Read in : English
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாடு பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகச் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தை உயர்தரமாக மதிப்பீடு செய்திருக்கிறது இந்தியா டுடே. அதனால் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் தமிழ்நாட்டைப் பற்றி ஓர் உயர்ந்த படிமம் உலா வருகிறது.
ஆனால் சமூக அல்லது பொருளாதார அளவுகோல்கள்படி ஆய்வு செய்தால் தமிழ்நாட்டில் துறைதோறும் இருக்கும் கள நிஜங்கள் வேறுமாதிரியாகவே இருக்கும். தமிழ்நாட்டைப் பிணித்திருக்கும் மோசமான நிதிநிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
டில்லியிருக்கும் பொதுக்கொள்கை ஆராய்ச்சி மையமான பிஆர்எஸ் கடந்த டிசம்பர் 12ஆம் தேதியன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அது, மாநிலங்களின் நிதிநிலையைப் பற்றிய ஆய்வு சம்பந்தப்பட்டது; அதனை இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் தர மதிப்பீடுகளோடு ஒப்பிட்டு விவாதிக்கலாம். நகராட்சிகளின் நிதி நிலைமையைப் பற்றி ரிசர்வ் வங்கி நவம்பர் 10, 2022 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலை சரிந்து கொண்டிருக்கிறது என்றும், அதைச் சரிசெய்ய மாநிலங்கள் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
தமிழகத்தின் மோசமான நிதிநிலையைப் பற்றி பொதுவெளி விவாதங்கள் சுட்டிக் காட்டுவதில்லை. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வாங்கிய குறைவான கடன் சதவீதங்கள் முன்னேற்றத்தைக் காட்டுவதில்லை. முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்காமல் எதுவும் முழுமை அடைவதில்லை.
தமிழகத்தின் மோசமான நிதிநிலையைப் பற்றி பொதுவெளி விவாதங்கள் சுட்டிக் காட்டுவதில்லை. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வாங்கிய குறைவான கடன் சதவீதங்கள் முன்னேற்றத்தைக் காட்டுவதில்லை
தமிழகத்தின் சரிந்து கொண்டிருக்கும் நிதிநிலைக்குக் காரணங்கள் நிலுவைக் கடன்கள், மின்சாரத்துறையின் நிதிச்சுமைகள், அறிவுக்குப் பொருந்தாத மானியங்கள், நட்டத்தில் தள்ளாடும் மாநிலப் பொது நிறுவனங்கள், பொது வினியோகக் கட்டமைப்பில் நிகழும் சேதாரங்கள், அதிகரித்துக் கொண்டே போகும் பணி ஓய்வு நிதிச்சுமை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது பெண்களுக்குக் கொடுக்கப்படும் இலவசப் பேருந்துப் பயணம் ஆகியவையே.
இந்தாண்டு தமிழ்நாட்டின் மின்துறை வருவாய்ப் பற்றாக்குறை ரூ.4,184.10 கோடி. நிதிப் பற்றாக்குறை ரூ.18,726.32 கோடி. மாநிலத்தின் வரி வருமானப் பங்கு 2019-20ல் 8.8 சதவீதமாக இருந்தது; அது 2021-22ல் 7.9 சதவீதமாகச் சரிந்தது.
மேலும் படிக்க: திராவிட மாடல் வளர்ச்சி சமச்சீராக இல்லை!
தமிழகத்தின் கடன் சுமை, எல்லா மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி சராசரியான 7.2 சதவீதத்தை விடவும் மிக அதிகம். கடன்சுமையில் நாட்டில் மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இந்த விசயத்தில் மாநில அரசு சீர்திருத்தங்கள் எதையும் செய்யவில்லை. 2021-22ல் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 32 சதவீதமாக மாநிலத்தின் கடன்கள் இருந்தன; 2020-21ல் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக மாநிலத்தின் கடன் உத்தரவாதங்கள் இருந்தன.
மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் நிதி நிறுவனங்களிலிருந்து அவற்றிற்குக் கடன்கள் வாங்கித் தருவதாக மாநில அரசுகள் உத்தரவாதம் அளிப்பது வாடிக்கை.
கோவிட் பெருந்தொற்று தாக்குவதற்கு முன்பே, 2015-16ல் இருந்து 2019-20 வரை தொடர்ந்து வருமானப் பற்றாக்குறையில் தள்ளாடியது தமிழகம். வருவாய் பற்றாக்குறை கொண்ட ஒரு மாநிலம் ஒன்றிய அரசிடம் நிதியுதவி கேட்கலாம் அல்லது ரிசர்வ் வங்கி மூலமாகத் திறந்தவெளிச் சந்தையில் கடன்கள் பெறலாம். அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, மானியம் ஆகிய செலவுகளுக்காக அந்தக் கடன்தொகையை ஒரு மாநில அரசு பயன்படுத்தலாம்.
ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரைகளின் பேரில், வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி செய்கிறது. 2021-22ல் தமிழக அரசு ரூ.2,204 கோடியை ஒன்றிய அரசிடமிருந்து வருவாய் பற்றாக்குறை நிதியுதவியாகப் பெற்றது. அதன் பின்னர் பெறவில்லை.
நவீன பொருளாதாரத்தின் முதுகெலும்பே சுத்தமான மின்சாரத்தின் வினியோகம்தான். அதன்மூலம் உற்பத்தியும் சேவைகளும் முழுவீச்சில் நடைபெறும். ஆனால் தமிழகத்தின் மின்துறையில் பல ஆண்டுகளாகப் பல்வேறு அமைப்பியல் பிரச்சினைகளும் இயக்கரீதியிலான சவால்களும் நிறைந்து கிடக்கின்றன. 1960களிலிருந்து வழிவழியாகப் பெரும்பிரச்சினையாக இருப்பது மானியம்தான்.
ஒன்றிய அரசின் உதய் திட்டத்தின் கீழ், தமிழக அரசு 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் டான்ஜெட்கோவின் ரூ.22,815 கோடி கடன் சுமையை ஏற்றுக்கொண்டது. என்றாலும் 2016-17 மற்றும் 2020-21 ஆகிய காலகட்டத்தில் டான்ஜெட்கோவின் நட்டங்கள் ரூ.48,491 கோடியைத் தொட்டன. நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் கடன்சுமை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26.3 சதவீதம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு தமிழ்நாட்டின் மின்துறை வருவாய்ப் பற்றாக்குறை ரூ.4,184.10 கோடி; நிதிப் பற்றாக்குறை ரூ.18,726.32 கோடி
2021ல் டான்ஜெட்கோ ரூ.30,230 கோடி சந்தைக் கடன்கள் பெற்றது என்று பிஆர்எஸ் அறிக்கை சொல்கிறது. உற்பத்தியாளர்களிடமும் வினியோக நிறுவனங்களிடமும் பெற்ற இந்தக் கடன்களை (2022-23 ஆண்டின் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம்) அடைத்துவிடுவதாகத் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது. 2020-21 நிலவரப்படி, தமிழக அரசின் மொத்த நிலுவை உத்தரவாதங்கள் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றன. 2020-21 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கிடையே டான்ஜெட்கோவின் நட்டங்களுக்கு ஈடாக ரூ.28,589 கோடியை மானியங்களாகத் தமிழக அரசு தந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மானியங்கள் இல்லாமல் இருந்திருந்தால், 2022-23ல் தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 25 சதவீதம் குறைந்திருக்கும். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு தனது பட்ஜெட்டிலிருந்து ரூ.1,984 கோடி கடன்கள் கொடுத்திருக்கிறது.
நடப்பு நிதியாண்டில் டான்ஜெட்கோவின் நட்டங்களை ஈடுகட்ட தமிழக அரசு கொடுத்த நிதியுதவி ரூ.13,108 கோடி (பட்ஜெட் மதிப்பீடு). மின்சாரம் வழங்கலுக்குத் தரப்பட்ட மானியங்களின் மதிப்பு ரூ. 9,379 கோடி; இது 2020-21ல் ரூ.8,414 கோடியாக இருந்தது. இவையெல்லாம் சேர்ந்துதான் தமிழக அரசின் மொத்த வருவாய் பற்றாக்குறையை ரூ.52,781 கோடிக்குக் கொண்டு சேர்த்தன (பட்ஜெட் மதிப்பீடு).
தென்மாநிலங்களில் தமிழகத்து டான்ஜெட்கோவின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப, வணிக நட்டங்கள் (13.69 சதவீதம்) அதிக விகிதத்தில் இருக்கின்றன; நாட்டில் அதிக நட்டவிகிதம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
மேலும் படிக்க: தமிழக மின்துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்
ஊழியர்களின் ஓய்வுதியத்திற்காகவும் மற்றும் பணிஓய்வு பலன்களுக்காகவும் ஏற்படும் செலவீனங்கள் தமிழ்நாட்டின் நிதிக்கட்டமைப்பைச் சீர்குலைக்கும் மற்றுமொரு பிரச்சினை. கடந்த முப்பதாண்டுகளாக, இந்தச் செலவீனங்கள் படுபயங்கரமாக அதிகரித்திருக்கின்றன. 1992-93ல் பணி ஓய்வுதியச் செலவீனம் ரூ.472 கோடி; இது ஏழு மடங்காக உயர்ந்து 2002-03ல் ரூ.3,327 கோடியானது. 2012-13ல் நான்கு மடங்காக உயர்ந்து ரூ.13,162 கோடியானது. 2022-23ல் மேலும் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.39,508 கோடியாகி விட்டது.
அடுத்த நிதியாண்டான 2023-24ல் பணி ஓய்வுதியச் செலவீனம் ரூ.39,243 கோடியாகும் என்றும், 2024-25ல் ரூ.42,382 கோடியாகும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி தராத இந்தச் செலவீனம்தான் தமிழ்நாட்டின் நிரந்தரமான பிரச்சினையாகி விட்டது.
பலமானதோர் பொருளாதார அஸ்திவாரம் இல்லாமல் வெறுமனே சலுகைகளையும் மானியங்களையும் அள்ளிவிட முடியாது. தமிழ்நாட்டின் செலவீனங்களில் 61 சதவீதம் வளர்ச்சி தராத அல்லது லாபம் தராத திட்டங்களுக்கே செலவிடப்படுகின்றன.
அதனால் நீண்டகால இலக்கான உயர்தரமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய பெளதீக, சமூக உட்கட்டமைப்பை நிர்மாணிக்கத் தேவையான முதலீட்டுச் செலவுகளுக்கு நிதி இல்லை என்றாகிவிட்டது.
பொதுத்தேர்தல் காலங்களில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இனியாவது ஒன்றிய அரசையே குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்கள் மாநிலத்தின் நிதிநிலைமையைச் சீர்படுத்தி மீளுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English