Read in : English
சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet) என்பதே தமிழகத்தில் கிளி என அழைக்கப்படும் பறவையினம். இலங்கை பேச்சுவழக்கில் ‘பயற்றங்கிளி’ எனப்படுகிறது. தமிழகத்தில் பச்சை நிறத்தில், வளைந்து சிவந்த அலகுடன் காணப்படும். ஆண் பறவைக்குக் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு கலந்த வண்ணத்தில் கழுத்து வளையம் இருக்கும். பெண்கிளி எல்லா வகையிலும் ஆண் போல இருந்தாலும் கழுத்து வளையம் மட்டும் இருக்காது.
மனிதர்கள் பேசும் சொற்களைக் கேட்டு, பழகி திரும்பச் சொல்லும் திறன் பெற்றது கிளி. தமிழகத்தில் இதை அஞ்சுகம், தத்தை, கிள்ளை என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். பெரிய மரங்களில் இயற்கையாக அமைந்த பொந்துகளில் வசிக்கும். சொந்தமாகக் கூடு கட்டுவதில்லை. சிலர் இதைப் பிடித்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதும் உண்டு. கிளியைப் பேச வைக்க முடியும் என்ற தவறான எண்ணமே இதற்குக் காரணம்.
கிளியைப் பிடித்துப் பழக்கி, ஜோதிடத் தொழில் செய்வோரும் உண்டு. ஒருகாலத்தில் கிளி ஆரூடம் தமிழகத்தில் பிரபலமாக இருந்தது. சென்னை கடற்கரை, மாமல்லபுரம் போன்ற சுற்றுலா இடங்களில், கிளி ஆரூடம் சொல்வேரை இப்போதும் காண முடியும். வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் தீவிமாக அமல்படுத்தப்பட்டு வருவதால் கிளி ஜோசியர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
சித்தாசிடே இன குடும்பத்தைச் சேர்ந்த பறவை கிளி. உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலக் காடுகளிலும் காணப்படுகிறது. பத்து கிராம் அளவில் இருந்து, நான்கு கிலோ வரை எடை வரை இருக்கும்.
ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கக் காடுகளில் அதிக வகை கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் சிவப்பு ஆர கிளிகள் அதிகம் உள்ளன.
மனிதர்கள் பேசும் சொற்களைக் கேட்டு, பழகி திரும்பச் சொல்லும் திறன் பெற்றது கிளி. தமிழகத்தில் இதை அஞ்சுகம், தத்தை, கிள்ளை என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்
விதை, பழம், பூக்கள் தான் கிளியின் முக்கிய உணவு. ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் ’கியா’ என்ற இனக் கிளி, அழுகிய மாமிசத்தையும் உண்ணும். உலகின் மிகப்பெரிய கிளி இனம் ’ககாபோ’. இதற்கு பறக்கும் திறன் கிடையாது. குதித்து மரங்களில் ஏறும். உலகில் அருகி வரும் அரிய பறவைகளில் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகிறது.
மனிதன் உச்சரிப்பது போல் ஒலி எழுப்ப வல்லது பச்சைக் கிளி. பயிற்சி அளித்தால் சில சொற்களைத் திரும்ப உச்சரிக்கும். வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் உண்டு.
மேலும் படிக்க:அழிந்து வரும் பிணந்தின்னிக் கழுகுகள்!
நான்கு வயது குழந்தைக்கு சமமாக, கிளிக்கு ‘ஐக்யூ’ இருப்பதாகப் பறவையியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சாம்பல் நிறக் கிளி, 100 சொற்கள் வரை நினைவில் நிறுத்திப் பேசும் திறன் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கிளி மட்டுமே உண்பதற்குக் கால்களைப் பயன்படுத்தும் திறன் கொண்ட பறவை. இதன் ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் உள்ளன; இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்னோக்கியும் இருக்கும். மனிதன் கைகளால் உணவைப் பற்றுவது போல உணவுப்பொருளை கால்களால் பற்றிச் சாப்பிடுகிறது கிளி.
தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே கிளியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் சிலை கரத்தில் கிளி உள்ளது. இது வழிபாட்டு மரபில் கிளியின் முக்கியத்தும் பற்றி குறிக்கும் ஆவணம்.
அழகிய நிறமும் வண்ண அலகும் அமைதியான தோற்றமும் மனிதனுக்கு இதன் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாக உள்ளன. இதனால், கிளியைச் செல்லப் பறவையாக கூண்டில் அடைத்து வேடிக்கை பார்க்கின்றனர் சிலர்.
இலங்கையில் தமிழர் குடியிருப்பு பகுதிகளில் கூண்டில் கிளியை வளர்ப்பதைச் சாதாரணமாகக் காணலாம். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலும் இதே நிலைமை இருந்தது. இது போன்ற செயல்களைத் தடுக்க இந்தியாவில் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972இல் இயற்றப்பட்டது. இந்த சட்டம், இதுவரை ஏழு முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
கிளி மட்டுமே உண்பதற்குக் கால்களைப் பயன்படுத்தும் திறன் கொண்ட பறவை. இதன் ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் உள்ளன; இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்னோக்கியும் இருக்கும்
இந்த சட்ட அமலாக்க அடிப்படையில், தமிழக நிலப்பரப்பில் வன உயிரினங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி, கிளிகளைப் பிடித்து வைத்திருப்பதும் குற்றமாகக் கருதப்படுகிறது. இதைக் கூண்டில் அடைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப்படி, ஒருவரைக் குற்றம் சாட்டி சிறை பிடித்தால், அதை அமல்படுத்திய விசாரணைப் பிரிவு தான், அவரது குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஆனால், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தில், குற்ற வழக்கில் சிக்கியவர் தான் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும். இந்த கடும் சட்டம், இந்தியாவில் பல்லுயிரினங்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் தயாரித்துள்ள செம்பட்டியலில், தீவாய்ப்பு கவலை குறைந்த பறவையினமாக கிளி பட்டியலிடப்பட்டு உள்ளது. இதனால் தான், இத்தனை காலமும் கிளிகள் விஷயத்தில் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் தீவிரம் காட்டவில்லை. சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் இயற்கை பல்லுயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அது ஒரு பண்பாடாக மலர்ந்து வருகிறது.
மேலும் படிக்க:பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்
பறவைப் பாதுகாப்பில் குழுக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வப்போது நடக்கும் பறவைக் கணக்கெடுப்பு நிகழ்வுகளில் பொதுமக்களும் பங்கேற்கின்றனர்.
இந்த விழிப்புணர்வால் தான், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழக வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக, கிளியைக் கூண்டில் அடைத்திருப்பதைத் தடுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் கிளிகள் மீட்கப்பட்டு, வனத்தில் சுதந்திரமாக விடப்பட்டுள்ளன.
ஒருவரைக் குற்றம்சாட்டி சிறை பிடித்தால், விசாரணைப் பிரிவு தான் குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தில், குற்ற வழக்கில் சிக்கியவர் தான் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும்
கிளியைப் பழக்கி கூண்டில் அடைத்து, சுற்றுலா இடங்களில் ஆரூடத்துக்குப் பயன்படுத்தி வருவோர் மீது தற்போது கிடுக்கிப்பிடி விழுந்துள்ளது. ஆரூடத்துக்குப் பயன்படுத்தும் கிளியைப் பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறைத் தண்டனையும் உறுதி என எச்சரித்துள்ளது தமிழக வனத்துறை. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்னும் தமிழக கிராமப்புறங்களை முறையாக எட்டியதாகத் தெரியவில்லை.
ஆதலால், முறையாக கிராமங்களில் விழிப்பு ஏற்படுத்திய பின், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வனத்துறை தீவிரம் காட்ட வேண்டும். கிளியைக் கூண்டில் அடைத்து துன்புறுத்தினால் மட்டுமல்ல, காக்கை மீது கல்லெறிந்தாலும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் பாயும்.
காக்கையும் இந்த சட்டப் பாதுகாப்பு வரம்புக்கு உட்பட்ட உயிரினமாகவே உள்ளது. சட்டத்தின் கடுமை மட்டும் சற்று வேறாக இருக்கும். எனவே, பல்லுயிரினங்களைப் பேணிப் பாதுகாத்து மகிழ்வுடன் வாழ்வோம்!
Read in : English