Read in : English

Share the Article

கிறித்துவ சுவிசேஷ ஊழியரும் மருத்துவருமான தியோபால்ட் அட்ரியன் பாம் (1848-1928) பிரிட்டனின் லிவர்பூல் அருகே பெர்க்கன்ஹெட் ஊரில் வாழும் குழந்தைகளைக் கண்டு அதிர்ந்தார். ஜப்பானில் பத்தாண்டைக் கழித்துவிட்டு சமீபத்தில்தான் மருத்துவத்தொழில் செய்ய இங்கிலாந்திற்கு அவர் திரும்பியிருந்தார். அவர் கண்ட வேறுபாடு பெரும் உறுத்தலாக இருந்தது அவருக்கு.  திடீரென்று உருக்குலைந்த குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. இதுபோன்ற ஒருநிலையை வெளிநாடுகளில் அவர் ஒருபோதும் சந்தித்ததே இல்லை. அந்தக் குழந்தைகள் வலியில் துடித்தன; பலகீனமான, உருக்குலைந்த எலும்புக் கட்டமைப்பால் கஷ்டப்பட்டன.

காலனிய நாடுகளில் வறுமை, சீரழிவு, ஊட்டச்சத்தின்மை போன்றவற்றைக் கண்டிருந்தாலும் ரிக்கெட்ஸ் என்னும் எலும்புமெலிவு நோயால் கஷ்டப்படும் குழந்தைகளை அங்கேயெல்லாம் தான்பார்த்ததில்லை என்று அவர் நினைவுகூர்ந்தார்.

மர்மம்

தொழிற்புரட்சி வலிகளில் துடித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில், குறிப்பாக ஸ்காட்லாந்தில், இந்த நோயால் அவதிப்பட்ட குழந்தைகள் ஏராளம். அது ‘ஆங்கில நோய்’ என்றழைக்கப்பட்டது. கிளாஸ்கோவில், எடின்பர்க்கில் மற்றும் இங்கிலாந்து நிலக்கரிப் பிரதேசங்களின் 90 சதவீதப் பகுதிகளில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டன. இந்த மாநகரங்கள் மங்கலாகவும், புகைப்பனிமூட்டமாகவும் கரிநிரம்பிய காற்றோடும் பொலிவிழந்தன. மாறாக, காலனிய பிரதேசங்களில் அழுக்கு, சுகாதாரக்கேடு, தூய்மையில்லாத நீர், சீரழிந்த சுற்றுப்புறம் ஆகியவற்றோடு வாழ்ந்த குழந்தைகளுக்கு நிமோனியா, காலரா, காசநோய் ஆகியவை வந்தன. ஆனால் ‘ரிக்கெட்ஸ்’ வந்ததில்லை என்பது புரியாத ஒரு புதிர்.

இதனால் குழம்பிய பாம், ஆசியாவின் தென்கிழக்குப் பகுதி, வட ஆஃப்ரிக்கா ஆகிய இடங்களில் இருந்த சுவிசேஷ ஊழியர்களாய் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கடிதங்கள் எழுதி தேவையான தகவல்களைக் கேட்டார். மேலும், பிரிட்டனிலும், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் பரவிய ‘ரிக்கெட்ஸ்’ நோய்பற்றிய தரவுகளை அவர் சேகரித்தார். உலகம் முழுக்க திரட்டிய தகவல்களும், தரவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு அவருக்குக் கிட்டிய முடிவு அவர்கண்களைத் திறந்தது. சீனா, மங்கோலியா, இந்தியா, மொரோக்கா, சிலோன், ஜப்பான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு ’ரிக்கெட்ஸ்’ நோய் வருவது மிகமிக அபூர்வம். ஐரோப்பாவில் தெற்கு இத்தாலி, தெற்கு ஸ்பெயின், துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளில் சுத்தமாக அந்த நோய் இல்லை. இங்கிலாந்தில் ’ரிக்கெட்ஸ்’ நோய் பெரிய தொழில்மயமான நகரங்களை அதிக அளவில் தாக்கியது: அவை பின்வருவன: கிளாஸ்கோ, எடின்பர்க், க்ளைடே-ஃபோர்த் பகுதி, டைனே ஏரியா, லங்காஸ்டர், யோர்க்ஷயர், பர்மிங்ஹாம், மான்செஸ்டர், கார்டிஃப் மற்றும் ஸ்வான்சீ. லண்டனில் உழைப்பாளர் குடியிருப்புகளில் நோய் கடுமையாக இருந்தது; செழிப்பான ஏரியாக்களில் ஒப்பீட்டளவில் ஒன்றும் பெரிதாக இல்லை. புரிந்துகொள்ள முடியாத வகையில், ‘ரிக்கெட்ஸ்’ நோய் கிராமப்புறங்களை  விட நகரங்களிலே எப்போதும் அதிகமாக பரவியது.

கிடைத்த எல்லாத் தரவுகளையும் சான்றுகளையும் அடிப்படையாக வைத்து பாம் 1890-ல் ”ரிக்கெட்ஸின் காரணமும், புவியியல் பரவலும்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதி அதை ‘பிராக்டிஷனர்’ மருத்துவ  இதழில் வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் அவர் சொன்ன முடிபு இதுதான்:  “ரிக்கெட்ஸ் சாராம்சத்தில் ஓர் ஊட்டச்சத்துப் பற்றாமைதான்… சூரியவொளி வளரும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ரிக்கெட்ஸ் நோயின் மூலக்காரணத்தில் அது மிகவும் முக்கியமானதோர் அம்சம்.” துரதிர்ஷ்டவசமாக, அவரை மருத்துவ உலகம் கண்டுகொள்ளவில்லை. சில தசாப்தங்களுக்குப் பின்பே அவரது ஆய்வு புதிய கவனம் பெற்றது.

ரிக்கெட்ஸ்

ஆதிகாலத்தில் ரிக்கெட்ஸ் நோயைப் பற்றி வெளியே தெரிந்த முதல் ஆய்வுக்கட்டுரையை எழுதியவர் ஃபிரான்ஸிஸ் கிளிஸன் (1597-1677) என்னும் மருத்துவர்தான். அவர் அதை எழுதியது 1650-ல். ரிக்கெட்ஸ் நோயாளிகளை ஆராய்ந்த பின்பு அந்த நோய் எலும்பிலும், உள்ளுறுப்புகளிலும் ஏற்படுத்தும் விளைவுகளை அவர் எடுத்துரைத்தார். இன்றைய காலத்தில் நமக்குத்  தெரியும், வைட்டமின் டி குறைபாட்டால் விளையும் நோய் ரிக்கெட்ஸ் என்று. அது குழந்தைகளுக்கு வலியைத் தரும் விதத்தில் எலும்புகளைப் பலகீனமாக்கி உருக்குலைத்து விடுகின்றது என்றும் நமக்குத் தெரியும். ஒருவர் அருந்தும் உணவில் கால்சியச் சத்தும், ஃபாஸ்ஃபரஸ் சத்தும் இருந்தால்கூட, வைட்டமின் டி இல்லாத உடல் அந்தக் கனிமங்களை மிகக்குறைவாகவே உள்வாங்குகின்றன. இந்தக் கனிமங்கள் எலும்புக்கும் பல்லுக்கும் பலம் கொடுக்கின்றன. அவை இல்லை என்றால், எலும்புகள் சரியாக வளர்வதில்லை. அதனால் ரிக்கெட்ஸ் நோய் உருவாகிறது.

19-ஆம் நூற்றாண்டில் வைட்டமின்-டி குறைபாடும், உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்விலும் வேலையிலும் இருந்த கொடுமைகளும் சேர்ந்து குழந்தைகளுக்கு  ரிக்கெட்ஸ் என்னும் எலும்புநோயை உருவாக்கின.

தொழில்புரட்சி வருகைக்கு முன்பு ரிக்கெட்ஸ் வறிய உணவாலும், ஊட்டச்சத்தின்மையாலும் பெரும்பாலும் ஏழைகளை மட்டுமே தாக்கிய நோயாக இருந்தது. அப்போது யாருமே அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொழில்புரட்சி வந்தபின்பு, குழந்தைத் தொழிலாளிகள் சூரியவெளிச்சம் நுழையமுடியாத சுரங்கங்களுக்கு உள்ளே வேலை பார்த்தார்கள். அதனால் 19-ஆம் நூற்றாண்டில் தொழில் நகரங்களில் தொழிலாளர் குடியிருப்புகளில் வசித்து, சூரியவொளி மறுக்கப்பட்ட இந்தக் குழந்தைகளை ரிக்கெட்ஸ் தாக்கியது. செழித்தோங்கிய தொழில் மாநகரங்களுக்கு ஏராளானபேர் பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்தனர். அதனால் மாநகரங்களில் கூட்ட நெருக்கடி உண்டானது. வான்முகட்டைத் தொட்ட கட்டிடங்களுக்கு இடையில் குறுக்குச் சந்துகளிலும், இருட்டான, நெருக்கடியான வீடுகளிலும், சூரிய வெளிச்சம் புகாத ஒடுங்கிய பகுதிகளிலும் வசித்து விளையாண்டன குழந்தைகள். வெளிச்சத்திற்காக எரிந்துகொண்டிருந்த நிலக்கரி மற்றும் வாயுப் புகைகள் காற்றில் பனிப்புகைமூட்டமாக படர்ந்து சூரியவொளியை மேலும் தடுத்தன. இப்போது நோய், வகுப்புப்பேதத்தை உடைத்து செல்வந்தர் பிரிவினரிடமும் பரவியது. நிலைமை ஆய்வு செய்யும் அளவுக்கு படுமோசமானது.

பதினெட்டாம் நூற்றாண்டில் நோய்களைப் பற்றிய ’நுண்ணுயிரி’ கொள்கையின் தாக்கத்தால் ஐரோப்பிய மருத்துவர்கள் ஒவ்வொரு நோயிலும் ஒரு கிருமியைத் தேடினர். எனினும் மருத்துவரும், உடலியல் பேராசிரியருமான கிறிஸ்டியான் எய்ஜ்க்மான் செய்த ஆராய்ச்சி புதிய பாதையை உண்டாக்கியது. பெரிபெரி என்னும் நோய் கிருமியால் அல்ல, குறிப்பிட்ட நுட்பமான ஊட்டச்சத்துக்கள், மற்றும் வைட்டமின்கள் குறைபாட்டினால் ஏற்படுவது என்றார் அவர்.

ஊட்டச்சத்து

டச்சு கிழக்கு இண்டீஸில் (இந்தோனேசியாவில்) வாழ்ந்தவர்கள் பழுப்புநிற அரிசியை உண்டார்கள்; அதனால் அவர்களுக்கு பெரிபெரி நோய் வந்ததில்லை என்று எய்ஜ்க்மான் அங்கிருந்த நோயாளிகளை ஆராய்ந்தபின்பு கூறினார். மாறாக மெருகெற்றப்பட்ட வெள்ளை அரிசியை உண்ட ஐரோப்பியர்களும் உள்ளூர்வாசிகளும் நோய்க்கு அதிகமாகவே ஆளானார்கள். கோழிகளுக்கு பாலிஷ் செய்யப்பட்ட, செய்யப்படாத அரிசி வகைகளை உண்ணக் கொடுத்து பரிசோதனை செய்துபார்த்த எய்ஜ்க்மான் முடிவில், பாலிஷ் செய்யப்படாத அரிசியில் இருந்த ஏதோவொரு வஸ்து அரிசி பாலிஷ் செய்யப்படும்போது நீங்கிவிடுகிறது என்றும், பெயர் தெரியாத அந்த வஸ்துதான் பெரிபெரி நோயைத் தடுக்கிறது என்றும் தெரிவித்தார். பின்பு, 1912-ல், போலந்து நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரி வேதியியலாளர் காசிமிர் ஃபங்க் பெயர்தெரியாத அந்தப் பாதுகாப்பு வஸ்துவைப் பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்து அது ’அமைன்’ வேதியியல் சேர்மக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடித்தார். இந்த வேதியியல் சேர்மம் மனிதன் உடல்நலத்திற்கு நல்லது என்று கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு அவர் வைட்டமின் என்று பெயரிட்டார். வாஸ்தவத்தில் பிற்காலத்து ஆராய்ச்சியாளர்கள் எல்லா வைட்டமின்களும் ’அமைன்’ குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்று கண்டுபிடித்தார்கள்.

இதற்கிடையில் அமெரிக்காவைச் சேர்ந்த நுண்ணுயிரி வேதியியலாளர் எல்மர் மெக்கொலம், புரோட்டீன், கனிமப்பொருட்கள், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் உணவு ஆகியவற்றைச் சாப்பிட்ட எலிகளின் வளர்ச்சி குன்றியதைக் கண்டார். எனினும் உணவோடு ’கோட்’ மீனின் கல்லீரல் எண்ணெய், வெண்ணெய் அல்லது முட்டைகள் ஆகியவற்றைச் சேர்த்து கொடுத்து எலி்களை உண்ணவைத்த பின்பு, அந்தப் பரிசோதனை விலங்குகளின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருந்தது. ’கோட்’ மீனின் கல்லீரல் எண்ணெயை ஆராய்ச்சி செய்து அதிலிருந்த முக்கியமான வஸ்துவைப் பிரித்தெடுத்தார் மெக்கொலம். அதைத்தான் நாம் வைட்டமின் ஏ என்கிறோம்.

கிறிஸ்டியான் எய்ஜ்க்மான், மெக்கொலம் ஆகிய விஞ்ஞானிகளிடமிருந்து ஒருகுறிப்பை எடுத்துக்கொண்டு, ஆங்கில விஞ்ஞானி சர் எட்வர்டு மெலன்பை, ரிக்கெட்ஸ்கூட உணவில் இருக்கும் ஓர் ஊட்டச்சத்துக் குறைவின் நோயாக இருக்கலாம் என்று அறிவித்தார். ஸ்காட்லாந்தினர்கள் உண்ணும் பிரதானமான ஓட்ஸை நாய்க்குட்டிகளுக்குக் கொடுத்துப்பார்த்தார் அவர். பின்பு அந்த நாய்கள் சூரியவெளிச்சம் படாமல் உள்ளேயே அடைத்து வைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனை நாய்களுக்கு ரிக்கெட்ஸ் நோய் தொற்றிக்கொண்டது. மெலன்பை வெவ்வேறு கூடுதல் உணவுகளை முயற்சி செய்து பாரத்தார்.  ஆலிவ் எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், ஆளிவிதை எண்ணெய் போன்ற காய்கறி எண்ணெய் வகைகள் ரிக்கெட்ஸ் நோயை அதிகமாக்கின என்பதைக் கண்டறிந்தார்.

மாறாக, ’கோட்’ மீன் கல்லீரல் எண்ணெய் அல்லது முட்டை மஞ்சள்கரு ரிக்கெட்ஸைத் தடுக்கிறது அல்லது குணமாக்குகிறது என்று தெரிந்தது. ரிக்கெட்ஸைக் குணமாக்கும் வஸ்து கொழுப்பில் கரைக்கூடியது. மீனின் கல்லீரல் எண்ணெயில் விட்டமின் ஏ சத்து நிறையவே உள்ளது. அதனால் இந்த வைட்டமின் ஏ பற்றாக்குறையால்தான் ரிக்கெட்ஸ் நோய் ஏற்படுவதாக மெலன்பை தவறாக நினைத்துவிட்டார்.

மெக்கொலம் வைட்டமின் ஏ-தான் ரிக்கெட்ஸைக் குணமாக்குகிறதா என்பதைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்தார். ’கோட்’ மீனின் கல்லீரல் எண்ணெயில் பிராணவாயு கொப்பளிக்கும்போது வைட்டமின் ஏ அழிந்துவிடுகிறது. எனினும், வைட்டமின் ஏ குறைபாடு உள்ள ’கோட்’ மீன் கல்லீரல் எண்ணெயை உண்டபின்பு நோய்வாய்ப்பட்ட நாய்கள் குணமாகின. வைட்டமின் ஏ-தான் நோய் குணமாகுவதற்குக் காரணம் என்றால், ரிக்கெட்ஸ் நோய் பாதித்த நாய்கள் வைட்டமின் ஏ குறைபாடு உள்ள ’கோட்’ மீன் கல்லீரல் எண்ணெயை உண்டபின்பு எப்படி குணமாகின? வைட்டமின் ஏ குறைபாடு உள்ள மீன் கல்லீரல் எண்ணெயை உண்டபின்பும் நாய்கள் குணமாகி ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொண்டன. வைட்டமின் ஏ சத்தில்லாத ’காட்’ மீனின் கல்லீரல் எண்ணெய்,  வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படும் ஜெரோஃப்தல்மியா என்னும் ஈரமிழந்த கண்ணழற்சி போன்ற நோய்களைக் குணமாக்கவில்லை. என்றாலும்கூட, பரிசோதனை விலங்குகளின் ரிக்கெட்ஸ் நோயைக் குணமாக்க அந்த எண்ணெய் ரொம்பவே போதுமானதாக இருந்தது.

வைட்டமின் டி

’கோட்’ மீன் கல்லீரல் எண்ணெயில் உள்ள ஏதோவொரு ரிக்கெட்ஸ் நோய்த்தடுப்பு காரணிதான் அந்த அற்புதத்தைச் செய்தது. மெக்கொலம் முன்பின் அறியாத இந்தக் காரணிக்கு வைட்டமின் டி என்று பெயரிட்டார். ஏனென்றால் மருத்துவ உலகம் ஏற்கனவே செய்த ஆராய்ச்சியால் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துவைத்திருந்தது.

முதலாம் உலகப்போருக்கு முன்பும், பின்பும் ஐரோப்பா ரிக்கெட்ஸின் பெரும்தொற்றுப் பரவலைச் சந்தித்தது. விஞ்ஞானி பாம் 1890-களின் வாக்கில் சூரிய வெளிச்சத்திற்கும் ரிக்கெட்ஸ்க்கும் இருக்கும் தொடர்பைக் குறிப்பிட்டார். சூரிய ஒளியோடு ரிக்கெட்ஸ் நோய்த்தொற்று ஒரு தலைகீழ் உறவைக் கொண்டிருந்தது. மேலும், ரிக்கெட்ஸ் தொற்று இருட்டான குளிர்காலத்தில் அதிகமாவதையும், கோடைக்காலத்தில் குறைவானதையும் மருத்துவர்கள் கவனத்தில் கொண்டனர். இந்த பருவநிலை வேறுபாடுதான், ரிக்கெட்ஸ்க்கும் சூரியவொளிக்கும் ஏதோவொரு தொடர்பிருப்பதைக் குறிப்பால் உணர்த்தியது.

இதற்கிடையில், வியன்னா மருத்துவமனை ஒன்றில் எதேச்சையாக நடந்த நிகழ்வுகள் இந்தத் தொடர்பை உறுதிப்படுத்தியது. ஐரோப்பா முழுவதும் 1914-18 காலக்கட்டத்தில் முதலாம் உலகப் போரில் மூழ்கியிருந்தது. அதனால் வியன்னா உட்பட பல மாநகரங்களை உணவுப்பஞ்சமும் பசிபட்டினியும் வாட்டியெடுத்தன. ரிக்கெட்ஸ் நோய்க்கு ஆளான குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகளும் அங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டன. ஒரு குழந்தை காற்றோட்டமும் சூரியவெளிச்சமும் கொண்ட ஓர் அறையிலும், மற்றொரு குழந்தை இருட்டான, சூரியவெளிச்சமில்லாத அறையிலும் தங்கின. இரண்டு அறைகளின் வித்தியாசத்தையும் இரண்டு குழந்தைகளின் வித்தியாசத்தையும் ஆங்கில நுண்ணுயிரி வேதியியலாளர் ஹென்றியெட் சிக் அவதானித்தார்.  இரண்டு குழந்தைகளுக்கும் கடுமையான ரிக்கெட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அவர்களுக்கு ஒரேமாதிரியான உணவுதான் கொடுக்கப்பட்டது. எனினும் சூரியவொளி பட்ட அறையில் இருந்த குழந்தை வெகுவிரைவில் குணமாகியது. இருட்டறைக் குழந்தை குணமாகவில்லை. இந்நிகழ்வுதான் சிக் என்னும் அந்த விஞ்ஞானியை யோசிக்க வைத்தது. எப்படி தாவரங்கள் சூரியவொளி மூலம் ஒளிச்சேர்க்கை செய்து தங்களுக்கான உணவைத் தயாரித்துக் கொள்கிறதோ அப்படியே மனித உடல் சூரியவெளிச்சத்தில் உள்ளுக்குள்ளே ஒரு வஸ்துவை உருவாக்கிக் கொள்கிறது என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

சூரியவொளி வைட்டமின்

இதற்கிடையில், பெர்லினில் இருந்த குழந்தை மருத்துவர் குர்ட் ஹல்ட்ஷின்ஸ்கை, சூரியவொளியைப் போல, பாதரச ஆவி விளக்கின் புற ஊதாக்கதிர்களும் ரிக்கெட்ஸ் நோயைக் குணமாக்கக் கூடியவை என்பதைக் கண்டுபிடித்தார். விரைவில் சூரியவொளிப் புறஊதாக் கதிர்களின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்டது. அதனால்தான் கண்ணாடி ஜன்னல்வழி வரும் சூரிய வெளிச்சம் ரிக்கெட்ஸைத் தடுக்கப் போதுமானதாக இல்லை. ஏனெனில் பெரும்பாலான புறஊதாக் கதிர்களைக் கண்ணாடி உறிஞ்சிவிடுகிறது.

ரிக்கெட்ஸைத் தடுக்கும் காரணியான வைட்டமின் டி இறுதியில் 1932-ல்தான் பிரித்தெடுக்கப்பட்டது. கொழுப்பில் கரையும் இந்த விட்டமின் ’கோட்’ மீனின் கல்லீரல் எண்ணெயிலும் முட்டை மஞ்சள்கருவிலும் இருக்கிறது. சூரியவொளி நிரம்ப கிடைக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஒளிவேதியியல் அமைப்பின்மூலம் அதைப் பெறுகின்றனர். சூரியவெளிச்சத்தில் திளைக்கும்போது, நமது உடலிலே இயற்கையாக இருக்கும் கொலஸ்ட்ராலான 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் புறஊதாக் கதிர்களை உள்வாங்கிக் கொள்கிறது. பின்பு அது பிரிவிட்டமின் டி3-யாக மாறுகிறது. அப்புறம் இந்த பிரி வைட்டமின் டி வைட்டமின் டி3 ஐசோமராக மாறிவிடுகிறது.

  வைட்டமின்-டியைத் தவிர  எல்லா வைட்டமின்களும் உணவு மூலமாக நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம் உடல், வைட்டமின்-டி யை சூரியவொளியில் பெற்றுக்கொள்கிறது.

வைட்டமின் ஏ, பி, என்று 13 வகையான வைட்டமின்கள் உடலுக்கு நல்லது என்று இன்று நமக்கு தெரியும். வைட்டமின் டி-யைத் தவிர  எல்லா வைட்டமின்களும் உணவுமூலமாக நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம் உடல் வைட்டமின் டி-யை சூரியவொளியில் பெற்றுக்கொள்கிறது.

இதுவரை வைட்டமின் டி குறைபாடு ரிக்கெட்ஸ் நோயோடும் எலும்புத்திசு உருக்குலைவோடும்தான் சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் வைட்டமின் டி பல்வேறு நுண்ணுரி வேதியியல் எதிர்வினைகள் பலவற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதும், வளர்சிதை மாற்றப்பணிகளையும், நோய்யெதிர்ப்பு அமைப்பையும், எலும்பின் மற்றும் மனதின் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு அது மிகமிக முக்கியம் என்பதும் தற்காலத்தில் நிறையவே தெரிகிறது. மனத்தாழ்ச்சி, மனநிலை மாறுதல்கள், படபடப்பு, தூக்கமின்மை ஆகியற்றில் வைட்டமின் டி-க்கும் முக்கிய பங்குண்டு என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

அதனால்தான் வைட்டமின் டி, வைட்டமினாகச் செயல்படுவதைவிட அதிகமாக  ஹார்மோனைப் போலச் செயல்படுகிறது. வைட்டமின் டி கொலகல்சிஃபெராலில் உற்பத்தியாகிறது. கல்லீரல் அதை கால்சிடியோலாக மாற்றுகிறது. சிறுநீரகங்கள் அதை கால்சிட்ரியோலாக மாற்றிவிடுகிறது. இந்த கால்சிட்ரியோல்தான் மனித உடலில் உள்ள மும்முரமான ஹார்மோன் வடிவம்.

வைட்டமின் டி உடலுக்குள் பல்வேறு நுண்ணுயிரி வேதியியல் செயற்பாடுகளைத் தூண்டிவிடுகிறது. குடலிலிருந்து கால்சியத்தை உள்வாங்கி இரத்தத்திற்குள் அனுப்பி நோயெதிர்ப்பு அமைப்பில் தாக்கம் ஏற்படுத்துகிறது. நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் வைட்டமின் டியைப் பெற்றுக் கொள்ளும் புரோட்டீன் இருக்கிறது. இந்த ஹார்மோன் பல்வேறு உடல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி அவற்றில் தாக்கம் ஏற்படுத்துகிறது.

பரிணாமம் அடைந்த முதல் ஹார்மோன்

வைட்டமின்-டி பரிணாமம் அடைந்த முதல் ஹார்மோன்களில் ஒன்று. சுமார் 750 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பரிணாமத்தில் தோன்றிய ஒற்றைச்செல் கொண்ட யூகாரியோட்டிக் ஃபைட்டோபிளாங்டன் என்னும் நுண்ணுயிரியான ‘எமிலியனியா ஹக்ஸ்லெய்’ இப்போது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சர்காசோ கடலில் சூரிய வெளிச்சத்திலிருந்து வைட்டமின் டி தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் உள்ள  ஃபைட்டோபிளாங்டன் அல்லது சூபிளாங்டன் போன்ற நுண்ணுயிரிகள் சூரியவொளியிலிருந்து வைட்டமின்-டி யைத் தயாரிக்கின்றன. ஒருவேளை அந்த வைட்டமின்-டி தீதுவிளைவிக்கும் புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் சூரியத்திரையாகக்கூட செயல்படலாம்.

கால்சியம் கொட்டிக்கிடந்த ஆதிகாலத்து கடலிலிருந்து கால்சியம் குறைவான கன்னிப்பூமிக்குள் உயிர்கள் பெயர்ந்தபோது, அதே பாதுகாப்பு அமைப்புதான் கைகொடுத்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கிறார்கள். நுண்ணுயிரியை அடிப்பகுதியில் கொண்ட கடலில் உருவான உணவுச் சங்கிலியில் வைட்டமின் டி குறைவின்றி இருந்தது. மேலும், கால்சியச்சத்து செழுமையான கடல்நீருக்கு கொஞ்சம் வைட்டமின் டி போதுமானதாகவே இருந்தது. பறவைகள், ஊர்வன, மிருகங்கள் ஆகியவற்றிற்கு நிறைய கால்சியம் தேவைப்படுகிறது, அவற்றின் எலும்புகளுக்கும், பற்களுக்கும், முட்டை ஓடுகளுக்கும். வைட்டமின் டி கால்சியத்தை உருவாக்க உடலுக்கு உதவுகிறது. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்கள், ஊர்வன, பறவையினங்கள், பெரும்பாலான பாலூட்டிகள் ஆகியவற்றில் சூரியவொளியிலிருந்து வைட்டமின் டி-யை தோலில் சேர்த்துக்கொள்வதற்கான ஓர் அமைப்பு இருக்கிறது.

குறுங்கோள் தாக்குதலில் உலகம் புகையும் தூசும் அடர்ந்து மறைந்துக் கிடந்தது என்று சொல்லப்படுகிறது. அப்போது சூரியவொளியின் புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையவில்லை. போதுமான வைட்டமின்-டி யை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பதாலே டினோசர்கள் அழிந்து போய்விட்டன.

நமக்குத் தேவையான வைட்டமின் டி-யை உருவாக்கிக் கொள்ள நமக்கு நிஜமாகவே நிறைய சூரியவெளிச்சம் தேவையில்லை. வாரத்திற்கு மூன்றுமுறை 15 நிமிடத்திற்கு கைகளை, கால்களை, முகத்தைச் சூரிய வெளிச்சத்தில் காட்டிநின்றாலே போதும்; நிச்சயம் நமக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும். என்றாலும் தொழிற்புரட்சியின்போது வடக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நகரங்களில் வாழ்ந்த குழந்தைகளில் 80-90 சதவீதம்பேர் வைட்டமின் டி குறைபாடால் அவதிப்பட்டனர். அதனால் 19-ஆம் நூற்றாண்டில் வைட்டமின்-டி குறைபாடும், உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்விலும் வேலையிலும் இருந்த கொடுமைகளும் சேர்ந்து குழந்தைகளுக்கு  ரிக்கெட்ஸ் என்னும் எலும்புநோயை உருவாக்கின.

தற்காலத்தில் நாம் நெருக்கமாகக் கட்டப்பட்ட, மூடியே கிடக்கும் வீடுகளில்  வசிப்பதால், வைட்டமின் டி குறைபாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டில் தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்வு நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்ததினால் ரிக்கெட்ஸ் என்னும் பெருந்தொற்று ஏற்பட்டது. அந்தக் காலத்தில் இருந்தவற்றை விட ஒன்றும் வித்தியாசமானவை அல்ல இந்தக்காலத்துச் சவால்கள்!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles