிளைகளின் பருத்த நுனிப்பகுதியே உருளை என அழைக்கப்படுகிறது. உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறப்படுகிறது. இது மாவுச்சத்து நிறைந்தது. கிழங்கு வகையைச் சேர்ந்த உருளை உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படுகிறது. உலகளவில் அதிகளவில் உண்ணப்படும் உணவுப்பொருள் இது.

உருளையின் தாயகம் பெரு நாடு. 1536ஆம் ஆண்டு பெரு நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு வந்த உருளை, கடல் வாணிகம் மூலம் ஆசியாவுக்கும் பிறப்பகுதிகளுக்கும் அறிமுகமாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமானதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்களின் அடிப்படை உணவாக மாறியது.

உருளைக்கிழங்கில் நான்கில் மூன்று பாகம் நீர்ச்சத்தும், ஒரு பாகம் சத்துப் பொருட்களும் உள்ளன. கார்போஹைட்ரேட் அதிகமாகவும், 2 கிராம் அளவுக்கு புரோட்டீனும் உள்ளன; கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இவற்றைத் தவிர பொட்டாசியம், வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

கிழங்கு வகையைச் சேர்ந்த உருளை உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படுகிறது; உலகளவில் அதிகமாக உண்ணப்படுகிறது

யுஎஸ்டிஏ தரவுகளின்படி 100 கிராம் உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள்:

* 94 கலோரிகள்
*கொழுப்பு – .15 கிராம்
*கொலஸ்ட்ரா – 0 கிராம்
*கார்போஹைட்ரேட்- 21.08 கிராம்
*நார்ச்சத்து -2.1கிராம்
*புரதம் – 2.10 கிராம்
*கால்சியம் – 10 மி.கிராம்
*இரும்புச்சத்து – 0.64 கிராம்
*மெக்னீசியம் – 27 மி.கிராம்
*பாஸ்பரஸ் -75 மி.கிராம்
*வைட்டமின் சி – 12.6 மி.கிராம்
*பொட்டாசியம்- 544 மி.கிராம்
*வைட்டமின் பி6- 0.211மி.கிராம்
*ஃபேலேட்- 36 மைக்ரோகிராம்
* நியாசின், கோலின் மற்றும் துத்தநாகம்

புரோடீன் குறைவாகவும், கார்போஹைட்ரேட் அதிகமாகவும் இருப்பதால் உடல் மெலிந்தவர்கள் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குப் பலனளிக்கும். வைட்டமின் சி மற்றும் குவெர்செடின் ஆகியவை ஆன்டி ஆக்ஸிடன்ட்களாகவும் செயல்படுகின்றன.

உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்து இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியது. உருளையின் தோலில் நார்ச்சத்துகள் உடலுக்குத் தேவையான கலோரிகளை வழங்கக் கூடியது. இதில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும், நச்சுநீர் தேங்குவதையும் முன்கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்யக்கூடியது.

மேலும் படிக்க: உடல் எடை குறைப்பு: என்ன செய்ய வேண்டும்?

தினமும் வேக வைத்த உருளைக்கிழங்கொன்றை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு வைட்டமின் பி6 கிடைக்கிறது. வேகவைத்த உருளைக்கிழங்கில் 25 சதவீதம் அதிகமாக மெக்னீசியம் இருப்பதுடன், வைட்டமின் பியும் உள்ளது; இது கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது. டிஎன்ஏவில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தை தடுக்க, வைட்டமின் பியில் உள்ள ஃபாலேட் உதவுகிறது.

வயிற்றுப்புண், குடல், இரைப்பை பிரச்சனை உள்ளவர்கள் உருளைக்கிழங்கினை அளவோடு சரியான முறையில் எடுத்து கொண்டால், அது ஒரு வரப்பிரசாதமாகக் கூட இருக்கலாம். மேலும், இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டின் சத்துக்கள் குழந்தைகளுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

இப்படிப் பலப்பல நன்மைகளை கொண்ட உருளைக்கிழங்கு ஒரு கட்டத்தில் தீமையாகவும் மாறி விடுகிறது. உருளைக்கிழங்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது அதனுடன் சேர்த்துச் சமைக்கப்படும் பொருட்களைப் பொறுத்து மாறுபடுகிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல், உருளைக்கிழங்கை அளவுக்கு அதிகமாக வேக வைப்பதாலும், எண்ணெயில் பொறித்து உண்பதாலும் அதன் சத்துக்கள் உடலுக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றன. குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் உருளைக்கிழங்கு அவர்களுக்கு எதிர்வினையாகிறது.

முளைவிட்ட அல்லது லேசாக பச்சை வண்ணம் கொண்ட உருளைக்கிழங்கால் வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்

உருளைக் கிழங்கை 248 ஃபாரன்ஹீட் அல்லது 120 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்திச் சமைக்கும் போது, அக்ரிலாமைடு எனப்படும் ரசாயனத்தை உற்பத்தி செய்வதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கலவை பிளாஸ்டிக், பசைகள், சாயங்கள் மற்றும் சிகரெட் புகை ஆகியவற்றிலும் காணப்படுகிறது. இது புற்றுநோய்களின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைவதுடன், மரபணுக்கள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.

அதனால், உருளைக்கிழங்கை வறுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஃபிரஞ்ச் ஃபிரை, சிப்ஸ், பர்கர் போன்ற உணவு வகைகளின் வழியே உருளைக்கிழங்குகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கைப் பொரிக்கும்போது , அது அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருளை உருவாக்குவதாகவும், அது புற்றுநோயை உண்டாக்கும் என்றும்

மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் படிக்க: சுவை தரும் நாட்டுக்கத்தரி

வறுத்த அல்லது சிப்ஸ் வகையிலான உருளைக்கிழங்கை வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சாப்பிட்டால், வறுத்த உருளைக்கிழங்கைச் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது மரணிப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு வேக வைத்த உருளைக்கிழங்கைத் தருவது மிகவும் நல்லது.

பெரியவர்கள் உருளைக்கிழங்கை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. இது வயதானவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படுத்தும் என்றும், சர்க்கரை நோயாளிகள் உருளை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உருளையில் கார்போஹைட்ரேட் இருக்கும் காரணத்தால் அதிகளவில் அதனை எடுக்கும்போது இன்சுலின் அளவு அதிகரிக்கக் கூடும். அதனால், சர்க்கரை நோயாளிகள் வேக வைத்த உருளையை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனை அதிகரிக்கக் கூடும் என்பதால், பருமனாக இருப்பவர்கள் அடிக்கடி உருளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வாயு மற்றும் வாதப் பிரச்சனை இருப்பவர்கள், வயதானவர்கள், இதய பிரச்சனை இருப்பவர்கள் வறுத்த உருளைக் கிழங்கைத் தவிர்ப்பது நல்லது.

இதேபோல், முளைவிட்ட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிகளவில் நச்சுக்கள் இருப்பதால், குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முளைவிட்ட அல்லது லேசாக பச்சை வண்ணம் கொண்ட உருளைக்கிழங்கால் வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைவிட்ட உருளைக்கிழங்கை கர்ப்ப காலத்தில் சாப்பிட்டால் குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

உணவே மருந்து என்பதற்கு ஏற்ப சுவைக்காக இல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்காக எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் அது நன்மையையே தரும். உருளைக்கிழங்கும் அதில் விதிவிலக்கல்ல.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles