Read in : English
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செல்லாமல் தவிர்த்ததை மையமாக வைத்து அதிமுகவில் அவருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் கண்டனங்கள் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடைபெறும் அதிகார மோதலில் சாதி முக்கியப் பங்காற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது. அதிமுகவின் போட்டி அணிகளில் உள்ள எதிர்ப்பாளர்கள் பழனிசாமிக்கு முத்துராமலிங்கத் தேவர் மீது உண்மையான மதிப்பில்லை என்றும் அவர் தலைமையிலான கட்சிக்கு முக்குலத்தோர் வாக்களிக்கக் கூடாது என்றும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் நடைபெறும் ’குருபூஜை’ தென் மாவட்டங்களில் முக்கியமான அரசியல் நிகழ்வாக நோக்கப்படுகிறது. முக்குலத்தோர் சார்பு கொண்ட இந்நிகழ்வில் கலந்துகொள்வதைப் பிரதான கட்சிகள் ஒரு அரசியல் நகர்வாகவும் கருதுகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்குமான மோதல் முற்றியுள்ள தற்போதைய சூழலில், இந்த குருபூஜையில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.
தலைமைப் பதவிக்காகப் பழனிசாமியை எதிர்த்து நிற்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முக்குலத்தோர் சமூகத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டிக்கொள்ள தேவர் பூஜையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதில் முனைப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் இந்த நிகச்சியைப் பயன்படுத்திக் கொண்டு, தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தங்களுக்கு இருக்கும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருக்குப் பின் அந்த இடத்தை நிரப்பிய ஜெ.ஜெயலலிதாவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களாக மட்டும் பார்க்கப்படவில்லை, சாதி, மதங்களைக் கடந்து அனைத்துப் பிரிவினரிடமும் ஆதரவைப் பெற்றனர். அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கிய பிறகும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் இடையே திமுக தனது செல்வாக்கைப் பெருமளவு தக்கவைத்துக் கொண்டது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் இரு திராவிடக் கட்சிகளும் முக்குலத்தோர் வாக்குவங்கியைப் பங்கு போட்டுக்கொண்டன.
குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது
அதிமுக தலைமைப்பதவிக்கு ஜெயலலிதா வந்தபின் காவிரி டெல்டா பகுதியில் திமுகவின் முக்குலத்தோர் வாக்குகளை பெறத் தொடங்கினார். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா அவருடன் இருந்தது அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அதேநேரத்தில், அதிமுகதொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி எப்போதும் அதன் கோட்டையாக இருந்து வருகிறது; அப்பகுதி மக்கள்தொகையில் பெரும் பகுதியான கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் அமோக ஆதரவு இருந்தது.
இப்போதும், தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் கடுமையான போட்டி நிலவும் நேரங்களில் கூட தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் பெரும்பான்மையான இடங்களை அதிமுக கைப்பற்றி வருகிறது. பெருமளவு ஆதரவு இருப்பதால் அக்கட்சியின் பெரும்பாலான அமைச்சர்களும் முக்கியத் தலைவர்களும் அந்த பகுதியைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
மேலும் படிக்க:சசிகலா பயணம்: அதிமுகவில் ஜாதிய மோதல் தீவிரமாவதன் அடையாளமா?
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தலைமைப்பீடத்தில் இருந்தவரை அவர்களின் செல்வாக்கை நம்பியே கட்சி இருந்தது. மற்ற தலைவர்கள் எல்லாரும் மக்கள் பார்வையில் படாத பூஜ்ஜியங்களாகவே இருந்தனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முக்குலத்தோர், கவுண்டர் சமுதாயத்தில் இருந்து முக்கியத் தலைவர்கள் கட்சியில் முன்னணிக்கு வந்துள்ளனர்.
பழனிசாமி கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அவருக்குப் போட்டியாக களத்தில் இருக்கும் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது தலைமைப் போட்டியில் சாதிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் மீது சாதி சாயம் படர்வதை பழனிசாமி சிறிதும் விரும்பவில்லை. அதனாலேயே, கட்சியில் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த செல்வாக்கான மூத்த தலைவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முக்கியப் பதவிகள் அளிப்பதை கவனமாகத் தவிர்த்து வருகிறார். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிக ஆதரவு இல்லாத நிலையில் இருக்கும் பன்னீர்செல்வம் தன்னை முக்குலத்தோர் தலைவராகச் சித்தரிக்கக் கடுமையாகப் பாடுபடுகிறார். தினகரன் மற்றும் சசிகலாவுடன் கைகோர்க்க அவர் தயாராக இருப்பதாகத் தோற்றமளிப்பது, அதிமுகவைக் கைப்பற்ற முக்குலத்தோர் ஒன்றுதிரள்வார்கள் என்ற பிம்பத்தையும் தவிர்க்க முடியாமல் உருவாக்குகிறது.
அதிமுக தலைமைப்பதவிக்கு ஜெயலலிதா வந்தபின் காவிரி டெல்டா பகுதியில் திமுகவின் முக்குலத்தோர் வாக்குகளை பெறத் தொடங்கினார்; முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா அவருடன் இருந்தது அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது
பழனிசாமியைப் பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்றத் துணைத்தலைவராகவும், அதே சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனைப் பொருளாளராகவும் தேர்வு செய்துள்ளார்; முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குக் கொறடா பதவி வழங்கப்பட்டதைத் தவிர அவரது சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு உயர் பதவிகள் தரப்படவில்லை.
தேவர் குருபூஜை விழா இரு பிரிவினருக்கும் அந்த சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது. முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கிய தங்கக் கவசத்தை நிறுவ உரிமை கோரி அதிமுக தலைவர்களிடையே போட்டி ஏற்பட்டது. அது நீதிமன்ற வழக்காகவும் மாறியது. முடிவில், மாவட்ட அதிகாரியான டிஆர்ஓ கவசத்தைப் பெற்று சிலையில் அதைப் பொருத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க: பறிபோகும் ’இரட்டை இலை’: பணிவாரா எடப்பாடி?
குருபூஜைக்கு முன்னதாக தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயகுமாருக்கும் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எதிர்ப்பும் ஏற்பட்டது. நினைவிடத்துக்குச் செல்ல பழனிசாமி தயங்கியதை வைத்து அவரை முக்குலத்தோர் சமூகத்தின் எதிரி என்று காட்ட எதிர்ப்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வராத பழனிசாமிக்கு தென்மாவட்ட மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டுமா?” என்று அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 46 இடங்களில் 29 இடங்களை அதிமுக வென்றது, தற்போதுள்ள மொத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட இது பாதியாகும். 2016 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 32ல் அதிமுக வென்றது. அது தற்போது 16ஆக குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 4ல் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது; அதாவது 2016ல் பெற்ற எண்ணிக்கையை விட இது 19 இடங்கள் குறைவு.
பழனிசாமியைப் பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்றத் துணைத்தலைவராகவும், அதே சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனைப் பொருளாளராகவும் தேர்வு செய்துள்ளார்
பழனிசாமி தலைமையில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஆதரவு கிடைக்காது என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம்
பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருடன் அவர் மீண்டும் இணைவதற்கு பெரும் அழுத்தம் தரப்படுகிறது. தேவர் குருபூஜை இந்த வாய்ப்பைப் பழனிசாமியின் எதிர்ப்பாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை திராவிடக் கட்சிகள் போன்ற மைய நீரோட்டக் கட்சிகள் ஒரு தொகுதியில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது சாதிப் பின்னணியை ஆராய்வது வழக்கம். அதேநேரத்தில் அமைச்சர் பதவிகளைத் தரும்போது மட்டும் எல்லா சாதிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற சமநிலை உறுதிசெய்யப்படுவதிலும் இந்தக் கட்சிகள் கவனம் செலுத்தும்.
ஆனால், முதல்முறையாக அதிமுக போன்ற முக்கிய திராவிடக் கட்சியில் தலைமைப் பதவிக்கான போட்டியில் சாதி அடையாளங்களும் கணக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Read in : English