Read in : English

Share the Article

மனித ஆரோக்கியத்தைக் காக்கும் பெரிய ஊட்டச்சத்து போன்றிருப்பது தண்ணீர். நம் உடலில் 75% பகுதி தண்ணீரால் ஆனது. உடலின் அத்தனை செயல்பாடுகளும் தண்ணீரைச் சார்ந்தே இருக்கின்றன. இது செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

தண்ணீரைத் தினமும் எவ்வளவு பருக வேண்டும்? இந்த விஷயத்தில் பெரும்பாலானோருக்குக் குழப்பம் இருக்கும். அதற்கென்று ஒரு கணக்கு இருக்கிறது. உங்களது உடல் எடையை 0.03யோடு பெருக்கினால் வரும் எண்ணே இதற்கான பதில். அதாவது, உங்களது எடை 50 கிலோ என்றால் அதனை 0.03ஆல் பெருக்கினால் கிடைப்பது 1.5.

ஆகையால், சம்பந்தப்பட்ட நபர் தினமும் சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். பருவநிலை மாறுபாடுகளுக்கேற்ப இந்த அளவு ஒரு லிட்டரோ, அரை லிட்டரோ கூடவும் குறையவும் வாய்ப்புண்டு.

நமது உடலில் 2% அளவு நீர்ச்சத்து குறைந்தால் கூட ’நீரிழப்பு’ எனப்படும் டிஹைட்ரேஷன் (Dehydration) நிலைக்கு ஆளாகலாம். நாக்கு வறண்டு போதல், ரத்த அழுத்தம் குறைதல், இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியன இதன் அறிகுறிகள். இதனால் உடலுறுப்புகள் செயல்படாமல் போதல் முதல் பெரிய கோளாறுகள் வரை நீர்ச்சத்து குறைபாடால் நிகழலாம்.

எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் டிஹைட்ரேஷன் உணர்விருப்பதாக நிறைய பேர் சொல்கின்றனர். அதற்கென்ன காரணம்? அவர்களுக்காகவே, தண்ணீர் குடிக்கும் கலை என்ற வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன.

நமது உடலில் 2% அளவு நீர்ச்சத்து குறைந்தால் கூட ’நீரிழப்பு’ எனப்படும் டிஹைட்ரேஷன் நிலைக்கு ஆளாகலாம்

இது மாதிரி நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நீர் அருந்தலாம் அல்லது கையிலேயே பாட்டிலை வைத்துக்கொண்டு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறு மிடறு பருகலாம். அதைவிடுத்து நீண்ட இடைவெளி விட்டு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை நீர் அருந்தும்போது சிறுநீரகத்தில் அதிகளவில் சேகரமாகி சிறுநீர் ஆக கழியுமே தவிர உடல் செயல்பாட்டில் எந்தப் பலனையும் ஏற்படுத்தாது.

ஆதலால், நிதானமாகத் தண்ணீரை ரசித்துப் பருகும்போது நீரிழப்பு குறைபாடு தவிர்க்கப்படும். இளநீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு என்று பல வகைகளில் தண்ணீரை எடுத்துக்கொள்ள முடியும். காலை வேளையில் எலுமிச்சை சாறை அருந்துவது எடை குறைப்புக்கு உதவும்; உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும்; நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

மேலும் படிக்க: ஆல்கலைன் நீரின் நன்மைகளும் தீமைகளும்

தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சீராகத் தண்ணீர் பருகுபவர்களில் 44% பேர் உடல் எடை குறைப்பு இலக்குகளை அடைவதாகத் தெரிய வந்தது. சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பிறகும் அரை மணி நேர இடைவெளியில் தண்ணீர் குடிக்கும்போது செரிமானம் சீராக இருக்கும்; சாப்பிடும் உணவிலுள்ள சத்துக்கள் எல்லாமே உட்கிரகிக்கப்படும்.

சில பேருக்குச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கக்கூடும்; அது தவறான பழக்கம். ஏனென்றால், அது செரிமானச் செயல்முறையை நீர்த்துப்போக வைக்கும். செரிமானத்தைத் தடுக்கும்.

எந்தக் குழந்தை நன்றாகத் தண்ணீரைப் பருகுகிறதோ, அதன் வளர்ச்சி சரியானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அவர்களது மூளைத்திறனும் சிந்திக்கும் தன்மையும் நன்றாக இருக்கும் என்று நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. தேர்வெழுதப் போகும் ஒரு குழந்தை பதற்றமாக இருந்தால், அக்குழந்தையைத் தண்ணீர் பருகுமாறு கூறலாம். அது படபடப்பைக் குறைக்கும்.
இத்தனை பலன்களைத் தரும் தண்ணீரைக் குடிக்காமல் தவிர்க்கலாமா? இதற்காகத்தான் 30 நாட்கள் தண்ணீர் சவால் (30 days drinking challenge) என்ற ஒரு வழிமுறை இருக்கிறது.

பாட்டில் நிறைய தண்ணீரை நிரப்பி, உங்கள் வீட்டு வரவேற்பறையிலோ அல்லது அலுவலக மேஜையிலோ வையுங்கள். பதினைந்து நிமிட இடைவெளியில் கொஞ்சமாகத் தண்ணீரைக் குடிக்கும் பழக்கத்தை 30 நாட்கள் வரை தொடரும்போது, உங்கள் உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர முடியும்.

குடிநீரைப் பற்றிய இந்த நெறிமுறைகள் சிறுநீரகக் கோளாறு போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் கொண்டவர்களுக்குப் பொருந்தாது. எவ்வளவு நீரை அருந்த வேண்டும் என்பது பற்றி அவர்கள் தங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles