Read in : English
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல். பகல் வேளைகளில் மனிதர்கள் புழங்கும் சாலைகள், எஸ்டேட்டுகள், பயிர்நிலங்கள் ஆகியன இரவு நேரத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யமாகி விடுகின்றன. வனத்துறை தரவுகள்படி, கடந்த ஐந்தாண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் 40க்கும் மேலான மனிதர்கள் விலங்குகள் தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள்.
கூடலூர்-வயநாடு, கூடலூர்-தளூர்-சுல்தான் பேத்தேரி, கூடலூர்-நடுக்கனி- வழிக்கடவு ஆகிய இருமாநில நெடுஞ்சாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள். இங்கேதான் அடிக்கடி யானைகள் நடமாட்டம் நிகழ்கின்றன. இரவு நேரங்களில் இங்கே பைக் ஓட்டிச் செல்பவர்கள் மிகமிக அபூர்வம். கார்களிலும் ஜீப்புகளிலும் வழக்கமாகச் செல்பவர்கள் கடவுளைப் பிரார்த்திக்கொண்டே தான் செல்ல வேண்டும்.
கடந்த காலத்தில் விலங்குகளின் உலகத்திற்கும் மனித உலகத்திற்கும் இடையே ஓர் இயல்பான, இசைவான உறவு இருந்தது. கரடிகள், குரங்குகள் தவிர வேறெந்த விலங்குகளும் மனித வசிப்பிடங்களுக்குள் அத்துமீறியதில்லை. காடுகளிலேயே தீவனம் கிடைத்து விடுவதால் யானைகள் காட்டு எல்லைகளைத் தாண்டி வெளியே வருவதில்லை.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல்
குறைவான நட்ட ஈடு
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான போராட்டம் பல ஆண்டுகளாக நிகழ்வதுதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துவிட்டது. கடந்த 12 ஆண்டுகளாகக் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் இந்தப் போராட்டம் பல மனிதர்களைச் சாகடித்திருக்கிறது.
ஆனால் 1971 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் கூடலூர் வனப் பிரிவில் யானை தாக்கி இறந்தவர்கள் மொத்தமே 32 தான். அவர்களில் 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1,99,999 நட்ட ஈடு வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.இராமச்சந்திரன் வெளியிட்ட தகவல்படி, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் வன விலங்குகள் தாக்கி மொத்தம் 337 பேர் இறந்திருக்கிறார்கள். நிதிப்பற்றாக்குறை காரணமாக, நட்ட ஈடு கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட 2,901 மனுக்கள் நிலுவையில்தான் இருக்கின்றன. சமீபத்தில் வன விலங்குகளினால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், காயம்பட்டவர்களுக்கும், பயிர்நாசத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கும் மொத்தம் ரூ.6.42 கோடி நட்ட ஈடு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்
1993-2006 காலகட்டத்தில் 34 யானைகள் கூடலூர் வனப்பிரிவில் விஷம் கொடுத்தும் மின்சாரம் ஏற்றியும் கொல்லப்பட்டிருக்கின்றன. கூடலூர் வனப்பிரிவில் நான்கு புலிகள் இறந்திருக்கின்றன; அவற்றில் இரண்டு கூடலூர் காடுகளில் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தக் காடுகளில் ஐந்து சிறுத்தைகள் இறந்திருக்கின்றன; கூடலூர் வனப்பிரிவில் மொத்தம் 8 சிறுத்தைகள் இறந்ததாகத் தகவல் சொல்கிறது.
1993-2006 காலகட்டத்தில் விலங்குகள் பயிர்களை நாசம் செய்த சம்பவங்கள் மொத்தம் 2,141 என்று சொல்லப்படுகிறது. அவற்றில் மிக அதிகமான சம்பவங்கள் (1,065) கூடலூர் காடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கான நட்ட ஈட்டைத் தர வனத்துறை மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து மறுத்து வந்ததால், விலங்குகளால் பயிர்கள் நாசமாகும் சம்பவங்களைப் பற்றி இப்போது விவசாயிகள் தகவல் சொல்வதில்லை. தங்கள் தலைவிதி என்று விட்டுவிட்டார்கள்.
யானை தாக்கி மனிதர்கள் இறந்தால்கூட உறவுக்காரர்கள் கத்திக் கூப்பாடு போட்டால்தான் நட்ட ஈடு வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனினும், ரூபாய் 3 இலட்சமாக இருந்த நட்ட ஈட்டை ரூ.5 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 25 சதவீதம் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் என்றும் அரசாணை அறிவித்தது.
2011ல் இந்த நட்ட ஈடு ரூ.1.5 இலட்சத்திலிருந்து ரூ.3 இலட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால் பெருத்த காயம் என்றால் நட்ட ஈடு வெறும் ரூ.30,000 மட்டும்தான். பயிர் நாசத்திற்கான நட்ட ஈடு ஏக்கருக்கு ரூ.25,000. இது மிகவும் குறைச்சலான நட்டஈடு. விவசாயிகளின் பயிரிழப்பை இது ஈடுகட்டாது. தென்னைமர விவசாயிக்கு ரூ.500 மட்டுமே நட்டஈடாகக் கொடுக்கப்படுகிறது. தென்னையின் மதிப்புக்கு இது ஈடில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த காலத்தில் விலங்குகளுக்கும் மனித உலகத்திற்கும் இடையே ஓர் இயல்பான, இசைவான உறவு இருந்தது; கரடிகள், குரங்குகள் தவிர வேறு விலங்குகள் மனித வசிப்பிடங்களுக்குள் அத்துமீறுவதில்லை
வீட்டிற்கு ஏற்படும் சேதாரத்திற்கான நட்டஈடாக ரூ.8,000 வழங்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கான நட்டஈடு ரூ.10,000 மட்டுமே. ஒரு கறவை மாட்டின் சந்தை மதிப்பு ரூ.40,000க்கும் மேலே என்கிறார்கள் விவசாயிகள்.
வனவிலங்குகளின் தாக்குதலில் இறக்கும் மனிதர்களுக்கான நட்டஈட்டை ரூ.10 இலட்சமாக உயர்த்திட வேண்டும் என்கின்றன விவசாயச் சங்கங்கள். வனத்துறை ஊழியர்களின் மரணத்திற்கான நட்டஈடு ரூ.10 இலட்சமாக இருக்கிறது என்பதையும், இதை ரூ.50 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதையும் விவசாயிகளுக்கான அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
மேலும் படிக்க: வனவிலங்கு வேட்டை தடுப்பில் பின்னடைவு ஏன்?
ஓவேலியில் மரண இரவுகள்!
நீலகிரி மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகளுக்கான சரியான எடுத்துக்காட்டு, கூடலூர் அருகே காடுகள் சூழ்ந்திருக்க சுமார் 25,000 மக்கள் வசிக்கும் ஓவேலி பஞ்சாயத்து தான். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஓவேலி கிராமங்களில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் யானை தாக்குதலில் இறந்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு பெண் அருகாமையில் இருக்கும் எஸ்டேட்டில் வேலை பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பும்போது யானை தாக்கி இறந்திருக்கிறார்; மற்றொரு பெண் இயற்கை உபாதையைத் தீர்க்கும் பொருட்டு இரவில் வெளியே போனபோது யானை தாக்கி இறந்திருக்கிறார்.
இந்தாண்டு மே மாதத்தில் தொடர்ந்து இரண்டு பேர் இப்படி இறந்திருக்கிறார்கள். இரவுப்பொழுது வந்தாலே யாருக்குச் சாவுமணி ஒலிக்கப் போகிறதோ என்ற அச்சம் இப்பகுதி கிராமத்து மக்களை வாட்டி வதைக்கிறது.
முன்பெல்லாம் வனத்துறை ஊழியர்கள் யானைகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து அவை ஊருக்குள் வந்துவிடாதவாறு தடுத்து மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள். இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை. வனத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையால் முன்புபோல காவல் காக்க முடியவில்லை. யானைகள் பெரும்பாலும் பகல் நேரத்தில் ஊருக்கு வெளியே இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டு இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கண்ணில்பட்ட மனிதர்களைத் தாக்கி மரணிக்கச் செய்கின்றன. குறிப்பாக தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்கள் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுப்புறச்சூழல் சீர்குலைவு
முதுமலை வனக்காப்பகத்தில் யானைகளின் வரத்து அதிகரிப்பதால், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
2000வது ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கள ஆய்வுப்படி, முதுமலை வனக்காப்பகத்தில் 530 முதல் 1,000 வரையிலான யானைகள் இருந்தன. 1987 ஆய்வுப்படி, யானைகள் எண்ணிக்கை வெறும் 350 ஆகத்தான் இருந்தது. யானைகளின் அதிகரிப்பு, வனங்களின் தன்மையில் ஏற்பட்ட வீழ்ச்சி, படையெடுத்துத் தாக்கும் வனஉயிர்களின் அடர்த்தி, சுற்றுப்புறச் சீர்கேடுகளால் இயற்கைச் சூழல் நாசமாகிப் போனது. யூகலிப்டஸ் மற்றும் தேக்கு மரங்கள் மண்ணை ஆக்ரமித்ததால் மற்ற தாவரங்களால் வளர முடியவில்லை என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தேக்கு இலைகளில் இருக்கும் சிலிக்கா மண்ணில் இருக்கும் நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் மண் இறுதியில் மலடாகி விடுகிறது.
காட்டுப் பகுதிகளைத் துண்டாடியதில் பயிரிடுவோர் குழுக்களுக்கும், டேன்டீ போன்ற அரசுத் திட்டங்களுக்கும் பெரும்பங்கு உண்டு; இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்விற்காகக் கொண்டுவரப்பட்ட டேன்டீ திட்டம் 16,000 ஏக்கருக்கும் மேலான வனநிலங்களைக் கபளீகரம் செய்தது
முதுமலை வனக்காப்பகத்தில் இருக்கும் 760க்கும் மேற்பட்ட ஆசிய வகை யானைகளில் 40 யானைகள் காடு தாண்டி மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதை வனத்துறை ஒத்துக் கொள்கிறது.
யானைகளும் புலிகளும் காடுகள் தங்களுக்கு இணக்கமாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டு மந்தைகளை விட்டு விலகி தனித்தனியாகப் பயணித்து மனித வசிப்பிடங்களுக்குள் நுழைந்து விவசாயிகளின் விளைச்சலை நாசமாக்கி விடுகின்றன என்று சொல்கிறார்கள் விலங்கு நிபுணர்கள்.
அப்படி பிரச்சினைக்குரிய விலங்குகளை மீட்டெடுத்து அவற்றிற்குரிய வனப்பகுதிகளைச் சரிசெய்து மீண்டும் அவை தங்கும்படிச் செய்ய வேண்டும்; அவற்றை இன்னொரு வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பது பிரச்சினையைத் தீர்ப்பதில்லை என்று விவசாயிகளும் பயிர்நில உரிமையாளர்களும் சொல்கிறார்கள்.
காட்டுப் பகுதிகளைத் துண்டாடியதில் பயிரிடுவோர் குழுக்களுக்கும், டேன்டீ போன்ற அரசுத் திட்டங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. குறிப்பாக, இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்விற்காகக் கொண்டுவரப்பட்ட டேன்டீ திட்டம் 16,000 ஏக்கருக்கும் மேலான வனநிலங்களைக் கபளீகரம் செய்தது.
இயற்கை மீளுருவாக்கத் திட்டத்தின்படி மாநில அரசு 5,000 ஏக்கர் வனநிலங்களை வனத்துறையிடம் ஒப்படைத்து அவற்றை இயற்கைக் காடுகளாய் மாற்றவிருக்கிறது. என்றாலும், தான்பட்ட காயங்களை ஆற்றிக் கொள்வதற்கு இயற்கைக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று பசுமைவாதிகளுக்கே தெரியவில்லை.
இயற்கை பாதுகாப்புக்கென்று ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் ஏராளமான நிதி வருகிறது. அதனால் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு விவசாயிகளை மட்டும் குற்றஞ்சொல்லும் இன்றைய தந்திரோபாயம் எந்தவிதத்திலும் நியாயமில்லை.
Read in : English