Read in : English
ஆண்டு இறுதியில் வெளியாகியுள்ள இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒன்றிய ஆட்சியில் பங்குபெறும் நம்பிக்கையை திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளன.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் இமாசலப் பிரதேசத்தில் காங்கிரசிடம் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்து இருப்பதும் இந்தி பேசும் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தான் ஆளும் மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பதும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.
2004ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியபின் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பாஜகவை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2014ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வி அடைந்தபின் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை திமுகவால் நெருங்க முடியவில்லை. 2019ல் தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 இடங்களை வென்றாலும் தேசிய அளவில் திமுகவுக்கென்று தனியாக எந்த செல்வாக்கும் இல்லை. திமுகவுக்கு எதிர் அணியில் இருக்கும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மாநில ஆட்சியை நடத்துவதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை; டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநில அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்ற நிலை இருக்கிறது
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை பாஜக அரசு தர மறுப்பதாலும் தாமதம் செய்வதாலும் திமுக அரசு கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடும் நிதிச்சுமை காரணமாகவும் ஒன்றிய அரசு தந்த நெருக்கடி காரணமாகவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது மக்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இது போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பை எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தாலும் போராட்டங்களாலும் ஊதிப் பெருக்கி வருகின்றன.
மேலும் படிக்க: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரிய அளவு பங்கு தமிழ்நாட்டில் இருந்து போனாலும் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை பாஜக அரசு தர மறுக்கிறது என்று மாநில நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டங்கள் எதற்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநில அரசு நிம்மதியாக ஆட்சி நடத்தவோ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவோ முடியும் என்ற நிலைதான் இருக்கிறது.
குஜராத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸின் வாக்குகள் 30 சதவீதத்துக்கும் கீழ் சென்றுள்ளது. புதிதாகக் களத்துக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சொந்த மாநிலம் குஜராத். அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இருவரும் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரம் செய்துள்ளனர்; ‘குஜராத் ஒலிம்பிக் மிஷன்’, பெண்களுக்கு இலவசக் கல்வி போன்ற வாக்குறுதிகளை அளித்து பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.
குஜராத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸின் வாக்குகள் 30 சதவீதத்துக்கும் கீழ் சென்றுள்ளது. புதிதாகக் களத்துக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது; இந்த வாக்கு பிரிகை பாஜகவின் பெரும் வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளது.
மேலும் படிக்க: ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு: கடுமை காட்டும் திமுக!
ஆனால், இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்க்கட்சி வாக்குகள் பிரியாத நிலையில் ஆளும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. சொந்த மாநிலத்தில் மோடியின் தீவிரப் பிரச்சாரம் கை கொடுத்தது போல இமாச்சலப் பிரதேசத்தில் நடக்கவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் ‘இரட்டை இயந்திர வளர்ச்சி’ ஏற்படும் என்ற மோடியின் முழக்கத்தை இமாசலப் பிரதேச மக்கள் ஏற்கவில்லை.
தலைநகரத்தில் இருந்து நாட்டை ஆண்டாலும் கூட, டெல்லியில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மியிடம் தோற்றுப் போயுள்ளது பாஜக. அதன் வசமிருந்து மாநகராட்சி அதிகாரம் பறிபோயுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் வார்டு வார்டாக ஓடியாடிப் பிரச்சாரம் செய்தும் பல்வேறு மாநில மக்கள் வசிக்கும் தலைநகரில் பாஜக தோற்றுள்ளது.
குஜராத் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஐந்து இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மூன்று இடங்களை எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் மைன்பூர் மக்களவைத் தொகுதியையும், கட்டௌலி சட்டமன்றத் தொகுதியையும் எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளன. பீகாரில் குஹானி இடைத்தேர்தலில் பாஜக வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கட்சியும் பாஜகவின் வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன.
ஒடிசாவில் பானுபிரத்தாபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அந்த மாநிலங்களில்ஆளும் கட்சியாக இருந்துவரும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அந்த மாநிலங்களில்ஆளும் கட்சியாக இருந்துவரும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தனது முழு பலத்தைக் காட்டியதுபோல காங்கிரஸ் கட்சியும் இதர மாநிலக் கட்சிகளும் தாங்கள் வலுவாக விளங்கும் இடங்களில் இன்னும் செல்வாக்கு மங்கவில்லை என்பதைக் காட்டியுள்ளன. இமாசலப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தனது வலுவான இருப்பை வெளிப்படுத்தியுள்ளது; ஆதலால், கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் பெற்ற அதே எண்ணிக்கையிலான இடங்களை இந்த முறையும் கேட்கும் சூழல் அமைந்துள்ளது.
1989ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் ஒரு அங்கமாக ஒன்றிய ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட திமுக மீண்டும் 1996ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இடம்பிடித்தது. 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திமுகவுக்கு முக்கியத் துறைகள் தரப்பட்டன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று, தேசிய அளவில் பாஜக பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனால் ஒன்றிய ஆட்சியில் திமுக மீண்டும் இடம்பெறும் என்ற நம்பிக்கையை திமுகவினர் மத்தியில் இந்த சுற்று தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.
Read in : English