Read in : English

பொதுவாக, வைட்டமின் டியை சூரிய ஒளி வைட்டமின் என்று சொல்வது வழக்கம். கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் இம்மூன்று தாதுக்களுமே எலும்புகள், தசைகள், பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையானவை. இம்மூன்று தாதுக்களும் நம் உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் டி அவசியம். நம் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பின், கால்சியம் எடுத்துக்கொண்டாலும் கூட அதில் 60% மட்டுமே உறிஞ்சப்படும். வைட்டமின் டி குறைவாக இருந்தால் எலும்பில் ஒருமாதிரியான வலி ஏற்படும். தசைகள் பலவீனமாக இருப்பதாகத் தோன்றும்.

வைட்டமின் டி பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு ’ரிக்கெட்ஸ்’ என்ற நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், சாதாரணமான வளர்ச்சியை குழந்தைகள் எதிர்கொள்வது தடைபடும். எலும்புகள், பற்கள் வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படுவதைப் பார்க்க முடியும்.

வைட்டமின் டியால் கிடைக்கும் நன்மைகள் பல. அதில் முதலாவது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். செரிமானத்திறன் மேம்படும். நீரிழிவு நோய், புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கும் என்று நிறைய ஆய்வுகள் சொல்கின்றன. அது மட்டுமல்லாமல் வைட்டமின் டியால் நரம்பு மண்டலம் நன்றாகச் செயல்படும். மன அழுத்தம், கவலை போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் கட்டுக்குள் வரும்.

நமது உடலின் தோல் பரப்பில் 7 டிஹைட்ரோ கொழுப்புகள் படிந்துள்ளன. சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் அதன் மீது படும்போது வைட்டமின் டி3யின் முன்னோடி (precursor) உருவாகும். அதிலிருந்து வைட்டமின் டி3 கிடைக்கும். என்னதான் கூடுதல் உணவுகள், சப்ளிமெண்டுகள் மூலம் வைட்டமின் டி கிடைத்தாலும், சூரிய ஒளியின் வழியாக கிடைக்கும் அளவு அதிகமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

வெளுப்பாய் இருப்பவர்கள் சூரிய ஒளியில் தினமும் 15 நிமிடமும், கருத்த நிறமுடையவர்கள் 1 மணி நேரமும் இருக்க வேண்டியிருக்கும்

என்னதான் சூரியஒளியால் வைட்டமின் டி கிடைத்தாலும் கூட, ஒரு மனிதர் எவ்வளவு நேரம் வெயிலில் நிற்க வேண்டுமென்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும். மனிதரில் கருத்த நிறம் கொண்டவர்கள், கொஞ்சம் வெளுப்பு நிறம் கொண்டவர்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கொஞ்சம் வெளுப்பாய் இருப்பவர்கள் சூரிய ஒளியில் தினமும் 15 நிமிடம் இருப்பது போதுமானது. அதே நேரத்தில் கருத்த நிறம் கொண்டவர்கள் 1 மணி நேரமாவது வெயிலில் இருக்க வேண்டியிருக்கும்.

அதற்குக் காரணம், கருத்த நிறம் கொண்டவர்கள் உடலில் மெலனின் நிறமி அதிகமிருக்கும். வெளுத்த நிறம் உள்ளவர்கள் உடலில் மெலனின் குறைவு என்பதால் சூரிய ஒளி எளிதாகப் பட்டு வைட்டமின் டி உற்பத்தி உடனடியாக நிகழும். கருத்த நிறமுடையவர்கள் உடலில் உள்ள மெலனின் நிறமிகளைத் தாண்டி சூரிய ஒளி வினை புரியத் தாமதம் ஆகும் என்பதால், வைட்டமின் டி உற்பத்தியும் தாமதமாகும்.

மேலும் படிக்க: வைட்டமின்-டி: சூரியவொளி தரும் இலவச ஊட்டச்சத்து!

அதேபோல உடல் பருமன் உடையவர்கள் உடலில் சூரிய ஒளி பட்டு வைட்டமின் டி உருவாகும் அளவு குறைவாக இருக்கும் அதனால், கூடுதல் நேரம் வெயிலில் நடக்க வேண்டும்.  பொதுவாக கொழுப்பு அதிகமுள்ள உணவுகளில் வைட்டமின் டி இருக்கும். கொழுப்பு அதிகமுள்ள மீன்கள், பால், பாலாடைக்கட்டி, முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகமிருக்கும். கொழுப்பான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு வைட்டமின் டி சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்வதும் கூட நலம் பயக்கும். கொழுப்பில் கரையக்கூடிய இயல்பு கொண்டதாக வைட்டமின் டி இருப்பதே இதற்குக் காரணம்.

வைட்டமின் டி குறைபாடு உடையவர்கள் அது நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதும் சூரிய ஒளியில் இருப்பதும் வைட்டமின் டி சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்வதும் பயன் தரும். இப்போது கடைகளில் வைட்டமின் டி பலப்படுத்தப்பட்ட (fortified) உணவுகள் கூட தனியாகக் கிடைக்கின்றன.

வைட்டமின் டி சப்ளிமெண்டுகள் எவ்வளவு தேவை என்பதை மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதிகமாக உட்கொண்டால், உடலால் வைட்டமின் டியை உறிஞ்ச முடியாத நிலை ஏற்படும். அதனால் பலவீனம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு நிலை என்று உடலில் எதிர்மறை பாதிப்பு ஏற்படும்.

வைட்டமின்-டி நம் உடலியக்கத்தில் பலவற்றோடு நேரடித் தொடர்புடையது

பொதுவாகவே, இயற்கையான வழியில் வைட்டமின் டி பெற வேண்டுமானால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதுமுள்ள மக்களில் 13% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. பல பேர் மூடப்பட்ட அறைக்குள் பணியாற்றுவதும், அதனால் சூரிய ஒளி உடலில் படுவது தவிர்க்கப்படுவதுமே இதற்கான காரணம். தினசரி நடைப்பயிற்சி, உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுதல், வைட்டமின் டி நிறைந்த உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொள்ளும்போது வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக மாறி, வைட்டமின் டி குறைபாடு சரி செய்யப்படும்.

வைட்டமின்-டி நம் உடலியக்கத்தில் பலவற்றோடு நேரடித் தொடர்புடையது. உடல் எடை குறைவைச் சாத்தியப்படுத்த, வைட்டமின்-டி சீரான அளவில் இருப்பது அவசியம். நோய் எதிர்ப்புத் திறனைப் பலப்படுத்தும். மூளையில் இருந்து உடலின் இயக்கத்திற்குத் தேவையான தகவலை சுமந்து செல்லும் மெசெஞ்சர் இயக்கத்திற்கு வழி வகுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, புற்றுநோய்க் காரணிகளை கட்டுக்குள் வைக்கும்.

சுறுசுறுப்பான வாழ்வை மேற்கொள்ள வைட்டமின்-டி கண்டிப்பாகத் தேவை. மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்கள் எல்லாரும் வைட்டமின் தேவைகளை ஆராய்ந்தறிந்து அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இனிமேலாவது வைட்டமின் டி முக்கியத்துவம் அறிந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்வோமா!

(பேராசிரியர் அனிதா மது -உணவு அறிவியல் துறை, தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival