Read in : English
ஜூலை 8, 2022 அன்று, உலகமே அதிர்ச்சியில் உறைந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆசியாவின் குறிப்பிடத்தக்க தலைவரும் ஜப்பானின் முன்னாள் பிரதமருமான அபே-சான் என்றுஅறியப்பட்ட ஷின்சோ அபே, ஒரு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொடுஞ்செயலை நிகழ்த்திய குற்றவாளியை விட, அந்தச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பற்றியே நிறைய விவாதங்கள் நடந்தன.
அது முப்பரிமாண அச்சில் (3D) அச்சிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. அப்படி எளிதில் கண்டுபிடிக்க முடியாத, மிக சாதாரணமாக வீட்டிலேயே தயாரிக்கும் நிலையில் உள்ள 3டி அச்சில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களின் பெருக்கம் பற்றிய கவலை உலகெங்கும் எதிரொலித்தது.
உலக வரலாற்றில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இதே நிலைக்கு ஆளாகி உள்ளன. அவையே பின்னர் மனித வளர்ச்சியின் அடித்தளமாக மாறியதும் கண்கூடு. புகைப்படக் கருவி, அணுசக்தி என இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
மரபான உற்பத்தி முறைகளின் அடிப்படைச் செயல்பாடு, உலோகங்களின் ஆரம்ப வடிவில் இருந்து கழித்து நீக்கி இறுதி வடிவத்தை அடைவதாகும். மாற்றாக, சேர்ந்திணை உற்பத்தி முறை (Additive Manufacturing Process ) என்ற இந்தப் புதிய செயல்முறை, மேலே குறிப்பிட்ட மரபான உற்பத்தி முறைகளைப் போலல்லாமல், நேரடியாக ஒரு முப்பரிமாண CAD மாடல்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வடிவத்தை, தனிமங்களின் பொடிகளை உருக்கி இணைப்பது மூலமோ அல்லது திடப்படுத்துவது மூலமோ உருவாக்கும் ஒரு செயல்முறையாகும். இதற்கு 3D CAD மென்பொருளில் வரையறுக்கப்பட்ட முப்பரிமாண 3டி மாடல்களே அடிப்படை.
3டி பிரிண்டிங் என்றழைக்கப்பட்ட இது, உற்பத்தி தொடர்பான முக்கியக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இடம்பெற்றாலும் அதிக கவனம் பெறாமல் ஒரு ஓரத்தில் இடம்பெற்று வந்தது
3டி பிரிண்டிங் என்றழைக்கப்பட்ட இது, பலகாலமாகவே அதிக கவனம் பெறாமல் இருந்தது. சமீபகாலங்களில் சேர்ந்திணை உற்பத்தி முறை அல்லது அடிட்டிவ் உற்பத்தி எனப்படும் ஒரு பெரும் உற்பத்தி முறையாக இது உருவெடுத்துள்ளது. வெகுகாலமாகவே, விரைவு மாதிரிகளை (Rapid Prototypes) உற்பத்தி செய்யும் ஸ்டீரியோ லிதோகிராஃபி (STL) அடிப்படையிலான உற்பத்தி முறையாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
உற்பத்தி தொடர்பான முக்கியக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இடம்பெற்றாலும், அதிக கவனம் பெறாமல் ஒரு ஓரத்தில் இடம்பெற்று வந்தது.
மேலும் படிக்க: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: தனிநபர் தரவுகளுக்குப் பாதுகாப்பில்லையா?
கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலை மாற்றத்திற்குள்ளானது; இந்தத் துறையின் மீது பெரும் நிறுவனங்களின் கவனம் திரும்பியது. உதாரணமாக, மருத்துவத்துறையில் செயற்கை உறுப்புகள் பயன்பாடு மற்றும் மருத்துவக் கருவிகளில் வந்த முன்னேற்றங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் மரபுசாரா கூறுகள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்தும் தேவைகள், எரிசக்தி மற்றும் பிற முக்கியத் துறைகளில் தோன்றிய தேவைகள் ஆகியவற்றை ஈடுகட்ட புதிய வகை கனிமங்களைப் பயன்படுத்தி புதிய வடிவங்களை உற்பத்தி செய்வதற்கான அதிவேகமான வழி தேவைப்பட்டது. அந்தத் தேவைகளை மரபான உற்பத்தி முறைகளால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
உதாரணமாக, கைகளில் எலும்புகளுக்கு மாற்றாக இணைக்கப்படும் செயற்கை இணைப்புகள், வழக்கமான ஒழுங்குடன் ஒரே சீரான வடிவத்தில் இருக்க முடியாது. அதன் அடர்த்தியும் கனமும் ஒரேமாதிரியாக இருக்க இயலாது. ஒவ்வொரு செயற்கை இணைப்பும் நோயாளியின் தேவையை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுவதால் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யவும் முடியாது. இவை அனைத்தும் சீரான வரையறுக்கப்பட்ட வடிவங்களில், பெரும் எண்ணிக்கையில் செயல்படும் மரபான உற்பத்திச் செயல்முறைகளுக்கு சமாளிக்க முடியாத சவாலாக அமைகின்றன.
இப்படிப்பட்ட தனித்தேவைகளை நிறைவேற்ற அதிக செலவெடுக்கும் என்பதால், இன்ஜெக்ஷன் மோல்டிங் முறைகளில் சமீபகாலங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் கூட இது சாத்தியப்படுத்த முடியவில்லை.
வழக்கமான அடிட்டிவ் உற்பத்தி முறை என்பது கனிமத்துகள்களைத் தொடர்ந்து அடுக்கடுக்காக இட்டு, உருக்கி இணைத்து ஒரு வடிவத்தை உருவாக்கும் செயல்முறையாகும். இருப்பினும், இந்தத் துறையில் ஏற்பட்ட வேகமான முன்னேற்றங்கள் பலவித புதிய கனிமப் பொருட்களைப் பயன்படுத்தவும், அவற்றை ஒன்றிணைக்கப் புதிய முறைகளைச் செயல்படுத்தவும் பல புதிய வகை கருவிகளைச் சந்தையில் தோற்றுவித்துள்ளன.
அதன் அடிப்படையில், சில பொதுவான அடிட்டிவ் இயந்திர வகைகளைப் பார்ப்போம்:
1.FDM: இது ஒரு வழக்கமாக அடிட்டிவ் செயல்முறையாகும். இதில் இழை இழையாக உள்ள கனிமப்பொருள் உருக்கப்பட்டு, ஒரு குறுகிய முனை வழியாக வெளியேற்றப்பட்டு பல்வேறு வடிவங்களின் அடுக்குகள் உருவாக்கப்படும்.
2.ஸ்டீரியோலிதோகிராபி (SLA): தேவைப்பட்ட வடிவ அச்சுக்களில் இட்டு நிரப்பப்பட்ட திரவ வடிவிலான பிசின் போன்ற கனிம அடுக்குகளை, லேசரைப் பயன்படுத்தி ஒரு திடமான வடிவமாக உருவாக்கும் வழிமுறையாகும் இது.
3.SLS: இந்த செயல்முறை, துகள் வடிவிலான கனிமத்தை லேசரைப் பயன்படுத்தி திடமான பொருளாக உருமாற்றம் வழிமுறை.
4. EBM: இந்த செயல்முறை, கனிமத்துகள்களை உருக்குவதற்கு எலக்ட்ரான் கதிர்களைப் பயன்படுத்துகிறது.
5.இன்க்ஜெட் பிரிண்ட்டர்: ஒரு இறுதி வடிவத்தை உருவாக்க, இன்க்ஜெட் வழியே குறிப்பிட்ட வேறு வேறு சிறு வடிவங்களில் அடுக்குகளாக டெபாசிட் செய்யும் வழிமுறை.
6.LOM: லேசர் அல்லது பிளேடைப் பயன்படுத்தி, கனிமத்தை சிறு துண்டுகளாய் அறுத்து, பிறகு அவற்றை வேண்டிய வடிவில் பொருத்தி இணைக்கும் முறை இது.
இவற்றில் FDM, SLA, SLS மற்றும் EBM ஆகிய வகை இயந்திரங்கள் பிரபலமாக பயன்படுத்தப்படும் வகைகளாகும். பல்வேறு விலைகளில், இந்த இயந்திரங்களை வழங்கும் பல உற்பத்தியாளர்கள் இன்று சந்தையில் உள்ளனர்.
இவை தவிர, பல்வேறு தொழில்நுட்பங்களில் பலவகையான அடிட்டிவ் இயந்திரங்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. பயன்படுத்தும் கனிம வகை, உருவாக்கும் வடிவம், அளவு மற்றும் பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து நாம் அவற்றைத் தேர்வு செய்ய முடியும்.
அபே சான் படுகொலைக்கு கிடைத்த எதிர்மறையான விளம்பரத்துடன் ஒப்பிடும்போது, அடிட்டிவ் தொழில்நுட்பத்தில் நடந்த சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தேவையான கவனத்தைப் பெறவில்லை
புதிய சந்தைகள் உருவாக்கும் சாத்தியத்தினால், அடுத்த பெரும் வளர்ச்சி வாய்ப்பாக கருதி பல பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளன. ஜெனரல் எலெக்ட்ரிக், சீமென்ஸ் போன்ற நிறுவனங்கள் இத்துறையில் முன்னணி பெறும் முடிவுடன் தங்கள் தொழில் பிரிவுகளைத் தொடங்கி உள்ளன.
அபே சான் படுகொலைக்கு ஊடகங்களில் கிடைத்த எதிர்மறையான விளம்பரத்துடன் ஒப்பிடும்போது, அதே துறையில் சமீபகாலமாகத் தமிழகத்தில் நடந்த சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், தேவையான கவனத்தைப் பெறவில்லை.
சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ். இந்த நிறுவனம் அடிட்டிவ் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ராக்கெட் எஞ்சினுக்கான காப்புரிமையைப் பெற்றது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் அதிக ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இது ஐஐடி சென்னையினால் வழிகாட்டப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று.
மேலும் படிக்க: 5ஜி: இனி எல்லாம் மின்னல் வேகம்!
இதேபோல, ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றும் பெங்களூரில் உள்ள பிக்செல் ஆகியன நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தொழில்களுக்கு உதவும் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
இது போன்ற ஸ்டார்ட்அப்களில் பெரும்பாலானவை நாட்டிலுள்ள முதன்மை கல்வி நிறுவனங்களின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவை; அந்த நிறுவனங்களால் அவை வளர்த்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தென்னிந்தியாவை மையமாகக் கொண்டவை. அவர்களின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் அடிட்டிவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.
மேலே குறிப்பிடப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சற்றே உயர்மட்ட தொழில் முனைப்புகளில் சேரும்.
அடிட்டிவ் தொழில்நுட்பத்தின் பரவலாக்கல், மாநிலத் தொழில்துறையில் அது நிகழ்த்தும் தாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை இரண்டாவது செய்தி மிகவும் முக்கியமானது.
கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று, தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO ) மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அவற்றின் கூட்டு முயற்சியில், சென்னையில் அடிட்டிவ் உற்பத்தி சிறப்பு மையம் (TAMCoE) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், சென்னை தரமணி டைடல்பார்க்கில் பெரும் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசால் அறிவிக்கப்பட்ட தொழில்துறை 4.0 முன்னெடுப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
அது அடிட்டிவ் உற்பத்தி தொழில்நுட்பம் சம்பந்தமாக மூன்று முக்கிய நோக்கத்தில் கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
1.மாநிலத் தொழில் சூழல் மேம்பாடு அடைய அடிட்டிவ் உற்பத்தி சம்பந்தமான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி.
2.விண்வெளி மற்றும் விமானத்துறை சார்ந்த அறிவு மேம்பாடு. பிறகு இது வாகன உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்தித் துறைக்கும் விரிவுபடுத்தப்படும்.
3. தொழில் அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கி, இந்த மையத்தின் ஆய்வுப் பலன்களை மாநில தொழில் நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்க்கும் கட்டமைப்பை உருவாக்குவது.
சமீபகாலமாகப் பல்வேறு காரணங்களால் வாகன உற்பத்தித் துறை, ஜவுளி, பம்ப் மற்றும் உள்ளாடைகள் போன்ற தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்கள் பெரும் சவால்களை, பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. அதனால் மாநிலத்தின் தொழில்துறை மண்டலங்களில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. எஞ்சியவை மிகவும் நசிந்த நிலையில் உள்ளன.
ஏற்கனவே நிறுவப்பட்டு நன்கு நடந்து வந்த தொழில்களை குஜராத்திற்கு மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுவதால், இந்தத் தொழில்கள் வேண்டுமென்றே நஷ்டத்திற்கு இட்டுச் செல்லப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த கூற்றுகளில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்ற கேள்வி இருந்தாலும், அதிகரித்துள்ள உள்ளீடு மற்றும் தொழிலாளர் செலவினங்கள், புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை போன்ற பல்வேறு காரணங்களால் பாரம்பரியத் தொழில்கள் உண்மையில் மாநிலத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
மருத்துவச் சாதனங்கள் மற்றும் செயற்கை உறுப்புகள் உற்பத்தி தொழிலில் தொழில்முனைவோர் எளிதாக நுழைய முடியும்; அதற்கான அறிவு, தரம் மற்றும் தரச்சான்றுக்கான அடிப்படை கட்டமைப்பை மாநில அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றிக்கொள்ள முடியும்
மருத்துவ அவுட்சோர்சிங் செயல்பாட்டில் தமிழ்நாடு விரும்பத்தக்க இடமாக உள்ளது. மாநிலத்தின் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களில் உள்ள பல மருத்துவமனைகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்து வருகின்றன. பல்வேறு நுணுக்கமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்குத் திறன் வாய்ந்த மருத்துவர்கள் கிடைக்கும் காரணத்தால் அவற்றின் நம்பகத்தன்மை சிறப்பாக நிறுவப்பட்டுள்ளது. மேற்கூறிய காரணங்களால், மருத்துவச் சாதனங்கள் மற்றும் செயற்கை உறுப்புகள் உற்பத்தி தொழிலில் தொழில் முனைவோர் எளிதாக நுழைய முடியும்.
அதற்கான அறிவு, தரம் மற்றும் தரச்சான்றுக்கான அடிப்படை கட்டமைப்பை மாநில அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
இந்தச் சிக்கல்களின் பின்னணியில், குறுகிய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சிகளைத் தொடங்குவதற்கு மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோருக்கு இந்த மையமும் அது காட்டும் அடிட்டிவ் உற்பத்தித் துறையும் ஒரு பெரும் வாய்ப்பாகும். மரபு சார்ந்த உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இதற்கான ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு. இதற்குத் தேவையான தொழில் அறிவு ஒரு சவாலாக இருக்கலாம்.
ஆனால், இந்தத் துறையின் திறன் மற்றும் அறிவு விரிவாக்கத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை மாநில அரசு எடுத்துக்கொள்வதால், தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது தமிழ்நாட்டின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கு மிக ஏதுவாக இருக்கும்.
Read in : English