Read in : English
கோயம்புத்தூர் கார் வெடிப்புக்குப் பின் பாஜக தலைவர்களும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்ததைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆளுங்கட்சியான திமுக கடுமையாக்கியுள்ளது,
நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருந்த அணிவகுப்புகளை ஆர்.எஸ்.எஸ். ரத்து செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தமிழகத்தில் வகுப்புவாத கலவரங்களை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பின் நோக்கம் என்று குற்றம்சாட்டினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும், மாநிலத்தை அமைதிப்பூங்காவாக வைத்திருக்க முதலமைச்சர் சரியான முடிவுகளை எடுப்பார் என்றும் கூறினார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருப்பவர்களில் சேகர்பாபு எப்போதும் நெற்றியில் குங்குமத்துடன் காட்சி தருபவர். தீவிர கடவுள் நம்பிக்கையும் இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றும் உள்ளவர். சேகர்பாபு கழகத்தின் கொள்கைகளைப் பேசி அதிகமாக யாரும் பார்த்திருக்க முடியாது. அதேநேரத்தில், சிறந்த களப்பணியாளராக அறியப்படுபவர்.
அவர் ஆர்.எஸ்.எஸ். மீது தாக்குதல் தொடுத்தது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவாரத்தை களத்தில் எதிர்கொள்ள திமுக தயாராகிவிட்டது என்பதையே அவரது பேச்சு உணர்த்தியுள்ளது.
சேகர்பாபு கழகத்தின் கொள்கைகளைப் பேசி அதிகமாக யாரும் பார்த்திருக்க முடியாது; அவர் ஆர்.எஸ்.எஸ். மீது தாக்குதல் தொடுத்தது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது
கோவையில் கார் வெடிப்புக்குப் பின் பாஜக தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். கோவையில் பந்த் அறிவிக்கும் அளவுக்குச் சென்றனர். அதற்கு மக்கள் ஆதரவு இல்லை. வணிகர்களும் பந்த் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தலைவர்கள் இடையிலும் இந்த போராட்டம் குறித்து மோதல் ஏற்பட்டது. அதனால், பந்த் நடத்துவதை பாஜக கைவிட்டது.
கார் வெடிப்பு குறித்த விசாரணையைத் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு பாஜகவின் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான பிரச்சாரம் வலிமை இழந்தாலும், நடந்ததையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த திமுக இந்துத்வா குழுக்களைப் பொறுத்தவரை தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க: ஆர்எஸ்எஸ் பேரணி, அரசு தடுக்குமா?
கார் வெடிப்பு போன்ற ஒரு சம்பவத்தை பாஜக எப்படி தனது காவி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதை நடைமுறையில் திமுக உணர்ந்துகொள்ள இந்த எதிர்ப்பிரச்சாரம் உதவியுள்ளது. ‘அரசு உளவுத்துறை இயந்திரத்தின் தோல்வி’ என்று கார் வெடிப்பு நிகழ்வைக் குற்றம் சாட்டிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 60 சதவீத உளவுத்துறை அதிகாரிகள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளைத் தடுக்காமல் தனது கட்சி நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும் கூறியதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள முஸ்லிம் அமைப்புகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைக்கு மாநில அரசு வழங்கிய ஆதரவை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் அனைத்து சிறுபான்மை மக்களின் நீண்டகால ஆதரவைப் பெற்றுள்ள திமுக முஸ்லிம் அமைப்புகளை ஓடுக்குவதாகவும் இந்துத்வா குழுக்களின் செயல்பாடுகளை ஆதரிப்பதாகவும் தோற்றமளிக்க முடியாது.
கார் வெடிப்புக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தனது அணிவகுப்புகளை அறிவித்தபோது, கூட்டணிக்கட்சிகளின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்புதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கக் கோரி முறையீடு செய்தது திமுக அரசு. அந்த ஊர்வலங்களை உயர்நீதிமன்றம் அனுமதித்தபோது, கூட்டணிக் கட்சிகள் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்ய அழுத்தம் கொடுத்தபோது மாநில அரசு அதை ஏற்கவில்லை.
இறுதியாக திமுகவின் கூட்டணிக்கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகளும் இடதுசாரிக் கட்சிகளும் அக்டோபர் 2ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தன. அதற்கு திமுகவின் தாய் அமைப்பான திராவிடர் கழகமும் வைகோவின் மதிமுகவும் ஆதரவு தெரிவித்ததுடன் அவற்றின் தலைவர்கள் நேரடியாக கலந்துகொண்ட நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அரசு அனுமதி மறுத்தது. அதே நாளில் கூட்டணிக் கட்சிகள் நடத்தப்போவதாக இருந்த மனித சங்கிலிப் போராட்டத்தையும் அனுமதிக்கவில்லை.
கார் வெடிப்புக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தனது அணிவகுப்புகளை அறிவித்தபோது, கூட்டணிக்கட்சிகளின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்புதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கக் கோரி முறையீடு செய்தது திமுக அரசு
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பின் திமுக அரசின் நிலைப்பாடு வெகுவாக மாறியுள்ளது. இந்த முறை கோவையின் சில பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அரசு அனுமதி தரவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் அணிவகுப்புகளுக்கு அனுமதி அளித்தாலும் அரசின் கடுமையான எதிர்ப்பு காரணமாக பல நிபந்தனைகளை விதித்தது; இறுதியாக அணிவகுப்பை ரத்து செய்தது ஆர்.எஸ்.எஸ்.
அணிவகுப்பில் கலந்துகொள்பவர்கள் மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தக்கூடிய கம்புகள், லத்திகள் அல்லது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது. எந்தவொரு தனிநபரையோ, சாதியையோ அல்லது மதத்தையோ தவறாகப் பேசக்கூடாது, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எதுவும் கூறக் கூடாது ஆகிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
மேலும் படிக்க: காவி எதிர்ப்பு: முன்னணியில் திருமா
கார் வெடிப்பு நடந்த கோவை உள்ளிட்ட ஆறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற காவல் துறையின் முடிவையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கோவை மாவட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மற்றும் கன்னியாகுமரியில் அருமனையிலும் அணிவகுப்பு நடத்தக் கூடாது என்பது உறுதி செய்யப்பட்டது.
கோவை கார் வெடிப்புக்கு முன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களைக் கட்டுப்படுத்த திமுக அரசு முனைப்பு காட்டாமல் இருந்தது, முதல்வர் ஸ்டாலின் காவி அரசியலுக்கு எதிரான மென்மையான அணுகுமுறைக்கு மாறிவிட்டாரோ என்ற சந்தேகத்தை கூட்டணிக்கட்சிகளிடம் ஏற்படுத்தியது. இந்த முறை தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறைக்கு மாறியது அவர்களின் அச்சத்தைப் போக்கியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் ஆளும் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் தென்பட்ட விரிசல் மறைந்துள்ளது. போலவே, ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைக்குத் தோழமைக் கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே ஆதரவு அளித்து, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படவிருக்கும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளன.
Read in : English